Friday, September 8, 2017

வள்ளுவனும்...எடுத்துக்காட்டுகளும் - 3


அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.

நம் மனம் நினைப்பதை முகம் சொல்லிவிடும்..

அடுத்தது காட்டும் பளிங்கு போல..நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் என்று கண்ணாடியையும், மனதையும் ஒப்பிட்டு சொன்ன வள்ளுவன் மற்றொன்றையும் சொல்கிறார்

அனிச்ச மலர் என்னும் மலர்..முகர்ந்து பார்த்தாலே வாடிவிடுமாம்.அந்த அளவிற்கு மெல்லியதாம்.அதுபோல நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை..."இவன் ஏன் இப்போது வந்தான்" என்ற எண்ணத்துடன்..நாம் வரவேற்றால்....நம் முகத்தைப் பார்த்ததுமே..விருந்தினர் அதை புரிந்து கொண்டுவிடுவார்களாம்

இதைத்தான் வள்ளுவன்

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து  (90)

என்கிறார்..

அனிச்சம் எனப்படும் பூ, முகந்தவுடன் வாடிவிடக் கூடியது.அதுபோல சற்று முகங்கோணி விருந்தினரை வரவேற்றாலே அவர்கள் வாடிவிடுவர்


(இப்போதைய கதை வேற...'மெகா சீரியல் பார்க்கும் நேரத்தில்..இவர்கள் ஏன் இங்கு வந்தார்கள்?" என முகமாற்றம் பல வீடுகளில் தோன்றுகிறது விருந்தினரைப் பார்த்தால்)

Wednesday, September 6, 2017

வள்ளுவனும்...எடுத்துக்காட்டுகளும் - 2

நமக்கு உள்ள பெயர் நம் உடலுக்கா? உயிருக்கா?

உயிருக்கு என்றால்..நாம் தினசரி விடும் மூச்சுக் காற்றிற்கா?

உடலுக்கு என்றால்...நாம் இறந்ததும் ஏன் நம் உடலை "Body"  என் கிறார்கள்.

அதாவது..உயிர்..உடலில் உள்ளவரை ராமநாதன்.உயிர் பிரிந்ததும் உடல் அந்தப் பெயரை இழந்துவிடுகிறது.

உயிரும்..உடலும் ஒன்றுடன் ஒன்று கலந்திருக்கிறது.

அதே போல ஒருவர் அன்புடையவராய் இருபபராயின், அவருடன் அதற்கான அன்பு செயல்களும் இருக்குமாம்.

இதைத்தான் வள்ளுவர்

அன்புடமை என்னும் அதிகாரத்தில்

அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போ டியைந்த தொடர்பு  - 73

என்கிறார்.

அதாவது, ஒருவர் அன்புடையாராய் இருந்தால் அவருடன் கண்டிப்பாக அன்பிற்கான செயல்களும் இணைந்திருக்குமாம்.அது எப்படியென்றால் நம் உயிருடன் இணைந்திருக்கும் உடல் போலவாம்

அன்பையும் , செயலையும்...உயிருக்கும் உடலுக்கும் ஒப்பிடுகிறார்

நாளை வேறு ஒரு குறளுடன் சந்திப்போம்

Tuesday, September 5, 2017

வள்ளுவனும்...எடுத்துக் காட்டுகளும் - 1

திருக்குறளில் பல இடங்களில் வள்ளுவன்  தான் கூற வந்ததை மற்றொரு செயலுடன் ஒப்பிட்டு கூறுவதை காணமுடிகிறது

அப்படி சொல்லப்படும் எடுத்துக்காட்டுகளில் உள்ள நயம், உவமை, உவமேயம் ஆகியவை ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.

இந்நூலில் சொல்லப்பட்ட சில குறள்கள்..உவமை/உவமேயம் ஆகிய இலக்கணக் குறிப்புகளுக்கும் வராமல் இருக்கலாம்.ஆனால்..வள்லுவரின் ஒப்பீடும்..அதற்கான எடுத்துக்காட்டுகளும் வியக்கவைக்கின்றன

இனி அப்படிப்பட்ட ஒவ்வொரு குறள் பற்றியும்...நாளும் ஒரு குறள் என்ற கணக்கில் சொல்லலாம் என உள்ளேன்

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை  -37

அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்களை எளியவாகக் கருதி பயணத்தை மேற்கொள்வார்கள்.தீயவழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாது, துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் இன்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்

(அறவழியில் நடப்போரை பல்லக்கில் அமர்ந்தவர் போலவும், தீயவழி நடப்போரை பல்லக்கு தூக்கிகளுடன் ஒப்பிட்டுள்ளது இங்கு சிறப்பு)


நாளை வேறு ஒரு குறளுடன் சந்திப்போம்