Friday, January 12, 2018

வள்ளுவனும் எடுத்துக்காட்டுகளும் - 13

வறுமை கொடிது என்பார்கள்.
ஆனால்...வறுமையைக் காட்டிலும் கொடியது ஒன்று இருக்கிறது
அது..நம் வீடு தேடி வந்தவரைக் கூட வரவேற்க இயலா நிலையில் உள்ள வறுமை,
இதே போன்றது வேறு  ஒன்றும் இருக்கிறதாம்.
அது வலிமை.அந்த வலிமையைக் காட்டிலும் வலிமை ஒன்று  இருக்கிறது.அதுதான்..தன்னை  புத்திசாலி என எண்ணிக் கொண்டு வாயில் வருவதையெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் அறிவிலிகளின் செயலைப்  பொறுத்துக் கொள்வதாம்

இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை  - 153

வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது.அதைப்போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வதாகும்

(தான் ஒரு அறிவுஜீவி என எண்ணிக் கொண்டிருக்கும் அறிவிலிகளின் செயல்களைப் பொறுத்துக் கொள்வது என்பது, வீட்டிற்கு வரும் விருந்தினை வறுமை காரணமாக வரவேற்க முடியாத நிலை போன்றதாம்)

Wednesday, January 10, 2018

வள்ளுவனும் எடுத்துக்காட்டுகளும் - 12

நம்மை இகழ்ந்து பேசுபவர் செயல்களை நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
..
இயற்கை எவ்வளவு வளங்களை வாரிக் கொடுத்திருக்கிறது.
ஆனால், நாம் அவற்றைக் காப்பாற்றுகிறோமா..
நதி நீரில்,தொழிற்சாலை கழிவுகளை விட்டு நீரை நாசமாக்குகிறோம்

ஆற்று மணலை பேராசையால் கொள்ளை அடிக்கிறோம்
மரங்களை வெட்டி...தட்ப வெட்ப நிலையை மாற்றுகிறோம்
கிரானைட் வெட்டி மலைகளை அழிக்கிறோம்
இவ்வளவு எல்லாம் கொடுமைகளைப் புரிந்தாலும், இந்த பூமி நம்மைப் பொறுத்துக் கொள்கிறதே அதுபோல நாமும்,நம்மை இகழ்ந்து பேசுபவர்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டுமாம்

இதையே

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை   - 151
என் கிறார்

தன்மீது குழி பறிப்போரையேத் தாங்குகின்ற பூமியைப் போல, தம்மை இகழ்ந்து பேசுபவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்

(தன்னை அழிப்போரை இந்த பூமி எப்படி தாங்கி நிற்கிறதோ..அதே போல நம்மை இகழ்வோரையும், அவர் செயல்களையும் நாம் தாங்கிக் கொள்ள வேண்டும்)

Tuesday, January 9, 2018

வள்ளுவனும் எடுத்துக்காட்டுகளும் - 11

நண்பன் ஒருவரைப் பாராட்டுகிறோம்.அவனும் நம் இன்சொல் பாராட்டுதலால் மனம் மகிழ்கிறான்.

அச்சமயத்தில், நம்மை அறியாமல் ஒரு தீய சொல்லும் நம் வாயிலிருந்து விழுந்து விடுகிறது.

இப்போது, நம் பாராட்டில் மனம் மகிழ்ந்த நண்பன், பாராட்டுதல்களையெல்லாம் மறந்து விடுகிறான்.நாம் சொன்ன ஒரு இன்னா சொல் அவனை மற்றதை மறக்க வைத்து விடுகிறது.மன வருத்தம் அடைகிறான்.

இது எதற்கு ஒப்பாகும் என்று வள்ளுவன் சொல்கிறான்..
ஒரு குடம் நிறைந்த பாலில், சிறிது விஷம் கலந்தாலும் அவ்வளவு பாலும் விஷமாக மாறிவிடுவது போல இருக்கிறதாம் வள்ளுவம் சொல்கிறது...

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா  தாகி விடும்  128

ஒருகுடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானால், அப்பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்

நல்ல சொற்களை பால் என்றும்..கடுஞ்சொல்லை விஷம் என்றும் ஒப்பிடுகிறார் வள்ளுவர்

Sunday, January 7, 2018

வள்ளுவனும் எடுத்துக்காட்டுகளும் - 10

மனிதனின் துன்பத்திற்கெல்லாம் காரணம் ஆசை என்பார்கள்.ஆசையை விட்டொழித்தாலே பாதி வாழ்வியல் துயரங்கள் குறையும்.
அதுபோல, நாம் ஐம்புலன் களையும் அடக்கி நம் காட்டுப்பாடிற்குள் வைத்திருப்போமாயின்..மனிதனைத் துன்பம் தீண்டாதாம்.
இதைத்தான் வள்ளுவர்...

