Saturday, August 31, 2019

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 20

தெரிந்து தெளிதல் இது அதிகாரம்

ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டு, அவர் தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதிப் புரிந்து கொள்ளலாம் என்றும்..

ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து அமர்த்திக் கொண்டால், அவரால் வருங்காலத் தலைமுறையினருக்கும் நீங்காத துன்பம் விளையும் என்றும் சொல்கிறார்.

அத்துடன் நில்லாது...கீழ்கண்ட குறளினையும் தனது வழக்கமான சொல்விளையாட்டுடன் சொல்கிறார்

தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள் (509)

நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும்.ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பி விடக்கூடாது

தேறற்க,தேராது, தேர்ந்தபின்,தேறுக, தேறும்....வள்ளுவர்க்கு நிகர் வள்ளுவரே  தேர்ந்த உண்மை 

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 19

வலியறிதல் எனும் அதிகாரத்தில் சொல்கிறார்..


ஒரு செயலில் ஈடுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது ஏதுமில்லை.

ஆனால்..தனது வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் உண்டு

வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியுந் தூக்கிச் செயல் (471)

செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை இரு சாரார்க்கும் துணையாக இருப்போரின் வலைமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும்

வினைவலி, தன்வலி, மாற்றான் வலி, துணைவலி...பார்த்தீர்களா தெய்வப்புலவனின் வலிமையை!!!

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 18

நன்கு சிந்தித்தப் பின்னே ஒரு செயலில் ஈடுபட வேண்டும்.ஈடுபட்டப்பின் சிந்திப்போம் என்பது தவறு.

தம் நிலைமைக்கு  மாறான செயல்களை உயர்ந்தோர் பாராட்டமாட்டார்கள் என்பதால், அவர்கள் பழித்துரைக்காத செயல்களையே செய்திடல் வேண்டும்.

செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும் (466)

செய்யக் கூடாததைச் செய்வதால்  கேடு ஏற்படும்.செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்

செய்தக்க,செய, செய்தக்க, செய்யாமை என தெரிந்து செயல்வகை எனும் அதிகாரத்தில் வள்ளுவனின் சொல்விளையாட்டு இது

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 17

அதிகாரம் - பெரியாரைத் துணைக்கோடல்

அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அத்னைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்றும்..
பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும் என்றும் சொல்லு வள்ளுவர்

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் (445)

என்கிறார்.

கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதெ ஆட்சியாளருக்கு நன்மை பயக்கும்.

சூழ்வார், சூழ்வாரை, சூழ்ந்து...பொய்யாமொழியாரின் விளையாட்டு

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 16

அதிகாரம் அறிவுடைமை..

உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்

வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது.

அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள்.அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச்வார்கள்.

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில் (428)

அஞ்சுவது, அஞ்சாமை அஞ்சுவது,அஞ்சல்.. வள்ளுவரின் விளையாட்டு

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 15

செவி வழியாக இன்பம் தரும் செவியுணவு இல்லாத போது சிறிதளவு உணவு வயிற்றுக்கும் கொடுக்கப்படும்

நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

கேள்விச் செல்வம், வழுக்கு நிலத்தில் நடக்கும் போது ஊன்றுகோலாய் பயன்படும்...

இப்படியெல்லாம் கேள்வி எனும் அதிகாரத்தில் சொன்னவர் மேலும் சொல்கிறார்.

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை (411)

செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்

செல்வத்துள்,செல்வம், செவிச்செல்வம்,அச்செல்வம், செல்வத்துள்....ஆஹா....

Friday, August 30, 2019

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 14

அவா அறுத்தல் அதிகாரம்..

ஆசையை விட்டொழிக்க வேண்டும்.

தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும்  .அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும்.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும் (362)

விரும்புவதானால் பிறக்காமலே இருந்திருக்க வேண்டும் என்று ஒருவன் எண்ணுகின்ற அளவிற்கு ஏற்படுகிற துன்பநிலை ,ஆசைகளை ஒழிக்காவிடில் வரும்

வேண்டுங்கால், வேண்டும், வேண்டாமை, வேண்ட... வள்ளுவரின் விளையாட்டு..

அடுத்து

அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார்
அற்றாக அற்ற திலர் (365)

ஆசை அனைத்தையும் விட்டவரே துறவி எனப்படுவார்.முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்.

அற்றவர்,அற்றார்,அற்றாக, அற்றது....

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 13

துறவு அதிகாரத்திலேயே வள்ளுவரின் மேலும் சில சொல் விளையாட்டுகளைப் பார்ப்போம்

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு (347)

பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன

(பற்றிவிடா,பற்றினை, பற்றிவிடா)

மேலும் சொல்கிறார்...

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு (350)

எதிலும் பற்றில்லாதவராக யார் இருக்கின்றாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ள வேண்டும்.துறவறத்தினர் தம் பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை நிற்கும்

(பற்றுக,பற்றற்றான்,பற்றினை,பற்றுக, பற்று...)

வள்ளுவரின் சொல்விளையாட்டு- 12

ஒருவனைத் துன்பம் துளைத்தெடுக்காமல் இருக்க வேண்டுமாயின், எல்லாம் இருக்கும் போதே அவற்றைத் துறந்து விடுவானேயானால், அவன் உலகில் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும்.

எதன் மீதும் பற்று இல்லாதிருத்தலே துறவுக்கு ஏற்றதாகும்.ஒன்றின் மேல் பற்று வைப்பினும்,அது மேன்மேலும் பற்றுகளைப் பெருக்கி மயங்கச் செய்துவிடும்.

துறவு எனும் அதிகாரத்தில் இப்படியெல்லாம் சொன்னவர் மேலும் சொல்கிறார்.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் (341)

ஒருவன் பலவகையான பற்றுகளில் எந்த ஒன்றினை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம் அவனை அணுகுவதில்லை

யாதனின், யாதனின், அதனின், அதனின் ..வள்ளுவரின் சொல்விளையாட்டு 

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 11

பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாது.ஒருவருக்குத் தீங்கு விளைவித்து விட்டோம் என ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே,அதே போன்ற தீங்கு அவரையே தாக்கும்.

இன்னா செய்யாமை அதிகாரத்தில் இப்படிச் சொல்பவர்..சொல்கிறார்...

நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்
நோயின்மை  வேண்டு பவர் (320)

தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்.எனவே தீங்கற்ற வாழ்வினை விரும்புபவர்கள், பிறருக்குத் தீங்கிழைக்கக் கூடாது

நோயெல்லா, நோய்செய்தார்,நோய்செய்யார். நோயின்மை..அடடா...என்னே ஒரு சொல் விளையாட்டு 

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 10

உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால், எண்ணியவற்றையெல்லாம் அவனால் உடனடியாகப் பெற முடியும்

என்று சொன்னவர்...மேலும் சொல்கிறார்..

