Tuesday, December 23, 2008

52.தெரிந்து வினையாடல்

1.நற்செயலில் நாட்டம் கொண்டவர்கள் நன்மை,தீமை இரண்டையும் ஆராய்ந்து
அப்பணியினை ஆற்றிடவும் தகுதி பெற்றவராவார்.

2.பொருள் வரும் வழிகளை பெருகச்செய்து வளம் பெற்று இடையூறுகளையும்
ஆராய்ந்து நீக்க வல்லவனே செயலாற்றும் திறனுடையவ்ன்.

3.அன்பு,அறிவு,ஆற்றல்,அவா இல்லாமை ஆகிய நான்கு பண்புகளையும் நிலையாக
பெற்றவனை தேர்ந்து எடுக்க வெண்டும்.

4.எவ்வளவு தான் வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்தாலும்..
செயல்வகையில் வேறுபடுபவர் பலர் இருப்பர்.

5.செய்யும் வழிகளை ஆராய்ந்து அறிந்து.. இடையூறுகளைத் தாங்கிச் செய்து
முடிக்கவல்லவன் அல்லால் மற்றவனைச் சிறந்தவன் என்று கருதிட முடியாது.

6.செய்கின்ற தன்மை,செயலின் தன்மை இவற்றை ஆராய்ந்து தக்க காலத்தோடு
பொருந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்.

7.ஒரு தொழிலை இந்தக் காரணத்தால் இவர் முடிப்பார் என ஆராய்ந்து...
பின் அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்கவேண்டும்.

8.ஒரு செயலில் ஈடுபட அவன் ஏற்றவனா என்பதை ஆரய்ந்த பிறகே ...
அவனை அந்த செயலில் ஈடுபடுத்த வெண்டும்.

9.மேற்கொண்ட தொழிலில் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக
எண்ணுபவரைவிட்டு பெருமை அகலும்.

10.உழைப்பவர் உள்ளம் வாடாதிருந்தால் உலகம் செழிக்கும்...ஆகவே அரசாள்பவர்
உழைப்பவனின் நிலையை நாளும் ஆராயவேண்டும்.

Monday, December 22, 2008

51.தெரிந்து தெளிதல்

1.அறம்,பொருள்,இன்பம்,உயிர் மேல் அச்சம் இவை நான்கும் ஆராயப்பட்ட பிறகே ஒருவனை ஒரு பணியில்
ஈடுபடுத்த முடியும்.

2.நல்ல குடியில் பிறந்தவனாகவும்,குற்றமற்றவனாகவும்,பழி சொல்லுக்கு அஞ்சுபவனாகவும் இருப்பவனே உயர் குடியில் பிறந்தவன் எனப்படுபவன்.

3.அரிய நூல்கலைக் கற்றவராயிருந்தாலும் ஆழமாக ஆராய்ந்தால் அவரிடம் அறியாமை என்பது இல்லை என்று
சொல்லிவிடமுடியாது.

4.ஒருவனது குணங்களையும்,குறைகளையும் பார்த்து அவற்றுள் எவை மிகுதியாக உள்ளவை என்று தெரிந்த பிறகே
அவனைப் பற்றி முடிவெடுக்க முடியும்.

5.ஒருவர் செய்யும் காரியங்களே..அவர்..தரமானவரா,தரங்கட்டவரா என்பதைச் சொல்லிவிடும்.


6.சுற்றத்தார் தொடர்பு அற்றவரை நம்பி தேர்வு செய்யக்கூடாது.ஏனெனில் அப்படிப்பட்டவர்கள் பழிக்கு அஞ்சார்.
உலகத்துக்கும் கவலைப் பட மாட்டார்.

7.அறிவற்றவரை அன்பு காரணமாக தேர்வு செய்தால்,அது எல்லா அறியாமையையும் கொடுக்கும்.

8.ஆராயாமல் ஒருவரை துணையாய்த் தேர்ந்தெடுத்தால் அது அவனுக்கு மட்டுமல்ல..அவன் வருங்காலத்
தலைமுறைக்கும் கேடு விளைவிக்கும்.

9.நன்கு ஆராய்ந்து தெளிந்ததும் ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும்.ஆராயாமல் யாரையும் நம்பக் கூடாது.

10ஆராயாமல் ஒருவரைத் தேர்வு செய்து..ஏற்றுக்கொண்டு பின் அவரை சந்தேகப்படுவது தீராத் துன்பத்தைத் தரும்

Sunday, December 21, 2008

50.இடனறிதல்

1.முற்றுகை செய்ய ஏற்ற இடத்தைக் கண்டதும்தான், பகைவரை இகழாமல் செயல்களைத் தொடங்கவேண்டும்.

