Showing posts with label திருக்குறள் இலக்கியம். Show all posts
Showing posts with label திருக்குறள் இலக்கியம். Show all posts

Tuesday, November 24, 2009

95.மருந்து

1.வாதம்,பித்தம்,சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் சொல்லும் மூன்றில் ஒன்று
கூட அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.

2.முன்னர் உண்ட உணவு செரித்த பின்னர்.. அடுத்த உணவு அருந்தினவர்களுக்கு
எந்த மருந்தும் தேவைப்படாது.

3.உண்ட உணவு செரித்ததும்,உண்ணும் உணவின் அளவையும் அறிந்து
உண்டால் நீண்டநாள் வாழலாம்.

4.உண்ட உணவு செரித்துவிட்டதா என அறிந்தபின்னர்..
பசி எடுத்த பிறகு உணவு அருந்த வேண்டும்.

5.உடலுக்கு வேண்டிய உணவைக்கூட ..அதிகமாகும் போது...ம்றுத்து அளவுடன் சாப்பிட்டால்..
உயிர் வாழ்வதில் தொல்லை இருக்காது.

6.அளவுடன் உண்பவர் நலமாகவும் ..அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதும் வாழ்க்கை.

7.பசியின் அளவு..ஆராயாமல் அதிகமாக சாப்பிட நோய்களும் அதிகமாக வரும்.

8.நோய் என்ன? வரக்காரணம் என்ன? தீர்க்க வழி என்ன என ஆராய்ந்து சிகிச்சை
மேற்கொள்ளவேண்டும்.

9.மருத்துவர் என்பவர்..நோய் என்னவென்றும்,அதற்கான காரணத்தையும்,தணிக்கும் வழியையும்
ஆராய்ந்து ..நோயாளியின் உடலுக்கு பொருந்த சிகிச்சை மேற்கொள்ளுபவர்.

10.மருத்துவமுறை என்பது..நோயாளி,மருத்துவன்,மருந்து,அருகிலிருந்து துணை செய்பவர்
என நான்கு வகையாக பாகுபாடு உடையது.

Sunday, August 30, 2009

93.கள்ளுண்ணாமை

1.மதுப்பழக்கம் கொண்டவர் தமது புகழை இழப்பதோடு மற்றவர்களாலும்
அஞ்சப்படாதவர்களாக ஆவார்கள்.

2.சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர்கள் தான் மது அருந்துவர்.

3.மது அருந்தி மயங்கிக் கிடப்பவனை..பெற்றதாயே மன்னிக்கமாட்டாள் என்னும்போது..
ஏனையொர் எப்படிச் சகித்துக் கொள்வார்கள்?.

4.மது மயக்கமெனும் பெருங்குற்றத்திற்கு ஆளாகி இருப்போன் முன்
நாணம் எனப்படும் பண்பு நிற்காமல் ஓடிவிடும்.

5.தன்னை மறந்து மயங்கி இருக்க..விலைகொடுத்து கள்ளை வாங்குதல் என்பது மூடத்தனமாகும்.

6.இறப்பு என்பது நீண்ட உறக்கம் என்பது போல..கள்ளுண்பவர்களும் அறிவுமயங்குவதால்
அவர்கள் மதுவுக்கு பதில் நஞ்சு உண்பவர்கள் என்று கூறலாம்.

7.மறைந்திருந்து மது அருந்தினாலும்..அவர்கள் கண்கள் மயக்கத்தைக் காட்டிக்
கொடுப்பதால் ஊரார் அவர்களை எள்ளி நகையாடுவர்.

8.மது அருந்தமாட்டேன் என ஒருவன் பொய் சொல்ல முடியாது..ஏனெனில் மது
மயக்கத்தில் உள்ளபோது உண்மை வெளிப்பட்டுவிடும்.

9.குடிபோதைக்கு ஆளாளவனை திருத்த முயல்வது என்பது..நீரில் மூழ்கிய ஒருவனை
தீப்பந்தம் எடுத்துச் சென்று தேடுவது போல ஆகும்.

10.ஒருவன் மது அருந்தாதபோது.. மது அருந்தியவனின் நிலையை பார்த்தப் பின்னாவது
..திருந்தமாட்டானா?

Wednesday, May 13, 2009

91.பெண் வழிச் சேறல்

1.கடமையுடன் செயல் புரிபவர்கள்..இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதக்கூடாது.

2.கடமை தவறி..மனைவியின் பின்னால்..சுற்றித் திரிபவன் நிலை வெட்கப்படும் செயலாகும்.

3.மனைவியின் துர்க்குணத்தை திருத்தமுடியாது பணியும் கணவன்.. நல்லோர் முன் நாணித் தலைக்குனிவான்.

4.மனைவிக்கு அஞ்சி நடப்பவனின் செயலாற்றல் சிறப்பாக அமையாது.

5.நல்லவர்க்கு தீங்கு செய்ய அஞ்சுபவன்..தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்.

6.மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவர்..தேவாம்சம் பொருந்தியவர்கள் போல சிறப்பான நிலையில் வாழ்ந்தாலும்
பெருமை இல்லாதவர் ஆவர்.