ஒருவன் தன்னத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தை கைவிட வேண்டும்.இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.

வெகுளாமை அதிகாரத்தில் வருபவை இவை.

இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை (310)

எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார்கள்.சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவர்

இறந்தார், இறந்தார்,துறந்தார்,துறந்தார்...வியக்க வைக்கிறது அல்லவா?

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 9

வாய்மை எனும் அதிகாரத்தில் சொல்கிறார்..

பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை.என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும்

மேலும் சொல்கிறார்..

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று (297)

செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும்

பொய்யாமை,பொய்யாமை, செய்யாமை, செய்யாமை..கவனித்தீர்களா?

நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமெ நீங்கும்.மனம் அழுக்குப் படாமல் தூய்மையுடன் விளங்கிட சொல்லிலும், செயலிலும் வாய்மை வேண்டும்

என்றவர்...

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு (299)

என்கிறார்.

புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளினைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தவன் எனக் காட்டும் ஒளிவிளக்காகும்

விளக்கும், விளக்கு,விளக்கே, விளக்கு !!!!!! 

Thursday, August 29, 2019

வள்ளுவரும் சொல்விளையாட்டும் - 8

ஒவ்வொருவரும் புகழுடன் விளங்க வேண்டுமாம்.புகழ் எனப்படுவது உயிர் போலவாம்.உகழ் எனப்படும் உயிர் இல்லாத மனித உடலைச் சுமந்தால், இந்தப் பூமி நல்ல விளைச்சலில்லாத நிலமாகக் கருதப்படுமாம்

நம் காலத்திர்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழினைப் பெறாவிட்டால்,அது அந்த வாழ்க்கைக்கே வந்த பழி என வையம் கூறும்

மேலும் சொல்கிறார்..

நாம் ஏதேனும் ஒரு துறையினில் ஈடுபட விரும்பினால்,அத்துறையில் ஈடுபட்டு புகழுடன் விளங்க வேண்டும்.இல்லாதவர்கள் அத்துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று (236)

புகழ் எனும் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள இக்குறளில் ..தோன்றின்,தோன்றுக,தோன்றலின், தோன்றாமை என தமிழ் விளையாடுகிறது அல்லவா?

இதே அதிகாரத்தில் மற்றொரு குறளில் சொல்கிறார்

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர் (240)
என்கிறார்.

பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும்.புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்.

வசையொழிய, இசையொழிய என சொல்விளையாட்டில் இடுபட்டவர் தொடர்ந்து வாழ்வாரே,வாழ்வார்,வாழ்வாரே,வாழாதவர் என்றும் தன் விளையாட்டினை இக்குறளில் தொடர்ந்துள்ளார்

வள்ளுவரும் சொல்விளையாட்டும் - 7

ஈகை எனும் அதிகாரத்தில் வள்ளுவர் சொல்கிறார்..

இல்லாதவர்களுக்கு வழங்குவதே ஈகப் பண்பாகும்.மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஒரு ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.

நாம் வறுமையில் வாடினாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் பிறருக்கு ஈவது உயர்ந்த குடிப்பிறப்பவரின் பண்பாகும்

இப்படிச் சொன்னவர் மேலும் சொல்கிறார்//

ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின் (225)


பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பினைகடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்தாகும்.

ஆற்றுவாராற்றல், பசியாற்றல்,மாற்றுவாராற்றல்...சொல்விளையாட்டு

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 6

தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்.தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்

மறந்தும் கூட மற்றவருக்குக் கேடு நினைக்கக் கூடாது.

தீயவை,தீய,தீயவை,தீயினும் என கிழ்கண்ட குறளில் வள்ளுவரின் விளையாட்டினை ரசியுங்கள்.

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும் (202)

தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையாகக் கருதி அவற்றை செய்திட அஞ்சிடவேண்டும்


Wednesday, August 28, 2019

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 5

பயனற்றவற்ரைச் சொல்லிப் பயன் பெற எண்ணுபவர்கள், மனிதன் என்பதைவிட ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.

மாசற்ற அறிவுடையார் மறந்தும் பயனற்றவற்றைச் சொல்ல மாட்டார்கள்

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல் (200)

பயனளிக்காத சொற்களை விடுத்து மனதில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையெ கூற வேண்டும்..

சொல்லுக, சொல்லிற்,சொல்லற்க, சொல்லிற், சொல்
என்னே ஒரு சொல் விளையாட்டு!!

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 4

ஒருவர் நமக்குச் செய்த கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்ரு விட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது.

எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு.ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை..

என்றெல்லாம் சொன்ன வள்ளுவர் மேலும் சொல்கிறார்...

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று (108)

என.
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல.அவர் தீமைசெய்திருந்தால் அதை மட்டும் அக்கணமெ மறந்து விடுவது நல்லது.

நன்றி,நன்றன்று,நன்றல்லது, நன்று  என்ற சொல்விளையாட்டை ரசிப்போம் 

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 3

விருந்தினரை வெளியே விட்டு விட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும், அதைத்தான் மட்டுமே உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல என்றும்.

விருந்தினரை நாள் தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை என்றும்

'விருந்தோம்பல்" அதிகாரத்தில் சொன்னவர்..மேலும் சொல்கிறார்....

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு (80)

என்று..

வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய  விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்.

செல்விருந்து, வருவிருந்து,நல்விருந்து....தமிழ் விளையாட்டு.


Tuesday, August 27, 2019

வல்லுவரின் சொல் விளையாட்டு - 2

சான்றோர் எனபப்டுபவர்கள் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு கொண்டு அருள் பொழிவர்.அவர்கள் பெருமை இவ்வுலகில் அழியாது நிலைத்து நிற்கும்.

அவர்கள்கோபப்படமாட்டார்கள்.அப்படியே அவர்களுக்கு கோபம் வருமாயின் அக்கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.

இப்படி சான்றோர் பெருமைகளை  நீத்தார் பெருமை எனும் அதிகாரத்தில் சொல்லியுள்ள வள்ளுவர்..சான்றோரை கீழே  குறிப்பிட்டுள்ள குறளில் பெரியோர் என்கிறார்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார் (26)

செயற்,செய்வர்,சிறியர்,செயற்,செய்கலாதார் என தமிழில் விளையாடுகிறார்

பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்து விட முடியும்.

Monday, August 26, 2019

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 1


வள்ளுவர் ஒன்றே முக்கால் அடியில் ..பல வரிகளில் சொல்ல வேண்டிய கருத்துகளை, அறிவுரைகளை, நீதிபோதனைகளைக் கூறியுள்ளார்.

தவிர்த்து...அவரின் சொல் விளையாட்டு பல குறள்களில் நம்மை வியக்க வைக்கின்றது.

அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக இனிக் காண்போம்.தமிழை ரசிப்போம்.

இனி வான் சிறப்பு எனும் அதிகாரத்தில் இருந்து ஒரு குறள்

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை.... 

இது சாதாரணமாக...திருக்குறள் தெரியுமா?  எங்கே ஒரு குறள் சொல்லுங்கள்..என்றால், நம்மில் 90 விழுக்காடு இக்குறளைத்தான் சொல்வோம்.ஆனால்..இதற்கான அர்த்தம் எவ்வளவு பேருக்குத் தெரியும்?
இக்குறளுக்கான பொருள் என்ன? பார்ப்போம்..

இது என்ன  ஒரே துப்பா இருக்கின்றது ..என்கிறீர்களா?

அந்தத் துப்பாக்கள் ஏந்தி வரும் அர்த்தம் என்ன?..

இன்று  பருவ மழை பொய்த்ததால்..விளை நிலங்கள் வறண்டு காணப்படுகின்றன.நெல் சாகுபடி செய்வது கடினம்...என்றெல்லாம் படிக்கிறோம்..பார்க்கிறோம்..

மழை...மக்களுக்கு உணவுப்பொருள்களை விளைவித்துத் தர முக்கியமாய் பயன்படுகிறது.

அதே மழை தரும் நீர், மக்களுக்கு குடிநீராகவும் ஆகி..மக்களை வாழ்விக்கிறது.

இப்படி பெரிய தியாகத்தை செய்யும் அம்மழை...நான் அதைச் செய்தேன்..இதைச் செய்தேன் மக்களுக்கு என அரசியல் பண்ணுவதில்லை.இதைத்தான் இக்குறள் சொல்கிறது.

இனி....மேற் சொன்ன குறளுக்கான உரை-

மக்களுக்கு உணவுப்பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ,அவர்களுக்கே அம்மழை அருந்தும் உணவாகும் ஆகிய தியாகத்தையும் செய்கிறது.

(துப்பார்க்கு = உண்பார்க்கு துப்பாய = உணவு ஆகி துப்பு ஆக்கி = உடலை வலிமைப் படுத்துகிறது. துப்பார்க்கு = அனுபவிக்கும் அறிவுள்ளார்க்கு துப்பாய = பொலிவு வலிமையுடன் தூய்மையான உடலையும் உண்டாக்குகிறது. துவும் மழை = தூய்மையாகப் பெய்கிற மழை. சொல் விளக்கம்: துப்பார் = உண்பவர், துப்பு = அறிவு, அனுபவம், உணவு, தூய்மை, நன்மை, பொலிவு, வலிவு; துப்புஆக்கி - என்பதே துப்பாக்கி ஆயிற்று, து =து என்றால் தூய்மை; உம் - ஒரு சிறப்புப் பொருள். முற்கால உரை: உண்பவர்க்கு நல்ல உணவுகளை உண்டாக்கி, அவற்றை உண்கின்றார்க்குத் தானும் உணவாவது மழையாகும். தற்கால உரை: உண்பவர்க்கு வேண்டிய உணவுப் பொருளை உண்டாக்கி உண்பவர்க்குக் குடிநீர் என்னும் உணவாகி இருப்பதும் மழையேயாம்)

Wednesday, August 14, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 186

காதலரிடையே மலர்ந்துள்ள நல்லன்பு சற்று வாடுவதற்கு, ஊடுதல் காரணமாய் இருந்தாலும் அதனால் விளைகின்ற சிறு  துன்பமும் பெருமையுடையதாம்.

அன்புடன் கூடியிருக்கும் காதலர்களின் ஊடல் நிலத்தோடு நீர் கலந்தது போலவாம்

புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து (1323)

நிலத்தோடு நீர் கலந்தது போல அன்புடன் கூடியிருக்கும் காதலரிடத்தில் ஊடல் கொள்வதைவிட புதிய உலகம் வேறொன்று இருக்க முடியுமா?

தவறே செய்யாத நிலையிலும், தன் உள்ளம் கொள்ளை கொண்டவளிடம் ஊடல் கொள்வதில் கூட ஓர் இனபம் உள்ளதாம்

உணவு அருந்துவதை விட, அருந்திய உணவு செரிப்பதிலே ஒரு சுகம் உண்டு அதுபோல உடலுறவைவிட ஊடல் கொள்வதிலேயே காதலர்க்கு ஒரு சுகம் உணடாம் 

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 185

ஊடல் கொண்டிருந்த போது அவர் தும்மினார்.ஊடலை விடுத்து அவரை "நீடூழி வாழ்க' என வாழ்த்துவேன் என எண்ணி...என்கிறாள் காதலி

அன்புள்ளவர்களிடம் தான் ஊடல் இன்பமானதாக இருக்குமாம்

அதற்கு எதை ஒப்பீட்டு சொல்கிறார் தெரியுமா?

நிழலுக்கு அருகில் உள்ள நீரை.அந்நீர்தான் குளிர்ந்து இனிமையாய் இருக்குமாம்

நீரும் நிழல தினிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது (1309)

நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும்.அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும் ஊடல்தான் இன்பமானதாக இருக்கும்

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 184

காதலரிடையே ஊடல்.இதனால் அவர்களின் இன்பமான காலத்தில் அளவு குறைந்துவிடுமே என்ற ஒருவகைத் துன்பமும் அவர்களுக்கு ஏற்படுமாம்.

காதல் வாழ்க்கையில் பெரும்பிணக்கும், சிறுபிணக்கும் அவ்வப்போது ஏபட வேண்டுமாம்.அபப்டியில்லை எனில் அது எப்படிப்பட்டது போலாகுமாம் தெரியுமா?

முற்றிப் பழுத்து உபயோகமின்றி அழகிய பழம் போலவும் (பெரும்பிணக்கு), முற்றாத இளம் பிஞ்சு போலவும் (சிறுபிணக்கு)  ஆகுமாம்

துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று (1306)

பெரும்பிணக்கும், சிறுபிணக்கம் ஏற்பட்டு இன்பம் தரும் காதல் வாழ்க்கை அமையாவிட்டால் அது முற்றிப் பழுத்து அழுகிய பழம் போலவும், முற்றாத இளம் பிஞ்சைப் போலவும் பயனற்றதாகவே இருக்கும்.

Tuesday, August 13, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 183

மலர் விழி  மகளிர் நெஞ்சில் விளையும் ஊடலே பண்பார்ந்த நல்ல காதலர்க்கு அழகு சேர்க்கும்..என்னும் வள்ளுவர் விழிகளை மலருக்கு ஒப்பிடுகிறார் ஒரு குறளில்

அடுத்து...

