Thursday, September 12, 2019

சில சிறப்புகள் - 59

வள்ளுவர் ,திருக்குறளில், த்மிழில் உள்ள எழுத்துக்களில் 37 எழுத்துகளை பயன்படுத்தவில்லை.குறளில் வராத உயிரெழுத்து "ஔ"

1705 முறை "னி" என்ற எழுத்து வந்துள்ளது

மொத்தம் பயன்படுத்தப்பட்ட சொற்கள் 14000 ஆகும்
மொத்த எழுத்துகள் 42194

120க்கும் மேற்பட்ட உவமைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தமிழின் முதல் எழுத்தான "அ" கரத்தில் தொடங்கி, கடைசி எழுத்தான "ன்" ல் முடியும் திருக்குறளில் தமிழ் என்ற சொல்லே இல்லை.

குறளில் இடம் பெறாத ஒரே எண் 9 

ஒரே முறை வரும் எழுத்துகள்'ங" மற்றும் "ளீ"


தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
எங்ங்னம் ஆளும் அருள் (251)        

தனது உடலை வளர்ப்பதற்காக   வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படி கருணை உள்ளம் கொண்டவராக இருக்க முடியும்?                     




            


ளீ

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்
தல்லல் உழப்பிக்கும் சூது (938)

பொருளைப் பறித்துப் பொய்யனாக ஆக்கி,அருள் நெக்ண்சத்தையும் மாற்றித துன்ப இருளில் ஒருவனை உழலச் செய்வது சூது

சில சிறப்பு குறள்கள் - 58

துணை எழுத்தே வராத குறள்...

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக (391)

பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவிற்குக் கற்றுக் கொள்ள வேண்டும்.கற்ற பிறகு அடஹ்ன்படி நடகக் வேண்டும்

2)நெடில் வராத குறள்

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு (786)

இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளம் அல்ல..இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்

3)
கீழே சொல்லியுள்ள குறளில் பால்,தேன், நீர் மூன்றும் வருகிறது

பாலொடு தேங்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றுறிய நீர் (1121)

இனியமொழி பேசுகின்ற இவளுடைய வெண்முத்துப் பற்களிடையே சுரந்து வரும் உமிழ்நீர், பாலும் தேனும் கலந்தாற்போல் சுவை தருவதாகும்

4)வெஃகாமை எனுன் அதிகாரத்தில் உ:ள்ள பத்து பாட்ல்களிலுமே வெஃகிற்,வெஃகிப்,வெஃகி,வெஃகுதல்,வெஃகி(அஃகி),வெஃகி,வெஃகி,அஃகாமை, வெஃகாமை,வெஃகா,வெஃகின் என 12 இடங்களில் ஆயுத எழுத்தினை பயன்படுத்தியுள்ளார் வள்ளுவர்


உதடுகள் ஒட்டா குறள்கள் - 57

கீழே குறிப்பிட்டுள்ள குறள்களைச் சொல்லும் போது நம் உதடுகள் ஒட்டாது..

1)
இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை (310)

எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார்.சினத்தை அறவெ துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்.

2)

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் (341)

ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும் குறிப்பிட்ட அந்தப் பற்ரு காரணமாக வரும் துன்பம் அவனை அணுகுவதில்லை

3)
எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல் (489)

கிடைப்பதற்கு அரிய காலம் வாய்க்கும் போது அதைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும்

4)
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து (1082)

அவள் வீசிடும் விழிவேலுக்கு எதிராக நான் அவளை நோக்க, அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது, தானொருத்தி மட்டும் தாக்குவது போதாதென்று ஒரு தானையுடன் வந்து என்னைத் தாக்குவது போன்று இருந்தது

5)
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு (1296)


காதல் பிரிவைத் தனியே இருந்து நினைத்த போது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.

Wednesday, September 11, 2019

வள்ளுவத்தில் கடவுள் - 56

வள்ளுவர் தன் குறள்களில் எந்த ஒன்றிலும் தமிழ் என்றோ கடவுள் என்றோ சொல்லவில்லை.

ஆகவேதான் திருக்குறள்.."உலகப் பொதுமறை" என போற்றப்படுகின்றது.