7.மனைவியின் எல்லாக் கட்டளைக்கும் கீழ்படிந்து நடப்பவனை விட மான உணர்வுள்ள பெண்மை சிறந்ததாகும்.

8.மனைவியின் விருப்பப்படி நடப்பவர் ..நண்பர்கள் பற்றி,நற்பணிகள் பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டார்கள்.

9.ஆணவப் பெண்கள் இடும் கட்டளைக்கு கீழ்ப்படிபவனிடம் ,சிறந்த அறநெறிச் செயல்களோ ..சிறந்த
அறிவாற்றலோ இருக்காது.

10.சிந்திக்கும் திறன்,உறுதியான மனம் கொண்டவர்கள்..பெண்களிடமே பழியாகக் கிடக்க மாட்டார்கள்

Monday, April 6, 2009

88.பகைத்திறம் தெரிதல்

1.பகை என்பது பண்புக்கு மாறுபட்டதாதலால்..விளையாட்டாகக்கூட பகை கொள்ள்க்கூடாது.

2.படை வீரர்களுடன்கூட பகை கொள்ளலாம்.ஆனால் செயலாற்றல் மிக்க அறிஞர்களின் பகை கூடாது.

3.தனியாக இருந்து பகையை தேடிக் கொள்பவன்..புத்தி பேதலித்தவனைவிட முட்டாளாகக் கருதப்படுவான்.

4.பகையையும் நட்பாகக் கருதி பழகும் பெருந்தன்மையை உலகம் போற்றும்.

5.தனக்குப் பகையோ..இரு பிரிவு..துணையோ இல்லை..அப்படிப்பட்ட சமயத்தில் அந்த பகைவரில் ஒருவனை
இனிய துணையாக்கிக் கொள்வதே அறிவுடைமை.

6.பகைவனைப் பற்றி ஆராய்ந்து அறிந்திருந்தாலும்..இல்லாவிட்டாலும்..கேடு ஏற்படும் காலத்தில் அவனை அதிகம்
நெருங்காமலும்..நட்புக்காட்டியும் சும்மா இருக்க வெண்டும்.

7.நம் துன்பத்தை, அறியாத நண்பருக்கு சொல்லக்கூடாது.அதுபோல நம் பலவீனத்தையும் பகைவரிடம்
வெளிப்படுத்தக்கூடாது.

8.செய்யும் வகையை உணர்ந்து,தன்னையும் வலிமைப் படுத்திக் கொண்டு,தற்காப்பும் தேடிக்கொண்டால்
பகைவரின் ஆணவம் அடங்கிவிடும்.

9.முள் மரத்தை செடியிலேயே வெட்ட வேண்டும்..பகையையும் அது முற்றும் முன்னே வீழ்த்திட வேண்டும்.

10.பகைவரின் ஆணவத்தைக் குலைக்க முடியாதவர்கள்..மூச்சு விட்டாலும் ..உயிரோடு இருப்பதாக
சொல்ல முடியாது.

Thursday, April 2, 2009

87.பகைமாட்சி

1.மெலியோரை விட்டுவிட்டு..வலியோரை எதிர்த்து போராட நினைப்பதே பகைமாட்சி.

2.அன்பற்றவராய்..துணை யாரும் இல்லாதவராய்.தானும் வலிமையற்றவராயிருப்பவர்
பகையை எப்படி வெல்லமுடியும்?

3.பயப்படுபவனாய்,அறிவு இல்லாதவனாய்,பண்பு இல்லாதவனாய்,ஈகைக்குணம் இல்லாதவனாய்
இருப்பவனை வெல்லுதல் எளிது.

4.சினத்தையும்,மனத்தையும் கட்டுப்படுத்தாதவனை எவரும்,எப்போதும்,எங்கும் வெல்லலாம்.

5.நல்வழி நாடாமல்,பொருத்தமானவற்றைச் செய்யாமல்,பழிக்கு அஞ்சாமல்,பண்பும் இல்லாமல்
இருந்தால் எளிதில் வெல்லப்படுவான்.

6.யோசிக்காத சினம் உடையவனையும்,பேராசைக் கொண்டவனையும் பகையாக ஏற்று எதிர்கொள்ளலாம்.

7.தன்னுடன் இருந்துக்கொண்டு,தனக்குப் பொருந்தாத காரியங்களைச் செய்து கொண்டிருப்பவனை
பொருள் கொடுத்தாவது பகைவனாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

8.குணம் இல்லாதவன்,குற்றம் பல செய்தவன் ஆகியவர்களுக்கு துணை யாரும் இருக்கமாட்டார்கள்.
அதனால், அவனை பகைவர்கள் எளிதில் வீழ்த்துவர்.

9.அறிவற்ற கோழைகள், எதற்கும் பயப்படும் இயல்புடையோர் ஆகியோரின் பகைவர்கள் எளிதில் வெற்றிப் பெறுவர்.

10.கல்வி கற்காதவர்களைப் பகைத்துக் கொள்ளும் எளிய செயலைச் செய்ய முடியாதவனிடம் என்றும் புகழ்
வந்து சேராது.

Thursday, March 26, 2009

86.இகல்

1.மக்களுடன் ஒன்று சேர்ந்து வாழமுடியாத மனமாறுபாடு தீய பண்பாகும்.

