Friday, May 31, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 31

ஒரு அழகிய ஊர்.

அவ்வூரில் மக்களுக்கு குடிநீரை வாரி வழங்கும் ஒரு ஊருணி.

மக்கள் அனைவருக்கும் உயிர் வாழ தண்ணீரை வாரி வழங்கி, அவர்களின் வாழ்வில் இன்றியமையாததாக ஆகிறது அது.

அதுபோல பொதுமக்களின் நலம் வேண்டும் பேரறிவாளனின் செல்வமும் இருக்குமாம்.

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு (215)

பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது, ஊர் மக்கம் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்.

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 30

நீரின்றி அமையாது உலகு..

அந்த நீரை இயற்கை மரங்கள், கடல், நீர்நிலைகள், சூரிய ஒளி போன்றவற்றின் மூலம் கரு மேகங்களாக மாற்றி..அந்தந்த காலகட்டங்களில் மழையாக மீண்டும் பூமிக்குத் தந்து மக்களை வாழவைக்கின்றது.

சரியான நேரத்தில் மழை பொழியவில்லையாயின்..மக்கள் தண்ணீருக்கு அலைய வேண்டிய நிலை உருவாகிறது.

ஆனால்..மழை இதையெல்லாம் எண்ணிப்பாராது, தன்னால் மக்கள் பயன் அடைகிறார்களே..என அதற்குக் கைமாறாக மக்களிடமிருந்து பதிலுக்கு ஏதும் எதிர்பாராமல் பொழிகிறது.


 பதிலுக்கு ஏதும் எதிர்பாராமல் உதவுபவர்கள்  அந்த மழைக்கு ஒப்பானவர்கள் ஆவார்களாம்.

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு (211)

பிரதிபலனை எதிர்பார்த்து மழை பொழிவதில்லை.அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்

வள்ளுவனும்..ஒப்பீடுகளும்- 29

தீ மிகவும் கொடுமையானது..

அழிவினை ஏற்படுத்தக்கூடியது.அதில் சிறு பொறி என்றோ..பெரும் நெருப்பென்றோ பாகுபாடு கிடையாது.

ஆதலால்தான் பாரதியும்..மரப்பொந்திடை வைத்த அக்கினிக் குஞ்சு பற்றிக் கூறுகையில்...தழல் வீரத்தில்  குஞ்சென்றோ..மூப்பென்றோ கிடையாது.சிறுபொறியும், ஒரு காடு வெந்துத் தணிய போதுமானது என்றார்.

ஆனால்..அப்படிப்பட்ட கொடிய தீயைவிட கொடியது ஒன்று உண்டாம்.அது..ஒருவருக்கு நாம் செய்யும் தீய செயல்கள் என் கிறார் வள்ளுவர்

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும் (202)

தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களை தீயை விடக் கொடுமையானதாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்

Wednesday, May 29, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 28

இனிய சொற்கள் இருக்கையில், இன்னாத சொற்களைக் கூறுவதைப் பற்றிக் கூறிய வள்ளுவன்..ஒரு குறளில் சொல்கிறார்..

ஒருவன் இன்னா சொற்களைக் கூடக்கூறலாமாம்..ஆனால் பயனற்ற சொற்களைக் கூறக்கூடாது என்கிறார்.

பயனற்ற சொற்களைக் கூறாது மனதில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையேக் கூற வேண்டுமாம்.

அப்படியில்லாதவன், எப்படிப்பட்டவன் தெரியுமா?

"பதர்" போன்றவனாம்

பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல் (196)

பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட ,அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.


Tuesday, May 28, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 27

 உதவி தேவைப்படும் ஒருவன்..ஒரு செல்வந்தனை அணுகுகிறான்.ஆனால்..அந்த செல்வந்தனுக்கோ, அவனுக்கு உதவி செய்யும் மனமில்லை.

மனம் உடைந்த உதவி தேவைப்படுபவன், சாதாரண நிலையில் உள்ள ஒருவனை நாடி உதவி வேண்டுகின்றான்.

தன் சக்திக்கு ஏற்றாற்போல அந்த நண்பன் உதவியினைச் செய்கின்றான்.

அது கண்டு, அந்த செல்வந்தன் பொறாமைப் படுகின்றான்.
அந்த பொறாமை, அவனை எங்கு கொண்டு செல்லும் தெரியுமா?

