Friday, November 28, 2008

45.பெரியோரைத் துணைக்கோடல்

1.அறமுணர்ந்த மூத்த அறிவுடையோரின் நட்பை பெறும் வகை அறிந்து தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

2.வந்த துன்பம் நீங்கி..மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோரின் நட்பைக் கொள்ள வேண்டும்.

3.பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் நட்புக் கொள்ளல் அரிய பேறாகும்.

4.அறிவு ஆற்றலில் தம்மைவிட சிறந்த அறிஞர்களிடம் உறவு கொண்டு அவர் வழி நடத்தல் வலிமையாகும்.

5.தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரை உலகம் கண்ணாகக் கொள்ளுவதால் மன்னனும் அத்தகையோரிடம்
நட்பு கொள்ளவேண்டும்.
6.தக்க பெரியவரின் கூட்டத்தில் உள்ளவனுக்கு பகைவரால் எந்த தீங்கும் ஏற்படாது.

7.தவற்றை கண்டித்து அறிவுரை கூறும் பெரியாரை துணைக்கொள்பவரை கெடுக்கும் ஆற்றல் யாருக்கும் இருக்க
முடியாது.
8.கடிந்து அறிவுரை கூறும் பெரியாரின் துணை யில்லா அரசு,பகைவர் எவரும் இல்லா விட்டாலும் தானே அழியும்.

9.முதல் இல்லா வியாபாரிக்கு ஊதியம் வராது..அதுபோல தம்மை தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு
எப்பேறும் இல்லை.
10.நல்லவரின் நட்பை கை விடுதல்,பலர் பகையை தேடிக் கொள்வதைவிட பத்து மடங்கு தீமையாகும்.

Saturday, November 22, 2008

44.குற்றங்கடிதல்

1.செருக்கும்,சினமும்,காமமும் இல்லாதவரின் செல்வாக்கு மேம்பட்டது ஆகும்.

2.பேராசை,மானமில்லாத தன்மை,குற்றம்புரியும் செயல்கள் ஆகியவை தலைவனுக்கு கூடாத தகுதிகளாகும்.

3.தினையளவு குற்றத்தையும்,பனையளவாக எண்ணி தங்களை காத்துக் கொள்வார்கள் பழிக்கு அஞ்சுபவர்கள்.

4.குற்றம் அழிவை உண்டாக்கும் பகையாக மாறும்..அதனால் குற்றம் ஏதும் புரியாமல் இருக்க வேண்டும்.

5.குற்றம் செய்வதற்கு முன்னமே காத்துக் கொள்ளாதவன் வாழ்வு நெருப்பின் முன் வைக்கப்பட்ட வைக்கோல்
போராய் அழியும்.
6.தலைவன் என்பவன் நம் குற்றத்தை உணர்ந்து திருந்திய பின்னரே பிறர் குற்றத்தை ஆராய வேண்டும்.

7.நற்பணிகள் செய்யாது சேர்த்து வைப்பவன் செல்வம் பயனின்றி அழிந்து விடும்.

8.எல்லா குற்றத்தையும் விட பெருங்குற்றம் பிறர்க்கு ஏதும் ஈயாத் தன்மையே ஆகும்.

9.தன்னைத்தானே உயர்வாக எண்ணி தற்பெருமையுடன் நன்மை தராத செயல்களில் ஈடுபடக்கூடாது.

10.தனது விருப்பம் என்ன என பிறர் அறியா வண்ணம் நிறைவேற்றுபவரை பகைவர்கள் சூழ்ச்சி ஒன்றும் செய்யாது

Monday, November 17, 2008

43.அறிவுடைமை

1.பகையால் அழிவு வராது பாதுகாப்பது அறிவு மட்டுமே.

2.மனம் போகும் போக்கில் போகாது..தீமையை நீக்கி.. நல்வழி தேர்வு செய்வது அறிவுடைமை ஆகும்.

3.ஒரு பொருள் குறித்து யார் என்ன சொன்னாலும்..அதை அப்படியே ஏற்காது..அப்பொருளின் மெய்ப்பொருள் அறிவதே அறிவாகும்.
4.நாம் சொல்ல வேண்டியதை எளிமையாக சொல்லி,பிறரிடம் கேட்பதையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமை

5.உலகத்து உயர்ந்தவரோடு நட்புக் கொண்டு..இன்பம்,துன்பம் இரண்டையும்..ஒன்று போல கருதுவது அறிவுடைமை

6.உலகம் நடைபெறும் வழியில் உலகத்தோடு ஒட்டி தானும் நடப்பதே அறிவாகும்.

7.ஒரு விளைவிற்கு எதிர்காலத்தில் எதிர் விளைவு எப்படி இருக்குமென..அறிவுடையார் மட்டுமே நினைப்பர்.

