Monday, October 27, 2008

37.அவா அறுத்தல்

1.எல்லா உயிர்களுக்கும் எல்லாக் காலத்திலும் பிறவி துன்பத்தின் வித்தான ஆசை இருக்கும்.

2.ஆசைகளை ஒழிக்காவிட்டால்..ஏன் பிறந்தோம் என்று எண்ணும் அளவு துன்பநிலை வரும்.

3.ஆசை அற்ற நிலையே சிறந்த செல்வமாகும்,அதற்கு நிகர் அதுவே.

4.ஆசை இல்லாதிருத்தலே தூய நிலை.இது மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.

5.பற்றற்றவர் என்பவர் அவாவை விட்டவரே ஆவர்.மற்றவர்கள் அப்படி சொல்லிக் கொள்ளமுடியாது.

6.அவாவிற்கு அஞ்ச வேண்டும்.ஏனெனில் ஒருவனை கெடுத்து வஞ்சிப்பது அந்த ஆசைதான்.

7.ஒருவன் ஆசையை ஒழித்தால்..அவனுக்கு சிறந்த வாழ்வு வாய்க்கும்.

8.ஆசையை ஒழித்தால் துன்பம் இல்லை..ஆசை இருந்தால் எல்லா துன்பமும் வரும்.

9.ஆசையை விட்டு ஒழித்தால்..வாழ்வில் இன்பம் தொடரும்.

10.ஆசையை அகற்றி வாழ்வதே..நீங்காத இன்பத்தை வாழ்வில் தரக்கூடியது ஆகும்.

Wednesday, October 22, 2008

36.மெய்யுணர்தல்

1.மெய்ப்பொருள் அல்லாதவையை மெய்ப்பொருள் என எண்ணுபவர் வாழ்க்கை சிறக்காது.

2.மயக்கம் நீங்கி குற்றமற்ற உண்மையை உணர்ந்தால் அறியாமை அகலும். நலம் தோன்றும்.

3.ஐயப்பாடுகளை நீக்கி மெய்யுணர்வு கொண்டவர்க்கு மேலுலகம் எனப்படுவதே அண்மையுள் இருப்பது
போல ஆகும்.

4.உண்மை அறியாதோர்,தமது ஐம்புலன்களையும் அடக்கியவராயிருப்பினும் பயன் இல்லை.

5 வெளித்தோற்றம் கண்டு மயங்காமல், அது பற்றி உண்மையை அறிவதே அறிவுடைமை ஆகும்.

6.கற்க வேண்டியவற்றை கற்று உண்மைப்பொருளை உணர்ந்தவர் மீண்டும் இப்பிறப்பிற்கு வரார்

7.ஒருவனது மனம் உண்மைப்பொருளை ஆராய்ந்து உணர்ந்தால் அவனுக்கு மறுபிறப்பு இல்லை எனலாம்.

8.பிறவித் துன்பத்திற்கான அறியாமையைப் போக்கி முக்தி நிலைக்கான பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.

9.துன்பங்கள் நம்மை அடையாமல் இருக்க ...அத்துன்பத்துக்கான காரணம் அறிந்து பற்று விலக்கவேண்டும்.

10.விறுப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய மூன்றிருக்கும் இடம் தராதவரை துன்பம் நெருங்காது.

Saturday, October 18, 2008

35.துறவு

1.ஒருவன் எந்தப் பொருள்மீது பற்றில்லாதவனாய் உள்ளானோ அப்பொருளால் துன்பம் அடைவதில்லை

2.பொருள்மீது உள்ள ஆசையை உரிய காலத்தில் துறந்தால் பெறும் இன்பம் பலவாகும்.

3.ஐம் புலன்களுக்கான ஆசை,அதற்கான பொருள்கள் எல்லாவற்றினையும் வெல்லுதல் வேண்டும்.

4.பற்றில்லாமல் இருத்தலே துறவு..ஒரு பற்றிருந்தாலும் மனம் மயங்கிவிடும்.

5.பிறவித்துன்பம் போக்க முயலும் போது உடம்பே மிகையாகும்..அதன் மீது வேறு தொடர்பு ஏன்?

6.நான் என்ற ஆணவத்தை விட்டவன் தேவர்க்கும் எட்டா உயர் நிலை அடைவான்.