முதல் அதிகாரம் கடவுள்வாழ்த்து என்றாலும் அதில் வரும் ஆதி பகவன் இறைவனையேக் குறிப்பன ஆகும்

தவிர்த்து "கடவுள்" என்ற சொல்லைச் சொல்லவில்லையேத் தவிர கீழ்கண்ட குறள்களில் தெய்வம், இறைவன் என்ற சொற்களை சொல்லியுள்ளார்

1)

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (5)

இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்

2)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் (50)

தெய்வத்திற்கென எத்தனையோ அருங்குணங்கள் சொல்லப்படுகின்றன.உலகில் அறநெறியில் நின்று வாழ்கிறவன் தெய்வத்திற்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்

3)

தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை (55)

கணவன் வாக்கினைத் தெய்வத்தின வாக்கினைவிட மேலாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணயிட்டவுடன் மழை நடுங்கிப் பெய்யுமாம்

4)
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் (619)

தெய்வமே எண்ரு அழைத்து நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்பிற்கேற்ற வெற்றியினைத் தரும்

5)
ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்
(702)

ஒருவன் மனத்தில் உள்ளதைத், தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய சக்தி தெய்வத்திற்கே உண்டு என்று கூறினால், அத்திறமையை உடைய மனிதனையும் அத்தெய்வத்துடன் ஒப்பிடலாம்.

வள்ளுவத்தில் கோடிகள் - 55

குறளில் ஏழு குறள்களில் கோடி என்ற சொல் சொல்லப்பட்டுள்ளது.

அவை-

1) வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
    தொகுத்தார்க்குந் துய்த்த லரிது (377)

வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்காவிடின் கோடிப்பொருள் குவித்தாலும்,அதன் பயனை அனுபவிப்பது என்பதே அரிதாகும்

2)
பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும் (639)

தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதைவிட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும்

3)
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும் (816)

அறிவில்லாதவனிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதை விட அறிவுடைய ஒருவரிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்கு மேலானதாகும்

4)

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி பெறும் (817)

சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும், பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது

5)
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர் (954)

பலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில் பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம் தரமாட்டார்கள்

6)
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லாக் கடுக்கிய
கோடியுண் டாயினும் இல் (1005)

கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயனில்லை

7)

கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும் (1061)

இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச் சிந்தையுடையவரிடம் கூட, இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும்


Tuesday, September 10, 2019

வள்ளுவரும் விலங்குகளும் - 54

யானை-

1) காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு (500)

வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை, சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூட கொன்றுவிடும்

(யானை- நரி)

2)
சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு (597)

உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பது போல, ஊக்கமுடையவர்கள் அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்

3)
பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலுதாக் குறின் (599)

உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளும் கொண்ட யானை த்ன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவதுதான்

(யானை-புலி)

4)
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று (678)

ஒரு செயலில் ஈடுபடும்போது அச்செயலின் தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும்

(5)

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தந்தொகைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை (758)

தன் கைப்பொருளைக் கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது  யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில்  சிக்கிக் கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப் போன்று இலகுவானது

6)
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது (772)

வலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறி டஹ்ப்பினாலும் கூட அது, வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது

(யானை- முயல்)

7)

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும் (774)

கையிலிருந்த வேலினை யானையின் மீது வீசி விட்டதால்களத்தில் போரினைத் தொடர வேறு வேல் தேடுகிற வீரன், தன் மார்பின் மீதே ஒரு வேல் பாய்ந்திருப்பதுக் கண்டு மகிழ்ந்து அதனைப் பறித்துப் பகையை எதிர்த்திடுகின்றான்

8)

கடாஅக் களிற்ரின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில் (1087)

மதங்கொண்ட யானையின் மத்தகத்தின் மேலிட்ட முகபடாம் கண்டேன்.அது மங்கையொருத்தியின் சாயாத கொங்கை மேல் அசைந்தாடும் ஆடைபோல இருந்தது

9)
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியிந்தோல் போர்த்துமேய்ந்  தற்று(273)

மனதை அடக்க முடியாடஹ்வர்கள் துறவுக் கோலம் பூணுவது பசு ஒன்று புலித்தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும்

(பசு-புலி)

10)
படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசரு  ளேறு(381)

ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள்,குறையாவளம்,குறையற்ற அமைச்சு,முரிபடாத நட்பு,மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளுக்கிடையே  ஆண் சிங்கம் போன்ற அரசாகும்.

11)
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து (486)

கொடுமைகளைக் கண்டும் கூட உறுதி படைத்தவர்கள் அமைதியாக இருப்பது அச்சத்தினால் அல்ல. அது, ஆட்டுக்கடா ஒன்று தனது பகையைத் தாக்குவதற்கு தன்
கால்களைப் பின்னுக்கு வாங்குவதைப் போன்றதாகும்

12)
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற (495)

தண்ணீரில் இருக்கும் வரையில்தான் முதலைக்குப் பலம்.தண்ணீரைவிட்டு வெளியே வந்து விட்டால் ஒரு சாதாரண உயிர்கூட அதனை விரட்டி விடும்

13)

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பா டிடைத்து (624)

தடங்கல் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும்பாரத்தை எருது இழுத்துக் கொண்டு போவது போல, விடா முயற்சியுடன் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு வெற்றி கிட்டும்


வள்ளுவரும் விலங்குகளும் - 53

வள்ளுவர் கீழ்கண்ட குறள்களில்"மான்" களைகுறிப்பிட்டுள்ளார்.