2.அரணுடன் பொருந்தி ,வரும் பகையை எதிர்த்தால் பெரும் பயன் கிட்டும்.

3.தக்க இடத்தில் தம்மைக் காத்து,பகைவரிடம் தம் செயலைச் செய்தால்..வலிமை அற்றவரும் வலியவராவார்.

4.தக்க இடம் அறிந்து செயலைச் செய்தால்..அவரை வெல்ல வேண்டும் என எண்ணும் பகைவர் இரார்.

5.ஆழமுள்ள நீரில் முதலை வெல்லும்..ஆனால் நீரில் இருந்து அது வெளியே வந்தால் அதை மற்ற உயிர்கள் வென்று
விடும்.
6.வலிய சக்கரங்கள் கொண்ட தேர் கடலில் ஓடாது..கடலில் ஓடும் கப்பலும் நிலத்தில் ஓடாது.(இடத்தேர்வு முக்கியம்)

7.செயலுக்கான வழிவகைகளைக் குறைவில்லாது எண்ணி தக்க இடத்தில் செய்தால்..அஞ்சாமை என்ற ஒரு
துணை போதும்.
8.சிறிய படை ஆயினும் அதன் இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையைக் கூட வென்றிட இயலும்.

9.பாதுகாப்பான கோட்டையும், படைச் சிறப்பும் இல்லாவிட்டால் கூட அவர் வாழும் இடத்தில் அவரை தாக்குதல் அரிது.
10.வேல் ஏந்திய வீரர்களை வீழ்த்தும் யானை கூட.. சேற்றில் சிக்கிக் கொண்டால் நரிகளால் கொலை செய்யப்படும்

Sunday, December 14, 2008

49.காலமறிதல்

1.தன்னைவிட வலிய கோட்டானை காக்கை பகலில் வென்றுவிடும்.அதுபோல
பகையை வெல்ல ஏற்ற காலம் வேண்டும்.

2.காலத்தோடு பொருந்தி ஆராய்ந்து நடந்தால்..அதுவே செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும்
. கயிறாக அமையும்.

3.தேவையான சாதனங்களுடன்,சரியான காலத்தையும் அறிந்து செய்தால்
எல்லா செயல்களும் எளியன ஆகும்.

4.உரிய காலத்தையும்,இடத்தையும் அறிந்து நடந்தால் உலகமே நம் கைக்குள் வரும்.

5.உரிய காலத்திற்காக பொறுமையாக கலங்காது காத்திருப்பவர் இந்த உலகத்தைக்கூட வெல்லுவர்.

6.உறுதியானவர்கள் ..உரிய காலத்துக்கு அட்ங்கி இருத்தல் என்பது ஆடு ஒன்று
தன் எதிரியை தாக்க கால்களை பின் வாங்குவது போன்றது.

7.அறிவுடையவர்..புற சினம் கொள்ளமாட்டார்கள்.அதே சமயம் வெல்லுவதற்கு ஏற்ற
காலம் பார்த்து அக சினம் கொள்வர்.

8.பகைவரைக் கண்டால் பொறுத்துக்கொள்ளவேண்டும்.. அந்த பகைவன் முடிவு காலம்
வந்தால் தானே விழுவான்.

9.சரியான காலம் வரும்போது.. அதை பயன்படுத்திக்கொண்டு செய்தற்கரிய
செயல்களை செய்யவேண்டும்.

10.காலம் வரும்வரை கொக்கு காத்திருப்பது போல காத்திருந்து, காலம் வரும்போது குறி தவறாமல் மீனை கொத்துவது போல காரியத்தை செய்து முடிக்கவேண்டும். 4/30/08 by

Wednesday, December 10, 2008

48.வலியறிதல்

1.செயலின் வலிமை,தன் வலிமை,பகைவனின் வலிமை,இவர்களுக்கு துணையாக இருப்பவரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்து செயல் பட வேண்டும்.
2.நமக்கு பொருந்தும் செயலையும்,அதற்காக அச் செயல் பற்றி ஆராய்ந்து அறியும் முயற்சியும் மேற்கொண்டால்
முடியாதது என்பதே இல்லை.
3.நமது வலிமை இவ்வளவுதான் என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து இடையில் அதை முடிக்க முடியாது அழிந்தவர் பலர்.
4.மற்றவர்களுடன் ஒத்து போகாமை,தன் வலிமையின் அளவை அறியாமை..ஆகியவையுடன் தன்னைத்தானே
வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.
5.மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் ..அளவுக்கு அதிகமாக ஏற்றினால் அச்சு முறியும்.

