Thursday, December 28, 2017

வள்ளுவனும் எதுத்துக்காட்டுகளும் -5

உலகில் பிறப்பும், இறப்பும் இயற்கை.

வந்தவர் எல்லாம் தங்கி விட்டால், இந்த மண்ணில் நமக்கு இடமேது என்றார் கண்ணதாசன்

இதுவரை இறந்தவர் இவ்வளவு, பிறந்தவர் இவ்வளவு என்பதைக் கணக்கில் காட்ட இயலுமா?

அது முடியாத காரியம் அல்லவா?

அதுபோல அளவிடமுடியாது வேறொன்றும் இருக்கிறதாம்...வள்ளுவன் சொல்கிறான்

அது என்ன..

உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிட முடியாதாம்

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று   - 22

என்கிறார்

உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கையை எவ்வளவு என்று எப்படி கூறமுடியாதோ.அதுபோல பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது


Wednesday, December 27, 2017

வள்ளுவனும் எடுத்துக்காட்டுகளும் - 4

கடல்நீர் ஆவியாகி மழைமேகமாக உருவெடுத்து மழையாய்
பெய்து, மக்கள் தேவையையும் பூர்த்தி செய்து..மிகைநீர் பல நிலைகளில் மீண்டும் கடலில் சங்கமிக்கிறது.அப்படி
கடல்நீர் ஆவியாகி மீண்டும் அக்கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல் கூட வற்றாமல் இருக்கும்.அதுபோல மனித சமுதாயதிலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும், அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்த சமுதாயம்வாழும்

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின் (17)

எப்படிக் கடல்நீர் ஆவியாகி மழையாய் பொழிகிறதோ அதுபோல சமுதாயத்தில் , சமுதாயத்தால் புகழ் அடைந்தவர்கள், அச்சமுதாயத்திற்கு பயன்படும் வகையிலேயே வாழ வேண்டும்

கடல்நீரையும், மழையையும் சமுதாயத்திற்கும்,புகழுடன் உயர்ந்தவர்களுக்கும் ஒப்பிடுகிறார்இக்குறளில்

Friday, September 8, 2017

வள்ளுவனும்...எடுத்துக்காட்டுகளும் - 3


அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.

நம் மனம் நினைப்பதை முகம் சொல்லிவிடும்..

அடுத்தது காட்டும் பளிங்கு போல..நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் என்று கண்ணாடியையும், மனதையும் ஒப்பிட்டு சொன்ன வள்ளுவன் மற்றொன்றையும் சொல்கிறார்

அனிச்ச மலர் என்னும் மலர்..முகர்ந்து பார்த்தாலே வாடிவிடுமாம்.அந்த அளவிற்கு மெல்லியதாம்.அதுபோல நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை..."இவன் ஏன் இப்போது வந்தான்" என்ற எண்ணத்துடன்..நாம் வரவேற்றால்....நம் முகத்தைப் பார்த்ததுமே..விருந்தினர் அதை புரிந்து கொண்டுவிடுவார்களாம்

இதைத்தான் வள்ளுவன்

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து  (90)

என்கிறார்..

அனிச்சம் எனப்படும் பூ, முகந்தவுடன் வாடிவிடக் கூடியது.அதுபோல சற்று முகங்கோணி விருந்தினரை வரவேற்றாலே அவர்கள் வாடிவிடுவர்


(இப்போதைய கதை வேற...'மெகா சீரியல் பார்க்கும் நேரத்தில்..இவர்கள் ஏன் இங்கு வந்தார்கள்?" என முகமாற்றம் பல வீடுகளில் தோன்றுகிறது விருந்தினரைப் பார்த்தால்)

Wednesday, September 6, 2017

வள்ளுவனும்...எடுத்துக்காட்டுகளும் - 2

நமக்கு உள்ள பெயர் நம் உடலுக்கா? உயிருக்கா?

உயிருக்கு என்றால்..நாம் தினசரி விடும் மூச்சுக் காற்றிற்கா?

உடலுக்கு என்றால்...நாம் இறந்ததும் ஏன் நம் உடலை "Body"  என் கிறார்கள்.

அதாவது..உயிர்..உடலில் உள்ளவரை ராமநாதன்.உயிர் பிரிந்ததும் உடல் அந்தப் பெயரை இழந்துவிடுகிறது.

உயிரும்..உடலும் ஒன்றுடன் ஒன்று கலந்திருக்கிறது.

அதே போல ஒருவர் அன்புடையவராய் இருபபராயின், அவருடன் அதற்கான அன்பு செயல்களும் இருக்குமாம்.