1)
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின் (969)

உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான் என்பார்கள்.அதுபோல மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டு விடுவார்கள்

2)
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து (1085)

உயிர் பறிக்கும் கூற்றமோ? உறவாடும் விழியோ? மருட்சிகொள்ளும் பெண்மானோ? இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்று கேள்விகளையும் எழுப்புகின்றதே

3)
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்
கணியெவனோ ஏதில தந்து (1089)

பெண்மானைப் போன்ற இளமைத் துள்ளும் பார்வையையும்,நாணத்தையும் இயற்கையாகவே
 அணிகலன்களாகக் கொண்ட இப்பேரழகிக்குச் செயற்கையான அனிகலன்கள் எதற்காக?

வள்ளுவரும் பறவைகளும் - 52

மயில், கோட்டான், காக்கை,கொக்கு ஆகியவையும் குறளில் காணபப்டுகின்றன.
1)
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின் (475)

மயில் இறகாய் இருந்தாலும் கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முரிகின்ற அளவிற்கு அதற்குப் பலம் வந்து விடும்

2)அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு (1081)

எனை வாட்டும் அழகோ! வண்ண மயிலோ!இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சே!

3)
பகல் வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது (481)

பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கை வென்று விடும்.எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்

4)
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள (527)

தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும்.அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு

5)
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து (490)

காலம் கைகூடும்வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்

தவிர்த்து மீனும், பாம்பும், எலி, ஆமையும் கூட ஒவ்வொரு குறளில் வருகின்றன.

1)வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிர்பொன் விழுங்கி அற்று (931)

வெற்றியே பெறுவதாயினும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது.அந்த வெற்றி ,தூண்டிலின் இரும்பு முள்ளில் கோத்த இரையை மட்டும் விழுங்குவதாக நினைத்து மீன்கள் இரும்பு முள்ளையே கௌவிக் கொண்டது போலாகிவிடும்

2)
உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போ டுரனுறைந் தற்று(890)

உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடிவாழ்வது என்பது ஒரு சிறிய குடிலுக்குள் பாம்புடன் இருப்பது போன்று ஒவ்வொரு நொடியும் அச்சம் தருவதாகும்

3)ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும் (763)

எலிகள் கூடி கடல்போல முழங்கிப். பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா? அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழ்ந்துவிடுவார்கள்

4)
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று (1146)

காதலர் சந்தித்துக் கொண்டது ஒருநாள் என்றாலும், சந்திரனைப் பாம்பு விழ்ழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்ப்டும் "கிரகணம்" எனும் நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்திப்பு ஊர் முழுதும் அலராகப் பரவியது.

5)
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து (126)

உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்.(இக்குறளில் 1,5,7 என பகாஎண்கள்)

Monday, September 9, 2019

குவளை மலரும்..தாமரையும் - 51

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு (595)

இக்குறளில் தாமரை என்று தனித்து சொல்லாவிடினும்..தண்ணீரில் மலர்வது தாமரை அல்லவா? ஆகவே இக்குறளில் அவர் தாமரை மலரைத்தான் சொல்லியிருக்கக் கூடும்

தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும்.அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்

2)தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
  தாமரைக் கண்ணான் உலகு (1103)

தாமரைக் கண்ணான் உலகம் என்றெல்லாம் சொல்கிறார்களெ, அது என்ன!  அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில்வது போல அவ்வளவு இனிமை வாய்ந்ததா?

3)
காணின் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று (1114)

என் காதலியைக் குவளை மலர்கள் காண முடிந்தால், "இவள் கண்களுக்கு நாம் ஒப்பாக முடியவில்லையே" எனத் தலைக்குனிந்து நிலம் நோக்கும்

மணமில்லா மலரையும் வள்ளுவர் விட்டு வைக்கவில்லை..

இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
துணர விரிந்துரையா தார் (650)

கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர் கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்

வள்ளுவரும் அனிச்சமலரும் - 50


வள்ளுவர் அனிச்ச மலர் பற்றி நான்கு குறள்களில் சொல்லியுள்ளார்..