8.அஞ்ச வேண்டிய வற்றுக்கு அஞ்சுவது அறிஞர்கள் செயலாகும்.

9.வரப்போவதை முன்னமே அறிந்து காத்துக் கொள்ளும் திறனுடையருக்கு துன்பம் அணுகாது.

10.அறிவுடையர் எல்லாம் உடையவர்.அறிவில்லாதவர் என்ன இருப்பினும் இல்லாதவரே ஆவர்.

Thursday, November 13, 2008

42.கேள்வி

1.செவியால் கேட்டறியும் செல்வம்..செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.

2.கேள்வியாகிய செவி உணவு இல்லாத போதுதான் வயிற்றுக்கு உணவு தரும் நிலை ஏற்படும்.

3.செவி உணவாகிய கேள்வி அறிவு பெற்றோர் நிலத்தில் வாழ்ந்தாலும் தேவருக்கு ஒப்பாவார்கள்.

4.நாம் படிக்கவில்லையெனினும், கற்றவர்களிடம் கேட்டு அறிந்தால்,அது வயதான காலத்து ஊன்றுகோலாய் அமையும்.
5.வழுக்கும் நிலத்தில் நடக்க ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர் அறிவுரை உதவும்.

6.நல்லவற்றை சிறிய அளவே கேட்டாலும் அந்த அளவிற்கு அது பெருமையைத்தரும்.

7.நுட்பமான கேள்வி அறிவு உடையவர்,சிலவற்றை தவறாக உணர்ந்தாலும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்.

8.காதுகள் கேட்கக்கூடியதாக இருந்தாலும்,அவை நல்லவர்கள் உரையை கேட்காவிட்டால் செவிடாகவே எண்ணப்படும்.
9.கேள்வி அறிவு இல்லாதவர்கள்..பணிவான சொற்களை பேசும் பண்புடையவராக ஆக முடியாது.

10.செவிச்சுவை அறியாது..வாய்ச்சுவை மட்டுமே அறிந்தவர்கள் இறந்தாலும்..வாழ்ந்தாலும் ஒன்றுதான்.

Wednesday, November 12, 2008

41.கல்லாமை

1 அறிவாற்றல் இல்லாமல் கற்றவர்களிடம் பேசுதல் கட்டமில்லாமல்
சொக்கட்டான் விளையாடுவதைப்போல ஆகும்.

2.கல்லாதவன் சொல்லை கேட்க நினைப்பது மார்பகம் இல்லா பெண்ணை விரும்புவது போல ஆகும்.

3.கற்றவர் முன் எதுவும் பேசாதிருந்தால் கற்காதவர்கள் கூட நல்லவர்களே ஆவர்.

4.படிக்காதவனுக்கு இயற்கை அறிவு இருந்தாலும் ...அவனை சிறந்தோன் என அறிவுடையோர்
ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

5.கல்வி அற்றவன் மேதை போல நடந்தால் ...கற்றவர்களிடம் அவன் வேஷம் கலைந்துவிடும்.

6.கல்லாதவர்கள் வெறும் களர் நிலமே...அவர்கள் வெறும் நடைபிணங்களே.

7..அழகாய் இருந்தாலும்...தெளிந்த அறிவற்றோர் கண்ணைக்கவரும் மண் பொம்மையாகவே ஆவர்.

8.முட்டாள்களின் செல்வம் ..நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட மிக்க துன்பம் செய்வதாகும்.

9.கற்றவராயிருந்தால் ..உயர்ந்தவர்..தாழ்ந்தவர் என்ற வேறுபாடு போய்விடும்.

10.அறிவு நூல் படித்தவர்கள் மனிதர்களாகவும்..படிக்காதவர்கள் விலங்குகளாகவும் கருதப்படுவர்.

Thursday, November 6, 2008

40.கல்வி

1.கற்கத் தகுந்த நூல்களை குறையின்றி கற்பதோடு நில்லாது...கற்றபின் அதன்படி நடக்க வேண்டும்.

2.எண் என்பதும் எழுத்து என்பதும் மக்களின் கண்கள் போன்றதாகும்.

3.கண்ணுடையவர் என்பவர் கற்றவரே..கல்லாதவருக்கும் கண்கள் இருப்பினும் அவைகள் புண்களாகவே கருதப்படும்.

4.பழகும் போது மகிழ்வோடு பழகி..பிரியும் போது இனி எப்போது காண்போம் என எண்ணும்படி பிரிவதே அறிவுடையோர் செயலாகும்.
5.செல்வந்தர் முன் தாழும் வறியவர் போல்..கல்வி கற்றோர் முன்..தாழ்ந்து நின்று கற்போரே உயர்ந்தவர் ஆவார்.