2.ஒருவன் வேற்றுமை கருதி வெறுப்பான செயல்களில் ஈடுபட்டால் மாறுபாடு காரணமாக
அவனுக்கு துன்பம் தரும் எதையும் செய்யாதிருக்க வேண்டும்.

3.மனமாறுபாடு என்னும் நோயை..தங்கள் மனத்தை விட்டு அகற்றினால் நீடித்த புகழ் உண்டாகும்.

4.துன்பத்துள் பெரும் துன்பம் பகையுணர்வு..அதை அகற்றினால் இன்பத்திலேயே பெறும் இன்பமாகும்.

5.மனதில் மாறுபாடு உருவானால் அதற்கு இடம் தராது..நடக்கக்கூடிய ஆற்றலுள்ளவர்களை வெல்லுதல் முடியாது.

6.மாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி எளிது என எண்ணுபவர் வாழ்வு..விரைவில் தடம் புரண்டு கெட்டொழியும்.

7.பகை உண்ர்வுள்ள தீய அறிவை உடையவர் வெற்றிக்கு வழிவகுக்கும் உண்மைப் பொருளை அறியமாட்டார்கள்.

8.மனதில் உண்டாகும் மாறுபாட்டை நீக்கிக்கொண்டால்.. நன்மையும்..இல்லையேல் தீமையும் விளையும்.

9.தனக்கு நன்மை வரும் போது மாறுபாட்டை நினைக்கமாட்டான்.ஆனால் தனக்குத்தானே கேடு
தருவித்துக் கொள்ளும்போது அதை எதிர்ப்பான்.

10.மாறுபாடு கொண்டு பகை உணர்வைக் காட்டுவோரை துன்பங்கள் தொடரும்.நட்புணர்வோடு
செயல்படுவோர்க்கு நற்பயன் விளையும்

Saturday, March 21, 2009

85.புல்லறிவாண்மை

1.அறிவுப் பஞ்சமே கொடுமையான பஞ்சமாகும்.மற்ற பஞ்சங்கள் அவ்வளவாக உலகால்
பொருட்படுத்தப்படுவது இல்லை.
2.அறிவற்றவன் மகிழ்ச்சியுடன் ஒரு பொருளை மற்றவனுக்குக் கொடுத்தால்...
அது அப்பொருளை பெறுகிறவன் பெற்றபேறு தான்.

3.பகைவரால் கூட வழங்கமுடியா வேதனையை..அறிவற்றவர்கள்
தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வார்கள்.

4.ஒருவன்...தன்னைத்தானே அறிவுடையோன் என எண்ணிக் கொள்ளும் ஆணவமே..
அறியாமை எனப்படும்..

5.அறிவற்றவர்..தான் படிக்காத நூல்களையும் படித்ததுபோல காட்டிக் கொண்டால்..அவர்களுக்கு தெரிந்த
விஷயங்கள் பற்றியும் சந்தேகம் ஏற்பட்டுவிடும்.

6.தனது குற்றத்தை அறிந்து நீக்காதவன் உடலை மறைக்க மட்டும் உடை
அணிவது மடைமையாகும்.

7.நல்வழிக்கான அறிவுரைகளை ஏற்று...அதன்படி நடக்காத அறிவற்றவர்கள் தனக்குத்தானே
பெருந்தீங்கு செய்க் கொள்வர்.

8.சொந்தபுத்தியும் இன்றி..சொல்புத்தியும் கேட்காதவர்கள் வாழ்நாள் முழுவதும்
அந்நோயினால் துன்பமடைவர்.

9.அறிவு இல்லாதவன் தான் அறிந்ததை வைத்து அறிவுடையவனாகக் காட்டிக்கொள்வான்
ஆனால் அவனுக்கு அறிவுரை கூறும் அறிவுள்ளவன் அறிவற்ற நிலைக்கு தன்னையே தள்ளிக்
கொள்ள நேரிடும்.

10.உலகத்தார் உண்டு என்று சொல்வதை ..இல்லை என்று கூறுகிறவன்...ஒரு பேயாக
கருதி விலக்கப்படுவான்.

Tuesday, March 17, 2009

84.பேதைமை

1.நமக்கு கேடி விளைவிப்பது எது..நன்மை தருவது எது..என அறியாது நன்மை விடுத்து கேட்டை நாடுவதே
பேதைமை எனப்படும்.

2.நம்மால் இயலாத செயல்களை செய்ய விரும்புவது பேதைமைகளில் மிகப்பெரிய பேதைமை ஆகும்.

3.வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும்,தேட வேண்டியதை தேடாமலும்,அன்பு காட்ட வேண்டியவரிடம்
அன்பு காட்டாமலும்,நன்மை எதையும் விரும்பாமையும் பேதைமையின் இயல்பு.

4.நூல்களை படித்து உணர்ந்து,அவற்றை பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் செய்துவிட்டு தாங்கள் மட்டும் அப்படி
நடக்காவிட்டால் அவர்கள் பேதைகள் ஆவார்கள்.

