Sunday, June 30, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 67

தேவையான சாதனங்களுடன்,காலம் அறிந்து அதற்கேற்ப செயல்பட்டால், அந்தச் செயலின் முழு வெற்றியை நாம் சுவைக்கமுடியும்..

இதை வள்ளுவர் எதனுடன் ஒப்பிட்டு சொல்கிறார் பார்க்கலாம்.

கோட்டான் ஒன்று இருக்கிறது.அது இரவில் தொல்லைக் கொடுத்து கொண்டிருக்கிறது.ஏனெனில் அதற்கு இரவில் பார்வையின் கூர்மை அதிகம்.அதை வெல்லமுடியுமா?

கண்டிப்பாக...அதை ஒரு காக்கையினால் கூட முடியுமாம்? என்ன ஒன்று...பகல் நேரத்தில்தான் அது முடியுமாம்.ஏனெனில்..அப்போது கோட்டானுக்கு பார்வை மந்தம்.

அதுபோல, ஒரு எதிரியை வீழ்த்த வேண்டுமானால், அதற்குரிய  சரியான காலத்திற்குக் காத்திருந்துத் தாக்கினால் போதும்.வெற்றி நமதே!

பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது (481)

பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கை வென்று விடும்.(அதுபோல) எதிரியை வீழ்த்துவதற்கு  ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 66

தன் திறமை என்ன, வலிமை என்ன எனத் தெரியாது, தன்னைத்தானே பிரமாதமாக எண்ணிக்கொண்டு செயல் ஆற்றுபவர்கள் விரைவில் காணாமல் போவார்கள்.

அப்படிப்பட்டவர்கள் எப்படிப்பட்டவர்கள் போலவாம் தெரியுமா?

மரத்தின் நுனிக்கிளையில் அமர்ந்து கொண்டு..அதற்கு மேலும் ஏறிட முயல்பவர் போன்றவர்களாம்

அப்படி முயன்றால் என்ன ஆகும்...கிளை ஒடிந்து கீழே விழுந்து தங்கள் அழிவைத் தேடிக் கொள்ள வேண்டியதுதான்.

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்  (476)

தன்னைப் பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக்கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ..அந்தக் கதிக்கு ஆளாவார்கள்

Saturday, June 29, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 65

தம்முடைய வலிமையைவிட எதிராளியின் வலிமை குறைவானது என எதிராளிகளைக் குறைத்து மதிப்பிட்டு, ஒரு செயலைத் தொடங்குவோமாயின், அச்செயல்  தோல்வியையே சந்திக்க நேரிடும்.

இதையே வள்ளுவர் கீழே சொல்லியுள்ள குறளில் (வலியறிதல் அதிகாரம்) சொல்ல எண்ணியிருப்பார் எனத் தோன்றுகிறது.
இதில் நேரிடையாக எந்த ஒப்பீடும் இல்லை.மறைமுகமாகவே சொல்லியுள்ளார்.

இனி அக்குறளைப் பார்ப்போம்

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்  (475)

மயில் இறகாக இருந்தாலும் கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முரிகின்ற அளவிற்கு அதற்குப் பலம் வந்துவிடும்.

Friday, June 28, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 64

அறிவுடையோர் கீழ் மக்களுடன் சேர மாட்டார்கள்.ஆனால்..சிறியோர்கள், கீழ் மக்கள் கூட்டத்துடன் இணைந்து கொள்வர்.

"செம்புலப்பெயர்நீர்" .செம்மண் நிலத்தில் தேங்கும் நீர் அதனுடன் கலந்து பின்னர் மீண்டும் பிரிக்கமுடியாது ஆகிவிடும்.

 நீரானது சேர்ந்த நிலத்தின் தன்மையால் வேறுபடுவதுபோல,மக்களின் அறிவும் அவர்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றுவிடும்.

இதையே வள்ளுவர்..

நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்
கினத்தியல்ப தாகும் அறிவு (452)

என்கிறார்.

சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தனமையை அடைந்துவிடுவது போல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்


Wednesday, June 26, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 63

நாம் தவறு செய்யும் போது, அத்தவறை சுட்டிக்காட்டி  நல்வழிகாட்டுபவரின் நட்பை நாம் பெற வேண்டும்.அப்படிப்பட்ட நட்பைப் பெற்றால் யாராலும் ஏதும் தீங்கினை நமக்கு செய்ய முடியாது

ஒரு கட்டிடத்தைத் தாங்கி நிற்கும் தூண் போன்ற அவர்களை பெறாதவன் , எதற்கு ஒப்பாவான் தெரியுமா?