வள்ளுவன் விளக்குகின்றான்

கெடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉ மின்றிக் கெடும் (166)

உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்து பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம்,அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும்,உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்
  

Sunday, May 26, 2019

வள்ளுவனும்......ஒப்பீடுகளும் - 26

உண்ணாவிரதம்..

உடலுக்கு சில வேளைகளில் பல நன்மைகளை விளைவிக்கும்.

மஹாத்மா போன்றவர்களின் உண்ணாவிரதம்.. மக்களுக்கு பல நன்மைகளுக்காக நடத்தப்பட்டது.

காலையில் ஆரம்பித்து..மாலையில் நிறவினை அடையும் உண்ணாவிரதங்களும் உண்டு.

மனைவியின் உண்ணாவிரதத்தால் கணவனின் பர்ஸ் இளைப்பதும் உண்டு

ஆனால்..நல்ல நோக்கோடு இருக்கும் உண்ணாவிரதம் இருப்பவர்களின் மனவுறுதி போற்றற்குரியதாகும்.அப்படி  உறுதி படைத்தவர்களாக போற்றப்படுபவர்களை விட முன் நிலையில் ஒருசாரார் உள்ளனராம்..அவர்கள் யார்? என வள்ளுவர் சொல்கிறார்.

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொ னோற்பாரிற் பின்(160)

பசி பொறுத்து உண்ணாநோன்பிருக்கும் உறுதி படைத்தவர்கள் கூடப் பிறர் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில்தான் வைத்துப் போற்றப்படுவார்கள். 

Saturday, May 25, 2019

வள்ளுவனும்...ஒப்பீடுகளும் - 25

உடலில்..காற்று வந்து போய்க் கொண்டிருந்தால்தான் உயிர் இருக்கும்.உணர்வுகள் இருக்கும்.

அந்த மூச்சுக்காற்றினை உடல் இழந்ததுமே...அந்த உடலுக்கான பெயர் மறைந்து பிணம் என்றப் பெயரினைப் பெற்றிடும்.

ஆனால்..அந்த உயிருக்கான மூச்சு வந்து போய்க் கொண்டிருந்தாலும்..உடலுக்கு பிணம் என்ற பெயர் வந்திடுமாம்.

எப்போது தெரியுமா?

நம்மை நம்பிப் பழகியவரின் மனைவியிடம் ஒருவன் தகாத செயல்களில் ஈடுபடுகையில், அவன் பிணமாகிவிடுகிறானாம்.

விளிந்தாரின் வேறல்லர் மறை தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார் (143)

நம்பிப் பழகியர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈடுபட முனைகின்றவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்.

Friday, May 24, 2019

வள்ளுவனும்...ஒப்பீடுகளும் - 24

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...

எல்லா உயிர்களும் சமமானவை.ஏற்றத் தாழ்வுகள் கிடையாது.

ஆனாலும்..அறநெறியில் செல்லாமல் தீயவழியில் செல்பவர்கள் கீழ்த்தரமானவர்கள் ஆவார்கள்.

அவர்களைவிட கீழ்த்தரமானவர்கள் உண்டாம்.அவர்கள் யார் தெரியுமா?

பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்களாம்.

இதையே வள்ளுவன்..

அறங்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையா ரில்  (142)

பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள் ஆவர்

Wednesday, May 22, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 23

அவன்...

பல நூல்களைக் கற்றுத் தேர்ந்தவன்.அறிவாளி.மக்கள் அவனைப் போற்றிப் புகழ்கின்றனர்.

ஆனால்...அவன் வாழ்வில் ஒழுக்கம் இல்லாதவன்என்பதை அறிந்ததும்..

அவனை பாராட்டும் இவ்வுலகு..அவனை தூற்ற ஆரம்பிக்கும்.

அறிவாளியான அவனும் ஒரு அறிவற்றவனாகவேக் காணப்படுவான்...

இதையே வள்ளுவரும் சொல்கிறார்...

உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தார் (140)

உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தாலும் அறிவற்ரவர்களே ஆவார்கள்

Tuesday, May 21, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளூம் - 22

வேதம் ஓதும் அந்தணர்கள் வேதம் ஓதுவதை மறந்தாலும், பின்னர் அதைக் கற்றுக் கொண்டு மீண்டும் ஓதலாம்.ஆனால்..அவர்கள் ஒழுக்க நெறியிலிருந்து தவறுவாராயின் அவர்களது குலமே கெட்டுப்போகுமாம்.

வள்ளுவன் இப்படிச் சொல்கிறார் ஒரு குறளில்..

அதை இப்போது சொல்வதானால்..கல்வி கேள்விகளில் சிறந்தவர்கள் யாராய் இருந்தாலும்..தான் கற்றதை மறந்துவிடுவார்களானால்.மீண்டும் கற்றுக் கொள்ளலாம்.

அதுபோல ஒழுக்கத்தைச் சொல்ல முடியாது.

ஒழுக்க நெறியிலிருந்து யார் சற்று தவறினாலும்,அத்தவறு..அவரை மட்டும் பாதிக்காது..அவர்கள் சார்ந்த குலத்திற்கேக் கெட்டப் பெயரை ஏற்படுத்திவிடும்.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் (134)

அந்தணன் ஒருவன் தான் கற்றதை மறந்துவிடுவானாயின், மீண்டும் படித்துக் கொள்ள முடியும்.ஆனால், பிறப்பிற்குச் சிறப்பினைச் சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறுவானாயின் அவன் இழிமகனே ஆவான்

(ஒழுக்கம் எல்லாவற்றினையும் விட முக்கியமானதாகும்)

Sunday, May 19, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 21

எதிர்பார்க்காமல், கைகளை சுட்டுக் கொண்டு விட்டோம்.தீக்காயம் ஏற்பட்டு விடுகிறது.அதற்கான மருத்துவரைப் பார்த்து..சிகிச்சை எடுத்துக் கொண்டுவிட்டால் அத்தீக்காயம் ஆறிவிடுகிறது.
அதேநேரம்...நாம் ஒரு வரிடம் கோபப்பட்டு அவரை வார்த்தைகளால் வதைக்கிறோம்.ஏனெனில், நம்மைப் போன்றோர்க்கு கோபம் வந்தால் என்ன பேசுகிறோம் என்பதேத் தெரிவதில்லை,.நம் நிலை மறந்துவிடுகிறோம்.
நேரம் செல்கிறது..கோபம் குறைகிறது.நாம் பேசியதெல்லாம் நினைவிற்கு வருகிறது.
"அடடா..கோபத்தில் அவர் மனம் புண்படுமாறு ஏதேதோ பேசிவிட்டோமே" என மனம் வருந்துகிறது.அவரிடம் சென்று மன்னிப்புக் கேட்கிறோம்.அவரும் பெருந்தன்மையுடன் மன்னிக்கிறார்.
ஆனாலும், நாம் பேசிய சொற்கள் அவர் மனதை விட்டு அகலாது..என்றும் அவர் மனதிலேயே நின்று விடுகிறது.
ஆகவே தான் நாம் பிறர் மனம் புண்படும்படிபேசிவிடக் கூடாது.
இதையே வள்ளுவர் சொல்கிறார்...

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு  (129)

ஒருவருக்கு நெருப்பு சுட்ட புண்கூட ஆறிவிடும்.ஆனால் வெறுப்பு கொண்டு திட்டிய சொற்கள் விளைவித்த துன்பம் ஆறவே ஆறாது

இக்குறளில் ஒப்பீடு இல்லையெனினும்..தீப்புண்ணையும், நாவினாற் சுட்ட வார்த்தைகளையும் சொல்லியிருப்பது சிறப்பு.

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 20

இயற்கை..

இது நமக்கும்..நம் வாழ்வுமுறைக்கும் ஏராளமானவற்றைத் தாங்கி உள்ளது.

மரங்கள், மலைகள், நதிகள்..ஆகிய எல்லாம் நாம் உயிர் வாழ்வதற்கும், தேவையான மழை பொழிவிற்கும் சொல்லணா சேவை புரிந்து வருகின்றன .

அவற்றை நமது சௌகரியத்திற்காக கொஞ்சம்..கொஞசமாய் அழித்துக் கொண்டு வருகிறோம் என்பதை நாம் உணர மறுக்கிறோம்.

சரி விஷயத்திற்கு வருகிறேன்.

மலையை விடச் சிறந்தது என்று உள்ளதாம் வள்ளுவனுக்கு.

அது என்ன தெரியுமா?

உறுதியான உள்ளம்..மற்றும் ஆர்ப்பாட்டமில்லா அடக்க உணர்வாம்.

இதையே நம் முன்னோர்கள்..மனதில் உறுதி வேண்டும், நிறைகுடமாய் திகழ்ந்தாலும் அடக்க உணர்வு வேண்டும் என்றெல்லாம் கூறிச் சென்றுள்ளனர்

நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது (124)

உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடகக் உணர்வும் கொண்டவரின் உயர்வு மலையைவிடச் சிறந்ததாகும் 

Thursday, May 16, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 19

வள்ளுவன் தனை உலகத்திற்கு அளித்த வான் புகழ் தமிழ்நாடு.
உண்மை.
அவர் படைத்த திருக்குறளில் சொல்லாதவையேக் கிடையாது.
அதுவும், அவர் சொல்ல வந்ததை, அனைவரும் அறியும் வண்ணம் சொன்னவர்.
உதாரணத்திற்கு "நடுவு நிலைமை"
அதிகாரம்.
ஆரம்பக் குறளே.."நடுவு நிலைமை" என்றால் என்ன? என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று எழுதப்பட்டது.

தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின் (111)

பகைவர்,அயலோர்,நண்பர் எனப்பகுத்துப் பார்த்து, ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவு நிலைமை ஆகும்.

சரி எடுத்துக்காட்டு வரிசையில் இக்குறளில் என்ன இருக்கிறது? என் கிறீர்களா.

இதே அதிகாரத்தில் வரும் இக்குறளைப் பாருங்கள்.

ஒரு தராசு இருக்கிறதே அதன் முள் ஒருபக்கமாகவே சாய்ந்து விடாமல் சரியான இடப்படும் கல்லிற்கு ஏற்ப சரியான எடையினைக் காட்டுகின்றதோ..அதே போல நியாயம் கூறுவதே நடுவுநிலை என் கிறார்

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி (118)

ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தராசு முள் போல இருந்து நியாயம் கூறுவதே உண்மையான நடுவு நிலைமைக்கு அழகாகும்   

Wednesday, May 15, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 18

பல்லாயிரக்கான...இல்லை ..பல லட்சங்கள்...இல்லை பல கோடிகள்..இல்லை..இல்லை..பல்லாயிரக்கணக்கான கோடி ஜீவராசிகள் இவ்வுலகில் வாழ்ந்து வருவது கண்கூடு.

அப்படிப்பட்ட இவ்வுலகு எவ்வளவு பெரியது..

ஆனால்..வள்ளுவனுக்கோ இவ்வுலகை விட பெரியதாக ஒன்று இருப்பதாகத் தோன்றுகிறது.

அது என்னவாகயிருக்கும் எனப் பார்ப்போமா?

ஒருவருக்கு தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி..எவ்வளவு சிறிதாயினும் அது உலகத்தைவிடப் பெரிதாம்.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது (102)

என்கிறார்.

(தேவைப்படும் காலத்தில் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரியதாக மதிக்கப்படும்)

Tuesday, May 14, 2019

வள்ளுவனும்...ஒப்பீடுகளும் - 18

ஒரு தாயின் அன்பும்..அரவணைப்பும்..மழலைப் பருவம் முதல்..தாயின் மறைவு வரை ஒரு மகனுக்கு (மகளுக்கு) தேவைப்படுகிறது.
அந்த அன்னையின் தியாகம் ஒப்பிடமுடியாத ஒன்று.
ஒரு குழந்தையை ஈன்றெடுக்க, அவள் படும் வேதனைகள்/வலிகள் எழுத்தில் வடிக்க இயலாது.
ஆனால்..அவ்வளவு வேதனையும்..வலியும்..அக்குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் அவளுக்கு மறந்து..மகிழ்ச்சி ஒன்றே ஏற்படும்.
அந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணை ஏதுமில்லை என நாம் அறிவோம்.
ஆனால்..வள்ளுவனுக்கோ..அந்தத் தாய்க்கு அப்போது ஏற்படும் மகிழ்ச்சியைக் காட்டிலும் வேறு ஒரு மகிழ்ச்சி அதிகமாய் இருக்கும் எனத் தோன்றுகிறது

அது என்ன தெரியுமா?

