Tuesday, April 21, 2009

89.உட்பகை

1.இன்பம் தரும் நிழலும்,நீரும் கேடு விளைவிக்கக்கூடியதாக இருந்தால் அவை தீயவை ஆகும்.அதுபோலத்தான்
உறவினரின் உட்பகையும்.

2.வெளிப்படையாக தெரியும் பகைவர்களைவிட உறவாடி கெடுக்க நினைப்பவர்களிடம் எச்சரிக்கையாக
இருக்க வேண்டும்.

3.உட்பகைக்கு அஞ்சி தன்னை பாதுகாத்துக் கொள்ளாதவனை..அப்பகை பச்சை மண்பாண்டத்தை அறுக்கும்
கருவி போல அழித்துவிடும்.

4.மனம் திருந்தா உட்பகை உண்டாகுமானால்..அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டை
உண்டாக்கும்.

5.நெருங்கிய உறவுகளிடையே தோன்றும் உட்பகை..அவர்களுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய துன்பங்களை
உண்டாக்கும்.

6. உற்றாரிடம் பகைமை ஏற்படுமானால்..அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது அரிதான செயலாகும்.

7.ஒரு செப்பு சிமிழின் மூடி பொருந்தி இருப்பது போல வெளிப்பார்வைக்குத் தெரியும்..அதுபோல உட்பகை
உள்ளவர் ஒன்றாக இருப்பது போலத் தெரிந்தாலும், பொருந்தி இருக்க மாட்டார்கள்.

8.அரத்தினால் அறுக்கப்பட்ட இரும்பு வலிமை இழப்பது போல..உட்பகை குலத்தின் வலிமையை குறைத்துவிடும்.

9.எள்ளின் பிளவு போன்று சிறியதாக இருந்தாலும்..உட்பகை குடியைக் கெடுக்கும்.

10.மனதால் உடன்பட்டு இல்லாதவருடன் கூடி வாழ்வது என்பது ஒரு சிறு குடிசையில் பாம்புடன்
வாழ்வது போல அச்சம் தருவதாகும்

Monday, April 6, 2009

88.பகைத்திறம் தெரிதல்

1.பகை என்பது பண்புக்கு மாறுபட்டதாதலால்..விளையாட்டாகக்கூட பகை கொள்ள்க்கூடாது.

2.படை வீரர்களுடன்கூட பகை கொள்ளலாம்.ஆனால் செயலாற்றல் மிக்க அறிஞர்களின் பகை கூடாது.

3.தனியாக இருந்து பகையை தேடிக் கொள்பவன்..புத்தி பேதலித்தவனைவிட முட்டாளாகக் கருதப்படுவான்.

4.பகையையும் நட்பாகக் கருதி பழகும் பெருந்தன்மையை உலகம் போற்றும்.

5.தனக்குப் பகையோ..இரு பிரிவு..துணையோ இல்லை..அப்படிப்பட்ட சமயத்தில் அந்த பகைவரில் ஒருவனை
இனிய துணையாக்கிக் கொள்வதே அறிவுடைமை.

6.பகைவனைப் பற்றி ஆராய்ந்து அறிந்திருந்தாலும்..இல்லாவிட்டாலும்..கேடு ஏற்படும் காலத்தில் அவனை அதிகம்
நெருங்காமலும்..நட்புக்காட்டியும் சும்மா இருக்க வெண்டும்.

7.நம் துன்பத்தை, அறியாத நண்பருக்கு சொல்லக்கூடாது.அதுபோல நம் பலவீனத்தையும் பகைவரிடம்
வெளிப்படுத்தக்கூடாது.

8.செய்யும் வகையை உணர்ந்து,தன்னையும் வலிமைப் படுத்திக் கொண்டு,தற்காப்பும் தேடிக்கொண்டால்
பகைவரின் ஆணவம் அடங்கிவிடும்.

9.முள் மரத்தை செடியிலேயே வெட்ட வேண்டும்..பகையையும் அது முற்றும் முன்னே வீழ்த்திட வேண்டும்.

10.பகைவரின் ஆணவத்தைக் குலைக்க முடியாதவர்கள்..மூச்சு விட்டாலும் ..உயிரோடு இருப்பதாக
சொல்ல முடியாது.

Thursday, April 2, 2009

87.பகைமாட்சி

1.மெலியோரை விட்டுவிட்டு..வலியோரை எதிர்த்து போராட நினைப்பதே பகைமாட்சி.

2.அன்பற்றவராய்..துணை யாரும் இல்லாதவராய்.தானும் வலிமையற்றவராயிருப்பவர்
பகையை எப்படி வெல்லமுடியும்?

3.பயப்படுபவனாய்,அறிவு இல்லாதவனாய்,பண்பு இல்லாதவனாய்,ஈகைக்குணம் இல்லாதவனாய்
இருப்பவனை வெல்லுதல் எளிது.

4.சினத்தையும்,மனத்தையும் கட்டுப்படுத்தாதவனை எவரும்,எப்போதும்,எங்கும் வெல்லலாம்.

5.நல்வழி நாடாமல்,பொருத்தமானவற்றைச் செய்யாமல்,பழிக்கு அஞ்சாமல்,பண்பும் இல்லாமல்
இருந்தால் எளிதில் வெல்லப்படுவான்.

6.யோசிக்காத சினம் உடையவனையும்,பேராசைக் கொண்டவனையும் பகையாக ஏற்று எதிர்கொள்ளலாம்.

7.தன்னுடன் இருந்துக்கொண்டு,தனக்குப் பொருந்தாத காரியங்களைச் செய்து கொண்டிருப்பவனை
பொருள் கொடுத்தாவது பகைவனாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

8.குணம் இல்லாதவன்,குற்றம் பல செய்தவன் ஆகியவர்களுக்கு துணை யாரும் இருக்கமாட்டார்கள்.
அதனால், அவனை பகைவர்கள் எளிதில் வீழ்த்துவர்.

9.அறிவற்ற கோழைகள், எதற்கும் பயப்படும் இயல்புடையோர் ஆகியோரின் பகைவர்கள் எளிதில் வெற்றிப் பெறுவர்.

10.கல்வி கற்காதவர்களைப் பகைத்துக் கொள்ளும் எளிய செயலைச் செய்ய முடியாதவனிடம் என்றும் புகழ்
வந்து சேராது.