அவற்றைப் பார்ப்போம்

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து (90)

அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடிவிடக் கூடியது.அதுபோல சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடி விடுவர்

2)நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
 மென்னீரள் யாழ்வீழ் பவள் (1111)


அனிச்ச மலரின் மென்மையைப் புகழ்ந்து பாராட்டுமின்றேன்.ஆனால் அந்த மலரை விட மென்மையானவள் என் காதலி

3)
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை (1115)

அவளுக்காக நல்ல பறை ஒலிக்கவில்லை.ஏனெனில் அவள் இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள்.காரணம் அவள் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் தலையில் வைத்துக் கொண்டதுதான்

4)
அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம் (1120)

அனிச்ச மலராயினும், அன்னப்பறவை இறகாயினும் இரண்டுமே நெருஞ்சி முள் தைத்தது போல் துன்புறுத்தக் கூடிய அளவிற்கு என் காதலியின் காலடிகள் அவ்வளவு மென்மை வாய்ந்தவை.

(நெருஞ்சிப் பழம் என்கிறார்.அனிச்ச மலர்,அன்னப்பறவை).

வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 49


"இப்பிறவியில் யாம் பிரியமாட்டோம்" என்று சொன்னவுடன், "அப்படியானால்..மறுபிறப்பு என்று ஒன்று உண்டா? அப்போது நம்மிடையே பிரிவு ஏற்படும் என்று சொல்கிறாயா"? எனக் கேட்டு கண் கலங்குவாளாம் காதலி.

யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று (1314)

"யாரைக்காட்டிலும் உன்னிடம் நான் காதல் மிகுதியாகக் கொண்டுள்ளேன்" இன்று இயல்பாகச் சொன்னதைக் கூட காதலி தவறாக எடுத்துக் கொண்டு "யாரைக்காட்டிலும்..யாரைக்காட்டிலும்" எனக்கேட்டு ஊடல் புரியத் தொடங்கி விட்டால்

யாரினும்,யாரினும், யாரினும்....இது வள்ளுவரின் விளையாட்டு

இக்குறள் புலவி நுணுக்கம் எனும் அதிகாரத்தில் வருகிறது.

வள்ளுவனும் சொல் விளையாட்டும் - 48

ஊடுவதற்காகச் சென்றாலும் கூட, அதை நெஞ்சம் மறந்து விட்டு கூடுவத்ற்கு இணங்கிவிடுவதே காதலின் சிறப்பு

புணர்ச்சி விதும்பல் அதிகாரத்தில் இப்படி சொல்லும் வள்ளுவர் மேலும் சொல்கிறார்.

காதல் இன்பம் மலரைவிட மென்மையானது.அதனை அதே மென்மையுடன் நுகருபவர்கள் சிலரே ஆவார்கள்.

இந்த அதிகாரத்தில் அவரின் சொல்விளையாட்டினைப் பார்ப்போமா..

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை (1286)

விளக்கம்..
அவரைக் காணும்போது அவர் குற்றங்களை நான் காண்பதில்லை.அவரைக் காணாதபொழுது அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும் நான் காண்பதில்லை.

காணுங்கால்,காணேன்,காணாக்கால்,காணேன்

Sunday, September 8, 2019

வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 47

உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கிடும் பண்புடையோர் உலகில் இருப்பதால்தான் இல்லாதவர்கள் அவர்களிடம் சென்று இரத்தலை மேற்கொண்டுள்ளனர்..

இழித்துப் பேசாமலும் ஏளனம் புரியாமலும் வழங்கிடும் வள்ளல் தன்மை உள்ளவர்களைக் காணும்போது, இரப்போர் உள்ளம் மகிழ்ச்சியால் இன்புறும்

இரவு அதிகாரத்தில் இப்படியெல்லா, சொன்னவர் அடுத்து இரவச்சம் அதிகாரத்தில் சொல்கிறார்..

வறுமைக்கொடுமையைப் பிறரிடம் இரந்து போக்கிக் கொள்ளலாம் என்று கருதும் கொடுமையைப் போல் வேறொரு கொடுமை இல்லை

என்றும்..

கூழ்தான் குடிக்க வேண்டும் என்னும் நிலையானாலும், அதையும் தானே உழைத்துச் சம்பாதித்துக் குடித்தால் அதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை

என்றும் சொல்கிறார்.

இரப்பான் இரப்பாரை எல்லாம் இரப்பிற்
கரபபர் இரவன்மின் என்று (1067)

கையில் உள்ளதை மறைத்து "இல்லை"என்போரிடம் கையேந்த வேண்டாமென்று கையேந்துபவர்களையெல்லாம் கையேந்திக் கேட்டுக் கொள்கிறேன்

இரப்பான், இரப்பாரை,இரப்பிற்,கரப்பர்,இரவன்


வள்ளுவரும் சொல்விளையாட்டும் - 46

ஒருவனுக்கு வறுமையின் காரணமாக பேறாசை ஏற்படுமேயாயின்,அது அவனுக்கு பரம்பரைப் புகழையும்,பெருமையையும் ஒரு சேரக் கெடுத்துவிடும்.