முதலீடு ஏதும் செய்யாமல், செய்யும் வாணிகத்தில் வருவாய் ஏதும் இல்லாதவன் நிலைக்கு  ஒப்பாவான்

முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை  (449)

கட்டிடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதாகும் 

Tuesday, June 25, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 62

பெரும் தீ...அதன் முன்னர் மலைபோல குவிக்கப்பட்டுள்ள வைக்கோல்..

நிலைமை என்னாகும்..

வைக்கோல் முழுதும் கருகி நாசமாகும்.

அதுபோல...என வள்ளுவர் எதைச் சொல்கிறார் எனப் பார்ப்போம்.

மனதில் பேராசை,இழிவான நடத்தை, மாசு படியும் செயல்கள் ஆகியவை உள்ளவனுக்கு எந்நேரமும் அழிவு ஏற்படும்.

ஆகவே..முன்கூட்டியே எச்சரிக்கை உணர்வுடன்..சமுதாயத்தில் நல்லவனாக நடந்திடல் வேண்டும்.இலலாவிடின் அவன் வாழ்வு  தீயின் முன் வைக்கப்பட்ட வைக்கோலாய் அழிந்துவிடும்

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்  (435)

முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்து கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்

Monday, June 24, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 61

நடை தளர்ந்து போகிறது.உச்சி வெளுத்து விட்டது..தனியாக நடக்க சிரமப்படுகிறோம்.

அப்போது உறுதுணையாகிறது ஊன்றுகோல்.

அதுபோல நம் வாழ்வில் துணையாக அமைவது வேறொன்றும் உண்டாம்.

அது என்ன என வள்ளுவர் சொல்வதைப் பார்ப்போம்..

நாம் கல்வியறிவு அற்றவராய் இருந்தாலும்..கற்றவர்களிடம் கேட்டு அறிந்துகொள்ள வேண்டுமாம்.அது நடை தளர்ந்தவனுக்கு உதவும் ஊன்றுகோல் போல உதவுமாம்.

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்
கொற்கத்தின் ஊற்றாந் துணை (414)

நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்.

அடுத்த குறளிலும் ஊன்றுகோலை வல்லுவர் விடவில்லை.சொல்கிறார்..

இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல் (415)

என்கிறார்.

வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல, ஒழுக்கமுடையவர்களின் அறிவுரையானது உதவும் .

வள்ளுவனும் ..ஒப்பீடுகளும் - 60

ஒருவர், கற்றவராய் இருந்தால் , அதற்கான பெருமை, சமுதாயத்தில் அவர் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டினைப் போக்கிவிடும்.

இன்னமும் சொல்வதானால்..

கற்றோர், கல்லாதவர் இருவருக்குமான வேற்றுமை என்ன என்று வள்ளுவனின் பார்வையில் பார்த்தோமானால்.. கற்றோர் , மனிதர்கள் ஆவர்.கல்லாதார் விலங்குகள் ஆவார்கள்.

விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்  (410)

மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதே அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும், அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு 

Sunday, June 23, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 59

நன்செய், புன்செய் நிலங்களில் அதற்குண்டான பயிர்கள் வளரும்.இன்று எல்லாமே தண்ணீர் இன்றி தரிசாக உள்ளன.அது வேறு விஷயம்

ஆனால்...களர் நிலங்களில்..ஏதும் விளையவும் விளையாது..எதற்கும் பயனின்றி கிடக்கும்.
(இது வள்ளுவன் காலநிலை..ஆனால்..இன்று எந்நிலமானாலும் அபகரிக்க ஆட்கள் உண்டு)

அதுபோன்ற களர் நிலம் போன்றவர்கள் கல்லாதவர்களாம்.

தோற்றம் அழகாய் இருந்தாலும், ஆழ்ந்த  அறிவற்றவர்கள் மண் பொம்மையினைப் போன்றவர்கள்தான் எனவும் சொல்கிறார்,.

ஆனால் களர் நிலத்துடன் அவர் ஒப்பிட்ட கல்லாதவர் பற்றிய குறள்

உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்  (406)

கல்லாதவர்களைக் (ஒன்றுக்கும் உதவாத)களர்நிலத்திற்கு ஒப்பிடுவதே பொருத்தமானது.காரணம் அவர்கள் நடைப்பிணங்களாகவே கருதப்படுவர்.

Saturday, June 22, 2019

வள்ளுவன்..ஒப்பீடுகளும்- 58

இயற்கை பெண்ணின் உடலை அற்புதமாகப் படைத்திருக்கிறது.

அவள் மூலம் உலகிற்கு வரும் குழந்தைகள் பால் அருந்த வேண்டும் என்பதற்காகவே இறைவன் மார்பகங்களை அவளுக்குப் படைத்திருக்கின்றான்.அவை கை எடுத்து கும்பிடும்படி இருக்க வேண்டியவை ஆனால் கவர்ச்சிப் பொருளாக நினைக்கும் நிலை இன்று.

பெண்ணின் மார்பகங்கள் தாய்மையின் பெருமையை உணர்த்துபவை,

இப்போது விஷயத்திற்கு வருவோம்..

படிக்காத முட்டாள் ஒருவனின் பேச்சை கேட்க விரும்புவது என்பது எதனைப் போல் இருக்கிறது என வள்ளுவன் சொல்கிறார் தெரியுமா?

மார்பகம் இல்லா பெண் மீது மையல் கொள்வது போலாம்.

கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று  (402)

கல்லாதவனின் சொல் கேட்க விரும்புவது, மார்பகம் இல்லா பெண் மீது மையல் கொள்வத்ற்கு ஒப்பானதாகும்.(தாய்மை உணர்வு அற்ற பெண் என்று கொள்ளலாம்) 

Friday, June 21, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 57

அவன் அதிகம் விவரம் அறியாதவன்

ஆனால், எல்லோர் முன்னும் எல்லாம் அறிந்தது போல நடந்து கொள்வான்.

அதைக் கண்ட இளைஞர்கள் சிலர்  சபையில்அவனை பேச அழைத்தனர்.

பேச எழுந்த அவனின் உண்மைத் தோற்றம் சில நொடிகளில் வந்தோர்க்கு புரிந்து விட்டது.

இது போன்ற நிலை எதற்கு ஒப்பாகும் தெரியுமா?

சொக்கட்டான் என்று ஒரு விளையாட்டு.அது பல
கட்டங்கள் போட்டு ஆடும் விளையாட்டு.ஆனால் கட்டங்கள் இன்றி விளையாடும் சொக்கட்டான் விளையாட்டு போன்றதாம்..நாம் நேலே சொன்ன அறிவாற்றல் இல்லாதவன் அவையில் பேசுவது.

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றி கோட்டி கொளல்  (401)

நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும்.  

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 56

எந்தவிதமான குறையுமின்றி கற்க வேண்டியவற்றைக் கற்க வேண்டும்.

அத்துடன் மட்டுமின்றி, கற்றபடி வாழ்க்கையில் நடந்திட வேண்டும்.

இப்படிப் படிப்பதில் என்ன பயன் தெரியுமா?

ஒருவனுக்கு, படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்..

இது எதுபோல?  வள்ளுவர் சொல்கிறார்..

பூமியைத் தோண்ட தோண்ட ஊற்றுநீர் பெருகிக் கிடைப்பது போலவாம்.

தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு  (396)

தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும். 

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 55

எண்ணும், எழுத்தும் ஒருவருக்கு இரு கண்கள் எனலாம்.

ஒருவருக்கு கண் இல்லாவிடினும், அவர் கற்றவராய் இருந்தால், கண்ணுடையவராகவே எண்ணப்படுவார்.

ஆனால், அதே நேரம் கல்லாதாருக்கு, கண்கள் இருந்தாலும்..அவை கண்களாகக் கருதப்படாது  முகத்தின் இரு புண்களாகவேக் கருதப்படுமாம்.

கல்லாதார் கண்களை புண்ணுக்கு ஒப்பிடுகிறார் பொய்யாமொழியார்.

கண்ணுடைய ரென்பர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர் (393)


கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார்.கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்.

Wednesday, June 19, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 54

நம்பிக்கையுடன் செயலில் ஈடுபடுபவர்களுக்கு வானமும் தொட்டுவிடும் தூரம்தான் என்பார்கள்

அதேபோன்று, ஒருவனுக்கு மெய்ப்பொருள் என்பது என்ன என்பது தெரிந்து விட்டால் அவன் வாழ்க்கை சிறப்பாக அமையுமாம்.

எந்த ஒரு ஐயப்பாடு இருந்தாலும், அதை அலசி ஆராய்ந்து அல்லது அறிவுடையாரை நாடி தீர்த்துக் கொள்ள வேண்டும்

ஐயப்பாடுகளை, ஆராய்ந்து உண்மையை உணர வேண்டும்

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வான நணிய துடைத்து (353)

ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்து கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும்

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 53

நேற்றுவரை உயிருடன் இருந்தவர் இன்று இல்லை என்ற அகந்தையை, தன் பெருமையாகக் கொண்டதாம் இவ்வுலகு.

உடலுடன் தங்கியுள்ள உயிர் அதனைப் பிரிந்தால் அவ்வளவுதான்.

வாழ்க்கை நிலையற்றது.

தினமும் இரவு உறங்கி..பகலில் எழுவது அனைத்து உயிர்களுக்கும் இயற்கை அளித்த வரப்பிரசாதம்.

வள்ளுவன் தினமும் உறங்குவதை...இறப்புக்கும்...துயிலெழுவதை பிறப்புக்கும் ஒப்பிட்டு சொல்கிறார்

உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு  (339)

என்கிறார்.

நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு.திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு

  

வள்ளுவனும்..ஒப்பீடுகளும்..- 52

யாக்கை நிலையாமை.

நேற்றிருப்போர் இன்றில்லை என்னும் நிலையற்றத் தன்மையிலேயே ஒவ்வொரு உயிரும் உலகில் வாழ்ந்து வருகிறது.

இதை அறியாது, வாழும் காலத்தில் தான் எவ்வளவு ஆசை, பொறாமை,வன்மம்,போட்டி...கோபம்...

நாளென இன்றுபோற் காட்டி உயிரீரும்
வாளா துணர்வார்ப் பெறின் (334)

வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டிருக்கும் வாள் அன அறிவார்கள்.

ஒவ்வொரு நாளும்..வாள் போன்றது என்றுள்ளார்

Tuesday, June 18, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 51

திரைப்படம் காண திரையரங்கு செல்கிறோம் .முதல் காட்சி படம்  முடிந்ததும் மக்கள் அரங்கினை விட்டு கூட்டமாக வெளியேறுகின்றனர்.

சற்றுமுன் வரை மக்கள் கூட்டம் நிறைந்த அரங்கு, இப்போது யாருமின்றி காலியாக உள்ளது.

இது எதுபோல.., இதனுடன் ஒப்பிட  வேறு ஒன்று இருக்கக்கூடுமா?

இருக்கிறது என்கிறார் வள்ளுவர்.

ஒருவருடைய செலமும், சொத்தும் நிலைத்திருக்காதாம்

கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று (332)

சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டு போவது என்பது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும்.

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 50

கோபத்தில்..பிறர் மீது சாபமிடும் போது சிலர் நிலத்தினை கையால் வலு உள்ளவரைத் தட்டி சத்தியம் செய்வதை நாம் கேட்டு இருக்கிறோம்...பார்த்து இருக்கிறோம்.

அப்படி சத்தியம் செய்வதன் மூலம் பலன் இருக்கிறதோ இல்லையோ!  நம் கைதான் வலிக்கும்.

அதுபோலத்தான், அந்த சினத்தினைப் பண்பாகக் கொண்டவன் நிலையும்...

கையும் வலிக்கும்..அவனது சினமும் அவனை அழிக்கும்

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று (307)

நிலத்தைக் கையால் அறந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும்.அதுபோலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்.


Monday, June 17, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 49

இருள்...

அந்த இருளைப் போக்க சிறு விளக்கினை ஏற்றி வைத்தால்..வெளிச்சம் இருட்டினை துரத்திவிடுகிறது.

அதுபோல உண்மை பேசுபவனை உயர்ந்தவன் எனக் காட்டும் பொய்யாமை ஒளி மிக்க விளக்காம் .

நான் உண்மை  என அறிந்தவரையில் உண்மையை பேசுவதைத்  தவிர வேறு எந்த பண்பும் உயர்வானதில்லை என்று சொன்ன வள்ளுவர்..மேலே சொல்லியுள்ளபடி பொய்யாமை விளக்கினைப் பற்றியும் சொல்லியுள்ளார்

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு (299)

புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தொன் எனக் காட்டும் ஒளி மிக்க விளக்காகும்  

Sunday, June 16, 2019

வள்ளுவனும்...ஒப்பீடுகளும் - 48

நீராடுவதால் புறந்தூய்மையை அடையலாம்.உடல் அழுக்கை நீக்கிக் கொள்ளலாம்.

ஆனால், அதுவே அகத்தில் அழுக்கு இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்...

வள்ளுவன் சொல்லாதது என்ன..இதற்கும் ஒரு வழியினைச் சொல்கிறார்

புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும் (298)

என்கிறார்.

நீரால் குளிப்பதால் உடல் அழுக்கு நீங்கும்..அதுபோல  மனம் அழுக்குப் படாமல் தூய்மையுடன் விளங்கிட சொல்லிலும், செயலிலும் வாய்மை வேண்டும்

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 47

ஒருவருடைய புறத்தோற்றத்தை வைத்து, அவரை எடை போட முடியாது.

பார்க்க, கரடு முரடாயிருப்பவர் உள்ளம் மென்மையானதாய் இருக்கக் கூடும்.

பார்க்க சாந்த சொரூபியாய்,அமைதியாய் இருப்பவர் மனம் கொடூரமாயும் இருக்கக்கூடும்

சுருங்கச் சொல்வதானால்...ஒருவரின் பண்புகளை, அவரவர் செயல்களால் மட்டுமே உணர்ந்துகொள்ளலாம்

இதையே வள்ளுவர், எப்படி, எதனுடன் ஒப்பிட்டு சொல்கிறார் பாருங்கள்..

கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல் (279)

நேராக தோன்றும் அம்பு, கொலைச் செயல் புரியும்.ஆனால்...வளைந்து தொன்றும் யாழ், இசை இன்பம் பயக்கும்.அதுபோல, மக்களின் பண்புகளையும் அவர்களது செயலால் மட்டுமே உணர்ந்து கொள்ள வேண்டும்

Saturday, June 15, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 46

ஆற்றில் நீராடிக் கொண்டிருக்கும் போது...அணிந்திருந்த துணி அவிழ்ந்து ஆற்றுடன் அடித்து செல்லப்படுகிறது.

எழுந்து கரை சேர முடியாது.ஆற்றின் போக்கிலேயே..தன்னை மறைந்துக் கொண்டு சென்று..அவிழ்ந்தத் துணியைப் பற்றி மீண்டும் அணிந்தாலே மானத்துடன் கரையேற இயலும்.இதுவே மாண்புடையார் செயலாகும்

அதே போன்று நீருக்குள் மூழ்கும் மாண்புடையோர் போல சிலர் தங்களது சுயத்தை மறைத்துக் கொண்டு குற்றம் அற்றவர்கள் போல நடந்து கொள்வார்களாம்

மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர் (278)

நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல, மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக் கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர் 

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 45

நஞ்சினை நெஞ்சில் வைத்து, நாவினில் அன்பு வைத்து நல்லவர் போல் நடிப்பார்.....இவ்வரிகளை நாம் பாடலாகவும், உரைநடையாகவும் கேள்விப்பட்டதுண்டு.

சுருங்கச்சொன்னால்...நல்லவர்கள் போல நடிப்பார்கள் கயவர்கள்.

அவர்கள் எப்படிப்பட்டவர்களாகவும் இருக்கக்கூடும் என் கிறார் வள்ளுவர் .....

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியா ருடைத்து  (277)

வெளித்தோற்றத்திற்குக் குன்றிமணியைப் போல் சிவப்பாக இருந்தாலும். குன்றிமணியின் முனையைப் போலக் கறுத்தமனம் படைத்தவர்களும் உலகில் உண்டு.

வெளித்தோற்றம் கண்டு ஏமாறக்கூடாது

Friday, June 14, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 44

மனம் நிறைய அழுக்கினை வைத்துக் கொண்டு, உத்தம சீலரைப்போல நடந்து கொண்டு மக்களை ஏமாற்றும் வஞ்சகர் பலரை, நாம் நமது அன்றாட வாழ்க்கையில் பார்க்க நேரிடுகிறது.

சாதாரண மக்கள் மட்டுமின்றி, துறவிகள் என்று தம்மை சொல்லிக் கொண்டு, தகாத செயல்களில் ஈடுபடும் போலிகளும் உண்டு.

அப்படிப்பட்டவர்களை வள்ளுவர் யாருடன் ஒப்பிடுகிறார் என்று பாருங்கள்...

தவமறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று (274)

என் கிறார்.

புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடிப்பதற்கும், தவக்கோலத்தில் இருப்பவர்கள் தகாத செயல்களில் ஈடுபடுவதற்கும் வேற்பாடு இல்லை

Tuesday, June 11, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 43

ஐம்புலன்களையும் அடக்கி தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்து பற்றற்ற ஒழுக்கசீலர்களே துறவு வாழ்க்கையில் சிறந்தவர்களாக இருக்கமுடியும்.

ஆனால்...இன்று பல இடங்களில் துறவிகள் எனச் சொல்லிக்கோன்டு..சமூக விரோத காரியங்களைச் செய்துக் கொண்டு மக்களை ஏமாற்றும் பல போலித் துறவிகளைப் பார்க்கமுடிகிறது.

இப்படிப்பட்ட துறவிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் எப்பேர்ப்படட்வர்கள் என வள்ளுவர் கூறுவதைக் கேளுங்கள்...

அவர்கள் பசு ஒன்று புலித்தோலைப்  போர்த்திக் கொண்டு மக்களை ஏமாற்றுவது போலவாம்

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந்  தற்று (273)

மனதை அடக்க முடியாதவர் துறவுக்கோலம் பூணுவது, பசு ஒன்று புலித்தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும்

Monday, June 10, 2019

வள்ளுவம்னும்..ஒப்பீடுகளும் - 42

வாழ்க்கை நிலையற்றது..

இன்றிருப்போர் நாளை இருப்பார் என்பது என்ன உண்மை..என்றான் ஒரு கவிஞன்

ஆம்..ஒருவனின் மரணம் எப்போது நிகழும் என ..யாரும் அறியாத பிரபஞ்ச ரகசியமாகும்

இப்படிப்பட்ட நிலையற்ற வாழ்க்கையில் உடலுக்கும், உயிருக்கும் இடையே உள்ள உறவினை என்ன எனச் சொல்வது?

வள்ளுவர் சொல்கிறார்..

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு (338)

உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும், பறவைக் குஞ்சிற்கும் உண்டான உறவினைப் போன்றதுதான்

Sunday, June 9, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 41

செல்வம் படைத்த செல்வந்தர்களுக்குக் கிடைக்கும் மரியாதை, சிறப்பு..பொருளில்லா வறியவர்களுக்குக் கிடைப்பதில்லை.

இதில் சில மாற்று கருத்துகள் இருந்தாலும்..நடைமுறையில் இதுதான் உண்மை.

பொருள் இல்லாதவர்க்கு எப்படி சிறப்பில்லையோ அதேபோல ..தன் உடலை  வளர்க்க சற்றும் கருணை உள்ளம் இல்லாமல் பிற உயிரைக் கொன்று உணவாக்கிக் கொள்கிறார்களோ அவர்களுக்கும் சிறப்பு இல்லையாம்.

பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்றின் பவர்க்கு (252)

பொருளைப் பேணிக் காத்திடாதவர்க்குப் பொருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை.(அதுபோல) புலால் உண்பவர்க்கும் அருள் உடையவர் என்ற சிறப்பு இல்லை

Saturday, June 8, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 40

தொட்டனைத்தூறும் மணற்கேணி...அதுபோல ஒருவன் கல்வி அறிவு படிக்க படிக்க வளரும்.

அவன் படிக்கும் நூலில் சொல்லப்பட்டிருக்கும் செய்திகளை, உண்மைகளை அவனால் அப்போதுதான் புரிந்து கொள்ள முடியும்

அதுபோலத்தான் அருள் இல்லாதவனின் அவனின் அறச்செயல்களும் புரிந்து கொள்ள முடியாமல் போகுமாம்.

மனதில் அருள் எனும் ஈரம் இருந்தாலே..போதுமாம்

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம் (249)

அறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டறியமுடியுமா? (முடியாது) அதுபோலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயல்களும் இருக்கும் 

Friday, June 7, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 39

உலகம் என்பது ஒன்று..ஆனால்..அது பொருள் உள்ளவரையே மதிக்குமாம்.ஆனால்..அதே நேரம் அருளில்லார்க்கு என்று உலகம் ஒன்று இருக்கிறதா..