6.தோண்ட தோண்ட கிணற்றில் நீர் ஊறுவது போல, படிக்கப் படிக்க அறிவு பெருகும்.

7.கற்றோருக்கு எல்லா நாடுகள்,எல்லா ஊர்களிலும் சிறப்பு உண்டு. அதனால் ஒருவன் சாகும்வரை படிக்கலாம்.

8.ஒரு பிறப்பில் நாம் கற்ற கல்வி..ஏழேழு பிறப்பிற்கும் உதவும் தன்மை உண்டு.

9.தாம் விரும்பும் கல்வி அறிவை உலகமும் விரும்புவதால் அறிஞர்கள் மேன்மேலும் கற்றிட விரும்புவர்.

10.அழிவற்ற செல்வம் கல்வியே ஆகும்..மற்றவை எதுவும் செல்வமாக ஆகாது.

Tuesday, November 4, 2008

39.இறைமாட்சி

1.படை,குடி மக்கள்,குறையா வளம்,நல்ல அமைச்சர்கள்,நல்ல நட்பு,அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் அமைந்த அரசு
ஆண் சிங்கமாகும்.
2.துணிவு,இரக்கம்,அறிவாற்றல்,உயர்ந்த குறிக்கோள் இந் நான்கு பண்புகளும் அரசின் இயல்பாகும்.

3.காலம் தாழ்த்தா தன்மை,கல்வி,துணிவு இவை மூன்றும் அரசனிடம் நீங்காமல் இருக்க வேண்டும்.

4.ஆட்சியில் அறநெறி தவறாமை,குற்றம் ஏதும் செய்யாமை,வீரம்,மானம் இவையே சிறந்த அரசனிடம் இருக்க வேண்டியவை.
5.பொருள் வரும் வழி,வந்த பொருள்களைச் சேர்த்தல்,காத்தல் அவற்றை சரியாக வகுத்தல் இவையே நல்லாட்சி
அரசனின் இலக்கணம்.
6.எளியவரையும்,கடுஞ்சொல் கூறாதவனையும் இனிய பண்புடையவனையும் கொண்ட அரசனை உலகு புகழும்.

7.இனிய சொற்கள்,பிறர்க்கு தேவையானவற்றை வழங்கிக் காத்தல் கொண்ட அரசனுக்கு உலகு வசப்படும்

8.நீதி தவறா ஆட்சியுடன் மக்களைக் காப்பாற்றும் மன்னவன் மக்கள் தலைவனாவான்.

9.தன்னை குறைகூறுவோரின் கடும் சொற்களைப் பொறுத்துக் கொள்ளும் மன்னனுக்கு மக்களிடம் மதிப்புண்டு.

10.கொடை,அருள்,செங்கொல்,குடிகளைக்காத்தல் இவை நான்கும் உள்ள அரசன் ..ஒளி விளக்காவான்

Sunday, November 2, 2008

38.ஊழ்

1.ஆக்கத்திற்கான நிலை சோர்வை நீக்கி ஊக்கம் தரும்.சோம்பல் அழிவைத்தரும்.

2.பொருளை இழக்க வைக்கும் ஊழ் அறியாமை ஆகும்.பொருளை ஆக்கும் ஊழ் அறிவுடமை ஆகும்.

3.ஒருவன் பல நூல்களைப் படித்திருந்தாலும்,இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்.

4.ஒருவர் செல்வமுடையவராகவும்,ஒருவர் அறிவுடையராகவும் இருப்பது உலகின் இயற்கை நிலை ஆகும்.

5.நல்ல செயல்கள் தீமையில் முடிவதும்,தீய செயல்கள் நல்லவை ஆவதுமே ஊழ் எனப்படும்.

6.தமக்கு உரியவை இல்லா பொருள்கள் நில்லாமலும் போகும்.உரிய பொருள்கள் எங்கிருந்தாலும் வந்தும் சேரும்.

7.முறையானபடி வாழவில்லை எனில்..கோடி கணக்கில் பொருள் சேர்த்தாலும் அதன் பலனை அனுபவிக்க முடியாது.

8.வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் இருக்குமேயானால் நுகரும் பொருளற்றோர் துறவி ஆவர்.

9.நன்மை தீமை இரண்டும் இயற்கை நியதி.நன்மையைக் கண்டு மகிழ்வது போல் தீமையைக் கண்டால் கலங்கக்கூடாது.
10ஊழ்வினையிலிருந்து தப்ப முயன்றாலும் அதைவிட வலிமையுள்ளது வேறு ஏதுமில்லை.

(அறத்துப்பால் நிறைவு பெற்றது)