மேலும், வறுமை எனும் துயரத்திலிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும்

இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது(1041)

இன்மை,இன்னா,இன்மை,இன்மையே,இன்னா...வள்லுவரின் சொல்விளையாட்டு இது..

வறுமைத் துன்பத்திற்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் ஏதுமில்லை.

வறுமைக்கு சொல்ல உவமைகூட ஏதுமில்லையாம்.என்னே ஒரு சிந்தனை.

வள்ளுவரும் சொல்விளையாட்டும் - 45

பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த  உலகம் ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது.எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது.

உழவு என்றே உழவுத் தொழிலுக்கு ஒரு தனி அதைகாரததை எழுதியுள்ள வள்ளுவரின் கூற்று இது.

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர் (1034)

பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள்..என இக்குறளில் உழவு செய்பவரைப் புகழ்கிறார்.

பலகுடை,தங்குடை,அலகுடை
நீழல், நீழலவர்

வள்ளுவரின் குறும்பினை இக்குறளில் பாருங்கள்..

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்
தில்லாளின் ஊடி விடும் (1039)

உழவன், தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், அவனால் வெறுப்புற்று விலகி இருக்கும் மனைவிபோல அது விளைச்சலின்றிப் போய்விடும்..

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 44

நாணுடமையில் சொல்கிரார்..

உடலுடன் இணைந்தே உயிர் இருப்பதுபோல், மாண்பு என்பது நாண உணர்வுடன் இணைந்து இருப்பதேயாகும்

தமக்கு வரும் பழிககாக மட்டுமின்றிப் பிறர்க்கு வரும் பழிக்காகவும் வருந்து நாணுகின்றவர், நாணம் எனும் பண்பிற்கான ஊரைவிடமாவார்

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர் (1017)

நாண உணர்வுடையவர்கள் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள உயிரையும் விடுவார்கள்.உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மானத்தை விடமாட்டார்கள்

நாணால்,நாண்,நாணாள்  

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 43

பிறப்பினால் அனைவரும் சமம்.செய்யும் தொழிலில் காட்டுகின்ற திறமையில் மட்டுமே வேறுபாடு காணமுடியும்..

இப்படி :"பெருமை" எனும் அதிகாரத்தில் சொல்பவர் மேலும் சொல்கிறார்.

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர் (973)

பண்பு இல்லாதவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் உயர்ந்தோர் அல்ல.இழிவான காரியங்களில் ஈடுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் உயர்ந்தோரே ஆவார்கள்.

மேலிருந்தும்,மேலல்லார்,மேலல்லர், கீழிருந்தும், கீழல்லார், கீழல்லவர்  ..வள்ளுவரின் சொல் விளையாட்டு இது

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல் (979)

ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும்.ஆணவத்தின் எல்லைக்கே சென்றுவிடுவது சிறுமை எனப்படும்

பெருமை,பெருமிதம்,இன்மை, சிறுமை, பெருமிதம்...

Saturday, September 7, 2019

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 42

புகழ்மிக்க வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டு மென்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈடுபடமாட்டார்கள்

சீரினும் சீரல்ல செய்வாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர் (962)

சீரினும்,சீரல்ல, சீரொடு

அடுத்து கொல்கிறார்

குன்றின் அணையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அணைய செயின் (965)

குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்

குன்றின்,குன்றுவர்,குன்றுவ,குன்றி..இது வள்ளுவனின் தமிழ் விளையாட்டு.

இக்குறள்கள் வரும் அதிகாரம் மானம்

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 41

பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக் கூட ஒருவன் கொள்ளக் கூடாது

அதேபோல...தனியாக நின்று பலரின் பகையைத் தேடிக் கொள்பவனை ஆணவம் பிடித்தவன் என்பதை விட அறிவிலி என்பதே பொருத்தமாகும்.

பகைவர்களையும் நண்பர்களாகக் கருதிப் பழகுகின்ற பெருந்தன்மையான பண்பை இந்த உலகமே போற்றிப் புகழும்

இப்படியெள்லாம் பகைத்திறம் தெரிதல் அதிகாரத்தில் சொல்லியுள்ள வள்ளுவர்..இவ்வதிகாரத்திலும் தன் சொல் விளையாட்டு ஒன்றினைக் காட்டியுள்ளார்.

தேறினுந் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல் (876)

பகைவரைப்பற்றி ஆராய்ந்து தெளிவடைந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் அதற்கிடையே ஒரு கேடு வரும்போது அந்தப் பகைவருடன் அதிகம் நெருங்காமல் நட்புக் காட்டியும் அவர்களை பிரிந்துவிடாமலேயே பகை கொண்டும் இருப்பதே நலமாகும்

தேறினும், தேறாவிடினும், தேறான்..