5.தன்னிச்சையாக செயல்படும் ஒரு பேதை..ஏழேழு பிறப்பிற்கும் துன்பமெனும் சேற்றில் அழுந்தி கிடக்க நேரிடும்.

6.ஒழுக்க நெறி இல்லாத ஒரு மூடன்..ஒரு செயலை மேற்கொண்டால்..அதைத் தொடரவும் முடியாமல்..அச்செயலும்
கெட்டு தானும் தண்டனை அடைவான்.

7.அறிவில்லாதவனிடம் சேரும் பெரும் செல்வம் அயலார் சுருட்டிக் கொள்ள பயன்படுமேயன்றி..பாசமுள்ள
உறவினர்களுக்கு பயன்படாது.

8.முட்டாளின் கையில் பொருள் கிடைத்து விட்டால்..அவன் நிலை பித்து பிடித்தவன் கள்ளையும் குடித்து
மயங்கும் கதை ஆகிவிடும்.

9.அறிவற்றவர்களுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது..ஏனெனில் அவர்களிடமிருந்து பிரியும் போது
வருத்தம் ஏற்படாது.

10.அறிஞர்கள் கூட்டத்தில் ஒரு முட்டாள் நுழைவது என்பது அசுத்தத்தை மிதித்த காலை கழுவாமல் படுக்கையில்
வைப்பது போன்றது.

Tuesday, March 10, 2009

83.கூடா நட்பு

1.மனதார இல்லாமல் வெளியே நட்பு பாராட்டுவான் நட்பு..இரும்பைத் துண்டாக்கத் தாங்கு பலகை போன்ற
கல்லுக்கு ஒப்பாகும்.

2.உற்றார் போல இருந்து அப்படி இல்லாதவரின் நட்பு..விலை மகளிர் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக
வேறுபட்டு நிற்கும்.

3.பல நூல்களை கற்றுத் தேர்ந்த போதிலும்..பகை உணர்வு படைத்தோர் மனம் திருந்துவது நடக்காத காரியம்.

4.சிரித்துப் பேசி..சீரழிக்க நினைப்பவரின் நட்புக்கு, அஞ்சி ஒதுங்கவேண்டும்.

5.மனம் வேறு..செயல் வேறாக இருப்பவர்களின் நட்புக்கு அஞ்சி ஒதுங்க வேண்டும்.

6.நண்பர் போல பகைவர் பழகினாலும்..அவர் சொல்லும் சொற்களில் அவர்களது உண்மைத் தன்மை வெளிப்படும்.

7.பகைவரின் சொல் வணக்கம் என்பது..வளையும் வில் போல தீங்கு விளைவிக்கூடியது.

8.பகைவர் வணங்கும் கையினுள்ளும் கொலைக்கருவி இருக்கும்.அவர் கண்ணீர் விட்டாலும் அது போலிக்கண்ணீரே

9.வெளியே நண்பர் போல மகிழ்ந்து அகத்தில் இகழ்கின்றவரின்..நட்பை நலிவடையச்செய்ய நாமும் அதே முறையை
கைப்பிடிக்க வேண்டும்.

10.பகைவருடன் பழகும் காலம் வரும்போது..முகத்தளவில் நட்புக் கொண்டு வாய்ப்பு வரும் போது அந்த நட்பை
விட்டுவிட வேண்டும்.

Wednesday, February 25, 2009

81.பழைமை

1.பழகிய நண்பர்கள் ...உறவை அழியாமல் பாதுகாப்பதே பழைமை என்பதாகும்.

2.பழைய நண்பர்களின் உரிமையைப் பாராட்டும் கடமைதான் சான்றோர்களின் உண்மையான நட்பாகும்.

3.பழைய நண்பர்கள் உரிமை எடுத்துக்கொண்டு செய்யும் காரியங்கள்.. நாமே
செய்ததுபோல எண்ணாவிடில்.. நட்பு பயனற்றுப்போகும்.

4.பழைய நட்பின் உரிமையால்... நண்பர்கள் கேளாமலேயே ஒரு செயல் புரிந்தாலும்..
நல்ல நண்பர் எனப்படுபவர் அதை ஏற்றுக் கொள்வர்.

5.வருந்தக்கூடிய செயலை நண்பர் செய்தால் அதற்குக் காரணம் அறியாமை மட்டுமல்ல..
மிகுந்த உரிமையே என்று எண்ண வேண்டும்.

6.நீண்டநாள் நண்பகள் தமக்கு கேடு செய்வதாக இருந்தாலும் நட்பின் இலக்கணம்
தெரிந்தவர்கள் அந்த நட்பைத் துறக்க மாட்டார்கள்.

7.பழைய நண்பர்கள் அன்புடன் அழிவு தரும் செயல்களைச் செய்தாலும்
நட்பு கொண்டவர்கள் அன்பு நீங்காமலிருப்பர்.

8.பழகிய நண்பர் செய்த தவறுப்பற்றிப் பிறர் கூறினாலும் கேளாமலிருப்பவர்க்கு..
அந்நண்பர் தவறு செய்தால் அந்நட்பால் என்ன பயன்.

9.பழைய நண்பரின் நட்புறவைக் கைவிடாமல் இருப்பவரை உலகு போற்றும்.