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து   - 126

உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி...காலமெல்லாம் வாழ்க்கைக்கு காவல் அரணாக அமையும்

Friday, January 5, 2018

வள்ளுவனும் எடுத்துக்காட்டுகளும் - 9

ஒருவன் ஏதேனும் தவறிழைத்து விட்டால் உடன் நாம் அவனை வசை பாடுகிறோம்.இது இயற்கை
ஆனால்...அன்பினால் ஒருவனைத் திருத்த முடியும்.அன்பினால் ஒருவன் மனம் மாறி நல்லவனாக, தவறிழைக்காதவனாக ஆகக் கூடும்.
மேலும், வசைபாடும் நம் போன்றோர் மனநிலையையும் நாம் அன்புடன் நடக்கையில் அந்த அன்பு சாந்தப்படுத்தும்.
இதைத்தான் வள்ளுவர் கூறுகிறார்..
இனிமையான பழங்கள் நிறைந்த சோலை.அதனுள் செல்பவன் அக்கனிகளைப் பறித்து உண்பானா? அல்லது..கனியாத சற்றே கசப்புடன் கூடிய காயை எடுத்து உண்பானா?
கனிக்குத்தானே முக்கியத்துவம் கொடுப்பான்.அதுபோலத்தான்..கனி போன்று இனிக்கும் இனிய சொற்கள் உள்ளபோது,..காயைப்போல கசப்பை ஏற்படுத்தும் வன் சொற்கள் எதற்கு என்கிறான்.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக்  காய்கவர்ந் தற்று  - 100

இனிமையான சொற்கள் இருக்கும் போது அவற்றை விடுத்துக் கடுமையாக பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்

இனிய சொற்களை கனிக்கும்.. கடுமையான சொற்களை காய்க்கும் ஒப்பிடுகிறான்


Thursday, January 4, 2018

வள்ளுவனும் எடுத்துக்காட்டுகளும் - 8

வள்ளுவன் தனது குறட்பாக்களில் சொல்லியுள்ள இரண்டு பூக்கள்..அனிச்சமும், குவளை மலரும் ஆகும்
இதில் அனிச்சமலர் முகர்ந்ததுமே வாடிவிடுமாம். இம்மலர் இப்போது காணப்படுவதில்லை.
அதுபோகட்டும்...அதற்கென்ன இப்போது என் கிறீர்களா?
அந்த அனிச்சம் எப்படி முகர்ந்ததும் வாடுகிறதோ, அதுபோல நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை "இவன் ஏன் இப்போது வந்தான்?" என்று எண்ணியவாறே ..அந்த வெறுப்பை சிறிதளவு முகம் பிரதிபலித்தாலும் வந்த விருந்தினர் வருந்துவராம்

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து  - 90

என் கிறார்

அனிச்ச மலரானது, முகர்ந்தவுடன் வாடக்கூடியது.அதுபோல சிறிதளவே மனங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்

Wednesday, January 3, 2018

வள்ளுவனும் எடுத்துக்காட்டுகளும் - 7

அது ஒரு பாலைவனம்.அப்பாலைவனத்தில் ஒரு பட்டுப் போன மரம்
ஆனால், ஒருநாள் அந்த மரம் துளிர்க்க ஆரம்பித்தது.
அதனால் என்ன பலன்..பாலைவனத்தில் துளிர்க்கும் மரம் யாருக்கு பயனாய் இருக்கப் போகிறது.ஒருவருக்கும் இல்லை.

ஆனாள், வள்ளுவன் பட்ட மரத்தையும் விட்டு வைக்கவில்லை.அதையும் ஒப்பிடுகிறான்.அது எப்படி இருக்குமாம்...

ஒவ்வொருவர் மனதிலும் அன்பு நிறைந்திருக்க வேண்டுமாம்.அப்படி, அன்பு இல்லா வாழ்க்கை எதற்கும் பயன்படாது.பட்டமரத்தில் துளிர்த்த மரம் போலத்தானாம்.


அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்ரு     - 78

மனதில் அன்பு இல்லாதவர்கள் வாழ்க்கை பாலைவனத்தில் யாருக்கும் உபயோகப்படாத துளிர்த்த மரத்திற்கொப்பாகும்.

அடடா..வள்ளுவத்தில் இல்லாததுதான் என்ன...!!! 

Monday, January 1, 2018

வள்ளுவனும்..எடுத்துக்காட்டுகளும் - 6

வெயில் ம ண்டையைப் பிளக்கிறது

சாலையில் நடந்து கொண்டிருக்கும் நாம் மர நிழலில் ஒதுங்குகிறோம்.
நமக்கு மட்டுமா வெயில்...
மரங்களின் இலைகளும் சற்று வாட்டத்துடனேயே காணப்படுகிறது.தெருநாய்கள் தண்ணீருக்காக அலைகின்றன.காக்கைகளையும் காணோம்.மண்ணில் ஒரு சிறு புழு ஒன்று வளைந்து, வளைந்து வெயில் கொடுமையில் தவிக்கிறது.

இச்சமயம் வள்ளுவன் நினைவில் வருகின்றான்

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்
- 77

அறம் என்பது என்னவென்று தெரிந்தும், அதை கடைப் பிடிக்காத வரை, அவரது மனசாட்சி வாட்டி வதைக்கும்,அது எப்படியிருக்கும் தெரியுமா வெயிலின் வெம்மை ஒரு புழுவை வாட்டுவது போல இருக்குமாம்.

எவ்வளவு அருமையான கருத்தை சிறு புழுவின் மூலம் சொல்கிறான் வள்ளுவன்