Wednesday, July 31, 2019

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 154

அறம், பொரு ள் இரண்டிலும் வள்ளுவனின் உவமைகளின் உலாவினையும், ஒப்பீடுகளையும் பார்த்தோம்..இனி.."இன்பத்துப் பாலில்"இருந்து.

இதில், பல வர்ணனைகளும், உவமைகளும் நம்மை வியக்க வைக்கின்றன.அவற்றில் சிலவற்றை இனிப் பார்ப்போம்.

வாட்டும், அழகு, வண்ண மயில் என மங்கையை வர்ணிப்பவர் அவளைக் கண்டு நெஞ்சம் மயங்குகிறது என் கிறார்.

அவளது பார்வை, ஒரு தானையுடன் வந்து தாக்குவது போல இருக்கிறதாம்.

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து (1082)

அவள் வீசிடும் விழிவேலுக்கு எதிராக நான் அவளை நோக்க,அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது தானொருத்தி மட்டும் தாக்குவது போதா தென்று ஒரு தானையுடன் வந்து என்னைத் தாக்குவது போன்று இருந்தது.

அடுத்த குறளில்..

கூற்றுவன் என்னும் எமனை எனக்கு முன்பெல்லாம் தெரியாது.இப்போது தெரிந்து கொண்டேன்.அந்த எமன் என்பவன் பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடைவன் என்ற உண்மையை

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு (1083)

பெண்ணின் விழி உயிரை எடுக்கிறதாம்

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 153

ஒருவர் உடுப்பதையும், உண்பதையும் கூட கண்டு பொறாமைப்படும் கயவன், அவர்கள் மீது வேண்டுமென்றே குற்றம் கூறுவதில் வல்லவனாய் இருப்பான்

தவிர்த்து, மறைக்கப்பட வேண்டிய இரகசியம் ஒன்றை கேட்டவுடன் ஓடிச் சென்று பிறருக்கு எல்லாம் சொல்லிவிடுவான்.எப்படி தமுக்கு என்னும் கருவியை அடித்து தகவல் சொல்கிறார்களோ அப்படி அவன் தமுக்குப் போல என்கிறார்.

அறைபறை அன்னார் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க் குய்த்துரைக்க லான் (1076)

மறைக்கப்பட வேண்டிய இரகசியம் ஒன்றைக் கேட்ட மாத்திரத்தில், ஓடிச் சென்று பிறருக்குச் சொல்லுகிற கயவர்களை தமுக்கு என்னும் கருவிக்கு ஒப்பிடலாம்.

தவிர்த்து..மற்றொரு குறளில் சொல்கிறார்..

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல
கொல்லப் பயன்படும் கீழ் (1078)

குறைகளைச் சொன்னவுடனே சான்றோரிடம் கோரிய பயனைப் பெற முடியும்.ஆனால், கயவரிடமோ கரும்பை நசுக்கிப் பிழிவதைப் போல, போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும்.

வள்ளுவரும் ஒப்பிடுகளும் - 152

குணத்தில் ஒருவர் கயவராக இருப்பார்.ஆனால் நல்லவராகக் காட்டிக் கொள்வார்.எப்போதும் நல்லவை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களை விட , எதைப் பற்றியும் கவலைப்படாத கயவர்கள் பாக்கியசாலியாம்.என்ன ஒரு நையாண்டி இந்த வள்ளுவருக்கு.

நன்னறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவலம் இலர் (1072)

எப்போதும் நல்லவை பற்றியே சிந்தித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களைவிட ,எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருக்கும் கயவர்கள் பாக்கியசாலிகளாம்.

இப்படிச் சொல்லும் வள்ளுவர் கயவர்களை, தேவர்களுடன் ஒப்பிடுகிறார்.

புராணங்களில் வரும் தேவர்களைப் போல மனம் விரும்பியதையெல்லாம் கயவர்களும் செய்வார்களாம்

தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான் (1073)

புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால்..இருவரையும் சமமாகக் கருதலாம்

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 151

இருப்பதை மறைத்து 'இல்லை' என்று சொல்பவரிடம் கையேந்த வேண்டாம் என கையேந்துபவர்களை கையேந்தி கேட்டுக்கொள்கிறேன் என்னும் வள்ளுவர் சொல்கிறார்

அப்படி இருப்பதை..இல்லை என்போர் கல்நெஞ்சம் படைத்தவர்கள்.இரத்தல் என்னும் தோணி இவர்கள் மீது மோதினால் பிளந்து நொறுங்கிவிடும் என்கிறார்

இரத்தலை "தோணி:" யாகவும்..இரப்போர் உள்ளத்தை உடையும் தோணியாகவும் சொல்கிறார்.

இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்த்தாக்கப் பக்கு விடும் (1068)

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 150

இரந்து பொருள் பெறுபவர் இல்லையெனில், கொடுத்துப் புகழ் பெறும் வாய்ப்பு கொடுப்போருக்கு இல்லாமல் போகுமாம்.

அதேநேரம், ஒருவரிடம் யாசிக்கும்போது, அவர் இல்லையென்று சொல்லிவிட்டால் அவர் மீது கோபம் கொள்ளக்கூடாதாம் இரப்பவர்கள்.ஏனெனில், அவர்நிலையும் தன்னிலைப் போல இருக்கக் கூடும் என எண்ண வேண்டுமாம்

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி (1060)

இல்லை என்பவரிடம், இரப்பவன் கோபம் கொள்ளக் கூடாது.தன்னைப் போலவே பிறர் நிலைமையும் இருக்கலாம் என்பதற்குத் தன் வறுமையே சான்றாக உள்ளதே!

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 149

இருப்பதைக் கொடுக்க மனமில்லாமல், மறைத்திடும் குணம் இழிநிலை ஆகும்.

இழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் இரப்போருக்கு வழங்கிடும் குணம் உடையவர்களைக் காணும்போது இரப்போர் உள்ளம் மகிழும்

அப்படியின்றி..யாசிப்பவர்கள் தங்களை நெருங்கக் கூடாது என்று எண்ணும் மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? மரத்தால் செய்யப்பட்டு இயக்கப்படும் பொம்மைகள் போன்றவர்களாம்

இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்ரு (1058)

வறுமையின் காரணமாக யாசிப்பவர்கள் தம்மை நெருங்கக் கூடாது என்கின்ற மனிதர்களுக்கும்.,மரத்தால் செய்யப்பட்டு இயக்கப்படும் பதுமைகளுக்கும் வேறுபாடே இல்லை

Tuesday, July 30, 2019

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 148

வறுமை எனும் துன்பத்திலிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் வரும்.

வறுமைக் கொடுமை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும்,வருங்காலத்திலும் நிம்மதி என்பது கிடையாது

வறுமையில் உள்ளவனுக்கு தூக்கம் இராது.

நெருப்புக்குள் கூட ஒரு மனிதனால் தூங்கிவிட முடியுமாம்..ஆனல் வறுமையில் இருக்கும்போது அவனால் தூங்க முடியாதாம்.

நெருப்பினும் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பா டரிது (1049)

நெருப்புக்குள் படுத்துத் தூங்குவதுகூட ஒரு மனிதனால் முடியும்.ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது என்பது இயலாத ஒன்றாகும்.

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 147

அரிய பலநூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற் போகுமாம்

அப்படிப்பட்ட வறியவர், வறுமை வந்துவிட்டது என்பதற்காக அறநெறியிலிருந்து விலகி நடக்கக் கூடாதாம்.அப்படி நடப்பானாகில் அவன் தாய் கூட அவனை அயலானைப் போலத்தான் கருதுவாளாம்

அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும் (1047)

வறியவன், காலை விடிந்ததும் இன்றைக்கு, நேற்று போல வராமல் இருக்க வேண்டுமே என எண்ணுவானாம்.அப்படி என்ன முதல்நாள் வந்தது? வறுமை...

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு (1048)

கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப் படுத்திய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என வறியவன் ஏங்குவான்

.

வள்ளுவரும்..ஒப்பீடுகளும் - 146


பல உவமைகளை அருமையாக ஆங்காங்கே குறள்களில் ஒப்பீட்டு சொல்லியுள்ள வள்ளுவருக்கு ..எடுத்துக்காட்டாக சொல்ல முடியாத ஒன்று இருந்திருக்கிறது என் எண்ணுகையில் ஆச்சரியமே ஏற்படுகிறது..

அப்படி ஒப்பிட முடியாதது எதுவாய் இருக்கும்....

வறுமை என்னும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும் என்று சொன்னவர்..

வறுமைத் துன்பத்திற்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை என்கிறார் இக்குறளில்..

இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது (1041)

இக்குறளில் வள்ளுவனின் சொல்விளையாட்டினையும் பாருங்கள்.

இன்மை, இன்னாதது,இன்மை,இன்மை,இன்னாதது....

வள்ளுவத்தைப் போற்றுவோம்

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 145


ஒரு பலம் புழுதி, கால் பலம் ஆகும் அளவிற்கு பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளருமாம்.

உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது.களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது.அதைவிட நல்லது பயிரை பாதுகாப்பது.

ஒருவன் தன் மனைவியை நன்கு பார்த்துக் கொள்ள வேண்டும்.அவளுக்கான தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.அவளது குறைகளைக் கேட்டு சரி செய்ய வேண்டும்...

ஆமாம்...உழவிற்கும் மனைவிக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?

ஒப்பீட்டின் மன்னன் பொய்யாமொழியார் சம்பந்தம் இருக்கிறது என்கிறார்.
மனைவியைக் கவனிப்பது போல அவனது நிலத்தை விவசாயி தினமும் சென்று கவனிக்க வேண்டுமாம்.இல்லையெனில்...வெறுப்புற்று அவன் மனைவி விலகிப் போவதுப் போல நிலமும் விளைச்சலின்றிப் போகுமாம்

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்
தில்லாளின் ஊடி விடும் (1039)

உழவன், தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், அவனால் வெறுப்புற்று விலகியிருக்கும் மனைவிபோல அது விளைச்சலின்றிப் போய்விடும்.

கடைசியாக வள்ளுவன் சொல்கிறார்..

வேலை கிடைக்கவில்லை..எனக்கு வாழ வழியில்லை என்று சொல்லிக் கொண்டு சோம்பித் திரிபவர்களை..உன் கண்முன்னே நீ உழைத்து வாழ நான் இருக்கின்றேன் அது உனக்குத் தெரியவில்லையா? என பூமித்தாய் கேலி புரிவாள் என்கிறார்.

இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும் (1040)

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 144

பல தொழில்களைச் செய்பவர்களைத் தாங்கிக் கொண்டு சுற்றிக்கொண்டிருந்தாலும் இவ்வுலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியுள்ளது.அதனால் அனைவருக்கும் உணவு வழங்கும் உழவுத் தொழிலே சிறந்தது

உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்.எனெனில் மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியுள்ளது. என்றெல்லாம் சொல்லும் வள்ளுவர் "உழவு" என அதற்கான தனி அதிகாரமே வைத்துள்ளார்

பல அரசுகளை தங்கள் குடைக்குள் கொண்டு வரும் வலிமைப் பெற்றவர்கள் உழவர்கள்  ...ஒரு வண்டியை முழுதும் தாங்கி நிற்க வேண்டுமானால் அதற்கு அச்சாணி தேவை.அதுபோல மக்கள் பசியினைப் போக்கும்..உழவுத் தொழில் என்கிறார்.

உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
தெழுவாரை எல்லாம் பொறுத்து (1032)

பல்வேறு தொழில் புரிகின்ற மக்கள் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்

வள்ளுவரும் ஒப்பீடுகளும் -143

ஒரு பெண் வெட்கப்படுகிறாள் என்றால் அது நாணம்.ஆனால் அதுவே, ஒருவர் தமது தகாத நடத்தையினால் நாணுகின்றார் என்றால்..இந்த வெட்கத்திற்குப் பொருள் வேறு.

தாம் செய்த தகாத செயலை எண்ணி,தன் கீழ்த்தரமான செயலுக்காக வெட்கப்பட்டு தலைகுனிந்து வருந்துகிறார் என்று பொருள்
உலகில் எந்தப் பாதுகாப்பினையும் விட நாணம் எனும் வேலியைத்தான் உயர்ந்தோர் தம் பாதுகாப்பாகக் கொள்வர்

பொம்மலாட்டம் நாம் எல்லாம் பார்த்திருப்போம்.அதில் பொம்மைகள் கயிறுகொண்டு ஆட்டி வைக்கப்படும்.அப்பொம்மைகளுக்கு உயிர் இல்லை.அதுபோல மனதில் நாணம் இன்றி திரிவோரும் உயிர் இருந்தும் உயிரற்றவர்கள் போல என்கிறார் வள்ளுவர்.

நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று (1020)

உயிர் இருப்பது போலக் கயிறுகொண்டு ஆட்டி வைக்கப்படும் மரப்பொம்மைக்கும்,மனதில் நாணமெனும் ஒரு உணர்வு இல்லாமல் உலகில் நடமாடுபவருக்கும் வேறுபாடு இல்லை

Monday, July 29, 2019

வள்ளுவனும் ஒப்பீடுகளும் -142

கொடுத்து உதவும் பண்பு கொண்டவர்களின் சிறிதளவு வறுமைகூட எப்படிப்பட்டதாம் தெரியுமா?

நாடு வளம் பெற..நாட்டில் விளைச்சல் அதிகமாக..அந்நாட்டு மக்கள் வறுமையில்லாமல் இருக்க..அந்தந்த பருவத்தில் பொய்க்காது மழை பொழிய வேண்டும்.அப்படியின்றி மழை பொய்த்துவிட்டால்..அனைத்து மக்களும் அவதியுறும் நிலை.

அதுபோன்ற நிலையாம் கொடுப்பவனுக்கு ஏற்படும் சிறுவறுமையும்

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனைய துடைத்து (1010)

சிறந்த உள்ளம் கொண்ட செல்வர்களுக்கு ஏற்படும் சிறிதளவு வறுமையின் நிழல் கூட மழை பொய்த்து விட்டதற்கு ஒப்பானதாகும்

வள்ளுவரும் ஒப்பீடுகளும்- 141

உணவு, உடை,இருப்பிடம்  போன்றவை ஒரு மனிதனுக்கு பொதுவான தேவைகள்.ஆனால், சிறப்புக்குரிய தேவை, பிறரால் பழிக்கப்படும் செயல்களை தவிர்த்து வாழுதல்.

அப்படி ஏதேனும் தவறு இழைத்துவிட்டால் தமக்குள் வருந்துகின்ற நாணம் எனும் உணர்வு பெரியவர்களுக்கு அணிகலன் ஆகும்.அது இல்லாதவர்கள் என்னதான் பெருமித நடைப் போட்டாலும் அது ஒரு நோய்க்கு ஒப்பானதாகும்.

அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற்
பிணியன்றோ பீடு நடை (1014)

நடந்த தவறு காரணமாகத் தமக்குள் வருந்துகிற நாணம் எனும் உணர்வு, பெரியவர்களுக்கு அணிகலன் ஆக விளங்கும்.அந்த அணிகலன் இல்லாமல் என்னதான் பெருமிதமாக நடைபோட்டாலும் அந்த நடை ஒரு நோய்க்கு ஒப்பானதாகவே கருத முடியும்

வள்ளுவனுமொப்பீடுகளும் - 140

பேராசையினால், அளவிற்கு அதிகமாக செல்வத்தைச் சேர்த்து வைத்து, அதனை அனுபவிக்காமல் செத்துப் போகின்றவனுக்கு, அப்படிச் சேர்க்கப்பட்ட செல்வத்தால் என்ன பயன்?

ஊருக்கு நடுவே ஒரு நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்கும் கனிகளினால் என்ன பயன்? ஒன்றும் இல்லை.அதுபோலவே வறியவர்க்கு வழங்காமல் குவித்துவைக்கும் செல்வத்தால் என்ன பயனும் இல்லை.

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று(1008)

வெறுக்கப்படுபவர்களிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையில்லை

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 139

புகழை விரும்பாது, பொருள் சேர்ப்பது ஒன்றினையே குறியாக இருப்பவர்கள் பிறந்து, வாழ்வதே இந்தப் பூமிக்குப் பெரும் சுமையாகும்.கொடுத்து உதவும் பண்பில்லாதவர்களிடம் கோடி கோடியாய் செல்வம் குவிந்தாலும் அதனால் எந்தப் பயனும் இல்லை.

வறியவர்க்கு எதுவும் வழங்கி உதவாதவன் செல்வம் எதற்கு ஒப்பாகும் தெரியுமா?  அழகிய பெண் ஒருத்தி தனியாகவே இருந்து முதுமையடைவதற்கு ஒப்பாகுமாம்.

அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று (1007)

வறியவர்க்கு எதுவும் வழங்கி உதவாதவனின் செல்வம், மிகுந்த அழகியொருத்தி, தன்னந்தனியாகவே இருந்து முதுமையடைவதைப் போன்றது

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 138

இரவும் பகலும் மாறி மாறி வருவது இயற்கை.ஆனால்,உலகம் எப்போதுமே இருட்டாகத்தான் இருக்குமாம்.யாருக்குத் தெரியுமா?

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள் (999)

நண்பர்களுடன் பழகி மகிழத் தெரியாதவர்களுக்கு உலகம் என்பது பகலில் கூட இருட்டாகத்தான் இருக்குமாம்.

அதேபோன்று பண்பற்றவர்களின் செல்வமும் பயனற்றதாகிவிடுமாம்.எதுபோல என்று தெரியுமா?

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திருந் தற்று (1000)

பாத்திரம் களிம்பு பிடித்திருந்தால்,அதில் ஊற்றி வைக்கப்படும் பால் எப்படிக் கெட்டுவிடுமோ அதுபோலப் பண்பு இல்லாதவர்கள் பெற்ற செல்வமும் பயனற்றதாகிவிடும்.

வள்ளுவரும் ஒப்பீடுகலும் -137

எல்லோரிடமும் எளிமையாகப் பழகுவதே பண்புடைமை எனும் சிறந்த ஒழுக்கத்தைப் பெற எளிதான வழியாக அமையும்.

நன்மைகளைச் செய்து பிறருக்கு பயன்பட பணியாற்றுபவர்களின் நற்பண்பை உலகமே பாராட்டும்.

அரம் போன்ற கூர்மையான அறிவுடைய மேதையாக இருந்தாலும் , மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் மரத்திற்கு ஒப்பானவர் ஆவார்

இதையே..

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர் (997)

என்கிறார்.


வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 136

ஒருவருக்கு ஏற்படும் தோல்வியைக் கூட ஓப்புக் கொள்ளும் மனப்பாங்கே அவரின் மேன்மைக்கு உரைகல் ஆகும்.

தமக்கு தீங்கு செய்பவருக்கும் நன்மையே செய்ய வேண்டும்.அதுவே சான்றாண்மை எனும் நல்ல பண்பாகும்.

ஊழிக்காலம் ஏற்பட்டாலும், எல்லாக் கடல்களும் தடம் புரண்டு மாறினாலும், அவை தம்நிலை மாறாது.அதுபோல சான்றோர் நிலைமாறாதக் கடலாகத் திகழ்வார்களாம்.

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்
காழி யெனப்படு வார் (989)

தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம் புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும் கூடத் தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள்

Sunday, July 28, 2019

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 135

பிறப்பினால் அனைவரும் சமம்.செய்யும் தொழிலில் காட்டுகின்ற திறமையினால் மட்டுமே வேறுபாடு காணமுடியும்.

அதேபோல பண்பு இல்லாதவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் உயர்ந்தோர் அல்லர்.இழிவான காரியங்களில் ஈடுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் உயர்ந்தவர்கள் ஆவார்கள்.

தன்னிலை தவறாது ஒருவன் தன்னைக் காத்துக்கொண்டு வாழ்வானாயின், அவனுக்குப் புகழும்,பெருமையும் கிடைக்கும்.அப்படிப்பட்டவர் எதுபோல தெரியுமா?
கற்புக்கரசிகள் போலவாம்.

ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு (974)

தன்னிலை தவராது ஒருவன் தன்னைத் தானே காத்துக் கொண்டு வாழ்வானாயின், அவனுக்கு கற்புக்கரசிகளுக்குக் கிடைக்கும் புகழும்,பெருமையும் கிடைக்கும்.

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 134

தன்னை மதிக்காதவரின் பின்னால் சென்று உயிர் வாழ்வதைவிடச் செத்தொழிவது எவ்வளவோ மேல்..

சாகாமலே இருக்க மருந்து கிடையாது.அப்படி இருக்கையில் உயிரை விட நிலையான மானத்தைப் போற்றாமல், வாழ்க்கை மேம்பாட்டிற்காக ஒருவர், தமது பெருமையைக் குறைத்துக் கொள்வது இழிவான செயலாகும்

என்றெல்லாம் சொன்ன வள்ளுவர், மானத்தை இழந்தால் உயர்ந்த மனிதர்கள் என்ன செய்வார்கள்  என சொல்லி, அதை யாருடன் ஒப்பிடுகிறார் பாருங்கள்.

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின் (969)

என்கிறார்.

உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் கவரிமான் உயிர் வாழாது என்பர்..அதுபோல மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டுவிடுவார்கள். 

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 133

உயர்ந்த நிலையில் உள்ளவர்கள், தனக்குப் புகழ் வேண்டுமென்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈடுபட மாட்டார்கள்

உயர் நிலை வருகையில் அடக்க உணர்வும், அந்நிலை மாறிடில் யாருக்கும் அடிமையாகா மான உணர்வும் அவர்களுக்கு உண்டு

மக்களின் உள்ளத்தில் அப்படி உயர் இடம் பெற்றஒருவர் மானம் இழந்து, தாழ்ந்திட்டால்..அவர்கள் தலையில் இருந்து உதிர்ந்த மயிருக்கு சமமானவராகக் கருதப்படுவர்

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை (964)

மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும் போது தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்கு சமமாகக் கருதப்படுவார்கள்

அடுத்த குறளிலேயே சொல்கிறார்...

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின் (965)

வள்ளுவரின் சொல் விளையாட்டினைப் பாருங்கள்
ஒன்றரை அடியில்...குன்றின்,குன்றுவர்,குன்றுவ,குன்றி அடடா..

இக்குறளுக்கானப் பொருள்

குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள் 

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 132

தகாத செயல் புரிந்திட அஞ்சி நாணுவதும்,எல்லோரிடமும் ஆணவமின்றிப் பணிவுடன் நடந்து கொள்வதும்..அவர் நலத்தையும், அவர் பிறந்த குலத்தையும் உயர்த்தக் கூடியவைகளாகும்.

அவர்களின் வாய்ச் சொலலைக் கேட்டே   அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என அறியலாம்..எப்படி..விளைந்த பயிரினைப் பார்த்ததும் அப்பயிர் எந்த நிலத்தில் விளைந்தது என்பதை அறிந்து கொள்கிறோமோ அதுபோல.

நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல் (959)

விளைந்த பயிரைப் பார்த்தாலே, அது எந்த நிலத்தில் விளைந்தது என அறிந்து கொள்ளலாம்.அதுபோல ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 131

ஒழுக்கம், வாய்மை, மானம் ஆகிய மூன்றிலும் நிலைதவறி நடக்காதவர்களே உயர்குடியில் பிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள் .

பலகொடிப் பொருள்களை வழங்கினாலும், சிறந்த குடியில் பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம் தரமாட்டார்கள்

இப்படிப்பட்ட குடியினரின் சிறந்த குறைகள் ஒளிவு மறைவு மின்றித் தெரியும்..எதுபோல எனில்..

வானத்து நிலவில் உள்ள குறைபோல வெளிப்படையாகத் தெரியுமாம்

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து (957)

பிறந்த குடிக்கு பெருமை சேர்ப்பவர்களின் சிறிய குறைகள், ஒளிவு மறைவு ஏதுமின்றி, வானத்து நிலவில் உள்ள குறைபோல வெளிப்படையாகத் தெரியக்கூடியதாகும்.

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 130

சூதாட்டத்திற்கு அடிமை ஆகிவிட்டவர்களை விட்டு அவர்கள் ஈட்டிய புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை என அனைத்தும் அகன்று விடும்

ஒருவன் உடலுக்குத் துன்பம் வரவர, அவனுக்கு உயிர் வாழ வேண்டும் என்ற ஆசை அதிகரித்துக் கொண்டிருக்குமாம் அதுபோலத்தான்..பொருளை இழக்க இழக்க..இழந்த பொருளைப் பிடிக்க வேண்டும் என சூதாட்ட ஆசை அதிகரிக்குமாம்.

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற் றுயிர் (940)

பொருளை இழக்க இழக்கச் சூதாட்டத்தின்மீது ஏற்படுகின்ற ஆசையும், உடலுக்குத் துன்பம் தொடர்ந்து வரவர உயிர் மீது கொள்ளும் ஆசையும் ஒன்றேதான்

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 129

எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும், அந்த காரியத்தில் வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணத்தில் ஈடுபட்டு, முயன்று வெற்றிக்கனியினைப் பறிக்க வேண்டும்.

ஆனால்...ஒரு இடத்தில் மட்டும் வெற்றி நிச்சயம் என்ற போதிலும் அங்கு செல்லக் கூடாது.அந்த காரியத்தில் ஈடுபடவும் கூடாது.

அது என்ன? அப்படிப்பட்ட காரியத்தை வள்ளுவர் எதனுடன் ஒப்பிடுகிறார்...பார்ப்போம்.

வெற்றி பெறுவதாயினும் சூதாடும் இடம் செல்லக்கூடாதாம்.அந்த வெற்றி, தூண்டிலில் இரையை விழுங்குவதாக எண்ணி மீன்கள் தூண்டில் முள்ளில் மாட்டிக் கொள்வது போலவாம்.

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று (931)

வெற்றியே பெறுவதாக ஆனாலும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது.அந்த வெற்றி தூண்டிலின் முள்ளில் கோர்த்த இரையை மட்டும் விழுங்குவதாக எண்ணி மீன்கள் தூண்டில் முள்ளையே கவ்விக் கொண்டது போலாகிவிடும்.

Saturday, July 27, 2019

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 128

மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும், இறந்து கிடப்பதற்கும் கூட வேறுபாடு கிடையாது எனும் வள்ளுவர் மேலும் சொல்கிறார்...

மறைந்திருந்து மதுவருந்தினாலும் அவன் கண்கள் சுழன்று மயங்கி காட்டிக் கொடுத்துவிடுமாம்.

மது அருந்துபவன், அவன் அதனை அருந்தா நேரத்தில், மது உண்ட ஒருவன் மது மயக்குவதில் தள்ளாடுவது கண்டு மற்றவர்கள் எள்ளி நகையாடுவதைக் கண்டப் பின்னராவது திருந்த வேண்டாமா? என்கிறார்.

கீழே சொல்லியுள்ல குறளில் அவரது ஒப்பீட்டினைப் பாருங்கள்..

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று (929)

குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீரில் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு போவதும் ஒன்றுதான்..

அடடா...எப்படிப்பட்ட ஒப்பீடு..வள்ளுவருக்கின்றி வேறு யாருக்கு இப்படித் தோன்றும்..

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 127

உள்ளத்தில் அன்பு இல்லாமல், தன்னலத்திற்காக உடலுறவு  கொள்ளும் பொதுமகளிரின் தோளில் சான்றோர் எவரும் சாய்ந்து கிடக்கமாட்டார்களாம்.

கிராமங்களில், என்  நகரங்களிலும் கூட "பேய்" குறித்த நம்பிக்கை இருக்கிறது. வள்ளுவன் காலத்திலும் அப்படி ஒரு நம்பிக்கை இருந்திருக்கக் கூடும்.இல்லையெனில்..பொதுமகளிரிடம் ஒருவன் மயங்கிக் கிடப்பதை அவனுக்கு ஏற்பட்டுள்ள மோகினி மயக்கம் என்கிறிருப்பாரா!!!.

ஆயும் அறிவினர் அலலர்க் கணங்கென்ப
மாய மகளிர் முயக்கு (918)

வஞ்சக எண்ணங்கொண்ட "பொதுமகள்" ஒருத்தியிடம் மயங்குவதை  அறிவில்லாதவனுக்கு ஏற்பட்ட :மோகினி மயக்கம்" எனக் கூறுவார்கள்

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 126

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்கள் தெய்வத்துள் வைக்கப்படும் என்பது வள்ளுவர் சொல்வாக்கு.சுருங்கச் சொல்வதானால்..ஆன்மீகவாதிகள் சொல்லும் சொர்க்கம் இப்படிப்பட்டவர்களுக்குக் கிடைக்குமாம்.

மனம்போனபடி கேடு கெட்டு வாழ்பவர்கள் நரகத்திற்குப் போவார்கள் என்பதும் இவர்கள் நம்பிக்கை.

வள்ளுவரும்..சொர்க்கம்..நரகம் ..என்பதை நம்புவராகத் தெரிகிறது.

விலைமாதரை விரும்பி அவர்கள் பின்னால் செல்பவர்கள்..வாழ்க்கையில் தவறுகள் பல புரிந்துவிட்டு நரகத்திற்கு செல்லுபவர்களுக்கு ஈடாவார்கள் என்கிறார்.

வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு (919)

விலைமகளை நம்பி அவள் பின்னால் போவதற்கும் "நரகம்" எனச் சொல்லப்படும் சகதியில் விழுவதற்கும் வேறுபாடே இல்லை.

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 125

ஆதாயத்திற்காக, நம்மை ஏமாற்றி அன்புமொழியினைப் பேசும் விலைமகளிர் உறவை ஒரு போதும் நம்பி ஏமாறக்கூடாது.

விலைமாதர்கள் பணத்திற்காக மட்டுமே ஒருவரைத் தழுவி அன்பு காட்டுவது எது போலவாம்..

இருட்டறையில் ஒரு பிணத்தை அணைத்துக் கிடப்பது போன்றதாம்

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று (913)

விலைமாதர்கள் பணத்துக்காக மட்டுமே ஒருவரைத் தழுவி பொய்யன்பு காட்டி நடிப்பது, இருட்டறையில் ஓர் அந்நியப் பிணத்தை அணைத்துக் கிடப்பது போன்றதாகும்

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 124

பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால், நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடுமாம்.

அதை எப்படி சொல்கிறார் தெரியுமா?

ஒருவரைச் சுற்றி நெருப்பு.வெளியே வரவிடாமல் அவரை சுடுகிறது.அவர் தப்பு முடியும் என்ற அறிகுறியே இல்லை.ஆனால்..அப்படிப்பட்டவர்கள் கூட தப்பிப் பிழைத்துக் கொள்ள முடியுமாம்.ஆனால்..ஆற்றல் மிக்க பெரியோரிடம் தவறிழைப்போர் தப்பவே முடியாதாம்.

எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார் (896)

நெருப்புச் சூழ்ந்து சுட்டாலும்கூட ஒருவர் பிழைத்துக் கொள்ள முடியும்.ஆனால் ஆற்றல் மிகுந்த பெரியோரிடம் தவறிழைப்போர் தப்பிப் பிழைப்பது முடியாது 

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 123

உட்பகை எனும் அதிகாரத்தில் கீழே சொல்லப்பட்டுள்ள குறள்கள் ஒவ்வொன்றிலும் உட்பகையை எதனுடன் ஒப்பிடுகிறார் பாருங்கள்

ஒரு இரும்புத் துண்டினை, அரம் கொண்டு தேய்க்கத் தேய்க்க அதன் உருவமும், வலிமையும் குறையுமாம்.அதுபோல உட்பகை உண்டான குலத்தின் வலிமையும் தேய்ந்து, குறைந்து விடும்

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொரு
துட்பகை உற்ற குடி (888)

அடுத்து..

எள் சிறியது.அதனில் காணப்படும் முனையில் உள்ள பிளவு எவ்வளவு சிறியதாய் இருக்கும்.அதுபோல சிறிதாக உட்பகை இருந்தாலும், அதனால் பெருங்கேடு விளையுமாம்

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு (889)

எள்ளின் பிளவுபோன்று சிறிதாக இருந்தாலும் உட்பகையால் பெருங்கேடு விளையும்

அடுத்த குறளிலும் ஒப்பீடு தொடர்கிறது

உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போ டுடனுறைந் தற்று (890)



உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடிவாழ்வது என்பது ஒரு சிறிய குடிலுக்குள் பாம்புடன் இருப்பது போன்று ஒவ்வொரு நொடியும் அச்சம் தருவதாகும்

வள்லுவனும்..ஒப்பீடுகளும் - 122

ஒன்றாக இருந்தவர்களுடன் உட்பகை தோன்றி விடுமானால், அதனால் எற்படும் அழிவினைத் தடுப்பது என்பது அரிதான செயலாகும்.

செப்பு எனப்படுகின்ற சிமிழின் மூடி அதனுடன் பொருந்தியிருப்பது போலவே கண்களுக்குத் தோன்றினாலும்  உண்மையில் சரியாய் பொருந்தி இருக்காது.அதுபோல உளமார பொருந்தியிருப்பதுப் போலத் தோற்றமளித்தாலும் உட்பகை உள்ளவர்கள் பொருந்தியிருக்க மாட்டார்களாம்.

செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி (887)

செப்பு எனப்படும் சிமிழில் அதன் மூடி பொருந்தியிருப்பது போல வெளித்தோற்றத்திற்கு மட்டுமே தெரியும்.அவ்வாறே உட்பகையுள்ளவர்கள் உளமாரப் பொருந்தியிருக்க மாட்டார்கள் 

Friday, July 26, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 121

நெருங்கிய உறவினர்களுக்கு இடையே தோன்றும் உட்பகையானது அவர்களுக்குக் கேடுவிளைவிக்கக் கூடிய பல துன்பங்களை உண்டாக்குமாம்

ஆகவே, உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைப் பாதுகாத்தக் கொள்ள வேண்டும்.இல்லையெனில், பச்சை மண்பாண்டம் உருவாகும் போது அதை உருளையிலிருந்து குயவன் அறுத்து எடுக்கும் கருவி போல உட்பகை அழிவு செய்து விடுமாம்.அடடா...என்ன ஒரு ஒப்பீடு..

உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும் (883)

உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.இல்லாவிடின், சோதனையான நேரத்தில் பச்சை மண்பாண்டத்தை அறுக்கும் கருவிபோல அந்த உட்பகை அழிவு செய்துவிடும்

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 120

வெளிப்படையாக எதிரே வரும் பகைவர்களைவிட உறவாடிக் கெடுக்க நினைப்பவர்களிடம்தான் ஒருவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம்

இனிமையாய் தெரியும் நிழலும், நீரும்கூட கேடு விலைவிக்குமேயாயின் அது தீயவையாகக் கொள்ள வேண்டுமாம்.அதுபோலத்தானாம் உற்றார், உறவினரின் பகையுமாம்

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின் (881)

இனிமையாகத் தெரியும் நிழலும், நீரும்கூடக்கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும்.அதுபோலவே உற்றார்,உறவினரின் உட்பகையும் ஆகும்.

வள்ளுவனும் ஒப்பீடுகளும்- 119

தன்னுடன் இருந்துகொண்டே தனக்கு பொருந்தாத காரியங்களைச் செய்து கொண்டிருப்பவனைப், பொருள் கொடுத்தாவது பகைவனாக ஆக்கிக் கொள்ள வேண்டுமாம்.

என்ன ஒரு கிண்டல் இந்த வள்ளுவருக்கு!!1

இப்படிச் சொல்பவர் மீண்டும் ஒரு குறளில் சொல்கிறார்...

முள் மரத்தை, அது செடியாக இருக்கும் போதே அழித்துவிட வேண்டுமாம்.பகையும் அப்படித்தான்.முற்றுவதற்கு முன்னே அழித்திட வேண்டுமாம்

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து (879)

முள்மரத்தை, அது சிறியதாக கன்றாக இருக்கும்போதே கிள்ளி எறிவதைப் போல, பகையையும், அது முற்றுவத்ற்கு முன்பே வீழ்த்திட வேண்டும்

மற்றுமொரு குறளில் சொல்கிறார்..

பகைவரின் ஆணவத்தைக் குலைக்க முடியாதவர்கள், சுவாசிக்கின்ற ஒரே காரணத்தாலேயே உயிரோடு இருப்பதாகச் சொல்ல முடியாது என.

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதிக்கலா தார் (880)

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 118

நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காத அறிவிலிகள்,தமக்குத் தாமே பெரும் துன்பத்தைத் தேடிக்கொள்வார்கள்.

அறிவற்றவன், நாம் ஆதாரங்களைக் காட்டி இதுதான் உண்மை என்று தெளிவாகக் கூறினாலும் அதை ஒப்புக் கொள்ள மாட்டார்களாம்.

அவர்களை...இதுபோல என வள்ளுவர் கீழே சொல்லியுள்ள குறளில் ஒப்பிடவில்லையென்றாலும்...அப்படி மறுத்துரைப்பவர்கள் பேய்களின் பட்டியலில்தான் வைக்க வேண்டும் என்று சொல்கிறார்.

இப்படிச் சொல்வதால் அவர்களை பேய்களுடன் ஒப்பிடுகிறார் என்று சொல்லலாம் அல்லவா?

உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்
தலகையா வைக்கப் படும் (850)

ஆதாரங்களைக் காட்டி இதுதான் உண்மை என்று தெளிவாகக் கூறப்படுகின்ற ஒன்றை, வேண்டுமென்றே இல்லை என மறுத்துரைப்பவரைப் "பேய்"களின் பட்டியலில்தான் வைக்க வேண்டும்

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 117

நக்கல், நையாண்டி புரிவதை கூட வள்ளுவர் விட்டு வைக்கவில்லை.அதற்கு பல குறள்களை உதாரணமாகச் சொல்லலாம்.

குறிப்பாக, தேவரனையர் கயவர்...என கயவர்களை தேவருடன் ஒப்பிடுவார்.இந்த ஒப்பீடு பின்னால் வருகிறது .அதேபோல

பிரிதினிது பேதையர் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில் (839)

என்ற குறளில் 'அறிவற்ற பேதைகளுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது" என்று சொல்லிவிட்டு, "ஏனெனில் அவர்களை பிரியும்போது எந்தத் துன்பமும் ஏற்படுவதில்லை" என நக்கல் செய்கிறார்.

சரி, இப்போது ஒப்பீடுக்கு வருவோம்..

அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள் நுழைவது எதுபோலவாம் தெரியுமா? வெளியே சென்று திரும்புகையில் ஏதோ அசுத்தத்தை மிதித்து விட்டு வந்து காலைக் கழுவாமலேயே படுக்கச் செல்வது போல என்கிறார்.

கூழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்  (840)

அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள் நுழைவது என்பது, அசுத்தத்தை மிதித்த காலை படுக்கையில் வைப்பது போன்றது

Thursday, July 25, 2019

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 116

அறிவில்லாதப் பேதைகளிடம் உள்ள செல்வம் அயலார் சுருட்டிக் கொள்ளவே பயன்படும்.

நல்லது எது, கெட்டது எது என்ற தெளிவில்லாமல், நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதமையாளருக்கு எடுத்துக்காட்டாகும்.அப்படிப்பட்ட பேதையின் கையில் ஒரு பொருள் கிடைத்துவிட்டால், பித்துப் பிடித்தவன் கள்ளையும் குடித்தாற்போலாம்

மையல் ஒருவன் கலித்தற்றாற் பேதைதன்
கையொன் றுடைமை பெறின் (838)

நல்லது கெட்டது தெரியாத பேதையின் கைகளில் ஒரு பொருளும் கிடைத்துவிட்டால், பித்துப் பிடித்தவர்கள் கள்ளையும் குடித்துவிட்ட கதையாக ஆகிவிடும் 

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 115

சிரித்துப் பேசி நம்மைச் சீரழிக்க நினைக்கும் வஞ்சகரின் நட்புக்கு அஞ்சி ஒதுங்கிட வேண்டும்.

அவர்கள், கண்ணீர் விட்டு அழுதிடும்போது கூட அவர்கள் மனதில் சதிச்செயலே நிறந்திருக்குமாம்.இது எதுபோல என சொல்கிறார் தெரியுமா?

பகைவர்கள் வணங்கும்போதுகூட அவர்களின் கைக்குள்ளே கொலைக்கான கருவி மறைந்திருப்பது போலவாம்.

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து (828)

பகைவர்கள் வணங்குகின்ற போதுகூட அவர்களின் கைக்குள்ளே கொலைக் கருவி மறைந்திருப்பது போல, அவர்கள் கண்ணீர் விட்டு அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும்

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 114

பகைவர், நண்பர்களைப் போல இனிமையாகம் பேசினாலும், அந்தச் சொற்களில்கிடக்கும் சிறுமைக் குணம் வெளிப்பட்டேத் தீருமாம்

பகைவரிடம் காணப்படும் சொல் வணக்கம் தீங்கு விளைவிக்குமாம்.அது எப்படி...எதுபோல எனில்..வில்லின் வணக்கத்தைப் போலவாம்.

வில்லாவது..வணக்கமாவது என்கிறீர்களா?

அதாவது..வில்லில் அம்பைப் பூட்டி..எய்வதற்குமுன் வில்லை சற்று அம்புடன் இழுத்து நாணை வளைக்க வேண்டியிருக்கும்.அது வணக்கம் போலவாம்.

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான் (827)

பகைவரிடம் காணப்படும் சொல்வணக்கம் என்பது வில்லின் வணக்கத்தைப் போல தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதால், அதனை நம்பக் கூடாது

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 113

அரிய நூல்கள் பல கற்றவராக இருந்தாலும், பகையுணர்வு படைத்தோர் மனம் திருந்தி நடப்பது என்பது அரிதாகும்

அதுபோல உற்றாராக இல்லாமல் உற்றார் போல நடிப்பவர்களின் நட்பை, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்கள் என்கிறார்.மேலும் அப்படிப்பட்டவர்களை யாருடன் ஒப்பிடுகிறார் தெரியுமா?

மகளிருக்கு இருக்க வேண்டிய நற்பண்பு இல்லாமல் , ஆனால் இருப்பது போல நடிக்கும் விலைமகளிருடன் ஒப்பிடுகிறார்.

இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்  (822)

உற்றாராக இல்லாமல் உற்றார்போல நடிப்பவர்களின் நட்பு, மகளிருக்குரிய நற்பண்பு இல்லாமல், அப்பண்பு உள்ளவர் போல நடிக்கும் விலைமகளிரின் மனம்போல உள்ளொன்றும் புறமொன்றுமாக இருக்கும்

Wednesday, July 24, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் -112

சிரித்து, சிரித்துப் பேசி நம்மை சீரழிக்க நினைக்கும் வஞ்சகர்களின் நட்பை அஞ்சி விலகிட வேண்டும்

மனதார இருக்கும் நட்பே சிறந்த நட்பாக இருக்கும்.

நம்மை சந்திக்கும் போது  இனிமையாக பேசிவிட்டு, நமக்குப் பின்னால் பழித்து பேசுபவரின் நட்பை உணர்ந்து நாம் விலக்கிக் கொள்ள வேண்டும்

மனாதரப் பழகாது, வெளியே நண்பன் போல பழகுபவர் எப்படிப்பட்டவர்களாம் தெரியுமா?

இரும்பைத் துண்டாக்கத் தாங்குப்பலகை போல இருக்கும் பட்டடைக் கல்லுக்கு ஒப்பானவர்களாம்

சீரிடங் கானின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு (821)

மனதார இல்லாமல் வெளியுலகிற்கு நண்பரைப்போல் நடிப்பவரின் நட்பானது, ஒரு கேடு செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது இரும்பைத் துண்டாகக்கத் தாங்கு பலகை போல் இருக்கும் பட்டடைக் கல்லுக்கு ஒப்பாகும்

என்ன ஒரு ஒப்பீடு.
 ("பட்டடைக் கல்" கொல்லன் உலைக்களத்தில், சம்மட்டி  வலுவாக, எத்தனை முறை தாக்கினும் நிலை குலைந்து போகாது பட்டடைக் கல்)

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 111

உயிர் காப்பான் தோழன்

ஆபத்துக்கு உதவுவான் நண்பன் என்றெல்லாம் சொல்வார்கள்

ஆனால், அப்படிப்பட்ட நிலையில் நம்மைவிட்டு நீங்குபவன் நண்பனாக முடியாது.அப்படிப்பட்ட நண்பனை வள்ளுவர் யாருடன் ஒப்பிடுகிறார் பாருங்கள்

ஒரு போர்க்களம்.குதிரைப் படை.ஒரு வீரன் குதிரையின் மீது அமர்ந்து போரிட்டுக் கொண்டிருக்கின்றான்.அப்போது குதிரை அவனைக் கீழே தள்ளி விட்டு ஓடிவிடுகிறது.அதுபோன்ற நண்பர்களாம் அவர்கள்

அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை (814)

போர்க்களத்தில் கீழே தள்ளி விட்டுத் தப்பித்து ஓடிப்போகும் குதிரையைப் போன்றவர்களின் நட்பைப் பெறுவதைக் காட்டிலும் தனித்து இருப்பது எவ்வளவோ சிறப்புடையதாகும் 

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 110

ஒருவரிடம் எந்தவிதப் பலனையும் எதிர்பாராது ,அன்பு ஒன்றையே மையமாக வைத்து உருவாவது சிறந்த  நட்பாகும்.