10.பழகிய நண்பர்கள் தவறு செய்தாலும் ..அவர்களிடம் தமக்குள்ள அன்பை
நீக்கிக் கொள்ளாதவரை பகைவரும் விரும்புவர்.

Wednesday, February 18, 2009

79.நட்பு

1.நட்பு கொள்வது போல அருமையானது இல்லை.நம் பாதுகாப்புக்கும்
அது ஏற்ற செயலாகும்.

2.அறிவுடையார் நட்பு வளர்பிறை போல வளர்ந்து முழு நிலவாகும்.
அறிவற்றவர் நட்பு தேய்பிறையாய் குறைந்து மறையும்.

3.படிக்கப்படிக்க நூல் இன்பம் தரும்...பழகப்பழக பண்புடையார்
நட்பு இன்பம் தரும்.

4.நட்பு என்பது சிரித்து மகிழ மட்டும் அல்ல..நண்பர்கள் வழி மாறும் போது
இடித்து திருத்துவதற்கும் ஆகும்.

5.நட்புக்கொள்ள ஒருவருடன் தொடர்பும்..பழக்கமும் இருக்க வேண்டும் என்பதல்ல..
அவருடைய ஒத்த மன உணர்ச்சியே போதுமானது.

6.முகமலர்ச்சி மட்டும் நட்பு அல்ல..நெஞ்ச மலர்ச்சியும் உண்மையான நட்புக்கு தேவை.

7.அழிவைத் தரும் தீமையை நீக்கி..நல்ல வழியில் நடக்கச்செய்து அழிவு காலத்தில் உடனிருந்து
துன்பப்படுவதே நட்பாகும்.

8.அணிந்திருக்கும் உடை நெகிழும்போது..கைகள் உடனடி செயல்பட்டு சரி செய்வதுபோல
நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கிக் களைவதே சிறப்பு.

9.மன வேறுபாடு கொள்ளாது தன்னால் முடியும் போதெல்லாம் உதவி செய்து நண்பனை
தாங்குவதே நட்பின் சிறப்பாகும்.

10.நண்பர்கள் ஒருவருக்கொருவர்..இவர் இப்படி..நான் அப்படி என செயற்கையாக புகழும்போது
நட்பின் பெருமை குறையும்.

Monday, February 16, 2009

78.படைச்செருக்கு

1.பகைவர்களே..என் தலைவனை எதிர்க்காதீர்கள்..அவனை எதிர்த்து நின்று மடிந்தவர் பலர்.

2.வலிவற்ற முயலை குறிவைத்து வீழ்த்துவதைக் காட்டிலும்..வலிவான யானையைக் குறிவைத்து
அது தப்பினாலும் அது சிறப்புடையதாகும்.

3.பகைவனை எதிர்க்கும் வீரமே மிக்க ஆண்மை.துன்பம் வரும்போது பகைவனுக்கும் உதவுதல்
ஆண்மையின் உச்சமாகும்.

4.வீரன் என்பவன் கையில் உள்ள வேலை ஒரு யானையின் மேல் எறிந்து விட்டு போரைத் தொடர
தன் மார்பில் பாய்ந்த வேலை கண்டு மகிழ்பவன் ஆவான்.

5.பகைவர் வீசும் வேல் தன் மீது பாயும் போது விழிகளை இமைத்தல் கூட வீரர்க்கு அழகல்ல.

6.வீரன் தன் வாழ்நாட்களை கணக்கிட்டு ..விழுப்புண் படாத நாட்களெல்லாம்
வீணான நாட்கள் என்று எண்ணுவான்.

7.புகழை விரும்பி உயிரைப்பற்றி விரும்பாத வீரரின்..காலில் கட்டப்படும் வீரக்கழல் கூட
தனிப்பெருமை பெற்றதாகும்.

8.தலைவன் சினந்தாலும் போர்வந்தால் உயிரை எண்ணாமல் போர் செய்யும் வீரர்
சிறப்பு குன்றாதவன் ஆவான்.

9.தான் சபதம் செய்தபடி போர்களத்தில் சாக வல்லவனை யாரும் இழிவாக பேசமுடியாது.

10.தன்னைக் காக்கும் தலைவன் கண்களில் நீர் வருமாறு வீரமரணம் அடையும்
சந்தர்ப்பத்தை யாசித்தாவது பெற்றுக்கொள்ளுதல் பெருமை ஆகும்.

Saturday, February 14, 2009

77.படைமாட்சி

1.எல்லா வகைகளிலும் நிறைந்ததாய்..இடையூறுகளுக்கு அஞ்சாததாய்..போரிடக்கூடியதாய் உள்ள படை
அரசுக்கு தலையான செல்வமாகும்.

2.போரில் அழிவு வந்தாலும்..இடையூறுகளுக்கு அஞ்சாமை..பழம் பெருமைக்கொண்ட படைக்கின்றி வேறு
எந்தப் படைக்கும் இருக்க முடியாது.

3.எலிகள் கூடி பகையை கக்கினாலும்..நாகத்தின் மூச்சொலிக்கி முன்னால் நிற்க முடியாது.அதுபோல வீரன்
வெகுண்டு எழுந்தால் வீணர்கள் விழுந்து விடுவார்கள்.