ஒரு கொடி வாடியிருக்கிறது.அதன் அடிப்பகுதியை அறுத்தால் என்னவாகும் அதுபோலவாம் ஊடல்புரிந்து பிணங்கி இருப்பவரிடம் அன்பு செலுத்தாமல் விலகியே இருப்பது

ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று(1304)

ஊடல் புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும்.  

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 182

காதலில் ஊடலுக்கு ஒரு சிறப்பு இடமுண்டு.

ஊடல் காதலினை வளர்க்கும்.ஆனால் அவ்வூடல் ஓரளவுடன் இருக்க வேண்டும்.அப்படியின்றி கால அளவு நீடித்தால்..அக்காதலே கேள்விக்குறியாகிவிடலாம்.

ஊடலுக்கும், கூடலுக்கும் இடையில் உள்ள காலம் உணவில் இடும் உப்பு போல ஓரளவே இருக்க வேண்டுமாம்.வள்ளுவனின் ஒப்பீட்டினைப் பாருங்கள்..

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல் (1302)

ஊடலுக்கும், கூடலுக்கும் இடையில் உள்ள காலம் உணவில் இடும் உப்பு போல் ஓரளவுடன் இருக்க வேண்டும்.அந்தக் கால அளவு நீடித்தால் உணவில் உப்பு மிகுதியானதற்கு ஒப்பாக ஆகிவிடும்

ஊடல் கொண்டவரின் ஊடல் நீக்கித் தழுவாமல் விடுதல் என்பது, ஏற்கனவே துன்பத்தால் வருந்துவோரை மேலும் துன்பத்திற்கு ஆளாக்கி வருத்துவதாகுமாம்

அலைந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல் (1303) 

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 181

நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனத் தெரிந்தும், என் நெஞ்சே! அவரையே நாடிச் செல்கின்றாயே ஏன்? என்கிறாள் காதலி.

உடுக்கை இழந்தவன் கை போல நண்பனுக்கு இடுக்கண் வந்தால் அதைப் போக்க உதவுவது கைகள் என்பது..பொய்த்துவிடுமோ என அஞ்சுகிறாள்..

கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ
பெட்டங் கவர்பின் செலல் (1293)

நெஞ்சே! நீ என்னை விடுத்து அவரை விரும்பிப் பின் தொடர்ந்து செல்வது, துன்பத்தால் அழிந்தோர்க்கு நண்பர்கள் துணையிருக்க மாட்டார்கள் என்று சொல்வது போலவா?

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 180

மது அருந்தினால்தான் இன்பம்.ஆனால் காதல் நினைத்தாலே இன்பமாம் .

காதலர்களுக்கிடையே காதல் பனையளவாகப் பெருகிடும் போது ஊடலும் தினையளவாவது இல்லாமல் இருக்காதாம்.

காதலன் பிரிந்து செல்கிறான்..பின்னர் அவனைக் காணும்போது அவன் பிரிந்து சென்ற குற்றத்தை காதலி மறந்துவிடுகிறாளாம்.எதுபோல தெரியுமா..கண்ணில் மைதீட்டிக் கொள்ளும் பொழுது அந்த மை தீட்டும் கோல் காணாமல் போனதுபோலவாம்

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து (1285)

அடுத்து..

காதலனுடன் ஊடல் கொள்கிறாள்..ஆனால் அந்த ஊடலால் பலன் ஏதும் இருக்கப் போவதில்லை என அறிந்தும்.இது எப்படியிருக்கிறது என்றால்..வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும் நீரில் குதிப்பவரைப் போலவாம்.

உய்த்தல் அறிந்து புனல்பாய்  பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலத்து (1287)

மேலும் சொல்கிறார்

காதல் இன்பம் மலரைவிட மென்மையானதாம்.அதனை அதே மென்மையுடன் நுகருபவர்கள் சிலரே ஆவார்கள்

மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார் (1289) 

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 179

கண் நிறைந்த அழகும், மூங்கில் போன்ற தோளும் என காதலியின் தோள்களை மூங்கிலுக்கு ஒப்பிடும் வள்ளுவர்..

பெண்ணின் அழகுக்கு உள்ளே ஒன்று உள்ளதாம்.அது எதுபோலவாம் தெரியுமா? மணிகள் கோர்த்த மாலையின் உள்ளே மறைந்திருக்கும் நூல் போலவாம்

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன் றுண்டு (1273)

மணியாரத்துக்குள் மறைந்திருக்கும் நூலைப்போல இந்த மடந்தையின் அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உள்ளது

ஒரு பெண்ணின் புன்னகைக்குள் காதலனைப் பற்றிய நினைவு உள்ளதாம் எதுபோல தெரியுமா? மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பதைப் போலவாம்.

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு (1274)

மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பதுபோல் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்ரிய நினைவும் நிரம்பியிருக்கிறது

Monday, August 12, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 178

காதல் வேட்கை இரக்கமே இல்லாததாம்.ஏனெனில், அது நள்ளிரவிலும் நெஞ்சில் ஆதிக்கம் செலுத்தி அலைக்கழிக்குமாம்.

ஒரு கோடாரி, தாழ்ப்பாள் போடப்பட்ட கதவினை எப்படி உடைத்தெறிகிறதோ அதுபோல காதல் வேட்கை , மன அடக்கத்தையே வெட்டி வீழ்த்துகிறதாம்.

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு (1251)

காதல் வேட்கை, ஒரு கோடாரியாக மாறி, நாணம் எனும் தாழ்ப்பாள் போடப்பட்ட மன அடக்கம் என்னும் கதவினையே உதைத்தெறிந்து விடுகின்றது.

மேலும் சொல்கிறார்...

நமக்கு தும்மல் வருகின்றது.எவ்வளவுதான் அடக்க முயன்றாலும் அது நம்மையும் மீறி வெளிப்படுகிறதே அதுபோலவாம் காதல் உணர்ச்சி.என்னதான் மறைத்தாலும் காட்டிக் கொடுத்துவிடுமாம்

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும் (1253)

அடுத்து..
நெருப்பில் இட்ட கொழுப்பினைப் போல உருகிடும் நெஞ்சம் என்கிறார் இக்குறளில்..

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ
புணர்ந்தூடி நிற்போம் எனல் (1260)

நெருப்பிலிட்ட கொழுப்பினைப்போல உருகிடும் நெஞ்சம் உடையவர்கள், கூடிக் களித்தபின் ஊடல் கொண்டு அதில் உறுதியாக இருக்கமுடியுமா?

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 177

காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து மாலையில் மலரும் ஒரு நோயாகுமாம்.



காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய் (1227)

மாலையில் காதலர் பிரிந்துள்ள நிலையில், ஒரு மாடுமேய்ப்பவன் புல்லாங்குழல் வாசிக்கின்றானாம்.அந்த புல்லாங்குழலோசை காதலிக்கு அவளைக் கொல்ல நினைக்கும் படைக்கருவியின் ஓசை போல உள்ளதாம்.