Friday, September 6, 2019

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 40

அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும்.மற்ற பஞ்சங்களைக் கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது

என்று புல்லறிவாண்மையில் சொல்லுபவர் மேலும் சொல்கிறார்..

ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும் ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும்

இந்த அதிகாரத்திலும் அவர் தன் சொல் விளையாட்டினைக் காட்ட மறக்கவில்லை

காணாதான் காட்டுவான் தான்காணாண் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு (849)

அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான்.அவனை உண்மையிலேயே அறுவுடையவனாக்க முயற்சி செய்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான்.

காணாதான், காட்டுவான்,காணான், காணாதான்.கண்டானாம்,கண்டவாறு

வள்லுவரின் சொல் விளையாட்டு - 39

பேதைமை...

கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கண் செயல் (832)

பேதைமை, பேதைமை,காதன்மை

தன்னால் இயலாத செயல்களை விரும்பி அவற்றில் தலையிடுவது என்பதௌ பேதைமைகளில் எல்லாம் மிகப்பெரிய பேதைமையாகும்

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில் (833)

நாணாமை,நாடாமை,நாரின்மை,பேணாமை

வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும்,தேடவேண்டியதைத் தேடிப் பெறாமலும் ,அன்புகாட்ட வேண்டியவரிடத்தில் அன்பு காட்டாமலும், பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவற்றைப் பாதுகாக்காமலும் இருப்பது பேதைமைகளின் இயல்பாகும்.




வள்ளுவரின் சொல் விளையாட்டு- 38

திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகும் அளவிற்கான துயரத்தை உண்டாக்கி விடுமாம்.

ஒருவரின் குணம்,குடிப்பிறப்பு.குற்றங்கள்.குறையா இயல்புகள் என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்பு கொள்ள வேண்டும்.

இதையே

குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு (793)

என்கிறார்.

குணன், குடிமை, குற்றம்,குன்றா...

அடுத்து

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு (791)

என நட்பாராய்தல் அதிகாரத்திலேயே இக்குறலினையும் சொல்லியுள்ளார்.

நாடாது, நட்டல்,நட்டபின்,நட்பு

விளக்கம்-
ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவிற்குக் கேடுகளை உண்டாக்கும்

Thursday, September 5, 2019

வள்ளுவரும் சொல்விளையாட்டும் - 37

நட்பு கொள்வது போன்ற அரிய செயல் இல்லை.அதுபோல பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை.

வெறும், சிரித்து மகிழ மட்டுமே நட்பு அல்ல.நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்து திருத்துவதற்காகவும் ஆனதே!

படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பப்போல பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பாகும்.

இப்படியெல்லாம் நட்பு எனும் அதிகாரத்தில் சொன்னவரின் சொல் விளையாட்டு எங்கே?

இதோ இந்தக் குறளில்...

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு (786)

முகநக, அகநக,நட்பது,நட்பன்று,நட்பு

இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு  அடையாளமல்ல.இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்.

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 36

அதிகாரம் - பொருள் செயல்வகை

பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடிகிறது

ஆனால், பெரும் செல்வமாக இருப்பினும் அது அருள் நெறியிலோ அன்பு வழியிலோ வராதபோது அதனைப் புறக்கணித்துவிட வேண்டும் என்றும் கூறுகிறார்.
அவரின் சொல்விளையாட்டை கீழ்கண்ட குறளில் பாருங்கள்...

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள் (751)

பொருளல்ல,பொருளாக, பொருளல்ல, பொருள்

விளக்கம்-
மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக் கூடிய அளவிற்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 35

ஆழமும், அகலமும் கொண்ட அகழ்.பரந்த நிலம், உயர்ந்து நிற்கும் மலைத் தொடர், அடர்ந்திருக்கும் காடு ஆகியவற்ரை உடையதே அரணாகும்.

தவிர்த்து, உட்பகுதி பரந்த இடமாக அமைந்து, பாதுகாக்கப் படவேண்டிய பகுதி சிறிய இடமாக அமைந்து, கடும் பகையின் ஆற்றலை  அழிக்கக் கூடியதே அரண் ஆகும்.

அரண் பற்றிய அதிகாரத்தில் இவையெல்லாம் கூறுபவரிடமிருந்து, இவ்வதிகாரத்தில் சொல்விளையாட்டு இல்லாமலா? அதையும் பார்ப்போம்.

முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வ தரண் (748)

முற்றாற்றி,முற்றிய, பற்றாற்றி, பற்றியார்

சரி இதற்கான பொருள்...