அவ்வளவு வலியுடன் பிறந்த குழந்தை, கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கி, ஊரார் அவனைப் பாராட்டும் போது ..பிறக்கையில் ஏற்பட்ட மகிழ்ச்சியை விட அதிகம் மகிழ்ச்சி ஏற்படுமாம்

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் (69)

(நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது , அவனைப் பெற்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியை விட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்  

Monday, May 13, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 17

அமிழ்தம்..சுவையானது.
பாற்கடலைக் கடையும் போது அமிழ்தம் வந்ததாகக் கதையும் உண்டு.
தமிழுக்கும் அமிழ்தென்று பெயர்.தமிழ்மொழியினை பேசிக் கேட்க,படிக்க அவ்வளவு சுவை வூட்டுவதாகும்.
சிறந்த பொருள்களை அமிழ்தத்திற்கு இணையாகச் சொல்வர்,
அப்படிப்பட்ட அமுதத்தை விட சுவையான ஒன்று உண்டு என் கிறார் வள்ளுவர்,
அது என்ன தெரியுமா:
நம் குழந்தைகளின் பிஞ்சுக்கைகளால் கொடுக்கப்படுவது கூழ் ஆனாலும் அமுதத்தைவிட அது சுவையானதாம்

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்  (64)

சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலும், அந்த சுவையை விட தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது

Saturday, May 11, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும்- 16

துறவிகள் கடைப்பிடிக்கும் துறவு வாழ்க்கை மிகவும் போற்றப்பட வேண்டிய ஒன்று.
தன்னை வறுத்திக் கொண்டு நோன்பு இருப்பவர்கள்.
உலக நலனுக்காக ,பற்றுகளைத் துறந்தவர்கள் அவர்கள்.
பற்றறான் பற்றினை மட்டுமே பற்றியவர்கள்.
மிகவும் பெருமையடையும் செயல்இவர்களுடையது.
ஆனால் இதை விட பெருமையுடையதாக வள்ளுவன் ஒன்றினைக் கூறுகிறார்.

அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்யும் இல்வாழ்க்கையானது, துறவிகள் கடைப் பிடிக்கும் நோன்பினைப் போன்றதாம்

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து (48)

தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்வோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பினை விட பெருமையுடையதாகும்

Friday, May 10, 2019

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 15

ஒரு விளைச்சல் நிலம் ..அது மட்டுமே பயிர் விளைச்சலுக்குப் போதுமா?

அதில் ஊன்றிடும் விதை நல்ல முற்றிய, செடியிலேயே காய வைத்து எடுத்த விதையாக இருக்க வேண்டும்.

அதை அந்த நிலத்தில் விதைத்து விட்டு..அந்த விதை விளைய அதற்கான தண்ணீரை தினசரி விட வேண்டும்.களை எடுக்க வேண்டும்..சூரிய ஒளி படரும் இடமாய் இருந்திட வேண்டும்

இப்படி நிலம்,விதை,தண்ணீர், களை, சூரிய ஒளி இவை ஐந்தும் இருந்தால் விளைச்சல் ஓஹோ..

அது போல துறவறம் மேற்கொள்பவர்கள் ஐம்பொறிகளையும் உறுதியுடன் , அடக்கிக் காத்தால் அதுவே அவர்களின் துறவறத்தின் சிறப்பு ஆகும்

இதையே வள்ளுவர்

உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து (24)

என்கிறார்.

(உறுதி என்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்)

Thursday, May 9, 2019

வள்ளுவனும் எடுத்துக்காட்டுகளும் - 14

உடல்,கண், காது, மூக்கு, வாய் என ஐம்பொறிகள் ஒவ்வொரு உயிரினத்திற்கும் உண்டு.

அவற்றில் ஒன்று சரியாக இயங்கவில்லையாயினும் துயரம்தான்.

அதேபோன்ற நிலை...

பேராற்றலும்,பண்பும் கொண்ட ஒருவனை வணங்கி நடக்காதவன் நிலையுமாம்.

இதையே வள்ளுவர்

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை (9)


(இக்குறள் கடவுள் வாழ்த்தாய் ,முதல் அதிகாரத்தில் வருவதால்..இறைவனின் திருவடிகளை வணங்காத தலை, புலன்கள் இல்லா பொறிகள் போல எனக் கொள்ளலாம்)


அடுத்து..வாழ்க்கையை பெருங்கடல் என்கிறார்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் (10)

வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், இறைவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.