4.அழிவு இல்லாததாய்,வஞ்சனைக்கு இரையாகாததாய் ,பரம்பரை பயமற்ற உறுதி உடையதே உண்மையான
படையாகும்.

5.எமனே கோபமடைந்து எதிர்த்து வந்தாலும் அஞ்சாமல் எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதே படை ஆகும்.

6.வீரம்,மானம்,சிறந்த வழி நடத்தல்,தலைவனின் நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படையைப்
பாதுகாக்கும் பண்புகளாகும்.

7.எதிர்த்து வரும் பகைவரின் போரைத் தாங்கி, வெல்லும் ஆற்றல் அறிந்திருப்பின் அதுவே வெற்றிக்கு
செல்லாக்கூடிய சிறந்த படையாகும்.

8.போர் புரியும் வீரம்,எதிர்ப்பைத் தாங்கும் ஆற்றல் இல்லை என்றாலும் படையின் அணி வகுப்புத் தோற்றம்
சிறப்புடையதாக அமைய வேண்டும்.

9.சிறுத்து விடாமல்,தலைவனை வெறுக்காமல்,பயன்படா நிலை இல்லாமல்..இருக்கும் படையே வெற்றி பெறும்.

10.நீண்ட நாள் நிலைத்திருக்கும் வீரர் பலரை கொண்டதாக இருந்தாலும்..தலைமை தாங்க சரியான தலைவர்
இல்லை எனில் அப்படை நிலைத்து நிற்காது.

Tuesday, February 3, 2009

72.அவை அறிதல்

1.ஒவ்வொரு சொல்லின் தன்மையை உணர்ந்த அறிஞர்கள், அவையினரின் தன்மையும் உணர்ந்து..அதற்கேற்ப
ஆராய்ந்து பேசுவார்கள்.

2.சொற்களின் வழிமுறையறிந்தவர் அவையினரின் நேரத்தையும்,நிலையையும் உணர்ந்து சொல்ல வேண்டும்.

3.அவையின் தன்மையை அறியாது..சொற்களை பயன்படுத்துவோர்களுக்கு சொற்களின் வகையும் பேசும் திறமையும்
கிடையாது.
4.அறிவாளிகளின் முன் அறிவாளியாகவும்..அறிவற்றவர் முன் அறிவில்லாதவர் போலவும் இருக்க வேண்டும்.

5.அறிவாளிகள் மிகுந்த இடத்தில் பேசாத அடக்கம் ஒருவனுக்கு எல்லா நன்மைகளையும் தரும்.

6.அறிவுடையோர் முன் ஆற்றும் உரையில் குற்றம் ஏற்படின் அது ஒழுக்க நெறியிலிருந்து தளர்ந்து வீழ்ந்து விட்டதற்கு
சமமாகும்.
7.குற்றமற்ற சொற்களை தேர்ந்தெடுத்து உரை நிகழ்த்துபவரிடம் அவர் கற்ற கல்வியின் பெருமை விளங்கும்.

8.உணரும் தன்மை உள்ளவர் முன் கற்றவர் பேசுவதென்பது..தானே வளரும் பயிரில் நீர் ஊற்றுவதற்கு சமமாகும்.

9.நல்ல அறிஞர்கள் சூழ்ந்த அவையில்..மனதில் பதியுமாறு பேசுபவர்..சொல்வன்மை உள்ளவர் ஆவார்..அறிவற்றோர்
அவையில் பேசாதிருப்பதே சிறந்தது.

10.அறிவுள்ளவர்கள்..அறிவில்லாதவர் நிறைந்த கூட்டத்தில் பேசுவது தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய
அமிழ்தம் போல வீணாகிவிடும்.

Monday, January 19, 2009

65.சொல்வன்மை

1.நாவன்மை செல்வம் ஆகும்..அது சிறப்புடைய சிறந்த செல்வமாகும்.

2.ஆக்கமும்..அழிவும் சொல்லும் சொல்லால் வருவதால் ஒருவன் தன்
சொல்லில் தவறு நேராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

3.கேட்பவரை கவரும் தன்மையும்..கேட்காதவரைக்கூட கேட்க வைபபதுமே
சொல்வன்மை ஆகும்.

4.சொல்லும் காரணத்தை அறிந்து சொல்லும் சொல்வன்மையைவிட
சிறந்த அறமும்..பொருளும் இல்லை.

5.ஒரு சொல்லை வெல்லும் மற்றொரு சொல் இல்லை என்பதை உணர்ந்த பின்னே
அச்சொல்லை பயன்படுத்தவேண்டும்.

6.பிறர் விரும்பும் கருத்துக்களைச் சொல்லி..பிறர் சொல்லும் சொல்லின்
பயனை ஆராய்ந்து ஏற்றுக்கொள்வது அறிவுடையார் தொழிலாகும்.

7.சொல்லுவதை நன்கு சொல்லி ..சோர்வற்றவனாய்,அஞ்சாதவனாய்
உள்ளவனை யாராலும் வெல்லமுடியாது.

8.சொற்களை கோர்த்து...இனிமையாக சொல்ல வல்லவரை உலகத்தார் கேட்டு
அதன்படி நடப்பர்.