7.பற்றுகளைப் பற்றிக்கொள்பவரை துன்பங்களும் பற்றிக்கொள்ளும்.

8.முற்றும் துறந்தவர் உயர் நிலை அடைவர்.அல்லாதார் அறியாமை என்னும் வலையில் விழுவர்.

9.பற்றுகளைத் துறந்தால் இன்ப துன்பங்கள் அணுகாது.இல்லையேல் அவை மாறி மாறி வந்து வறுத்தும்.

10.பற்றில்லாதவனான கடவுளிடம் பற்று வைத்தல் ஒன்றே பற்றுக்களை துறக்கும் வழியாகும்.

Wednesday, October 15, 2008

34.நிலையாமை

1.நிலையில்லாதவற்றை நிலையானவை என நம்புவது அறியாமை ஆகும்.

2.சேர்த்து வைக்கும் பெருஞ்செல்வம் நம்மைவிட்டு ...காட்சி முடிந்ததும் அரங்கை விட்டு செல்லும் மக்கள் போல்
கலைந்து சென்று விடும்.
3.செல்வம் நிலையற்றது என உணர்ந்து அதை வைத்து நிலையான நற்செயலில் ஈடுபட வேண்டும்.

4.வாழ்க்கையை உணர்ந்தவர்கள்..நம் ஆயுளை அறுத்துக் கொண்டிருக்கும் வாள் போன்றது காலம் என அறிவர்.

5.வாழ்வு நிலையானதில்லை என உணர்ந்து உயிருள்ள போதே நற் பணிகள் ஆற்றிட வேண்டும்.

6.நேற்று உயிருடன் இருந்தவர் இன்று இல்லை என்ற பெருமை இவ்வுலகிற்கு உண்டு.

7.வாழ்க்கையின் உண்மையை சிந்தித்து அறியாதவர்கள்..பேராசை கொண்டவராய் இருப்பர்.

8.உடல்..உயிர்..இடையே யான உறவு..முட்டைக்கும்,பறவைக்குஞ்சிற்கும் இடையேயான உறவு போலாகும்.

9.நிலையில்லா வாழ்க்கையில்..பிறப்பு எனப்படுவது..தூங்கி விழிப்பதைப் போன்றது..சாவு என்பது விழிக்க முடியா
தூக்கமாகும்.
10.உடலுடன் தங்கியுள்ளது உயிர்..உயிர் பிரிந்தால் வேறு புகலிடம் இல்லை.

Monday, October 13, 2008

33.கொல்லாமை

1.கொலை செய்தல் தீயவற்றை விளைவிப்பதால்..எவ்வுயிரையும் கொல்லாமையே அறச் செயலாகும்.

2.நம்மிடமிருப்பதை எல்லாரிடமும் பகிர்ந்துக் கொண்டு எல்லா உயிரும் வாழ வாழும் வாழ்வே ஈடு இணையற்ற வாழ்வாம்.
3.முதலில் கொல்லாமை..அடுத்து பொய் சொல்லாதிருத்தல் இவையே முதன்மையான அறங்கள் ஆகும்.

4.எவ்வுயிரைரும் கொல்லாதிருப்பதே நல் வழி யாகும்.

5.எல்லா உலகியலையும் துறந்தவரைவிட கொல்லாமையைக் கடை பிடிப்பவர் சிறந்தவர்.

6.கொலை செய்யாமையை அறனெறியாகக் கொண்டவரின் பெருமையை எண்ணி சாவு கூட அவர்களை பறிக்க
தயங்கும்.
7.தன் உயிரே போவதாயினும் பிற உயிர் போக்கும் செயலில் ஈடுபடக் கூடாது.

8.ஒரு கொலை நன்மை பயக்கும் என்றாலும்..பண்புடையோர் அந்த நன்மையை இழிவானதாகவே எண்ணுவர்.

9.பகுத்தறிவை இழந்து கொலை செய்பவர்கள் இழி பிறவிகளே ஆவர்.

10.தீய வாழ்க்கையில் இருப்போர்.வறுமையும்,நோயும் அடைந்து பல கொலைகளையும் செய்தவராய் இருப்பர்

Friday, October 10, 2008

32.இன்னா செய்யாமை

1.பிறர்க்கு கேடு செய்வதால் செல்வம் கிடைக்கும் என்றாலும் மாசற்றவர் கேடு செய்ய மாட்டார்கள்.

2.கோபத்தால் ஒருவர் நமக்கு துன்பம் செய்தாலும்..அதை திரும்ப செய்யாமல் தாங்கிக் கொள்வதே சிறந்த மனிதரின் கொள்கை யாகும்.
3.யாருக்கும் கேடு செய்யாதவர்க்கு யாரேனும் கேடு செய்தால்..கேடு செய்பவர் மீளாத் துன்பம் அடைவர்.

4.நமக்குத் தீங்கு செய்பவரை தண்டிக்க சரியான வழி..அவர் வெட்கித் தலை குனியுமாறு அவருக்கு நன்மை செய்வதுதான்.
5.பிற உயிர்களின் துன்பத்தையும் தம் துன்பம் போல கருதாதோருக்கு அறிவு இருந்தும் பயனில்லை.

6.வாழ்க்கையில் துன்பம் என்ன என அறிந்தவன் மற்றவர்க்கு அதை செய்யாதிருக்க வேண்டும்.

7.தினையளவுக் கூட எப்போதும்,எவரையும் இழிவு படுத்தும் செயலை மனத்தால் கூட நினைக்கக் கூடாது.

8.பிறர் தரும் துன்பத்தை உணர்ந்தவன் பிற உயிர்க்கு எந்த துன்பமும் செய்யக்கூடாது.

9.பிறர்க்கு தீங்கு செய்வதால் மகிழ்ச்சி அடைவோருக்கு அதே போன்ற தீங்கு அவரையே தாக்கும்.

10.தீங்கு செய்பவருக்குத்தான் தீங்குகள் வரும்.எனவே யாருக்கும் தீங்கிழைக்காதவரை எந்த தீங்கும் அணுகாது.

Thursday, October 9, 2008

31.வெகுளாமை

1.நமது கோபம் பலிக்குமிடத்தில் கோபம் கொள்ளக்கூடாது.பலிக்காத இடத்தில் கோபம் கொள்வதில் என்ன பயன்.
(எந்த இடத்திலும் கோபம் கொள்ளக்கூடாது)
2.நம்மைவிட வலியோரிடம் கோபம் கொண்டால்,கேடு விளையும்.மெலியோரிடம் கோபம் கொண்டால் அது மிகவும்
கேடானது.
3.யார் மீது சினம் கொண்டாலும் அதை மறந்து விட வேண்டும்.இல்லையேல் தீய விளைவுகள் ஏற்படும்.

4.கோபம் கொள்கிறவரிடமிருந்து,முகமலர்ச்சி, மனமகிழ்ச்சி எல்லாம் மறைந்துவிடும்

5.தன்னைத்தானே காத்துக் கொள்ள சினம் காக்க வேண்டும்.இல்லையேல் அந்த சினமே அவனை அழிக்கும்.

6.கோபமுடையவரை .அந்த கோபமே அவரை அழிப்பதுடன், அவர் சுற்றத்தாரையும் அழிக்கும்.

7.மண் தரையை கையால் அடித்தால் கை வலிக்கும். அது போலத்தான் சினமும்..அது நம்மையே துயரத்தில் ஆழ்த்தும்.
8.நமக்கு தீமை பல புரிந்தவன் திருந்தி வரும் போது கோபம் கொள்ளாமல் இருப்பதே நல்லது.

9.கோபம் கொள்ளாதவன் எண்ணியதெல்லாம் உடனே பெறமுடியும்.

10.அளவில்லா கோபமுடையவர்...இறந்தவராகக் கருதப்படுவார்.கோபத்தை துறந்தவர் துறவிக்கு சமம்

Wednesday, October 8, 2008

30.வாய்மை

1.பிறருக்கு சின்ன தீமை கூட ஏற்படாத சொல்லை சொல்வதே வாய்மை எனப்படும்.

2.நன்மையை விளைவிக்குமானால் பொய் கூட அச்சமயம் வாய்மையாகும்.

3.மனசாட்சிக்கு எதிராக பொய் சொன்னால்..அதுவே அவரை தண்டிக்கும்.

4.மனதில் கூட பொய்யை நினைக்காதவர்கள் மக்கள் மனதில் நிலையா இடம் பெறுவர்.

5.உதட்டளவில் இன்றி மனதிலிருந்து வாய்மை பேசுபவர்கள் தவம்,தானம் செய்பவர்களைவிட உயர்ந்தவர்கள் ஆவர்.

6.பொய் இன்றி வாழ்வதே புகழ் மிக்க வாழ்வு..அதுவே அறவழி வாழ்வாகும்.

7.செய்யக்கூடாத செயல்களை செய்யாததால் எற்படும் நன்மையைவிட பொய் கூறாத பண்பே சிறந்ததாகும்.

8.நீரில் குளிப்பதால் உடல் அழுக்கு நீங்கும்.அதுபோல மன அழுக்கு தீர்ப்பது வாய்மையே ஆகும்.

9.இருளைப் போக்கும் விளக்கை விட மன இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒளிவிளக்காகும்.

10.நமக்கு நல்லது எதுவென உண்மையாய் கூறுவோமானால்..அது உண்மையைத்தவிர வேறு ஒன்றுமில்லை.

Monday, October 6, 2008

29.கள்ளாமை

1.எந்தப் பொருளையும் களவாடும் எண்ணம் இல்லாமல் இருக்க வேண்டும்.

2.சூழ்ச்சி செய்து பிறர் பொருளை அடையலாம் என்று நினைப்பது கூட தவறாகும்.

3.கொள்ளையடிப்பதால் செல்வம் பெருகுவது போல் தோன்றினாலும்,அந்த செயல் அவனிடம் ஏற்கனவே உள்ள
செல்வத்தையும் கொண்டுபோய் விடும்.
4.களவு புரிவதில் உண்டாகும் தணியா தாகம் ..அதன் விளைவுகளால் தீரா துன்பத்தைத் தரும்.

5.ஒருவர் அசந்திருக்கும் நேரம் அவர் பொருளை களவாட எண்ணுபவரிடம்,அன்பாக நடக்கும் பண்பு இருக்காது.

6.ஒரு எல்லைக்குட்பட்டு வாழாதவர்கள்..களவு செய்து பிறர் பொருளை கொள்வதில் நாட்டமுடையவராய் இருப்பர்.

7.அளவறிந்து வாழ்க்கை நடத்துபவரிடம் ..களவாடும் குணம் இருக்காது.

8.நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்..கொள்ளையடிப்போர் நெஞ்சமோ வஞ்சக வழியில் செல்லும்.

9.களவு வழியில் நடப்பவர்கள் ..வரம்பு கடந்த செயல்களால் வாழ்விழந்து வீழ்வார்கள்.

10.களவை மனத்தாலும் நினைத்துப் பார்க்காதவர்களுக்கு ..புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது 4

Saturday, October 4, 2008

28.கூடா ஒழுக்கம்

1.ஒழுக்கம் உள்ளவர்களைப் போல் நடிக்கும் மக்களைப் பார்த்து பஞ்ச பூதங்களும் சிரிக்கும்.

2.துறவுக்கோலத்தில் உள்ளவர்கள் தன் மனத்திற்கு குற்றம் என்று தெரிவதை செய்ய மாட்டார்கள்.

3.துறவுக்கோலம் பூண்டும் மனத்தை அடக்க முடியாதவர்கள், பசுத்தோல் போர்த்திய புலி போல் வஞ்சகர் ஆவர்.

4.வேடன் மறைந்து பறவைகளை தாக்குவதும், தவக் கோலத்தினர் தகாத செயல்களில் ஈடுபடுவதும் ஒன்றுதான்.

5.பற்றற்றவராய் நடப்பவர்கள் போல ஏமாற்றுபவர்கள், ஒரு நாள் தன் செயலுக்கு தானே வருந்துவர்.

6.உண்மையாக பற்றுகளைத் துறக்காமல் துறந்தது போல நடப்பவர் இரக்கமற்ற வஞ்சகர்கள் ஆவர்.

7.பார்க்க குண்டுமணியைப்போல் சிவப்பாக இருந்தாலும்,அதன் முனையில் உள்ள கறுப்புபோலக் கறுத்த மனம்
படைத்தவர் உள்ளனர்.
8.மாண்புடையோர் என்று தன் செயல்களை மறைத்து திரியும் மாசு உடையோர் உலகில் பலர் உண்டு.

9.அம்பு நேரானது,ஆனால் கொலை செய்ய உதவும்.யாழ் வளைந்தது ஆனால் இன்ப இசையைத் தரும்.அதுபோல
மக்கள் பண்புகளே அவர்களை புரிய வைக்கும்.
10.ஒருவன் உண்மையான துறவியாய் இருந்தால்..மொட்டையடிப்பதோ,சடாமுடி வளர்த்துக் கொள்வதோ தேவையில்லை.

Thursday, October 2, 2008

27.தவம்

1.எதையும் தாங்கும் இதயம்,எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாமை இவையே தவம் எனப்படும்.

2.தவம் என்பது உறுதிப்பாடு,மன அடக்கம்.ஒழுக்கம் இல்லாதவர்கள் தவத்தை மேற்கொள்வது வீண்.

3.பற்றற்றோருடன் நாம் இருந்தாலும், கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கத்தை மறக்கக்கூடாது.

4.மன உறுதியும்,கட்டுப்பாடும் கொண்ட தவம்..பகைவரை வீழ்த்தும்.நண்பரைக் காக்கும்.

5.உறுதிமிக்க தவம் விரும்பியதை,விரும்பியவாறு செய்து முடிக்க துணையாய் நிற்கும்.

6.அடக்கம்,அன்பு நெறி,துன்பங்களை தாங்கும் பொறுமை இதுவே தவம் ஆகும்.ஆசையை விட்டொழித்தால் போதும்.

7.தம்மை வருத்திக்கொண்டு,ஒரு குறிக்கோளுடன் தவம் இருப்போரை எந்த துன்பம் தாக்கினாலும் பொன் போல்
புகழ் பெறுவர்.
8.தனது உயிர்,என்ற பற்று,தான் எனும் செருக்குஇல்லாதாரை உலகம் புகழ்ந்து பாராட்டும்.

9.எந்த துன்பம் வந்தாலும், அதைத்தாங்கி தன் குறிக்கோளில் உறுதியாக இருப்போர் சாவையும் வெல்லுவர்.

10.மன உறுதி கொண்டவர் சிலராகவும், ஆற்றலும்,உறுதியுமற்றவர்கள் பலராகவும் உலகில் உள்ளனர்.

Wednesday, October 1, 2008

26.புலால் மறுத்தல்

1.தன் உடல் வளர வேறு உயிரின் உடலை உண்பவனிடம் கருணை உள்ளம் இருக்குமா.?

2.புலால் உண்பவர்களை அருள் உடையவர்களகக் கருதமுடியாது.

3.படைக்கருவியை உபயோகிப்பவர் நெஞ்சமும்,ஒரு உயிரின் உடலை
உண்பவர் நெஞ்சமும் அருளுடமை அல்ல.

4.கொல்லாமை என்பது அருளுடமை....கொல்லுதல் அருளற்ற செயல்...
ஊன் உண்ணுதல் அறம் இல்லை.

5.உயிர்களை சுவைக்காதவர்கள் இருப்பதால் தான் பல உயிர்கள்
கொல்லப்படாமல் வாழ்கின்றன.

6.உண்பதற்காக உயிர்களை கொல்லாதிருப்பின்..புலால் விற்கும் தொழிலை
யாரும் மேற்கொள்ளமாட்டார்கள்.

7.ஊன் ஒரு உயிரின் உடற்புண் என்பதால் அதை உண்ணாமல் இருக்கவேண்டும்.

8.மாசற்ற மதி உள்ளோர் ..ஒரு உயிரை அழித்து அதன் ஊனை உண்ணமாட்டார்கள்.

9.நெய் போன்றவற்றை தீயிலிட்டு நல்லது நடக்க யாகம் செய்வதை விட ஒரு உயிரை
போக்காமலிருப்பது நல்லது.

10.புலால் உண்ணாதவரையும்,அதற்காக உயிர்களை கொல்லாதவர்களையும்
எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும்.