முற்றுகையிடும் வலைமைமிக்க படையை எதிர்த்து,உள்ளேயிருந்து கொண்டே போர் செய்து வெல்வதற்கேற்ற வகையில் அமைந்ததே அரண் ஆகும்

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 34


ஆறு கடல் எனும் இருபுனலும், வளர்ந்தோங்கி நீண்டமைந்த மலைத் தொடரும் வருபுனலாம் மழையும்,வலிமைமிகு அரணும் ஒரு நாட்டின் சிறந்த உறுப்புகளாகும்

நல்ல  அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லாமற் போகும்

நாடு அதிகாரத்தில் மேலும் சொல்கிறார்..

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு (739)

இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளைவிட இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய நாடுகள் சிறந்த நாடுகளாகும்.

நாடென்ப,நாடா, நாடல்ல, நாட,நாடு...இதுதான் வள்ளுவர்

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 33

அவை அஞ்சாமை இது அதிகாரம்

குறள்..

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார் (722)

கற்றவரின் முன் தாம் கற்றவற்றை அவருடைய மனதில் பதியுமாறு சொல்ல வல்லவர், கற்றவர் எல்லாரினும் மேலானவராக மதித்துச் சொல்லப்படுவார்

கற்றாருள், கற்றார், கற்றார்முன்,கற்ற இது இவருடைய விளையாட்டு

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத் தஞ்சா தவர் (723)

அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல்.அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரே ஆவர்.

பகையகம், அவையகம்
சாவார்,எளியர், அரியர்

Wednesday, September 4, 2019

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 32

முடிமன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வதைப்போல அதிகம் நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கிவிடாமலுமாக இருப்பார்கள் எங்கிறார் மன்னரைச் சேர்ந்து ஒழுகல் அதிகாரத்தில்.மேலும்....

மன்னர் விழைப விழையாமை மன்னரான்
மன்னிய ஆக்கந் தரும் (692)

மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமென தாமும் விரும்பாமலிருத்தல் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையான ஆக்கத்தைத் தரும்.

இக்குறளில், மன்னர்,மன்னரான்,மன்னிய,விழைப,விழையாமை என்ற விளையாட்டினை ரசித்தீர்களா?!

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 31


தூது அதிகாரத்தில் தூதுக்குரிய தகுதியாக சொல்கிறார்..

அன்பான குணமும் புகழ் வாய்ந்த குடிப்பிறப்பும் அரசினர் பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பது தூதுக்குரிய தகுதிகளாகும்

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு (688)

துணிவு,துணை,தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவருக்குத் தேவயானவைகளாகும்

தூய்மை,துணைமை,துணிவுடைமை, வாய்மை...!!!!

விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வன்க ணவன் (689)

விடுமாற்றம்,வடுமாற்றம்..

ஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன், வாய்தவறிக்கூட குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதி படைத்தவனாக இருத்தல் வேண்டும்

Tuesday, September 3, 2019

வள்ளுவரும் சொல்விளையாட்டும் - 30

ஒரு செயலில் ஈடுபடுகிறவன் அச் செயல்குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்

செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளங் கொளல் (677)

செய்வினை, செய்வான், செயன்முறை, உள்ளறிவான், உள்ளம்

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானயாத் தற்று (678)


ஒரு செயலில் ஈடுபடும்போது, அச்செயலின் தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும்

வினையான், வினையாக்கி,யானையால் யானையா

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல் (679)

நண்பருக்கு நல்லுதவி செய்வதைக் காட்டிலும் பகைவராயிருப்பவரைத் தம்முடன் விரைந்து செய்யத் தக்கதாகும்

நட்டார்க்கு,நல்ல,ஒட்டாரை, ஒட்டி

இக்குறள்கள் எல்லாம் வரும் அதிகாரம் வினைசெயல் வகையாகும்

வள்ளுவரும் சொல்விளையாட்டும் - 29


ஒரு செயலில் ஈடுபட முடிவெடுக்கும் போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்களை பற்றிய ஆராய்ச்சியும் முடிவடைந்திருக்க வேண்டும்.முடிவெடுத்தப் பின் காலந் தாழ்த்துவது தீதாக முடியும்

வினை செயல்வகையில் மேலும் சொல்கிறார்..

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை (672)

தூங்குக, தூங்கி,தூங்கற்க, தூங்காது....அடடா...

நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத் தாமதித்துச் செய்யலாம்.ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் தாமதம் கூடாது.

இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும். இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும்

ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல் (673)

ஒல்லும்வாய், ஒல்லாக்கால், செல்லும்வாய்...

வள்ளுவரும் சொல்விளையாட்டும் - 28

வினைத்திட்பம் எனும் அதிகாரத்தில் சொல்கிறார்..

இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக்கூடியதேயாகும்.

உருவத்தால் சிறியவர்கள் என யாரையும் அலட்சியப்படுத்தக் கூடாது.பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என எண்ண வேண்டும்.

எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் (666)

எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவராக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்

எண்ணிய,எண்ணியாங்கு,எண்ணியார்,திண்ணியர்..வள்ளுவரின் விளையாட்டு

Monday, September 2, 2019

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 27

சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை.எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும் என் கிறார் வள்ளுவர் "சொல்வன்மை" எனுன் அதிகாரத்தில் கீழ்கண்ட குறள் மூலம்..

நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத் துள்ளதூஉம் அன்று (641)

நாநலம்,நலனுடைமை,அந்நலம்,யாநலம் என விளைடியவர் மேலும் சொல்லை வைத்து தமிழ் விளையாட்டு விளையாடுகிறார்.

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து (645)

சொல்லுக, சொல்லை,பிறிதோர் சொல்,அச்சொல்லை,வெல்லுஞ்சொல் என..

இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என்று உணர்ந்த பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 26

சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான்.

வெள்ளம்போல துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள் நினைத்த மாத்திரத்திலேயெ அத்துன்பம் விலகி ஓடிவிடும்.

இடுக்கண் அழியாமையில் இப்படியெல்லாம் சொன்ன வள்ளுவர் மேலும் சொல்கிறார்..

இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
கிடும்பை படாஅ தவர் (623)

துன்பம் சூழும்போது, துவண்டு போகாதவர்கள்,அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்

இடும்பை,இடும்பை,இடும்பை,இடும்பை என இடும்பையை நான்கு இடங்களில் சொல்லி சொல் விளையாட்டினை விளையாடுகிறார்.

இன்பத்துள் இன்பம் விழியாதான் துன்பத்துள்
துன்ப முறுதல் இலன் (629)

என்று மற்றொரு குறளில் இன்பத்துள் இன்பம், துன்பத்துள் துன்பம் என்கிறார்.

இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள்,துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள்.இரண்டினையும் ஒன்றுபோல் கருதுவர்.

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 25

ஆள்வினை உடைமை

எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும்.இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாக ஆகிவிடும்

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு (612)

வினைக்கண், வினைகெடல்,வினைக்குறை,தீர்ந்தார்,தீர்ந்தன்று

அடுத்து

ஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையில் வாள்தூக்கி வீசுவத்ற்கும் வேற்பாடு ஒன்றுமில்லை

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும் (614)

தாளாண்மை,வேளாண்மை,வாளாண்மை

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 24

ஒற்றாடல்...

நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்.

மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும்

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல் (588)

ஓர் உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியைக் கூட மற்றோர் உளவாளி வாயிலாகவும் அறிந்து வரச் செய்து, இரு செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்தப் பிறகே அது, உண்மையா அல்லவா என்ற முடிவுக்கு வரவேண்டும்

ஒற்றொற்றி, ஒற்றினால், ஒற்றி...இக்குறளில் சொல்விளையாட்டு

வள்லுவரின் சொல்விளையாட்டு - 23

கண்ணோட்டம் எனும் அதிகாரத்திலிருந்து சில குறள்கள்..

அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்கு, மாறாக் இருப்பவர்கள் இந்தப் பூமிக்கு சுமையாவார்கள்

பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங்
கண்ணோட்டம் இல்லாத கண் (573)

இரக்க உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராத கண்ணும், பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும்

பண்ணென்னாம்,கண்ணென்னாங், கண்ணோட்டம் , கண் என விளையாடியவர் அடுத்தும் ஒரு சொல்விளையாட்டை நிகழ்த்துகிறார்.

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல் (577)

கண்ணோட்டம், கண்ணிலர்,கண்ணுடையார், கண்ணோட்டம்...

கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்.கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள்

Sunday, September 1, 2019

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 22

கொடுங்கோன்மை அதிகாரத்திலேயே வரும் மற்ற குறளினையும் பார்ப்போம்..

மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள்.

துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு (557)

நீதிநெறி தவறாத செங்கோன்மைதான் ஒரு அரசுக்கு புகழைத் தரும்.இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னவாம் மன்னர்க் கொளி (556)

மன்னர்க்கு,மன்னுதல்,மன்னவாம், மன்னர்க்கு..இதுதான் வள்ளுவர்.

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 21

அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு,கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு (552)

ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது.

இக்குறளில் வேலொடு, கோலொடு  எனச் சொல்பவர் அடுத்த குறளில் சொல்கிறார்..

நாடொறும் நாடி முரைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும் (553)

ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிற்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர் குலைந்து போய்விடும்

நாடொறும், நாடி,நாடொறும்,நாடு...இது வள்ளுவரின் சொல்லாட்சி ஆகும்

மேற்சொன்ன குறள்கள் வரும் அதிகாரம் கொடுங்கோன்மை ஆகும்