9.குற்றமற்ற சொற்களை சொல்லத் தெரியாதவர்தான்..பல சொற்களை
திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருப்பர்.

10.தாம் கற்றதை பிறர்க்கு சரியாக விளக்கத் தெரியாதவர்கள்...
கொத்தாக மலர்ந்திருந்தாலும்..மணமில்லா மலரைப் போன்றவர்கள்.

Saturday, January 17, 2009

64.அமைச்சு

1.உரிய கருவி,ஏற்ற காலம்,செய்யும் வகை,செய்யப்படும் பணி ஆகியவற்றை ஆய்ந்து
அறிந்து செய்ய வல்லவனே அமைச்சன்.

2.அஞ்சாமை,குடிபிறப்பு,காக்கும் திறன்,கற்றறிந்த அறிவு,முயற்சி ஆகிய ஐந்தும்
கொண்டவனே அமைச்சன்.

3.பகைவனின் துணையைப் பிரித்தல்,தம்மிடம் உள்ளவரைக் காத்தல்,பிரிந்தவரை
மீண்டும் சேர்த்துக் கொள்ளுதல் ஆகியவற்றில் வல்லவனே அமைச்சன்.

4.ஒரு செயலை தேர்ந்தெடுத்தலும்,அதற்கான வழி அறிந்து ஈடுபடுதலும் துணிவான
கருத்துக்களை சொல்லுதலுமே அமைச்சனின் சிறப்பாகும்.

5.அறத்தை அறிந்தவனாய்,சொல்லாற்றல் கொண்டவனாய்,செயல் திறன் படைத்தவனாய்
இருப்பவனே ஆலோசனை சொல்ல தகுதி உடையவன்.

6.இயற்கையான அறிவு,நூலறிவு இரண்டையும் பெற்றவர் முன் எந்த சூழ்ச்சியும் நிற்காது.

7.நூலறிவைப் பெற்றிருந்தாலும்..உலக நடைமுறைகளை அறிந்து அதற்கேற்ப செயல்களை
நிறைவேற்ற வேண்டும்.

8.சொந்த அறிவும் இன்றி,சொல்வதையும் கேட்காதவர்களுக்கு அமைச்சன் தான் நல்ல
யோசனைகளைக் கூற கடைமைப்பட்டவன்.

9.தவறான வழியைக் கூறும் அமைச்சனைவிட..எழுபது கோடி பகைவர்கள் எவ்வளவோ மேலாகும்.

10.முறையாக எடுக்கப்பட்ட முடிவுகளையும்..செயல் படுத்த திறனற்றோர் எதையும் முழுமையாக
செய்யார்.

Friday, January 16, 2009

63.இடுக்கண் அழியாமை

1.துன்பம் வரும்போது கலங்கக்கூடாது.அதை எதிர்த்து
வெல்ல வேண்டும்.

2.வெள்ளம் போன்ற அளவற்ற துன்பமும்...அதை நீக்கும் வழியை
அறிவுடையவர்கள் நினைக்க விலகி ஓடும்.

3.துன்பம் வரும்போது கலங்காமல்..அத்துன்பத்திற்கே துன்பத்தை உண்டாக்கி
அதை வெல்ல வேண்டும்.

4.கரடுமுரடான பாதையில் வண்டி இழுக்கும் எருது போல விடாமுயற்சியுடன்
செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்படும்.

5.துன்பங்கள் கண்டு கலங்காதவர்களைக் கண்டு அத்துன்பமே
துன்பபட்டு அழியும்.

6.செல்வம் வரும்போது அதன்மீது பற்றுக்கொள்ளாதவர்கள்தான் ..
வறுமை வந்தபோது துவண்டுவிட மாட்டார்கள்.

7.உடலுக்கும் உயிர்க்கும் துன்பம் இயல்பானதால்..துன்பம் வரும்போது
அதை துன்பமாகக் கருதக்கூடாது.

8.இன்பம் தேடி அலையாது ..துன்பம் இயற்கையானதுதான் என
எண்ணுபவன் ..துவண்டு போவதில்லை.

9.இன்பம் வரும்போது ஆட்டம் போடாமலும்...துன்பம் வரும்போது வாடாமலும்
இரண்டையும் ஒன்று போல் கருதவேண்டும்.

10.துன்பத்தையே இன்பமாகக் கருதிக் கொண்டால்...அவர்களை
பகைவர்களும் பாராட்டுவார்கள்.

Thursday, January 15, 2009

62.ஆள்வினை உடைமை

1.எந்த ஒரு காரியத்தையும் நம்மால் முடியும் என்று நம்பிக்கையுடன் முயன்றால்
அதுவே பெரிய வலிமை ஆகும்.

2.எந்த செயலானாலும் ..அரைக்கிணறு தாண்டாமல் முழுவதுமாக செய்து முடிக்க வேண்டும்.

3.பிறர்க்கு உதவி செய்தல்....என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்ற
பண்பில் நிலைத்து இருக்கின்றது.

4.ஊக்கமில்லாதவரை நம் உதவியாளராக வைப்பது என்பது..ஒரு கோழை வாள்
வீச்சில் ஈடுபடுவதை போன்றதாகும்.

5.தன் இன்பத்தை விரும்பாதவனே..தான் ஏற்ற செயலை முடிக்க நினைப்பவனே..
தன் சுற்றத்தாரை தாங்குகின்ற தூணாக ஆவான்.

6.முயற்சி ஒருவனது செல்வத்தை பெருக்கும்..முயற்சி இன்மை அவனை வறுமையில் ஆழ்த்தும்.

7.ஒருவனின் சோம்பலில் மூதேவியும்,சோம்பலற்றவன் முயற்சியில் திருமகளும் வாழ்கின்றனர்.

8.ஊழ்வினை என்பதுடன் அறிய வேண்டியதை அறிந்து முயற்சி செய்யாமைதான் பெரும்பழியாகும்.

9.ஊழ்வினையால் ஒன்றை செய்ய முடியாமல் போனாலும்..ஒருவனின் முயற்சியானது
அந்த உழைப்பிற்கான வெற்றியைக் கொடுக்கும்.

10.ஊழ்வினையை வெல்ல முடியாது என்று சொல்வதை விட,முயற்சியை மேற்கொண்டால்
அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்யலாம்.

Monday, January 12, 2009

61.மடி இன்மை

1.பிறந்த குடி மங்காத விளக்காயிருந்தாலும்...ஒருவனது சோம்பல்
அதை மங்க வைத்துவிடும்.

2.பிறந்த குடி செழிக்க...சோம்பலை ஒழித்து...ஊக்கத்துடன்
முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

3.அழிக்கும் இயல்பான சோம்பல் கொண்டவனின் பிறந்த குடி
அவனுக்கு முன் அழிந்துவிடும்.

4.சோம்பலில் உழன்று..சிறந்த முயற்சி இல்லாதவர்கள் குடி
தனிப் பெருமை இழந்து...குற்றத்தை பெருக்கும்.

5.காலம் தாழ்த்துதல்,மறதி,சோம்பல்.அளவுக்கு மீறிய தூக்கம்
இந்நான்கும் கெடுகின்ற ஒருவர் விரும்பி ஏறும் தோணிகளாகும்.

6.நல்லவர்கள் உறவு தானே வந்து சேர்ந்தாலும் ..சோம்பல் உடையவர்
சிறந்த பயனை அடைய முடியாது.

7.முயற்சியின்றி சோம்பேறியாய் வாழ்பவர்கள் அனைவரின் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்.

8.நல்ல குடியில் பிறந்தவனிடம் சோம்பல் இருந்தால் அதுவே அவனைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்.

9.சோம்பலை அகற்றிவிட்டால் ..அவனது குடிப்பெருமையும்,ஆண்மையும்
தானே வந்து சேரும்.

10.சோம்பல் இல்லா அரசன் உலகம் முழுவதையும் ஒரு சேர அடைவான்

Thursday, January 8, 2009

59.ஒற்றாடல்

1.ஒற்றரும்,நீதிநூலும் அரசனின் இரண்டு கண்களாக அமையும்.

2.எல்லோரிடத்திலும்,நிகழும் எல்லாவற்றையும் ஒற்றர் மூலம் விரைந்து அறிதல் அரசனின் தொழிலாகும்.

3.நாட்டு நிகழ்ச்சிகளை ஒற்றரால் அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்து நடக்காத அரசு தழைத்திடமுடியாது.

4.ஒற்று வேலை பார்ப்பவர்கள் வேண்டியவர்,வேண்டாதவர்,சுற்றத்தார் என்று எல்லாம் பாராது பணி செய்தலே
நேர்மைக்கு அடையாளம்.
5.சந்தேகப்படாத உருவத்தோடு,பார்ப்போர் கண் பார்வைக்கும் அஞ்சாமல்,என்ன நேரிடினும் மனத்தில் உள்ளதை
சொல்லாதவரே சிறந்த ஒற்றர்கள் ஆவர்.
6.முற்றும் தொடர்பில்லாதவராய் இருந்துக்கொண்டு..செல்ல முடியாத இடங்களில் சென்று ஆராய்ந்து..துன்பங்களை
தாங்கிக்கொண்டு தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாதவரே ஒற்றர் ஆவார்.
7.மற்றவர்கள் பற்றிய செய்திகளையும் அவர்களுடன் இருப்பவர் மூலம் கேட்டுத் தெரிந்துக்கொண்டு ..அதன்
உண்மைகளை தெளிந்து அறிவதே உளவறியும் திறனாகும்.
8.ஒரு ஒற்றன் தெரிவித்த செய்தியையும்..மறு ஒற்றன் மூலம் தெரிந்துக்கொண்டு ..செய்தியின் உண்மையைப் பற்றி
முடிவுக்கு வர வேண்டும்.
9.ஒரு ஒற்றனை..மறு ஒற்றன் தெரியாதபடி ஆள வேண்டும்.இது போல் மூன்று ஒற்றர்களை இயங்க வைத்து
அறிவதே உண்மை எனக் கொள்ள வேண்டும்.
10.ஒற்றரின் திறனை வியந்து அவனை சிறப்பு செய்தால்,அவன் ஒற்றன் என்பது வெளிப்படையாக தெரிந்து விடும்.