ஆம்..எதன் மீதும் பற்று இல்லா துறவு வாழ்வு வாழ்பவர்களுக்கான உலகம் அது..

இவ்வுலகில் , சாதாரண வாழ்வு வாழ்பவர்களுக்கு பொருள் முக்கியமாய் அமைந்துள்ளதாம்.

"பொருள் படைத்தவன் கருத்தானால், அதை சபை மீறுமா?" என்பார் கவியரசு கண்ணதாசன்.அதாவது, பணம் படைத்தவன் எதைப் பேசினாலும், அது தவறென்றாலும்..சொல்ல பயந்து ஒரு கூட்டம் "ஆமாம்" சாமி ஆகிவிடுவார்களாம்

பொருள் இல்லாதவர்கள் பற்றி வள்ளுவர் என்ன சொல்கிறார்...

அரு ளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்
கிவ்வுலகம் இல்லாகி யாங்கு (247)

பொருள் இல்லாதவர்களுக்கு வாழ்க்கை சிறப்பாக இராது.அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் வாழ்க்கையும், அவர்கள் சார்ந்த உலகத்தில் (இங்கு பற்றற்ற துறவற வாழ்வு எனலாம்) சிறப்பாக மையாது

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 38

காற்றும்..நீரும் வலைமை மிக்கவை.

இவற்றினால் அழிக்கவும் முடியும்..ஆக்கவும் முடியும்.

தினமும் நம் சுவாசத்தினால்..உள்ளே சென்று..  வெளியேறிக் கொண்டிருக்கும் அச்சிறு காற்று நின்று போனால்..நாம் இல்லாது போகிறோம்.

இன்னமும் சொல்லப்போனால்...காற்றின் வலிமையே, இந்த பூமியை இயக்கிக் கொண்டிருக்கிறது

இதற்கு ஈடு என எதிச் சொல்லமுடியும்?

ஆனால்..வள்ளுவன் சொல்கிறார்.."அருள்" அதைந்தற்கு ஈடாகுமாம்.

நம் உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கம்...நம் துன்பத்தை உணரவைக்காதாம்

அல்லல் அருளால்வார்க் கில்லை வளிவழங்கு
மல்லன்மா ஞாலங் கரி (245)

என்கிறார்

உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்த உலகமே சான்று.

Tuesday, June 4, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 37

மானிடப் பிறவி ஏற்படுவதற்கே மாதவம் செய்திடல் வேண்டும்.

பிறவி எடுத்தப் பின் எந்த விதக் குறிக்கோளும் இல்லாமல், கோடிக்கணக்கான மனிதருள் ஒருவனாக வாழ்த்து மடிவதில் என்ன பலன்?

இந்தப் பிறவி முடிந்தாலும்..நாம் விட்டுச் சென்ற செயல்கள் நம் புகழைப் பாடிக் கொண்டிருக்க வேண்டும்.அதுவே பிறவி எடுத்ததன் பயனாகும்.இல்லையேல்...எந்த வித விளைச்சலுக்கும் உதவாத நிலத்தை சுமந்துக் கொண்டிருக்கும் பூமி நம்மையும் அத்துடன் சேர்ந்து ஒன்றாக சுமப்பது போல பயனற்றவராவோமாம்.

இதையே வள்ளுவர் சொல்கிறார்...

வகையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம் (239)

புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால், இந்தப்பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும்.

Monday, June 3, 2019

வள்ளுவனும்...ஒப்பீடுகளும் - 36

பிச்சை எடுத்து வாழ்வது என்பது ஒரு ஈனத்தொழிலாகக் கருதப்படுவது.

ஆனாலும்...அத்தொழிலைச் செய்தாவது படிக்க வேண்டும். ."பிச்சைப் புகினும் கற்கை நன்றே" என்றனர்.இதற்கு ஒவ்வொருவரும் எப்படியேனும் கல்வி அறிவைப் பெற வேண்டும் என்று அர்த்தம் கொள்ளலாம்.

எது எப்படியாயினும் இரந்து வாழ்வது கொடுமையானது.ஆனால், அதைக்காட்டிலும் கொடுமை ஒன்று உள்ளதாம்.அது என்ன தெரியுமா?

