Thursday, July 18, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 89

இழிவான காரியங்களில் ஈடுபடக்கூடாது.

எது இழிவான காரியம்?

நாம் ஏதேனும் தவறிழைத்துவிட்டு பின்னர், இப்படிப்பட்ட ஒரு காரியத்தை நாம் ஏன் செய்தோம்? என நம் மனசாட்சி கேட்கும் செயல்கள் அனைத்துமே இழிவான செயல்கள் எனலாம்.

வள்ளுவர் ஒரு படி மேலேபோய்...

நம் கண் முன்னர் நம்மை ஈன்றவள் பசியாய் இருப்பதைக் காண்பது என்பது கொடுமை.அவளது பசியைத் தீர்க்க வேண்டியது நம் முதல் கடமை.ஆனால், அப்படிப்பட்ட நேரத்திலும் அப்பசியைத் தீர்க்க இழிசெயலில் ஈடுபடக்கூடாது என்கிறார்.

இழிசெயல்களில் ஒன்று, தவறான வழிகளில் பொருள் சேர்ப்பதாகும்.அப்படி சேர்த்த பொருளை காக்க நினைப்பது, பச்சை மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீரை ஊற்றி அதை பாதுகாக்க நினைப்பது போலாகுமாம்

சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துணீர் பெய்திரீஇ யற்று (660)

தவறான வழிகளில் பொருளைச் சேர்த்து அதைக் காப்பாற்ற நினைப்பது, பச்சை மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதைப் பாதுகாக்க நினைப்பதைப் போன்றதுதான்.

No comments: