Tuesday, October 7, 2014

திருக்குறள் - காமத்துப்பால்-1115,1116,1117



பெண்களின் இடையை கொடி இடை என கவிஞர்கள் வர்ணிப்பது உண்டு.மெல்லிய இடைதான் பெண்டிக்கு அழகு.ஒரு கவிஞர் தனது ஒரு பாடலில் கதாநாயகியிடம் கதாநாயகன் பாடும்போது, "இடையா..இது இடையா..அது இல்லாதது போல இருக்கிறது" என பாடுவது போல எழுதியிருப்பார்.கவிஞர்கள் பலருக்கு முன்னோடியான வள்லுவன் என்ன சொல்கிறான்..

குறள்-1115

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை.

அவள் தனது மென்மை தெரியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் சூடினால்..அவளது இடை ஒடிந்து வீழ்ந்தாள்.இனி நல்ல பறைகள் அவளுக்கு ஒலியாது

குறள்-1116

சாதாரணமாக மங்கையரின் முகத்தை நிலவுக்கு ஒப்பிடுவது உண்டு."அவளைப் பார்த்து பின் நிலவைப் பார்த்தால் நிலவில் ஒளி மங்கியது போல இருக்கிறதாம் காதலர்க்கு.காதலியின் முகம் அவ்வளவு ஒளி பொருந்தியதாம்.ஆனால் இங்கு என்ன நடக்கிறது பாருங்கள்...

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.

வானில் நட்சத்திரங்கள் மங்கையின் முகத்திற்கும் நிலவிற்கும் வேறுபாடு தெரியாமல் மயங்கித் தவிக்கின்றன.

குறள்-1117

நட்சத்திரங்கள் இவள் முகத்தைப் பார்த்து ஏன் கலங்க வேண்டும்.நிலவின் களங்கம் போல இவள் முகத்தில் களங்கம் உள்ளதா..இல்லையே

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.

படிப்படியாய் குறைந்து படிப்படியாய் நிறைந்து காணும் நிலவில் உள்ளது போல இந்தப் பெண்ணின் முகத்தில் களங்கம் இல்லையே

Monday, October 6, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1113.1114




குறள்-1113
பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மனம் உண்டா..அல்லது செயற்கை மணமா என்ற சந்தேகமும், அதனால் சிவனே வந்து தருமிக்குப் பாட்டெழுதிக் கொடுத்ததும்..நக்கீரன்..அப்பாடலில் பொருட்குற்றம் இருக்கிறது என்றதும்...நான் எழுதிய பாட்டில் குற்றமா? என சிவன் நேரில் வந்து கேட்டதும்.."முக்கண்ணைக் காட்டினும்...குற்றம் குற்றமே" என்று உரைத்ததும் எல்லாம் நாம் அறிவோம்.ஆனால், உண்மையிலே..பெண்களுக்கு கூந்தல் அல்ல..உடலே நறுமணமாம்..வள்ளுவன் உரைக்கின்றான்.

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

மூங்கில் போன்ற தோளை உடைய அவளின்  மேனி மாந்தளிர், பல்லோ முத்து; உடல் மணமோ நறுமணம்; மையூட்டப் பெற்ற கண்களோ வேல்!.

குறள்-1114

பெண்ணின் முகத்தைத் தாமரை மலருக்கும், கண்களை கயலுக்கும் சாதாரணமாக அனைத்து காதலர்களும் வர்ணிப்பது உண்டு.ஆனால்..வள்ளுவன் ஒரு படி மேலே போய்..பெண்ணின் கண்களிப்போல தான் இல்லையே என மலர் வெட்கப்படுமாம்.

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.

குவளைப் பூக்களுக்கு பார்க்கும் திறனிருந்தால், சிறந்த அணிகளைப் பூண்டிருக்கும் என் மனைவியின் கண்ணைப் போல தாம் இருக்கமாட்டோம் என்று எண்ணி நாணத்தால் தலைகுனிந்து நிலத்தைப் பார்க்குமாம்.

Sunday, October 5, 2014

திருக்குறள் - காமத்துப்பால் 1111,1112



மோப்பக் குழையும் அனிச்சம் என்றார் வள்ளுவர்.அனிச்ச மலர் முகர்ந்து பார்த்தாலே வாடி விடும்.அந்த அளவு மென்மையானதாம்.ஆனால் அதனை விட மென்மையானதும் ஒன்று இருக்கிறதாம்.. அது என்ன...