இதைத்தான் வள்ளுவர்

அன்புடமை என்னும் அதிகாரத்தில்

அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போ டியைந்த தொடர்பு  - 73

என்கிறார்.

அதாவது, ஒருவர் அன்புடையாராய் இருந்தால் அவருடன் கண்டிப்பாக அன்பிற்கான செயல்களும் இணைந்திருக்குமாம்.அது எப்படியென்றால் நம் உயிருடன் இணைந்திருக்கும் உடல் போலவாம்

அன்பையும் , செயலையும்...உயிருக்கும் உடலுக்கும் ஒப்பிடுகிறார்

நாளை வேறு ஒரு குறளுடன் சந்திப்போம்

Tuesday, September 5, 2017

வள்ளுவனும்...எடுத்துக் காட்டுகளும் - 1

திருக்குறளில் பல இடங்களில் வள்ளுவன்  தான் கூற வந்ததை மற்றொரு செயலுடன் ஒப்பிட்டு கூறுவதை காணமுடிகிறது

அப்படி சொல்லப்படும் எடுத்துக்காட்டுகளில் உள்ள நயம், உவமை, உவமேயம் ஆகியவை ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.

இந்நூலில் சொல்லப்பட்ட சில குறள்கள்..உவமை/உவமேயம் ஆகிய இலக்கணக் குறிப்புகளுக்கும் வராமல் இருக்கலாம்.ஆனால்..வள்லுவரின் ஒப்பீடும்..அதற்கான எடுத்துக்காட்டுகளும் வியக்கவைக்கின்றன

இனி அப்படிப்பட்ட ஒவ்வொரு குறள் பற்றியும்...நாளும் ஒரு குறள் என்ற கணக்கில் சொல்லலாம் என உள்ளேன்

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை  -37

அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்களை எளியவாகக் கருதி பயணத்தை மேற்கொள்வார்கள்.தீயவழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாது, துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் இன்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்

(அறவழியில் நடப்போரை பல்லக்கில் அமர்ந்தவர் போலவும், தீயவழி நடப்போரை பல்லக்கு தூக்கிகளுடன் ஒப்பிட்டுள்ளது இங்கு சிறப்பு)


நாளை வேறு ஒரு குறளுடன் சந்திப்போம்

Tuesday, August 29, 2017


1.2.1 திருக்குறள் : ஒரு ‘வாழ்வு நூல்’
‘திருக்குறள் ஒரு வாழ்வு நூல். அற நூல் என்பதற்கும் வாழ்வு நூல்
என்பதற்கும் நிரம்ப வேறுபாடு உண்டு. அற நூல்கள் பல சமயச்
சார்பும் அறநெறியை விதிகளாக வகுத்துக் கூறும் போக்கும் மிக்கன.
ஆனால் வாழ்வு நூல் என்பது வள்ளுவர் புதுமையாகக் கண்டது.
இது அற நூலுடன் ஒற்றுமை உடையது என்பதைத் தவிர
தனக்கெனப் பல தனித் தன்மைகளை உடையது. இங்ஙனம்
திருவள்ளுவர் வாழ்வு நூலாக எழுதுவதற்குத் தமிழ்ப்பண்பாடே
அடித்தளமாகும். தொல்காப்பியத்தில் இதற்கான அடிப்படையைக்
காண்கிறோம்’ என்கிறார் பேராசிரியர் தமிழண்ணல் அவர்கள்.
(திருக்குறள் சிறப்பியல் களஞ்சியம் பக்: 125)
எனவே, வாழ்வு நூலாகக் கருதப்படும் திருக்குறள், ஒரு குறிப்பிட்ட
இனத்தவர், சமயத்தினர், மொழியினர், நாட்டவர் என்ற
எல்லைகளைக் கடந்து மனித குலத்தின் வாழ்வு நூலாகக்
காணப்படுகிறது. இந்த உண்மை திருக்குறளை நடுவு நிலைமையுடன்
கற்போருக்கு நன்கு புரியும்.