தனக்குப் பயன் கிடைக்கும்போது நண்பராக இருந்துவிட்டுப் பயனில்லாத போது பிரிந்து விடுபவர்கள் நட்பு இருந்தாலும், இழந்தாலும் ஒன்றுதான்

பயனை எதிர்ப்பார்த்து ஏற்படும் நட்பு எப்படிப்பட்டதாம் தெரியுமா?

ஒரு விலைமகள் போன்றதாம். அத்துடன் மட்டுமல்லாது அப்படிப்பட்ட நட்பு கொள்பவர்கள் கள்வர்கள் போலாம்

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர் (813)

பயனை எண்ணிப்பார்த்து அதற்காகவே நட்புக் கொள்பவரும்,விலைமகளிரும்,கள்வரும் ஆகிய இம்மூவரும் ஒரே மாதிரியானவர்கள் ஆவார்கள்

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 109

நண்பனை தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து, அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத் தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும்

.நாம் அணிந்திருக்கும் ஆடை, உடலைவிட்டு நழுவும் போது, எப்படி நம் கைகள் அனிச்சியாக செயல்பட்டு உதவுகின்றதோ அதுபோல நண்பனுக்கு துன்பம் வந்தால் உடன் உதவ வேண்டியதே நல்ல நட்பாகும்

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு (788)

அணிந்திருந்த உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச் சரிசெய்ய உதவுகின்றதோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்துச் செல்வதே நட்புக்கு இலக்கணமாகும்  

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 108

நண்பனைக் கண்டதும் முகமலர்ச்சி மட்டும் அடைந்தால் போதாது.இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்

புத்தகங்கள் வாசிக்கும் நபர்களுக்குத் தெரியும்..நல்ல நூல்களைப் படிப்பது எவ்வளவு இன்பத்தினைத் தருமென்று.
அதைப்போல பண்புடையாளர்களுடன் ஏற்படும் நட்புபழகப் பழக இன்பம் தரக்கூடுமாம்

நவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு (783)

படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப்போல பழகப் பழக இன்பம் தரக்கூடியதுபண்புடையாளர்களின் நட்பு.

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 107

ஒருவருடன் நட்பு கொள்வது என்பது அரிய செயல் அல்ல.
அதற்கு இருவருக்குமிடையே ஏற்கனவே தொடர்பும், பழக்கமும் இருக்க வேண்டும் என்பதில்லை.ஒத்த மனஉணர்வே போதுமானது.

ஆனால், அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பை எதனுடன் ஒப்பிடுகிறார் தெரியுமா..அது பிறைநிலவாகத் தோன்றி முழு நிலவாக வளருமாம்.

அதே சமயம், அறிவில்லாதவர்களுடன் ஆன நட்பு முழுநிலவாய் முளைத்துப் பின்னர் தேய்பிறையாய்க் குறைந்து மறையுமாம்.

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு (782)

அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலவாய்த் தோன்றி முழுநிலவாக வளரும்.அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ முழுமதிபோல முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும்

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 106

ஏதேனும் ஒரு துறையில் தனித்து விளங்குபவர்களுக்கு ஒரு செருக்கு இருக்கும்.
உதாரணமாக கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குபவனுக்கு இருக்கும் செருக்கை வித்யாகர்வம் என்பர்.

அதுபோல போர்க்களத்து வீரர்களுக்கும் ஒரு செருக்கு உண்டு.அதனால்தான் படைச்செருக்கு என்று ஒரு அதிகாரத்தை வள்ளுவர் வைத்திருக்கக் கூடும்.

தனக்கு நிகரான பகைவனுடன் போரிட வேண்டும்.அதை விடுத்து ஒரு கோழையுடன் போரிட்டு வெல்வதில் என்ன பெருமை இருக்கக் கூடும்?

இதைத்தான் இக்குறள் சொல்கிறது

கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது (772)

வலிமை மிக்க யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறி தப்பினாலும் கூட அது,வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது  

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 105

எந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு இரையாகாததும், பயமற்ற உறுதி உடையதும் தான் ஒரு அரசுக்கு சிறந்த படையாகக் கருதப்படும்.மேலும், அப்படையில் உள்ள வீரர்களே திறம் வாய்ந்த வீரர்களாகவும் மதிக்கப்படுவர்.இதுபோல வீரர்கள் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழ்ந்துவிடுவார்கள்.

இப்படிப்பட்ட வீரர்களையும், வீணர்களையும் எதனுடன் ஒப்பிடுகிறார் பார்ப்போம்.

எலிகள் கூட்டம் கூட்டமாக..பார்க்க பெருங்கடல் போல தோற்றம் அளித்தாலும், அவை ஒரு நாகத்தின் மூச்சுக் காற்றுக்கு முன்னால் நிற்கமுடியாது..அதுபோலத்தான் இவ்வீரர்கள் முன் வீணர்கள் என்கிறார்.

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும் (763)

எலிகள் கூடி கடல்போல முழங்கிப் பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்கமுடியுமா?அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழ்ந்துவிடுவார்கள்


Tuesday, July 23, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 104

பகைவர்களின் செருக்கை அழிக்கும் தகுதி பொருளுக்கே உண்டு.ஆகவேதான் பொருளை சேமிக்க வேண்டியுள்ளது.

அறம், பொருள்,இன்பம் ஆகியவை பொருந்தும் வழியில் பொருள் ஈட்டுபவர்களுக்கு, பொருள் மிகுதியாக சேர்வதோடு ஏனைய இரண்டும் எளிதாக வந்து சேரும்

அப்படி ஈட்டிய நம் கைப் பொருளை மட்டுமே நம்பி, பிறரிடம் கடன் வாங்காமல் தொழில் செய்வது என்பது எப்படி இருக்குமாம் தெரியுமா?

பெரிய பெரிய வணிகர்கள் தொழில் செய்யும் போது ,அவர்களுக்கு இடையே நாம் சிக்கிக் கொளள மாட்டோமாம்.
வள்ளுவர் சொல்கிறார்..யானைகள் ஒன்றொடொன்று போரிடும்போது, அதன் இடையே சிக்கிக் கொள்ளாமல், அந்தப் போரை குன்றின் மீது நின்று காண்பது போல எளிதானதாம்

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை (758)

தன் கைப்பொருளைக் கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது யானைகள் ஒன்றோடு ஒன்று போரிடும்போது இடையில் சிக்கிக் கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப் போன்று இலகுவானது


வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 103

மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக் கூடிய அளவிற்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணம் என்றதுடன் நில்லாது, பொருள் உள்ளவரைப் புகழ்ந்து பேசுவதும்,இல்லாதவர்களை இகழ்ந்து தூற்றுவதும் இந்த உலகின் நடப்பு என்ற வள்ளுவர்..

அந்தப் பொருளை எதனுடன் ஒப்பிடுகிறார் தெரியுமா?

இருளை விலக்குவது விளக்கு.அதேபோல துன்பம் என்னும் இருளை விலக்குவது பொருள் என்கிறார்.

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று (753)

பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்து விட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடிகிறது

Monday, July 22, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 102

அறிவுடையோர் நிறைந்த அவையில், தன் கருத்துகளை மனதில் பதியும்படி சொல்லத் தெரியாதவன், எவ்வளவு நூல்களைப் படித்தவனாயிருந்தாலும் அதனால் என்ன பயனும் இல்லை என்று சொல்லும் வள்ளுவர், அவர்களை கல்லாதவர்களைவிட இழிவானவர்கள் என்கிறார்.

கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார் (729)

ஆன்றோர் நிறைந்த அவையில் பேசுவதற்கு அஞ்சுகின்றவர்கள், எத்தனை நூல்களைக் கற்றிருந்த போதிலும், அவர்கள் கல்லாதவர்களைவிட இழிவானவர்களாகக் கருதப்படுவார்கள்

அடுத்த குறளில், இதைவிட சற்று அதிகமாகவே சொல்கிறார்.அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும் இறந்தவருக்குச் சமமானவர் என்கிறார்.

உளரெனினும் இல்லாரொ டொப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார் (730)

தாம் கற்றவைகளைக் கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல் அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும் கூட இறந்தவருக்குச் சமமானவராகவே கருதப்படுவார்கள்

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 101

ஒரு அவையில் பேசும்போது, பவித குறுக்கீடுகள் இருக்கும்.அதற்கு அஞ்சாமல் மறுமொழி சொல்வதற்கு ஏற்ற வகையில் அனைத்தையும் திறம்படக் கற்றிருக்க வேண்டும்.

ஆனால், அவையில் பேச அஞ்சுபவர்கள் எப்படிப்பட்டவர்கள் ஆவார்கள் தெரியுமா?

ஒரு கோழை..கையில் வாளுடன்.அவனைச் சுற்றி பகைவர்கள்.ஆனால் பயந்த சுபாவம் உள்ள அவனிடம் வாளிருந்து என்ன பயன்? அதைச் சுற்ற பயம்.

அப்படிப்பட்டவர்களாம் அவைக்கு அஞ்சுபவர்கள்.

வாளொடென் வங்கண்ண ரல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு (726)

கோழைகளுக்கு கையில் வாள் இருந்தும் பயனில்லை.அதுபோலஅவையில் பேசிட அஞ்சுவோர் பலநூல்கள் கற்றும் பயனில்லை

அவை அஞ்சாமை என்னும் அதிகாரத்தில் வரும் குறள் இது.இதற்கு அடுத்த குறளிலும் இக்கருத்தினை உறுதிப் படுத்துகிறார்

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்
தஞ்சு மவன்கற்ற நூல் (727)

என்கிறார்.

அவை நடுவில் பேசப் பயப்படுகின்றவன், என்னதான் அரிய நூல்களைப் படித்திருந்தாலும் அந்த நூல்கள் அனைத்தும் போர்க்களத்தில் ஒரு பேடியின் கையில் உள்ள கூர்மையான வாளைப் போலவே பயனற்றவைகளாகி விடும்

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 100

அறிவுடையோர் சபையில், தான் சொல்லப்போவது சரியானது என்று அறிந்தாலும், அதைச் சொல்ல அஞ்சுவர்பலர்.அப்படி அஞ்சாமல் பேசுபவர்கள் ஒரு சிலரேவாம்.அவர்களை யாருடன் ஒப்பிடுகிறார் தெரியுமா...