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை (1228)

காதலர் பிரிவால் என்னைத் தணலாகச் சுடுகின்ற மாலைப் பொழுதை அறிவிக்கும் தூதாக வருவது போல வரும் ஆயலின் புல்லாங்குழலோசை என்னைக் கொல்லும் படைக்கருவியின் ஓசை போல அல்லவா காதில் ஒலிக்கிறது.

வள்லுவரும் ஒப்பீடுகளும் - 176

மயக்கம் தரும் மாலைப்பொழுது.

காதலரைப் பிரிந்து காதலி தவிக்கின்றாள்.அவனை இரக்கமற்றவன்  என்கிறாள்..அதற்குத் துணையாக மாலைப்பொழுதையும் துணைக்கு இழுக்கின்றாள்

மயங்கும் மாலைப் பொழுதே!நீயும் எம்மைப்போல துன்பப்படுகிறாயே!எம் காதலர் போல உன் துணையும் இரக்கமற்றதோ?! என்கிறாள்.

அதே மாலைப்பொழிதினை எப்படி இருக்கிறது என்றும் சொல்கிறாள்

 காதலர் பிரிந்திருக்கும் போது வரும் மாலைப்பொழ்து, கொலைக்களத்தில் பகைவர் வீசும் வாளினைப் போல இருக்கிறதாம்.

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்
தேதிலர் போல வரும் (1224)

காதலர் பிரிந்திருக்கும்போது வருகின்ற மாலைப்பொழுது கொலைக்களத்தில் பகைவர் ஓங்கி வீசுகின்ற வாளைப்போல  வருகிறது

Sunday, August 11, 2019

வள்ளுவரும்..ஒப்பீடுகளும் - 175

சாதாரணமாக கள் உண்பவர்கள் போதைத் தரும் இன்பத்திற்காக உண்பதாகக் கூறுவர்.

ஆனால்...கள் உணாடாக்கும் போதையைவிட இன்பம் தரக்கூடியது ஒன்று உண்டாம்.அது காதல் இன்பமாம்

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது (1201)

உண்டபோது மட்டும் மகிழ்ச்சியினைத் தரும் கள்ளினை விட நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும்

காதலன், காதலியைப் பிரிந்து சென்றுள்ளான்.மாலை நேரம் அவளை வாட்டுகிறது.அவளுக்கு அவளது உயிரைக் குடிக்கும் வேலாக மாலைப்பொழுது தெரிகின்றதாம்

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது (1221)

நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும் மகளிர் உயிரைக் குடிக்கும் வேலாக இருப்பதற்காக உனக்கோர் வாழ்த்து

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 174

காதல்....

ஆண், பெண் எனும் இருவரிடத்திலும் மலர வேண்டும்.அப்படியில்லாமல்..ஒரு தலைக்காதல் என்பது எது போலவாம்...தெரியுமா?

காவடி எடுப்பவர்களின் , காவடித் தண்டில் இரண்டு பக்கங்களிலும் ஒரே அளவு கனம் இருக்க வேண்டுமாம்.இல்ல்லாவிடின் சுமப்பது கடினமாய் அமையுமாம்.அதுபோலத்தான் ஒருதலைக்காதல் என்கிறார்.

ஒருதலையான் இன்னாது காமங்காப் போல
இருதலை யானும் இனிது (1196)

காவடித் தண்டின் இரு பகக்ங்களும் ஒரே அளவு கனமாக இருப்பது போல, காதலும் ஆண்,பெண் எனும் இருவரிடத்திலும் மலர வேண்டும்.ஒரு பக்கம் மட்டுமே ஏற்படும் காதலால் பயனுமில்லை..துயரமும் உருவாகும்.

கடலைத் தூர்ப்பது என்பது எவ்வளவு இயலாத காரியம்.ஆனால் அது கூட எளிதானதாம்..பின் அதைவிட கடினமானது என்ன என்கிறார்?

அன்பில்லாதவரிடம் துன்பத்தினைச் சொல்லி ஆறுதல் பெற எண்ணுவது..

உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு (1200)

நெஞ்சமே! நீ வாழ்க! உன்னிடம் அன்பு இல்லாதவரிடம் உனது துன்பத்தைச் சொல்லி ஆறுதல் பெறுவதைக் காட்டிலும் கடலைத் தூர்ப்பது எளிதான வேலையாகும் 

Saturday, August 10, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகலும் -173

தலைவி விரும்பிக் காதல் கொள்வது போல, தலைவன் அவளை விரும்பிக் காதல் கொள்ளாத நிலையில், அவரால் தனக்கு என்ன இன்பம் கிடைக்கப் போகிறது என நினைப்பாளாம்

விரும்பப்படாத நிலை ஏற்படின் அந்தக் காதலர் நட்புணர்வு இல்லாதவராகவேக் கருதப்படுவார்

நம்மால் விரும்பப்படும் காதலர், தம்மை விரும்பிகின்ற பேறுபெற்றவர் எதுபோன்ற வாழ்க்கைப்பலனை பெறுவார்களாம் தெரியுமா?  விதையில்லா பழத்தைப் போலவாம்

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி (1191)

தம்மால் விரும்பபப்டும் காதலர், தம்மை விரும்புகிற பேறு பெற்றவர் விதையில்லா பழத்தைப் போன்ற காதல் வாழ்க்கையின் பயனைப் பெற்றவர் ஆவர்.

Friday, August 9, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகளும் -172

காதலர் பொருளீட்ட காதலையை விட்டுச் சென்று விட்டார்.அந்தத் தற்காலிகப் பிரிவும் காதலிக்கு பசலை நிறந்தை மேனியில் உண்டாக்கிவிடுமாம்.

அதேபோல உடலில் பசலை நிறம், காதலன் இறுகத் தழுவிய பின்னர் அவனது பிடி சற்றுத் தளர்ந்தாலும் காதலிக்கு பசலை நிறம் படர்ந்துவிடுமாம்.இது எது போல என்றால்...விளக்கின் ஒளி சற்றே குறைந்தாலும் உடனே பரவிடும் இருள் போலவாம்.

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு (1186)

விளக்கின் ஒளி குறையும் சமயம் பார்த்துப் பரவிடும் இருளைப்போல, இறுகத் தழுவிய காதலனின்பிடி, சற்றுத் தளரும்போது காதலியின் உடலில் பசுமைநிறம் படர்ந்து விடுகிறது










வள்ளுவரும்..ஒப்பீடுகளும் - 171

நள்ளிரவு....கடும் வெள்ளம்..தனியாளாக அதன் கரையை கடக்கமுடியாத நபர் போல...நள்ளிரவில்..துணையின்றி தனியாய் நிற்கின்றாள்..காதலின்பக் கடும் வெள்ளத்தில் நீந்தமுடியாமல் தவிக்கின்றாளாம்

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன் (1167)

நள்ளிரவிலும் என் துணையின்றி நான் மட்டுமே இருக்கின்றேன்.அதனால் காதலின்பக் கடும் வெள்ளத்தில் நீந்தி, அதன் கரையைக் காண இயலாமல் கலங்குகின்றேன்

அதேபோல அடுத்த குறளில் சொல்கிறார்..

காதலர் இருக்குமிடத்திற்கு  என் நெஞ்சத்தைப் போல செல்லமுடியுமானால் (காதலின் நெஞ்சத்தில் குடியிருக்கிறாள் எனக் கொள்ளலாம்), என் கருவிழிகள், அவரைக் காண்பதற்குக் கண்ணீர் வெள்ளத்தில் நீந்த வேண்டிய அவசியமில்லை

உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோவென் கண் (1170)


வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 170

காதலை கடலுடன் ஒப்பிட்டு..காதல் கடல் போல சூழ்ந்து கொண்டிருக்கிறது என்றவர்..கடலைக் கடக்க தோணி உண்டு,ஆனால் காதல் கடலைக் கடக்க பாதுகாப்பான தோணி கூட இல்லை என்கிறார்.

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல் (1164)

காதல் கடலைப் போல சூழ்ந்து கொண்டு வருத்துகிறது.ஆனால் அதை நீந்திக் கடந்து செல்லப் பாதுகாப்பான தோணிதான் இல்லை..

காதலையும்..கடலையும் அடுத்து வரும் குறளிலும் ஒப்பிடுகிறார்.

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது (1166)

காதல் இன்பம் கடல் போன்றது.காதலர் பிரிவு ஏற்படுத்தும் துன்பமோ., கடலைவிடப் பெரிது

Wednesday, August 7, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 169

ஊற்று நீரானது இறைக்க இறைக்க பெருகும்.இறைக்கின்ற ஊற்றே சுரக்கும் என்பர்.அதுபோலத்தான் காதலாம்.அதனை மறைக்க  மறைக்க பெருகுமாம்

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்
கூற்றுநீர் போல மிகுமே (1161)

இறைக்க இறைக்க பெருகும் ஊற்று நீர் போல ,பிறர் அறியாமல் மறைக்க மறைக்கக் காதல் நோயும் பெருகும்

காவடி சுமப்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா.அவர்கள் சுமை இரண்டு பக்கமும்  இருக்கும்.அதுபோலவாம் காதல் நோயும்.

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென்
நோனா உடம்பின் அகத்து (1163)

பிரிவைத் தாங்க முடியாது உயிர் துடிக்கும் என் உடலானது,ஒருபுறம் காதல்நோயும் மறுபுறம் அதனை வெளியிட முடியாத நாணமும் கொண்டு காவடி போல விளங்குகின்றது 

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 168

காதலன், காதலையை விட்டுப் பிரிகிறான்.அவனின் பிரிவினை எண்ணி எண்ணி காதலி இளைக்கிறாள்.அவளது கை மூட்டிலிருந்து வளையல்கள் கழன்று விழும் நிலை.இதையெல்லாம் பார்க்கும் ஊரார் தூற்றும் நிலை ஏற்படுகிறதாம்.

அதுவாவது பரவாயில்லை..

ஒருவரை ஒருவர் காணாமலும், தொடாமலும் பிரிந்திருக்கும் போது உண்டாகும் காதல் நோய்.உடலையும் ,உள்ளத்தையும் சுடுகின்றதாம்.ஆனால் இந்த சூடு என்பது நெருப்பினால் இல்லையாம்.நெருப்பு தொட்டால் தான் சுடுமாம்.இவர்கள்  நெருப்பு பிரிவில் சுடுகின்றதாம்.

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ  (1159)

ஒருவரை ஒருவர் காணாமலும் தொடாமலும் பிரிந்திருக்கும் போது காதல் நோய் உடலையும், உள்ளத்தையும் சுடுவது போன்ற நிலை நெருப்புக்கு இல்லை.நெருப்பு தொட்டால் சுடும்.இது பிரிவில் சுடுகின்றதே!

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 167

எரியும் நெருப்பில் நெய்யினை ஊற்றினால் என்னவாகும்?
அந்நெருப்பு மேன்மேலும் கொழுந்துவிட்டு எரியும்.அதுபோல ஊராரின் பழிச்சொல்லால் காதல் உணர்வை அடக்கிடலாம் என எண்ணுவது, அக்காதல் வளரவே உதவும்

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல் (1148)

ஊரார் பழிசொல்லிற்கு பயந்து காதல் உணர்வு அடங்குவது என்பது எரிகின்ற தீயை நெய்யினை ஊற்றி அணைப்பதற்கு முயற்சி செய்வதைப் போன்றதாகும்


வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 166


சந்திர கிரகணம் என்பதை சந்திரனை பாம்பு விழுங்குவதாக படிக்காத, மூடநம்பிக்கை உள்ளவர்கள் கூறுவர்.

அதுபோல காதலரை சந்தித்தது ஒரு நாள் என்றாலும், அந்நிகழ்வு பல நாட்களாக நடக்கும் நிகழ்வாக ஊர் முழுவதும் பரப்பப்படுமாம்

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று (1146)

காதலரை சந்தித்துக் கொண்டது ஒருநாள் என்றாலும் சந்திரனை பாம்பு விழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்படும் கிரகணம் எனும் நிகழ்வினைப்போல, அந்தச் சந்திப்பு ஊர்முழுதும் அலராகப் பரவியது

ஒருவரை ஒருவர் விரும்பி மலரும் காதலுக்கு ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்கள் எருவாகவும்,காதலரின் அன்னைமாரின் கடுஞ்சொற்கள் நீராகவும் ஆகி அக்காதல் எனும் பயிர் வளரவே பயன்படுமாம்

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய் 91147)

ஒருவரை ஒருவர் விரும்பி மலர்ந்த காதலானது ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்களை எருவாகவும் அன்னையின் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு வளருமே அன்றி கருகிப் போய்விடாது

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 165

மலர்விழியாளுக்கு  காதலின் மாண்பினை உணராமல் ஊரார் பழித்துரைத்தால் அதுவே மறைமுக உதவியாய் இருக்குமாம்.

ஊரார் தூற்றுவதால் காதல் வளருகிறதாம்.இல்லையேல் காதல்கொடி வளமிழந்து வாடிவிடுமாம்.

கள் உண்பவன் சிறிது நாளில் கள்ளினையே விரும்பி அதை உண்பதை விடமுடியாதது போன்றதாம் காதல்.அது வெளிப்பட வெளிப்பட இனிமையாக இருக்குமாம்

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது (1145)

காதல் வெளிப்பட வெளிப்பட இனிமையாக இருப்பது கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளினையே விரும்புவது போன்றதாகும் 

Monday, August 5, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 164

வெள்ளம்..பெரு வெள்ளம்..அப்போது அதில் மாட்டிக் கொள்ளும் தோணிகள் அடித்துச் செல்லப்படும்.அந்த அளவு வலிமையை கொண்டது வெள்ளம்.

அதுபோல காதல் எனப்படும் பெருவெள்ளம், ஆண்மையை அடித்துச் சென்றுவிடுமாம்

காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மைஎன்னும் புணை (1134)

காதல் பெருவெள்ளமானது நாணம்,நல்ல ஆண்மை எனப்ப்டும் தோணிகளை அடித்துக்கொண்டு போய்விடும் வலிமை வாய்ந்தது

கீழே சொல்லியுள்ள குறளில் காதலை கொந்தளிக்கும் கடலுக்கு ஒப்பிடுகிறார்

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில் (1137)

கொந்தளிக்கும் கடலாகக் காதல் நோய் துன்புறுத்தினாலும் கூடப்  பொறுத்துக் கொண்டு மடலேறாமல் இருக்கும் பெண்ணின் பெருமைக்கு நிகரில்லை

(மடல் ஊர்தல் (மடலூர்தல்) என்பது சங்ககால வழக்கங்களில் ஒன்று. இதனை மடலேறுதல் என்றும் கூறுவர். தலைவன் தான் விரும்பிய தலைவியை அடைவதற்காக மடலூர்தல் வழக்கம். காதலில் தோல்வியுற்ற சங்ககாலத் தலைவன், ஊரார் தன் காதலை உணரும் பொருட்டு மேனியில் சாம்பலைப் பூசிக் கொண்டு யாரும் சூடாத எருக்கு போன்ற மலர்களைச் சூடிக் கொண்டு பனைமரத்தின் அகன்ற மடல்களால் செய்யப்பட்ட குதிரை ஒன்றில் ஊர்ந்து காண்போர் கேட்கும் வண்ணம் தலைவியின் பெயரைக் கூவிக்கொண்டு செல்தல் ஆகும். இது இழிவான ஒன்றாக கருதப்படுகிறது. எனவே தன்னைச் சந்திக்க மறுக்கும் தலைவியிடம் தோழி மூலம் நான் மடலேறி விடுவேன் என்ற காமம் மிகுந்த தலைவன் சொல்வது உண்டு. காமம் மிகுந்த ஆடவர்க்கு மட்டுமே மடலேறுதல் உண்டு. பெண்கள் மடலேறியதாய் சங்கப்பாடல்கள் இல்லை. என்ன நிலை சேர்ந்தாலும் பெண் இந்த வழக்கத்தை மேற்கொள்வது இல்லை)

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 163

நான் விரும்பும் பாவைக்கு என் கண்ணிலேயே இடம் கொடுப்பதற்காக...என் கண்ணில் கருமணியில் உள்ள பாவையே ! அவளுக்கு இடமளித்து நீ விலகி விடு என்பவர் சொல்கிறார்..

அவள் என்னோடு கூடும் போது.. (எப்படியிருக்கிறதாம் தெரியுமா?) உயிர் உடலோடு கூடுவது போலவும், அவள் என்னை விட்டு நீங்கும் போது என்னுயிர் நீங்குவது போலவும் உணருகின்றேன்

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து (1124)

அவள் என்ன சொல்கிறாள் தெரியுமா?

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக் கறிந்து (1127)

(அவளது) காதலர் கண்ணுக்குள்ளேயே இருக்கின்ற காரணத்தினால், (கண்ணுக்கு) மை தீட்டினால் ..எங்கே மறைந்துவிடப் போகிறாரோ எனப் பயந்து மை தீட்டாமல் இருக்கிறேன்

Sunday, August 4, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 162

மங்கையின் முகத்துக்கும், நிலவுக்கும் வேற்பாடு தெரியாமல் விண்மீன்கள் தவிக்கின்றனவாம்.
மேலும் வள்ளுவரின் வர்ணனைகள் சில..

தேய்ந்தும், வளர்ந்தும் ஒளிவழங்கும் நிலவில் உள்ள சிறு களங்கம் கூட, மங்கை முகத்தில் இல்லையாம்

மலரைப் போன்ற கண்களையுடைய காதல் மங்கையின் முகம் போல நிலவு இருப்பதாக நிலவு பெருமைப் பட வேண்டுமெனில், பலரும் அறிய தோன்றாமல் இருக்க வேண்டுமாம்(பலர் அறிய தோன்றினால்..அவர்கள் காதல் மங்கையின் முகம் நிலவை விட அழகு என்று சொல்லிவிடுவார்களாம்)

அனிச்ச மலர் மென்மையானது.அதுபோல அன்னத்தின் இறகு மென்மையானது..இவையிரண்டும் என் காதலியின் காலடிகள் பட்டால் அவை அவளுக்கு நெருஞ்சி முள் தைத்தாற்போல துன்பத்தை விளைவிக்குமாம்.அந்த அளவு மென்மையானதாம் அவள் பாதங்கள்

அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம் (1120)


வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 161

பெண்ணின் இடையைப் பற்றி எழுதாத கவிஞர்கள் இல்லை எனலாம்.

அப்படியிருக்கையில்... திருக்குறளில் இல்லாதது ஏதுமில்லை என்றுள்ள போது..வள்ளுவர் மட்டும் இடையை விட்டு வைப்பாரா.

சாதாரணமாக இடையை,கொடியிடை என கொடிக்கு ஒப்பிடுவார்கள்.ஆனால் அந்த மென்மையான கொடியினைவிட மென்மையான ஒன்றை ஒப்பிடுகிறார் வள்ளுவர்.

அனிச்ச மலர் பற்றி ஏற்கனவே தனது குறளில் சொன்னவர்..மீண்டும் அனிச்ச மலரை விடவில்லை.அந்த மலரே மென்மையானது எனில் அம்மலரின் காம்பு எப்படியிருக்கும்..அந்த அளவு மென்மையைக் கூட தாங்காதாம் அந்த இடை.அம்மலரை காம்புடன் சூடிக் கொண்டதால் அந்த பாரம் தாங்காது இடை ஒடிந்து விழுந்துவிட்டாளாம்

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை (1115)

என்கிறார்.

அவளுக்காக நல்ல பறை ஒலிக்கவில்லை.ஏனெனில் அவள் இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள்.காரணம்...அவள் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் தலையில் வைத்துக்கொண்டதுதான்.

Saturday, August 3, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 160

அனிச்ச மலர் மென்மையானது மோப்பக் குழயும் என்றுள்ளார் ஒரு குறளில்.அந்த மென்மையான மலரைவிட மென்மையானவள் என் காதலி என்பவர்

அடுத்தடுத்த் குறள்களில் பெண்ணை எப்படி வர்ணிக்கிறார் பாருங்கள்.