1.2.2 பெயர்க்காரணம்
தமிழ் மொழியில் உள்ள மிகச் சுருங்கிய வெண்பா யாப்பிற்குக்
‘குறள் வெண்பா’ என்பது பெயர். இதற்குக் குறுகிய வடிவினை
உடைய வெண்பா என்று பொருள். இத்தகைய பாடல்களால்
இயற்றப்பட்டதால் ‘குறள்’ என்று அழைக்கப்படுகிறது.
‘திரு’ என்பதற்கு உயர்வு, அழகு, சிறப்பு, செல்வம் எனப் பல
பொருள் உண்டு. தமிழில் உள்ள சிறந்த படைப்புகளையும்,
சிறப்புடையோர்களையும், ‘திரு’ எனும் அடைமொழி சேர்த்து
அழைப்பது மரபு. திருவாசகம், திருமந்திரம், திருநாவுக்கரசர்,
திருஞானசம்பந்தர்     முதலியன இதற்குரிய எடுத்துக்காட்டுகள்.
எனவே, சிறப்புக்கருதி, குறுகிய வெண்பாக்களால் ஆகிய குறள்
‘திருக்குறள்’ என அழைக்கப்படுகிறது.

1.2.3 அமைப்பு
இது அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று உள் பிரிவுகளை
உடையது. அவை, அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்
என்று அழைக்கப்படுகின்றன.

• அறத்துப்பால்
அறத்தின் பெருமையையும், பயனையும் விளக்குவது அறத்துப்பால்.

• பொருட்பால்
பொருளின் சிறப்பையும், அதைச் சேகரித்து, காத்து, வகுத்து
வழங்கும் முறைகளையும் கூறுவது பொருட்பால். இதில், சமுதாயம்
பற்றிய கருத்துகளும், அரசியல் நெறிமுறைகளும் கூறப்பட்டுள்ளன.

• காமத்துப்பால்
காமத்துப்பாலில் காதலர்களின் அன்பின் வெளிப்பாடும், ஈடுபாடும்,
மனப்போக்கும், விழுமியங்களும் சுவையாக விளக்கப்படுகின்றன.

• அதிகாரங்களும் பாடல்களும்
திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன.
அதிகாரத்திற்கு 10 பாடல்கள் வீதம் 1330 பாடல்கள் இடம்
பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலும், இரண்டு அடிகளை
(வரிகளை) மட்டுமே உடையதாக இருக்கிறது.

• இயல்கள்
பால் வகைகளாக அறம், பொருள், இன்பம் என மூன்று
பால்களாகத் திருக்குறள் பகுக்கப்பட்டிருப்பதாகக் கூறினோம்.
இவை ஒவ்வொன்றும் இயல் என்ற     உட்பிரிவுகளைக்
கொண்டுள்ளன. அவ்வகையில் அறத்துப்பாலில் பாயிர இயல்,
இல்லற இயல், துறவற இயல் என்ற மூன்று உட்பிரிவுகள் உள்ளன.
பொருட்பால், அரசு இயல், அங்க இயல், ஒழிபு இயல் என்ற
பிரிவுகளைக் கொண்டுள்ளது. இன்பத்துப் பாலில், களவு இயல்,
கற்பு இயல் என்ற இரண்டு பிரிவுகள் உள்ளன. இவ்வமைப்பைக்
கீழே உள்ள படத்தின் மூலம் எளிதில் நினைவு கொள்ளலாம்.

திருக்குறள் - நூல் அமைப்பு
நிலைகள்
கூறுகள்
எண்ணிக்கை
பால்
அறம்
பொருள்
இன்பம்
3
இயல்
பாயிரம்
இல்லறம்
துறவறம்
அரசு
அங்கம்
ஒழிபு
களவு
கற்பு
8
அதிகாரம்
4
20
14
25
32
13
7
18
133
குறள்
40
200
140
250
320
130
70
80
1330

1.2.4 தனித்தன்மை

இது சுமார்2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.
மனிதன், மனிதனாக வாழ்வதற்குத் தேவையான வாழ்வியல்
கருத்துகளைக் கூறும் நூல் திருக்குறள். இது மனித
சமுதாயத்தின் வழிகாட்டி. மனிதர் அனைவருக்கும் பொருந்தும்
சமூக நீதிகளை எடுத்துரைக்கிறது. தமிழில் எழுதப்பட்ட
திருக்குறளில் ஒரு செய்யுளில் கூடத் தமிழ்நாடு, தமிழர்,
தமிழ் என்பது பற்றி ஒரு சொல் கூட இடம் பெறவில்லை.
எனவே, திருக்குறளை உலகிலுள்ள எந்த மொழியில் மொழி
பெயர்த்தாலும், அந்த மொழிக்கும், மொழி பேசும் மக்களுக்கும் சொந்தமாகும் பொதுத்தன்மை அதில் அமைந்துள்ளது.
இதனைப்பற்றி,
‘குறள் தமிழ்மறை அன்று; அது தமிழ் தரணிக்குத் தந்த மறை’
என்று அறிஞர், பேராசிரியர் வா.செ. குழந்தைசாமி அவர்கள்
குறிப்பிடுகிறார்கள்.