போர்க்களம்....சுற்றிலும் பகைவர்கள்.நம்மை அழிக்கத் தயாராய் உள்ளனர்.வாழ்வா...சாவா..போராட்டம்.அதுபோன்ற நிலையில் கோழைக்கும் வீரம் வரும்.சாவுக்கு அஞ்சாமல் பகைவருடன் போராடுவர்.அப்போது அச்செயல் அவர்களுக்கு எளிதாய்த் தோன்றும்.ஆனால் அப்படிப்பட்டவர்கள்அறிவுடையோர் நிறைந்த சபையில் அஞ்சாமல் பேச பயப்படுவார்களாம் .மிகச்சிலரே விதிவிலக்காய் பேசுபவர்களாம்.

சுருங்கச் சொன்னால் உயிர் போராட்டத்தையே எளிய செயல் என எண்ணுபவர்கள், அறிவுடையோர் முன் பேசுவதை கடினமாய் எண்ணுவார்களாம்.

பகையத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத் தஞ்சா தவர் (723)

அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல்.(ஆனால்) அறிவுடையோர் நிறைந்த சபையில் சிலரே அஞ்சாமல் பேசக்கூடியவர்கள்.

இதில் ஒப்பீடு இல்லையென்றாலும்.. போருக்கு போகும் துணிவைவிட,அவையில் பேசுவது கடினம் என அவையும்..போரையும் சொல்வதால் இக்குறளையும் இங்கு எழுதியுள்ளேன்


Sunday, July 21, 2019

வள்லுவனும்..ஒப்பீடுகளும் - 99

அறிவுள்ளவர்கள், அறிவில்லாதவர்கள் உள்ள அவையில் பேசுவது எப்படிப்பட்டது என ஒப்பிடுகிறார் வள்ளுவர்.

ஒரு பாத்திரத்தில் வீட்டிற்குள் பால் எடுத்துச் செல்கிறோம் என வைத்துக் கொள்ளுங்கள்.அப்போது வீட்டின் முற்றத்தைக் கடக்கும் போது பாலின் பெரும்பகுதி சிந்திவிடுகிறது.
முற்றம் தூய்மையாக இருந்தாலாவது பரவாயில்லை..ஆனால் சுற்றிலும் தூய்மையற்ற முற்றம்.அப்படிப்பட்ட நிலையில்..சிந்திய பால் முழுதும் வீணாகிவிடுமாம்.

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர்
அல்லார்முன் கோட்டி கொளல் (720)

அறிவுள்ளவர்கள், அறிவில்லாதவர்களின் அவையில் பேசுவது, தூய்மையற்ற முற்றத்தில் சிந்திடும் அமிழ்தம்போல வீணாகிவிடும்

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 98

அறிஞர்கள் கூடியுள்ள சபையில், அதிக உலக ஞானம் அறியாதவன்..தன் திறமையைக் காட்டுவதாக எண்ணி பயனற்ற சொற்களை சொல்லிக் கொண்டிருக்கக்கூடாது.

அதேபோன்று நல்லோர் நிறைந்த அவையில் மனதில் பதியும்படி கருத்துகளைசொல்லும் வல்லமைப் பெற்றவர்கள், அறிவற்றோர் உள்ள அவையில் பேசாமலிருப்பதே நலனாகும்

உணர்ந்து கொள்வோர் முன்னிலையில் பேசுவது எதற்கு ஒப்பாகும் தெரியுமா? வள்ளுவர் வாக்கினைப் பார்ப்போம்

உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று (718)

உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், தானே வளரக்கூடிய பயிர் உள்ள பாத்தியில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் அளிக்கும்

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 97

காய்களில் விதைகளும், பழங்களில் கொட்டையும்
அவற்றின் உள்ளேயே இருக்கும்.

இதற்கு விதிவிலக்கு..முந்திரிப் பழம்.

இப்பழத்தின் கொட்டை பழத்தின் வெளியேவே இருக்கும்.

ஆகவேதான்..எந்த ஒரு பிரச்னை அல்லது வேலைக்கு, யாரும் கேட்குமுன்னே தன் கருத்துகளை கூறுபவர்களை முந்திரிக் கொட்டை என்பர்.

தனது வள்ளுவத்தில் ஒப்பீட்டில் முந்திரிக் கொட்டையினைக் கூட வள்ளுவர் விட்டு வைக்கவில்லை.

அதனை எதனுடன் ஒப்பீடுகிறார் பாருங்கள்..

நன்றென் றவற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு (715)

அறிவாளிகள் கூடியிருக்கும் இடத்தில் முந்திரிக்கொட்டை போல பேசாமல் இருக்கும் அடக்கமானது எல்லா நலன்களிலும் சிறந்த நலனாகும்



வள்ளுவனும்..ஒப்பீடுகளும் -96

நல்ல அறிஞர்கள் , அவையில் கூடியிருப்போரின் தன்மையை (அவையோரின் அறிவுடமைக்கு ஏற்ப)உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்.

அவையின் தன்மை அறியாமல் சொற்களைப் பயன்படுத்துபவர்களுக்கு அந்த சொற்களின் வகையும் தெரியாது, பேசுகின்ற திறமையும் கிடையாதாம்,

சுருங்கச் சொல்ல வேண்டுமாயின் அவையின் தன்மைக்கேற்ப அறிவாளிகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமாம்.

இதற்கு பாலையும், வெண் சுண்ணாம்பையும் ஒப்பிடுகிறார் வள்ளுவர்.

அக்குறளைப் பார்ப்போமா?

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணங் கொளல் (714)

அறிவாளிகளுக்கு முன்னால் அவர்களையொத்த பாலின் தூய்மையுடன் விளங்கும் அறிஞர்கள், அறிவில்லாதவர்கள் முன்னால் வெண்சுண்ணாம்பு போல தம்மையும் அறிவற்றவர்களாய்க் காட்டிக் கொள்ள வேண்டும் 

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 95

உள்ளத்தில் உள்ள விருப்பு வெறுப்புகளை முந்திக் கொண்டு வெளியிடுவதில் முகத்தைப் போல அறிவு மிக்கது வேறேதுமில்லையாம்

மேலும், நுண்ணறிவு பெற்றோர் ,ஒருவரின் கண்களைப் பார்த்தே அவர் மனதில் இருப்பது நட்பா அல்லது பகையா என்பதைக் கூறிவிடுவார்களாம்.

ஒருவரின் முகமே அவர் என்ன நினைக்கின்றார் என்பதைக் காட்டிவிடும் என்று சொல்பவர் அந்த முகத்தை கண்ணாடியுடன் ஒப்பிடுகிறார்.

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் (706)

கண்ணாடி தனக்கு எதிரில் உள்ளதைக் காட்டுவதுபோல ஒருவரின் மனதில் உள்ளதை அவரது முகம் காட்டிவிடும்

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 94

ஒருவர் ஏதும் கூறாமலேயே அவர் என்ன நினைக்கின்றார் என்பதை அவரது முகக்குறிப்பால் உணராதவர் கண்கள் இருந்தும் இல்லாதவர் போலத்தான் என்னும் பொய்யாமொழியார்..அது போன்ற திறனையுடைவரை தெய்வத்திற்கே ஒப்பிடுகிறார்

ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல் (702)

என்கிறார்.

ஒருவனின் மனதில் உள்ளதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய சக்தி தெய்வத்திற்கே உண்டு என்று கூறுவோமானால், அந்தத் திறமைப் படைத்த மனிதனையும் அத்தெய்வத்துடன் ஒப்பிடலாம்

Friday, July 19, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 93

நம்மைவிட மேலானோர் நட்பு நமக்குக் கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம்.

நாம் அவர்களுடன் எப்படிப் பழக வேண்டும்..

இதற்கும் வள்ளுவர் சொல்கிறார்.அவர் திருக்குறளில் சொல்லாமல் விட்டதுஎன்ன இருக்கிறது!

ஒரு அரசனுடன் பழகுபவர் அவருடன் எப்படி பழக வேண்டும் என்று சொல்கிறார்.

குளிர் வாட்டுகிறது.நெருப்பினை மூட்டி குளிர் காய்கிறோம்.அப்போது என்ன செய்வொம்? நெருப்பை விட்டு நீங்கவும் மாட்டோம்..நெருப்பிடம் நெருங்கவும் மாட்டோம்.அதுபோல பழக வேண்டுமாம்

அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார் (691)

முடிமன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வது போல அதிகமாக நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கிவிடாமலும் இருப்பார்கள்.

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 92

ஒரு புதிய காரியத்தில் ஈடுபடுபவன், அச்செயல் குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை அறிந்து ஈடுபடவேண்டும்.

தவிர்த்து, முடிந்தால் அச்செயலின் தொடர்பாக மற்றும் ஏதேனும் செயலையும் முடித்துக் கொள்ள முடியுமா? என்றும் பார்க்க வேண்டும்.

உதாரணமாக நம்மைவிட வலிமை மிக்கவர்களை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என முழுமையாக உணர்ந்து செயல்பட்டால், அச்செயலில் வெற்றி காண்பதோடு.நாம் எதிர்க்கும் வலியார் நம் நட்பையும் பின்னர் தொடரக்கூடும்

இது எதுபோல என்றால்...ஒரு யானையைப் பிடிக்க மற்றொரு யானையை வைத்து பிடிப்பது போலவாம்.

வினையன் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று (678)

ஒரு செயலில் ஈடுபடும்போது அச்செயலின் தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும் 

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 91

நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத் தாமதாகக் கூட செய்யலாம்.ஆனால், விரைவாக செய்து முடிக்க வேண்டியவற்றை தாமதம் செய்யாது செய்து முடிக்க வேண்டும்.

அதே சமயம், ஏற்ற செயலையோ, எதிர்க்கும் பகையையோ முற்றாக முடிக்காவிடில் அது கேட்டினை விளைவிக்கும்.

எது போன்ற கேடு என்பதை சொல்கிறார் பாருங்கள்..

ஒரு இடத்தில் தீப்பிடிக்கிறது.அத்தீயை உடனடியாக விரைந்து செயல்பட்டு அணைத்துவிட வேண்டும்.ஆனால்..அரைகுறையாக அணைத்துவிட்டு, விட்டுவிட்டால் என்ன ஆகுமோ..அதுபோன்ற கேடு விளையுமாம்.

வினைபகை யென்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்  (674)

ஏற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காவிட்டால் அது நெருப்பை அரைகுறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும் 

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 90


எந்த ஒரு காரியத்தை முடிக்க வேண்டுமானாலும், அதற்கான மன உறுதி வேண்டும்.

ஒருவர் உருவத்தில் சிறியவராய் இருப்பார்கள், ஆனால் மன உறுதி, செயலாற்றல் ஆகியவற்றில் உறுதியாய் இருப்பார்கள்.வாமன அவதாரம் உருவில் சிறியது..ஆனால் தன் கால்களால் உலகை அளந்த அவதாரம்.

ஆகவே, ஒருவரின் உருவ அமைப்பை வைத்து, அவர்கள் திறமையற்றவர்களாக இருப்பார்களோ? என எண்ணக்கூடாது.

அப்படிப்பவர்களை வள்ளுவர் எதனுடன் ஒப்பிடுகிறார் பாருங்கள்..

உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னார் உடைத்து (667)

உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலிசெய்து அலட்சியப்படுத்தக் கூடாது.  பெரியதேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும்

Thursday, July 18, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 89

இழிவான காரியங்களில் ஈடுபடக்கூடாது.