குறள்- 1111

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள். #1111


அனிச்ச மலரே ,. நீ நல்ல ,மென்மைத் தன்மையைப் பெற்றுள்ளாய்.ஆதலான் என் பாராட்டுகள்.ஆனால் நான் விரும்பும் காதலி உன்னைவிட மெல்லிய தன்மையைக் கொண்டவள்.

குறள்-1112

மலரைக் கண்டால் மன மகிழ்ச்சி ஏற்படுகிறது நமக்கு.அதற்கு ஏதேனும் காரணம் உண்டா? பூத்துக் குலுங்கும் அதன் அழகே அழகு என்கிறோம்..ஏன்...அதற்கும் வள்ளுவனிடம் ஓர் காரணம் இருக்கிறது.அது என்ன தெரியுமா?


மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று.

மனமே...மலரைக் கண்டு மயங்குகிறாயே (அது ஏன்) என் மனைவியின் கண்கள் பலரும் கண்டு வியக்கும் மலர்போல திகழ்வதால்தானே!

Saturday, October 4, 2014

திருக்குறள்- 1107,1108,1109,1110- காமத்துப்பால்




குறள்-1107

மனிதனின் இன்றியமையாத் தேவை உணவு, உடை, இருப்பிடம்.அதுவும், தன் சொந்த உழைப்பில் கட்டிய வீட்டில் இருந்து கொண்டு, உழைத்து, உண்டு வாழும் வாழ்வுக்கு இணை ஏதுமில்லை.இது சாதாரணமாக நாம் கூறுவது.ஆனால் வள்ளுவன் சொல்கிறான்..இதற்கு ஈடான சுகம் ஒன்று உள்ளதாம்..அது....

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.


அழகிய மா நிறப் பெண்ணாகிய என் மனைவியிடம் கூடிப் பெறும் சுகம், தன் சொந்த வீட்டில் இருந்து கொண்டு, தன் உழைப்பில் வந்தவற்றைத் தனக்குரியவர்களுடன் பகிர்ந்து உண்ண வரும் சுகம் போன்றது.
.

 திருக்குறள் : 1108

காதலர்க்கிடையே தழுவுதல் எப்படியிருக்க வேண்டுமாம்...அது சாதாரணமாக இருக்கக் கூடாதாம்..பின்னே...

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு

காற்றுகூட நடுவே நுழையாதவாறு அணைத்துக் கூடிப் பெறும் சுகம், காதலர்களுக்கிடையே இனிமை உடையதாக அமையுமாம்.


குறள்-1109

ஊடல் இல்லையேல் காதலில் நெருக்கத்தைக் காண முடியாது.அதுவும் ஊடலுக்குப் பின் கூடல் இருக்கிறதே அப்போது கிடைக்கும் இன்பத்தை எழுத்தில் வடிக்க இயலுமா?


ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.

ஊடுதல், பின் ஊடலை உணர்ந்து விடுதல், அத்ற்குப் பின் கூடுதல் ஆகியவை காதலித்து வாழும் நிறைவு பெற்றவர் பெற்ற பயன்களாகும்.

குறள்- 1110

கற்றனைத்து ஊறும் அறிவு..இது வள்ளுவன் வாக்கு.அதாவது நாம் படிக்கப் படிக்க ஊருணி போல அறிவு வளர்ச்சியடையுமாம்.நாம் படிக்கும் நூல்களுக்கான பலப்பல அர்த்தங்கள் புலனாகுமாம்.அதற்கு ஈடானது..

 அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.

நூல்களாலும், நமது அறிவாலும் அறிய அறிய முன் இருந்த அறியாமையை உணர்வது போல, சிவந்த அணிகளை அணிந்த இவளிடம்கூடக் கூட அவள் மீது உள்ள காதல் சுவையும் புதிது புதிதாய்த் தெரிகிறது.

Friday, October 3, 2014

திருக்குறள் - 1104,1105,1106 -காமத்துப்பால்



குறள் -1104

நெருப்பிற்கு இருக்கும் குணம்..அதை நெருங்கினால் சுடும். தூர விலகினால் சூடு தெரியாது.ஆனால்..வள்ளுவனுக்கு ஒரு நெருப்பு தெரிந்திருக்கிறது.அந்த நெருப்பு புது விதமானது.அதை விட்டு அகன்றால் சுடுமாம்.அதன் அருகே போனால் குளிருமாம்.அது என்ன அற்புத நெருப்பு..பார்ப்போமா?

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.

நீங்கினால் சுடுகின்றது, அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது, இத்தகைய புதுமையானத் தீயை இந்தப் பெண் எங்கிருந்து பெற்றாள்.