6.ஒரு மரத்தின் நுனி கொம்பில் ஏறியவர்,அதையும் கடந்து ஏறமுயன்றால் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

7.தக்க வழியில் பிறர்க்குக் கொடுக்கும் அளவு அறிந்து கொடுக்க வேண்டும்.அதுவே பொருளை போற்றி வாழ்வதாகும்.

8.நமது வருவாய் குறைவாக இருந்தாலும்..செலவு அதற்குள் இருந்தால் தீங்கு ஏற்படாது.

9.பொருளின் அளவு அறிந்து வாழாதவன் வாழ்க்கை..ஒளிமயமாய் இருப்பதுபோல தோன்றி இல்லாமல் போகும்.

10.தனக்குப் பொருள் உள்ள அளவை ஆராயாமல்.. .அளவின்றி கொடுத்துக் கொண்டே இருந்தால் விரைவில் கெடுவான்

Sunday, December 7, 2008

47.தெரிந்து செய்ல்வகை

1.ஒரு செயலில் இறங்குமுன் அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை
ஆராய்ந்த பின்னே இறங்கவேண்டும்.

2.அறிந்த நண்பர்களுடன் சேர்ந்து ...ஆற்ற வேண்டிய செயல் ஆராய்ந்து தாமும் சிந்தித்து செய்தால்
எந்த வேலையானாலும் நன்கு முடியும்.

3.பெரும் லாபம் வரும் என கை முதலையும் இழக்கும் செயலை அறிவுடையார் செய்யமாட்டார்கள்.

4.களங்கத்துக்குப் பயப்படக்கூடியவர்கள்...ஒரு செயலின் விளைவுகளை எண்ணிப்பார்த்து
களங்கம் தரும் செயலை செய்யார்.

5.பகைவரை ஒடுக்க முழுமையாக முன்னேற்பாடுகள் செய்யாவிடின் அது பகைவனின் வலியைக் கூட்டிவிடும்

6.செய்யக்கூடாததை செய்தாலும் சரி..செய்யவேண்டியதை செய்யாமல் விட்டாலும் சரி கேடு விளையும்.

7.நன்கு சிந்தித்தபின்னே செயலில் இறங்கவேண்டும்..இறங்கிய பின் சிந்திப்போம் என்பது தவறு.

8.நமக்கு எவ்வளவு பேர் துணயாக இருந்தாலும்.. முறையாக.செயல்படாத முயற்சி குறையிலேயே முடியும்.

9.அவரவர் இயல்புகள் அறிந்து அதற்கு பொருந்துமாறு செய்யாவிடின், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.

10.தம் நிலைக்கு மாறான செயல்களை உயர்ந்தோர் பாராட்டமாட்டார் ஆதலால் உலகு இகழாத செயல்களை
செய்யவேண்டும்.

Thursday, December 4, 2008

46.சிற்றினம் சேராமை

1.பெரியோர் கீழ்மக்களை அஞ்சி ஒதுங்குவர்.ஆனால் சிறியோரின் இயல்பு
கீழ்மக்களின் கூட்டத்துடன் சேருவது.
2.நிலத்தின் தன்மை போல் நீர் மாறும்...அதுபோல மக்கள் அறிவும் தங்கள் இனத்தின்
தன்மையைப் போன்றதாகும்.

3.ஒருவனது இயற்கை அறிவு மனத்தால் ஏற்படும் .ஆனால் உலகத்தாரால் இப்படிப்பட்டவன்
என மதிக்கப்படுவது சேர்ந்த இனத்தால் ஏற்படும்.

4.ஒருவரின் அறிவு அவரது மனதில் உள்ளது போலக் காட்டினாலும் உண்மையில் அவன்
சார்ந்த இனத்தில் உள்ளதாகும்.

5.மனத்தின் தூய்மை,செயலின் தூய்மை இரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையை ஒத்ததே ஆகும்

6.மனத்தூய்மை யானவர்க்கு ...அவருக்குப்பின் எஞ்சி நிற்பது புகழும் ..இனம் தூய்மையானவருக்கு
அவரின் நற்செயலும் ஆகும்..

7.மனத்தின் நலம் உயிர்க்கு ஆக்கமாகும்...இனத்தின் நலமோ எல்லா புகழையும் வழங்கும்.

8.மனத்தின் நலம் உறுதியாக இருந்தாலும் சான்றோர்க்கு இனத்தின் நலம் நல்ல காவலாக அமையும்.

9.மனத்தின் நன்மையால் இன்பம் உண்டாகும்.அது இனத்தின் தூய்மையால் மேலும் சிறப்படையும்.

10.நல்ல இனத்தைவிட சிறந்த துணை ஏதுமில்லை...தீய இனத்தைவிட துன்பமும் பகையும் தரக்கூடியது
எதுவுமில்லை.