எது இழிவான காரியம்?

நாம் ஏதேனும் தவறிழைத்துவிட்டு பின்னர், இப்படிப்பட்ட ஒரு காரியத்தை நாம் ஏன் செய்தோம்? என நம் மனசாட்சி கேட்கும் செயல்கள் அனைத்துமே இழிவான செயல்கள் எனலாம்.

வள்ளுவர் ஒரு படி மேலேபோய்...

நம் கண் முன்னர் நம்மை ஈன்றவள் பசியாய் இருப்பதைக் காண்பது என்பது கொடுமை.அவளது பசியைத் தீர்க்க வேண்டியது நம் முதல் கடமை.ஆனால், அப்படிப்பட்ட நேரத்திலும் அப்பசியைத் தீர்க்க இழிசெயலில் ஈடுபடக்கூடாது என்கிறார்.

இழிசெயல்களில் ஒன்று, தவறான வழிகளில் பொருள் சேர்ப்பதாகும்.அப்படி சேர்த்த பொருளை காக்க நினைப்பது, பச்சை மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீரை ஊற்றி அதை பாதுகாக்க நினைப்பது போலாகுமாம்

சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துணீர் பெய்திரீஇ யற்று (660)

தவறான வழிகளில் பொருளைச் சேர்த்து அதைக் காப்பாற்ற நினைப்பது, பச்சை மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதைப் பாதுகாக்க நினைப்பதைப் போன்றதுதான்.

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 88

குறையில்லாத சில சொற்களைக் கொண்டு, அவற்றை வகைப்படுத்தியும், சுவையாகவும் சொல்லும் சொல்லாற்றல் படைத்தவர்களை எதிர்த்து வெல்வது மிகவும் கடினமாகும்

அப்படி இல்லாதவர்களை வள்ளுவர் யாருடன் ஒப்பிடுகிறார் தெரியுமா?

மலர் என்றாலே மணம் உள்ளதாக இருக்க வேண்டும்.மணம் இல்லா சில மலர்களும் உண்டு.இவை கொத்து கொத்தாக பூத்திருந்தாலும் கொள்வாரில்லை.அம்மலர்களுடன் சொல்லாற்றல் இல்லாதவர்களை ஒப்பிடுகிறார்

இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
துணர விரிந்துரையா தார் (650)

கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்கள்.

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 87

செயலாற்றல் பற்றிய நூலறிவைப் பெற்றிருந்தாலும், உலக நடைமுறைகளை உணர்ந்து பார்த்து அதற்கேற்ப செயல்களை அரசாட்சியில் உள்ளவர்கள் செய்திடல் வேண்டும்

இதில் அமைச்சர்கள் பங்கு முக்கியமானது.அவர்கள் தான் துணிச்சலுடன் நல்ல யோசனைகளைக் கூறி அரசை வழி நடத்திட வேண்டும்

அப்படியின்றி, தவறாக சிந்தித்து செயல்படும் அமைச்சர் இருந்திட்டால், அந்த அரசுக்கு எழுபதுகோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பதைவிட கேடு நிரம்பியதாய் அமையுமாம்

பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும் (639)

தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகில் இருப்பதைவிட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும்

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 86

வாழ்வில் இன்ப, துன்பங்கள் வருவதைத் தடுக்க முடியாது.

ஆனால், துன்பம் சூழ்கையில் துவண்டு போகாமல், அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்ய வேண்டும் என்ற வள்ளுவர்..

துன்பத்தை விரட்ட விடாமுயற்சித் தேவை என்கிறார்.

அந்த முயற்சியை எதனுடன் ஒப்பிடுகிறார் பாருங்கள்..

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பா டுடைத்து (624)

தடங்கள் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக் கொண்டு போவது போல, விடாமுயற்சியுடன் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு வெற்றி கிட்டிடும்

Wednesday, July 17, 2019

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 85

முயற்சி இல்லாமல் ஏதும் இல்லை.முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்கும் காரணமாக அமையும்.

முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும் என்கிறார் வள்ளுவர்.
அதுமட்டுமல்ல

முயற்சியில் ஊக்கமுடையவரை ஸ்ரீதேவிக்கும், முயற்சியில் ஊக்கமில்லா சோம்பேறிகளை மூதேவிக்கும் ஒப்பிடுகிறார்

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள் (617)

திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக்காட்ட ப் பயன்படுபவையாகும்

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 84

ஊக்கம் என்ற உயர்ந்த பண்பு உள்ளவர்களிடம், பிறருக்கு உதவி செய்யும் பெருமித உணர்வும் இருக்குமாம்.

ஊக்கமற்றவர்கள் நம்முடன் வைத்திருப்பது எதுபோல என வள்ளுவர் சொல்கிறார் தெரியுமா?

எதிரே பகைவர்.ஒரு கோழை கையில் வாளினை வைத்து, அந்த எதிரிக்கு பயந்து கண்டமேனிக்கு சுழற்றுகிறானாம் அவ்வாளினை.

அந்தக் கோழைக்கு ஒப்பாவார்களாம்  நம்முடன் உள்ள ஊக்கமில்லாதவர்கள்

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும் (614)

இப்படிச் சொல்லும் வள்ளுவர் நம்மைத் தாங்கிப் பிடிக்கும் தூணுக்கு ஒருவரை ஒப்பிடுகிறார்.அவர் எப்படிப்பட்டவர் தெரியுமா?

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண் (615)

தன்னலம் விரும்பாமல், தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன் தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றத்தார்,நண்பர்கள்,நாட்டு மக்கள் ஆகிய் அனைவரின் துன்பம் துடைத்து, அவர்களைத் தாங்குகிற தூணாவான்.

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 83

எந்த ஒரு காரியத்தை செய்து முடிக்கவேண்டும் என்றாலும், அக்காரியத்தை நம்மால் செய்ய முடியுமா? என்று மனத்தளர்ச்சி அடையாமல், என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால், அம்முயற்சியே, பெரும் வலிமையாக அமையும்

அப்படியின்றி, ஈடுபடும் செயல் முழுமையாக முடிக்க முடியாதாம்.அப்படி முழுமையாக முடிக்க முடியா செயல்..எதுபோலவாம் தெரியுமா?

அரைக் கிணறு தாண்டியதுபோலவாம்


(முழுக்கிணற்றினை தாண்ட முடியாதவன் அரைக்கிணற்றினை தாண்டிய கதையாம்.)

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு  (612)

எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும்.இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும்


Tuesday, July 16, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 82

ஒருவரின் உருவத்தை வைத்து அவர் வீரமானவரா,கோழையா என்பதைத் தீர்மானித்துவிட முடியாது.

உருவத்தைவிட ஊக்கமே வலிமையானது.மனதில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் மரத்துக்கு ஒப்பாவார்களாம்.

உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்
மரமக்க ளாதலே வேறு (600)

மனதில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை

இப்படிச் சொன்ன வள்ளுவர் இதற்கு முந்தைய குறளில் என்ன சொல்கிறார்..ஊக்கமில்லாதவரை யாருடன் ஒப்பிடுகிறார் எனப் பார்ப்போம்..

பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின் (599)

உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவதுதான்.

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 81

நாம் எண்ணுவதெல்லாம் உயர்ந்த எண்ணங்களாகவே இருக்க வேண்டும்.அது கை கூடாவிடினும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது

ஒரு போர் நடக்கிறது என்றால் யானைப்படையில் ,யானை ஒன்று தன் உடல் முழுதும் அம்புகள் துளைக்கப்பட்ட நிலையிலும், கடைசிவரை உறுதியாய் இருக்கும்.அதுபோல ஊக்கமுடையவர்கள், தாங்கள் அழியப்போவது நிச்ச்யம் என்ற நிலை வந்தபோதும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள் என்கிறார் வள்ளுவர்.

சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு (597)

உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள் அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்

Monday, July 15, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 80

ஊக்கமுடையவர்களைத் தேர்ந்தெடுத்து, உயர்வு அவர்களிடம் போய்ச் சேரும்.

ஊக்கமுடையவர்களே எல்லாம் உடையவர்கள் ஆவார்கள். ஊக்கமில்லாமல், எல்லாம் உடையவர் ஆனாலும் அவர்கள் ஒன்றும் இல்லாதவர்கள்

இப்படியெல்லாம் சொன்ன வள்ளுவர்..அப்படி ஊக்கமுள்ளவர்களை எப்படி ஒப்பிடுகிறார் பாருங்கள்

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு (595)

தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும்.அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனதில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 79

அன்பு, இரக்கம், கடமை தவறாமை ஆகியவற்றில் முதன்மையாய் இருப்போர்க்கு இந்த உலகமே உரிமையுடையதாக இருக்குமாம்

ஒருவருக்குக் கண் இருந்தும், அன்பும், இரக்கக் குணமும் இல்லாவிடில்..அவர்கள் மரங்களுக்கு ஒப்பானவர்களாம்

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைத்துகண் ணோடா தவர் (576)

ஒருவர்க்குக் கண் இருந்தும் கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும், இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு ஒப்பானவர் ஆவர்

இப்படிச் சொன்ன வள்ளுவர்..

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல் (577)

என்கிறார் அடுத்த குறளில்

கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே  கண்கள் எனப்படும். கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவர் என்கிறார்.

கருணை மனம் இல்லாதவரை கண்ணிருந்தும் இல்லாதவருடன் ஒப்பிடுகிறார்

இக்குறளில் வள்ளுவரின் சொல்விளையாட்டையும் ரசியுங்கள்
கண்ணோட்டம்,கண்ணிலர், கண்ணுடையார், கண்ணோட்டம்..
அடடா..வள்ளுவத்தைக் கொண்டாடுவோம்.

Friday, July 12, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 78

மழை..

இல்லையேல் உயிரினங்கள் இல்லை

மழை..பார்க்கப் பிடிக்கும்.அதை ஒரு கடவுளாக்கி, வருண பகவான் என வணங்குபவர்கள் நாம்

வள்ளுவர் மட்டும் விதி விலக்கா என்ன? தான் சொல்ல வரும் கருத்திற்காக பல குறள்களில் மழையை உடன் அழைக்கிறார்.மழைக்காகவே..முதல் அதிகாரத்திற்கு அடுத்து "வான் சிறப்பு" அதிகாரத்தை வைத்தவர் ஆயிற்றே!!

முறைதவறிச் செயல்படும் ஆட்சியில், நீரைத் தேக்கிப் பயனளிக்கும் இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கி வைத்து வளம் பெற இயலாது என்று சொல்பவர்..

அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் படும் தொல்லைகளை மழையில்லா உலகோடு ஒப்பிடுகிறார்.

துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு (557)

மழையில்லாவிடில் துன்புறும் உலகத்தைப் போல அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள்.

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 77

ஏமாற்றுவது, கொலை,கொள்ளை ஆகியவை சமூக விரோதச் செயல்களாகும்.

இன்று அவை சர்வ சாதாரணமாக இருந்தாலும்..கொடுஞ்செயல்கள் என்பதில் நமக்கு எள்ளளவும் சந்தெகம் இருக்க முடியாது.

 இக்கொடுஞ்செயலுக்கு இணையாக வேறு ஒன்றையும் சொல்கிறார் வள்ளுவர்

அறநெறி மீறி தம் மக்களை துன்புறுத்தும் அரசு கொலை  குற்றச் செயலுக்கு இணையாகுமாம்.