குறள் - 1105

நமக்கு விருப்பமான ஒரு பொருள்..நமக்குக் கிடத்ததும் எப்படிப்பட்ட இன்பத்தை அடைகிறோம்.அதுபோன்ற இன்பத்தை விருப்பமான பொருள் இல்லாமல் வேறொன்றும் கொடுக்குமாம்.அது என்ன...

வேட் ட பொழுதின் அவையவை
போலுமே தோட் டார் கதுப்பினாள்


நாம் விரும்பும் பொருள்கள் விரும்பியபொழுது விரும்பிய இன்பம் தருவது போல, மலரணிந்த கூந்தலை உடைய இவள் தோள்கள் இவளுடன் எப்போது இணைந்தாலும் இன்பம் தருகின்றன.

குறள் -1106

ஒரு செடி வாடிக்காணப்படுகிறது.அதற்கு சிறிது தண்ணீர் விட்டால்..அதை உறிஞ்சி மீண்டும் தளிர்த்து நிற்கிறது.ஒரு குழந்தை அழுகிறது..அதற்கு பாலைப் பருகக் கொடுத்தால் அழுகையை நிறுத்தி புத்துணர்ச்சி பெறுகிறது.ஆமா..இதெல்லாம் தெரிந்தது தானே என்கிறீர்களா..  ஆமாம்..ஆனால் வள்ளுவன் சொல்லியிருக்கும் இந்த குறள் தெரியாது..

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.

வாடிக்கிடக்கும் என் உயிர்..இம்மங்கையை அணைக்கும் போது புத்துயிர் பெறுகிறதே.இவளின் தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டதா

Wednesday, October 1, 2014

திருக்குறள் -1101,1102,1103- காமத்துப்பால்



குறள் 1101

 பார்க்க விழிகளும், செவி இன்பம் பெற செவிகளும், உணவின் சுவை அறிய நாக்கும், முகர வும், மூச்சு விடவும் மூக்கும், தீண்ட உடலும்..ஆக ஐம்புலன்கள் இன்பமும் உண்டு. ஆனால் இந்த ஐம்புலன்களும் இன்பத்தையும் ஒன்றே தருமாம்.வள்ளுவன் விளையாடுகின்றானா...அப்படி ஐம்புலன் இன்பம் தரும் ஒன்று எது  ..பார்க்கலாமா..

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களால் ஆகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த (பெண்ணிடத்தில்)இவளிடத்தில் உள்ளன.

குறல் - 1102

மனிதனுக்கு நோய் வருகிறது.மருத்துவரிடம் போகிறொம்.நோய் தீர அதற்கான மருந்தைத் தருகிறார் மருத்துவர்.ஆனால் அவளால் (எனக்கு) உண்டான காதல் நோய்க்கு மருந்து அவள்தான் என்கிறான் வள்ளுவன்.

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.


நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன, ஆனால் அணிகலன் அணிந்த இவளால் வந்த காதல் நோய்க்குகு இவளே மருந்தாக இருக்கின்றாள்.

குறள் -1103

தெய்வங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்ட உலகங்களில் திருமாலின் உலகமும் ஒன்று.அப்படிப்பட்ட அந்த சொர்க்கலோகம் எங்கே உள்ளது..நம்மால் அங்கு போக முடியுமா? இதற்கா..கவலைப் படுகிறீர்கள்..அந்த உலகில் உங்களுக்குக் கிடைக்கும் இன்பம்..இந்த பூ உலகிலேயே கிடைக்கிறதே..அது என்ன..நமக்குத் தெர்யாததை வள்ளுவன் சொல்கிறான் ...

குறள்-1103

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.

திருமாலின் உலகம், நாம் விரும்பும் மனைவியின் தோள்களில் சாய்ந்து துயிலும் துயில் போல இனிமையானது

திருக்குறள் - காமத்துப்பால் -1100



ஒரு பெண்ணின் இதயத்தில் நாம் இருக்கிறோமா? அதை எப்படி அறிவது? இதயத்தின் வாசல் விழி என்பர்.அவள் விழிகளைப் பாருங்கள்..அந்த வாசல் உங்களை வரவேற்றால்..அவள் உங்களை விரும்புகிறாள் எனப் பொருள்.பல்லாயிரம் சொற்கள் சொல்லியும் விளங்கவைக்க முடியாததை..பார்வை ஒன்றே அழகாக விளக்கிடும். வள்ளுவன் சொல்கிறான் ..படியுங்கள்


கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.

காதலரில் ஒருவர் கண்ணோடு மற்றொருவர் கண்ணும் பார்வையால் பேசிய பின்னால் பின் வாய்ச் சொற்களால் ஒரு பயனும் இல்லை.