அவளது..மலரே கண்டு வியக்கும் மலராம்
முத்துப்பல் வரிசை
மூங்கிலனைய தோள்
மாந்தளிர் மேனி மயக்கமூட்டும் நறு மணம்
மையெழுதிய வேல்விழி
குவளை மலர்கள் கண்டால்"நாம் இவள் கண்களுக்கு ஒப்பாகவில்லையே" எனத் தலை குனிந்து நிலம் நோக்குமாம்

காணின் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று (1114)

(என் காதலியைக்) கண்டால் குவளைமலர்கள் "இவள் கண்களுக்கு நாம் ஒப்பாக முடையவில்லையே:"எனத் தலைகுனிந்து நிலம் நோக்கும்

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 159

காதலர்க்கு மிக இனிமை தருவது காற்றுகூட இடையில் நுழைய முடியா அளவிற்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும்.

காதல் மனையைத் தழுவதற்கு ஒப்பானது ஒன்றுண்டாம்.அது என்ன தெரியுமா? தானே உழைத்துச் சேர்த்ததைப் பலருக்கும் பகுத்து உண்டு களிப்பதாம்.

தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு (1107)

தானே உழைத்துச் சேர்த்ததைப் பலருக்கும், பகுத்து வழங்கி உண்டு களிப்பதில் ஏற்படும்  இன்பம், தனது அழகிய காதல் மனைவியைத் த்ழுவுகின்ற இன்பத்துக்கு ஒப்பானது

தவிர..

அவளின் அழகிய தோள்கள் அமிழ்தம் என்றும்,மேனியை மாம்பழ மேனி என்றும் சில குறள்களில் பெண்ணை ஒப்பிட்டுள்ளார் 

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 158

ஒருவருக்கு வரும் நோயைத் தீர்க்க மருந்து இருக்கிறது.ஆனால், காதல் நோய் வந்துவிட்டால், அதைத் தீர்க்கும் மருந்து காதலிதானாம்.

அவளை விட்டு நீங்கினால் சுடக்கூடியதும், நெருங்கினால் குளிரக்கூடியதுமான புதுமையான நெருப்பாம் அவள்.

அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில்வது..எதுபோல இனிமைவாய்ந்ததாம்...
தாமரைக்கண்ணான் உலகம் என்கிறார்களே அதுபோலவாம்

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு(1103)

தாமரைக்கண்ணான் உலகம் என்பதுபோல..அது (தாமரைக்கண்ணனின் அடிபற்றியதுபோல ) அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில்வது போல இனிமை வாய்ந்ததா

வள்ளுவர் மேலும் சொல்கிறார்..நமக்கு விருப்பமான பொருள், நாம் விரும்பிய போதெல்லாம் வந்து இன்பம் வழங்கினால் எப்படியிருக்குமோ, அதுபோல பூ முடித்த பூவையின் தோள்கள் இன்பம் வழங்குபவையாம்

வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள் (1105)


Thursday, August 1, 2019

வள்லுவரும்..ஒப்பீடுகளும் - 157

காதலனைப் பார்க்கும் போது மெல்லச் சிரிப்பாள்.அப்போது துவளுகின்ற அந்தத் துடியிடையாள் ஒரு புது பொலிவுடன் இருப்பாளாம்.

அவனும்..நோக்கி..அவளும் நோக்கினால்..ஒத்த அன்புடன்
கண்களுடன், கண்கள் கலந்து விடுமானால், அங்கு வாய் வார்த்தைகளால் ஏது பயனும் இல்லையாம்..

கடுமொழி என்பது நம் பகைவரைக் கண்டதும் பேசும் பேச்சு ஆகும்..

அதுபோல கடுவிழி என்பது பகைவரைச் சுட்டு எரிக்கும் விழிகள்..

ஆனால்..இப்போது இது எதற்கு என்கிறீர்களா?

அப்படி கடுமொழியும், கடுவிழியும் கொண்டு பகையுணர்வு போல பேசினாலும், உள்ளத்தால் அன்பு இருந்தால் அதைக் காட்டி கொடுத்துவிடுமாம்.

செறாஅச் சிறுசொல்லும் செற்றாற்போல் நோக்கும்
உறாஅர்போன் றுற்றார் குறிப்பு (1097)

பகையுணர்வு இல்லாத கடுமொழியும்,பகைவரை நோக்குவது போன்ற கடுவிழியும், வெளியில் அயலார் போல நடித்துக்கொண்டு உள்ளத்தால் அன்பு கொண்டிருப்போரை அடையாளம் காட்டும் குறிப்புகளாகும்


வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 155


புருவங்கள் வளைந்து கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளது கண்கள்.நான் நடுங்குமாறு துன்பத்தை செய்யாது என்றவர்..

மங்கையையும், மதம்கொண்ட யானையின் முகபடாத்தையும் ஒப்பிடுகிறார்

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில் (1087)

மதங்கொண்ட யானையின் மத்தகத்தின் மேலிட்ட முகபடாம் கண்டேன்.அது மங்கை ஒருத்தியின் சாயாத மார்பகத்தில் அசைந்தாடும் ஆடைபோல இருந்தது

பெண்மானைப் போன்ற இளமை துள்ளும் பார்வையையும், நாணத்தையும் இயற்கையாகவே அணிகலங்களாகக் கொண்ட இப்பேரழகிக்குச் செழிப்பான அணிகலன் எதற்கு? என்கிறார் இக்குறளில்.

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்
கணியெவனோ ஏதில தந்து (1089)

மதுவை உண்டால்தான் மயக்கம் வரும்.ஆனால் கண்டாலே மயக்கம் தருவது காதல் என்கிறார் அடுத்து.

வள்ளுவரும் ஒப்பீடுகலும் - 156

காதலியின் மைதீட்டிய கண்களில் பார்வை இரண்டு வகையாய் இருக்குமாம்.ஒன்று காதல் நோயைத் தருமாம்..மற்றது அந்நோய்க்கு மருந்தளிக்குமாம்

மேலும் அவளது அன்பை பயிருக்கு ஒப்பிடுகிறார்.அவளது அன்பென்னும் பயிருக்கு..அவளது கடைக்கண் பார்வை நீராக பாயுமாம்.

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர் (1093)

கடைக்கண்ணால் அவள் என்னைப் பார்த்த பார்வையில் நாணம் மிகுந்திருந்தது.அந்தச் செயல் அவள் என் மீது கொண்ட அன்புப் பயிருக்கு நீராக அமைந்தது.

மேலும் சொல்கிறார் காதலர்க்கு ஒரு இயல்பு உண்டு.அதாவது அவர்கள் பொது இடத்தில் ஒருவருக்கொருவர் தெரியாதது போல நடந்து கொள்வார்களாம்.