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்
டல்லவை செய்தொழுகும் வேந்து (551)

என்கிறார்.

அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு,கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்

இதேக் கருத்தை தன் அடுத்த குறளிலும் சொல்கிறார்..

வேலோடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலோடு நின்றான் இரவு (552)

ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் தமது மக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரர்களின் மிரட்டலைப் போன்றது.

Thursday, July 11, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 76

ஒரு நாட்டில் சமூகவிரோதிகள் இருந்தால், அவர்களைக் கண்டறிந்து தண்டனையளிக்க வேண்டியது அரசின் கடமையாகும்

இது எது போல என்றால்...

வள்ளுவர் சொல்கிறார்..

ஒரு நிலத்தில் பயிர் பச்சை பசேல் என செழிப்பாக வளருகிறது.ஆனால்..வயலின் நடுவே..நடுவே களை வேறு.
இது பயிரின் வளர்ச்சியினைத் தடுக்கக் கூடும்.ஆகவே களை எடுக்க வேண்டியது அவசியம்.அதுபோலவாம் சமூக விரோதிகள்.நாடு செழிப்பாக இருக்க, மக்களை காக்க சமூக விரோதிகளை களையெடுக்க வேண்டும்

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்  (550)

கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும்

Wednesday, July 10, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 75

குடிமக்களை அரவணைத்து செல்லும் நல்லரசை நாடே போற்றும்.

குடிமக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமானால், அந்த நாட்டில் நல்லாட்சி நடைபெற வேண்டும்.இது எப்படி என்றால்..உலகில் வாழும் உயிர்கள் வாழ மழை தேவைப்படுவது போல வாம்

வானோக்கி வாழும் உலகெல்லா, மன்னவன்
கோனோக்கி வாழும் குடி (542)

உலகில் வாழும் உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவதைப் போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு  நல்லாட்சி தேவைப்படுகிறது

இது செங்கோன்மை அதிகாரத்தில் வரும் குறள்.இதே அதிகாரத்தில் அரசுடன் மீண்டும் மழையை ஒப்பிடுகிறார் வள்ளுவர்

பருவகாலத்தில் தவறாது மழை பெய்தால் எப்படி வளமான விளைச்சல் இருக்குமோ, அதுபோல நீதி வழுவாமல் ஒரு அரசு இருந்தால் சிறப்பாக இருக்குமாம்

இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு (545)

நீதி வழுவாமல் ஒரு அரசு நாட்டில் இருக்குமேயாயின் அது, பருவ காலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைக்கும் நாட்டிற்கு ஒப்பானதாம்

Sunday, July 7, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 74

அகமகிழ்ச்சியால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவைவிடத் தீய்மையானதாம்.

இப்படிப்பட்டவர்களை வள்ளுவர் யாருடன் ஒப்பிடுகிறார் என்று பாருங்கள்..

பயத்தினால் நடுங்குபவர்களைச் சுற்றி பாதுகாப்பாக அரண் கட்டப்பட்டிருந்தாலும் , அதனால் எந்தப் பயனும் இல்லை.பயம் அவர்களை விட்டுப் போகாது.அதுபோல என்னதான் உயர் நிலையில் இருந்தாலும் மறதி உடையவர்களுக்கு அந்த நிலையினால் எந்தப் பயனும் இல்லையாம்

அச்ச முடையார்க் கரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு (534)

பயத்தினால் நடுங்குகிறவர்களுக்குத் தம்மைச் சுற்றிப் பாதுகாப்பான அரண் கட்டப்பட்டு இருந்தாலும் எந்தப் பயனும் இல்லை.அதைப் போலவே என்னதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் மறதி உடையவர்களுக்கு அந்த நிலையினால் எந்தப் பயனும் இல்லை.

Friday, July 5, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 73

தன்னிடம் உள்ளதை முடிந்த அளவிற்கு பிறர்க்கும் அளித்து வாழ்வானாகின், அவனை சுற்றம் வாழ்த்தும்

காகம்...

இது தனக்குக் கிடைத்ததை மறைக்காமல், தனது சுற்றத்தையும் கூவி அழைத்து உண்ணும்.அதுபோல பிறருக்கும் அளித்து வாழ்ந்தால் அவன் போற்றப்படுவான்

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள  (527)

தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும்.அதுபோன்ற குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு 

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 72

அந்த  அழகிய கிராமத்தில் ஒரு குளம்...ஆனால்..அக்குளத்தின் நீரால் எந்தப்பயனும் இல்லையாம்.காரணம் அக்குளத்திற்குக் கரையில்லை.ஆகவே அது பொதுமக்களுக்கு பயன்படாமல்..மாசுபட்டு..நீரின் தன்மையே பாதிக்கபப்ட்டு விட்டதாம்

அதுபோல என வள்ளுவர் எதைக் குறிப்பிடுகிறார் பாருங்கள்....



உற்றார், உறவினருடன் அன்புடன் பழகாதவன் வாழ்க்கையை.. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.என்பதை உணர்ந்து..சிறு மனக்கசப்புகளை தள்ளிவிட்டு, அவர்களுடன்   மகிழ்ந்து பழக வேண்டுமாம்.

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று  (523)

உற்றார், உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து மகிழ்ந்து பழகாதவனின் வாழ்க்கையானது, கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததுப் போலப் பயனற்றதாகிவிடும்  

Thursday, July 4, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 71

ஒரு குறுநில மன்னன்.அவனிடம் இருக்கும் படைவீரர்கள் குறைவு.ஆனால்..அப்படை அதற்குரிய இடத்தில் இல்லாது..அதாவது யானைப் படை இருக்குமிடத்தில் காலாட்படை இருந்து மோதினால்..என்ன வாகும்? அதனால்..பதாதி படையுடன் மோத வேண்டும். அப்போது ஓரளவு வெற்றியடையலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்.

சுருங்கச் சொன்னால் அதுஅது அந்த இடத்தில் இருக்க வேண்டும்.

இதையே வள்ளுவர் கீழே குறிப்பிட்டுள்ள குறளில் மறைமுகமாக விளக்குகிறார்

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து  (496)

தேர் கடலில் ஓடாது.கப்பல் நிலத்தில் போகாது என்பதே இக்குறளின் நேரடி அர்த்தம்.

மேலோட்டமாக அப்படி இருந்தாலும் "இடனறிதல்" அதிகாரத்தில் இக்குறள் இருப்பதால்..இடமறிந்து போரிட்டால் பெரிய படையையும் வென்றுவிடலாம் என்ற அர்த்தத்தை இங்கு சொல்லலாம்.

இதே அர்த்தம் கீழே சொல்லப்பட்டுள்ள குறளுக்கும் பொருந்தும்.இதுவும் அதே அதிகாரம்.

காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு (500)

வேலேந்திய வீரர்களை வீழ்த்தும் ஆற்றல் படைத்த யானை, சேற்றில் சிக்கிக் கொண்டால் ,அதை நரிகள் கூட வென்று விடும்.

இந்நிலையில் ஒப்பீடு இல்லையென்றாலும் கீழே குறிப்பிட்டுள்ள குறளையும் இங்கு சொல்ல விழைகின்றேன்

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று (236)

இக்குறளை மேலோட்டமாக பார்ப்பவர்கள்.. "அதெப்படி பிறக்கும் போது புகழுடன் பிறக்கமுடியும்.அது நம்ம கையிலா இருக்கிறது" என்பார்கள்.

ஆனால், வள்ளுவர் சொல்வது..ஒரு துறையில் நீங்கள் ஈடுபட விரும்புவீர்களானால், அத்துறையில் பெரும் புகழுடன் விளங்க வேண்டும்" என்பதே!

சுருங்கச் சொவதில் வல்லவன் அல்லவா பொய்யாமொழியார்..

அவர் சொல்வது..
எந்ததுறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்க வேண்டும்.இயலாதவர்கள் அத்துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது.  

Wednesday, July 3, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 70

பகைவரை எதிர்க்கும் வலிமை இருந்தாலும், தாக்குதல் நடத்தும் இடம் தேர்ந்தெடுத்து, நம்மையும் காத்துக் கொண்டு பகைவருடன் மோதினால் வெற்றி நிச்சயமாகும்.

உதாரணமாக...முதலைக்கு தண்ணீரில் இருக்கும் வரையில் தான் பயம்.அதைவிட்டு வெளியே வந்துவிட்டால் அது பலமிழந்துவிடும்.அதனை சாதாரண உயிரும் வென்றுவிடுமாம்.அதுபோல இடமறிந்து பகைவரைத் தாக்கினால் அவனை எளிதில் வெற்றி கொள்ளலாம்.

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற  (495)

தண்ணீரில் இருக்கும் வரையில்தான் முதலைக்கு பலம்.தண்ணீரைவிட்டு வெளியே வந்துவிட்டால் ஒரு சாதாரண உயிர்கூட அதனை விரட்டி விடும்

Tuesday, July 2, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 69

எந்த ஒரு காரியம் செய்து முடிக்க வேண்டும் என்றாலும், அதற்குண்டான காலம் வாய்க்கும் போது அதை பயன்படுத்திக் கொண்டு, செயற்கரிய அக்காரியத்தை செய்து முடிக்க வேண்டும்.

நாம் கிராமப்புறங்களில் அல்லது ஏரி, குளக்கரைகளில் பார்த்திருப்போம்.கொக்குகள் ஒற்றைக்காலில் நீரில் நின்றுக் கொண்டிருக்கும்.சமயம் வரும்போது மீனை உடன் குத்திக் கொள்ளும்.அதேபோல, அக்கொக்கு குறி தவறாமல் குத்துவது போல காலம் வருகையில் நாம் நினைத்ததை செய்து முடிக்க வேண்டும்

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து  (490)

காலம் கைகூடும் வரையில் கொக்கு போல பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல செய்து முடிக்க வேண்டும். 

Monday, July 1, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் -68

கொடுமையான நிகழ்ச்சிகளைக் காணும் போது, நியாயத்திற்காக பொங்கி எழுவது மனிதநேயம் மிக்க மனிதனின் குணமாகும்.

ஆனால்..சில மன உறுதியானவர்கள், கொடுமையைக் கண்டும் , பார்த்தும் வாளாயிருப்பர்.அது அச்சத்தால் அல்ல.
அவர்கள் அடுத்து பகைவனைத் தாக்க தயார் நிலையை ஏற்படுத்திக் கொள்கிறார்களாம்..

இது எதைப்போல என்றால்...

ஊர்த்திருவிழாக்களில், ஆட்டுக்கடா இரண்டை சண்டைக்கு விடுவார்கள்.

அவை ஒன்றையொன்று தாக்கிக் கொள்ள தன் கால்களை சற்றே பின்னுக்கு தள்ளிக் கொண்டு பாய தயாராய் ஆக்கிக் கொள்ளும்.அதுபோலவாம்.

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து  (486)

கொடுமையானவர்களைக் கண்டும் கூட உறுதி படைத்தவர்கள் அமைதியாக இருப்பது அச்சத்தினால் அல்ல. அது ஆட்டுக்கடா ஒன்று தனது பகையைத் தாக்குவதற்குத் தன் கால்களைப் பின்னுக்கு வாங்குவதைப் போன்றதாகும்.