பிறருக்குக் கொடுப்பதால், தன்னிடம் உள்ளது அழிந்துவிடும் என எண்ணி தானே அனுபவிப்பதுதானாம்.

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல் (229)

பிறருக்கு ஈவதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது.

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 35

ஒரு அழகான குடும்பம்

அன்பு மனைவி..ஒரு பெண், ஒரு ஆண் என இரு குழந்தைகள்.குடும்பத் தலைவன் நன்கு சம்பாதிக்கின்றான்.

தேவையில்லா ஆடம்பர செலவுகள் செய்யாது, சிக்கனமாக குடும்பம் நடத்தி..ஒவ்வொரு மாதமும் பணத்தை மிச்சப்படுத்தி, தங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்க சேமிக்கின்றான்

அப்படி வாழும் வாழ்விற்கு இணையாக வேறு ஒன்றும் உள்ளதாம்.

அது, பட்டினி என தன்னை நாடி வந்தவர்களின் பசியினைப் போக்குதலாம்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி (226)

பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது.அதுவே தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும். 

Sunday, June 2, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 34

பிறப்பு என்று இருக்கும்போது இறப்பு என்று ஒன்றும் கட்டாயம் ஆகிறது.

வந்தவர் எல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கு இடமேது? என்கிறார் கவியரசர் கண்ணதாசன் ஒரு பாடலில்.

ஆனாலும்..நம் சொந்தம் ஒருவரோ...முக்கிய நட்போ இறந்துவிட்டால்.."இது எல்லாம் இயற்கை" என்று நம்மால் எண்ணமுடியவில்லை.சோகத்தில் வாடுகிறோம்.அத்துன்பத்திலிருந்து மீள நமக்கு சிறிது காலம் தேவைப்படுகிறது.

ஆனால்.. ஒருவரின் மறைவு நமக்கு ஏற்படுத்தும் துன்பத்தைவிட பெரிய துன்பம் ஒன்றும் உள்ளதாம்.

அது என்ன தெரியுமா?

வறியவர்க்கு நம்மால் எதுவும் வழங்க இயலாத நிலையில் நமக்கு உண்டாகும் துன்பமாம் அது,

சாதலின் இன்னாத தில்லை இனித்தூஉம்
ஈத லியையாக் கடை (230)

சாவு என்பது தரும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது.

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 33

ஒரு தென்னைமரம் இருக்கிறது என்றூ வைத்துக் கொள்வோம்.அதன் அனைத்து பாகங்களும்....மனிதனுக்கு பயன்படும்

அதேபோன்று பனைமரத்தையும் சொல்லலாம்.வாழை மரத்தினையும் சொல்லலாம்.

வேப்ப மரத்தினையும் சொல்லலாம்.அதன் மரப்பட்டை, இலை, பூ எல்லமே மருந்தாகவும் உபயோகப்படுகிறது.

இப்படி ஒரு மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படுவது போல, பிறருக்கு உதவிடும் மனம் இருப்பவனிடம் உள்ள செல்வம் இருக்குமாம்

இதையே..

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின் (217)

என்கிறார் வள்ளுவர்.

பிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம், செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும்.

Saturday, June 1, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 32

அழகிய கிராமம்.

அக்கிராமத்தில் ஒரு பொதுவிடத்தில் மாமரம் ஒன்று.மாம்பழ காலம் வருகின்றது.அம்மாமரத்தில்..மாம்பழம்..பழுத்து குலுங்குகிறது.

அணில்,  கிளி போன்ற புள்ளினங்கள் பழத்தை சுவைக்கின்றன.மக்களும்..கல்லாம் அடித்து..பழத்தை விழச் செய்து..உண்டு சுவைக்கின்றனர்.

பாராபட்சமின்றி அனைவருக்கும் பயன்படுகிறோம் என்று மரம் மகிழ்ச்சியில் அசைகிறது.

இப்படிப் பயன் தருவது போல மற்றொன்றும் இருக்கிறதாம் வள்ளுவனுக்கு,.அது என்ன தெரியுமா?

ஈகைக் குணம் கொண்டவனிடம் உள்ள செல்வமாம்.அதை அவர் தேவைப்படுவொருக்கு வாரி வழ்ங்குவானாம்

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின் (216)

ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்து குலுங்குவது போல அனைவருக்கும் பயன்படும்