Thursday, October 30, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1206 முதல் 1210 வரை



குறள்-1206

காதலன் காதலியைப் பிரிந்து சென்று விட்டான்.அவளால் அந்த வேதனையை தாங்க முடியவில்லை.ஆனாலும் அவனுடன் இருந்த நாட்களை எண்ணி அது தரும் மகிழ்ச்சியில் உயிரை மாய்த்துக் கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறாளாம்.

மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன்.


காதலராகிய அவரோடு நான் வாழ்ந்திருந்த  நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு இருக்கின்றேன்; வேறு எதனை நினைத்து உயிர் வாழமுடியும்

குறள்- 1207

காதலன் மறந்து சென்று விட்டான்.ஆனாலும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறாளாம்.அது எப்படி அவளுக்கு சாத்தியமாகிறது என்றால், அவனுடன் வாழ்ந்த நினைவுகள் மறக்க நினைத்தாலும் மறக்கமுடியாமல் சுடுகிறது.ஆனாலும், அந்த சூட்டையும் மறக்க விரும்பவில்லை அவள்.அது அவளுக்கு இன்பத்தையும் தருவதால்.


மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.

மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! நினைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆகுமோ?.

குறள்- 1208

காதலனி நினைத்து..நினைத்து மகிழ்கிறாள்..அதற்கு காதலனின் அனுமதி தேவையில்லையே.அதனால் காதலன் கோபம் அடைய முடியாதே..அதுவே எனக்கு உதவியாய் உள்ளது என மகிழ்கிறாள்

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.

அவரை நான் அதிகமாக  எண்ணினாலும் கோபப்படமாட்டார்; அன்புள்ள அவர் எனக்குத் தரும் இன்பம் அத்தகையது அல்லவா?.

குறள்-1209

காதலிக்கையில் காதலன் சொல்கிறான்..நான் ஓருயிர் ஈருடல் என.ஆனால், அவளைப் பிரிந்து சென்றபினவரை எண்ணி எண்ணியே காதலியின் உயிர் போய்க்கொண்டிருக்கிறதாம்

விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.

நம் உயிர் வேறு அல்ல; ஒன்றே என்று முன்பு சொன்ன அவரின் இப்போதைய அன்பில்லா  தன்மையை அதிகம் எண்ணி, என் உயிர் போய்க்கொண்டே இருக்கிறது.

குறள்-1210

இதுவரை பிரியாமல் இருந்த காதலன் பிரிந்து சென்றுள்ள்ளான்.இந்நிலையில் காதலிக்குத் துணையாய் இருப்பது நிலவு மட்டுமே.அந்த நிலைவை..தான் காதலனைத் தேட மறைந்து விடாமல் உடன் இருக்க வேண்டுகிறாள்.

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.

நிலவே! பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!.

Wednesday, October 29, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1201 முதல் 1205 வரை



குறள்-1201

கள் என்பதை குடித்தால் மயக்கம் வரும்.ஆனால்...எந்த லாகிரி வஸ்துக்களையும் பயன்படுத்தாவில்லாலும், மனிதனுக்கு ம்னைவியுடன் கூடி அனுபவித்த இன்பததை, அவள் பிரிந்திருந்த வேளையிலும் எண்ணினாலே இன்ப மயக்கம் தருமாம்

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.


நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் தருதலால்,
 கள்ளை விட காமம் இன்பமானதாகும்.

குறள்-1202

காதலி, காதலனைப் பிரிந்திருக்கிறாள்..அது அவளுக்குத் துன்பம் தந்தாலும்...காதலன் தன்னிடம் கொண்டுள்ள காதலை எண்ணினால்..அத் துன்பமும், இன்பமாய் தெரிகிறது

எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏல்.

நாம் விரும்புபவரைப் பிரிவிலும் நினைத்தால் பிரிவுத் துன்பம் வராது. அதனால் எவ்வகையிலும் சரி, காதல் இனியதுதான்.

குறள்-1203

தும்மல் வரும்போது..வீட்டில் உள்ள பெரியோர்கள்..சாதாரணமாக..:யாரோ நினைக்கிறார்கள்" என்பார்கள் என்பதை அவள் நம்புகிறாள்.அதனால் தான் அவளுக்குத் தும்மல் வந்து அடங்கியதும்..அவளது காதலன் அவளை நினைப்பதை விட்டு விட்டானோ என ஐயம் கொள்கிறாள்

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்


தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பது போலிருந்து நினையாமல் இருந்து விடுவாரோ!.

குறள்-1204

சந்தேகம் என்பது ஒரு வியாதி.அதை குணமாக்க எந்த மருந்தும் இல்லை;அதுவும்..கணவன், மனைவியிடையே அந்த வியாதி புகுந்துவிட்டால்..வாழ்நாள் முழுதும் வேதனைதான்.ஆனால், வள்ளுவன் சொல்வது அப்படியில்லை.காதலிக்கு , காதலன் மீது அவ்வளவு அன்பு.ஆனால்..அதே போன்று அவருக்கும் என் மீது அன்பு இருக்குமா? என நினைக்கிறாள்.இது, அவன் மீது உள்ள சந்தேகத்தால் அல்ல.அவன், தன்னிடம் மட்டற்ற அன்பு செலுத்த வேண்டும் என விருப்பத்தினால்.


யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.

என் நெஞ்சத்தில் அவர் எப்போதும் இருக்கிறார். அவர் நெஞ்சத்தில் நானும் இருப்பேனா?.

குறள்-1205

சென்ற குறளின் நாயகி, தற்போது ஒரு படி மேலே செல்கிறாள். அவர் அவளைதன் நெஞ்சத்திலிருந்து விலக்கிவிட்டாராம்.ஆனால்..இவளால் முடியவில்லையாம்.அப்படிப்பட்ட நிலையில், தன் மனதில் அவன் குடியிருக்க
வெட்கப்பட வில்லையே ! என நினைக்கிறாளாம்.

தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்.

தனது நெஞ்சத்தில் என்னை விலக்கிவிட்ட அவர், என் நெஞ்சத்தில் மட்டும் ஓயாமல் வருவதற்கு வெட்கப் படமாட்டாரோ?.

Tuesday, October 28, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1197,1198,1199,1200


குறள்- 1197
ஆணிடம் மட்டுமே காமன் இயங்குகிறானாம்.அதனால்தான் பெண்கள் காம நோயால் வருந்துகையில்..ஏற்படுகிறதாம் பசலை.அதனால்...காமனின் கண்பார்வை பெண்ணிடமும் பட்டால்..பெண்ணின் துன்பம் பறந்தோடிடும்.


பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான். #1197

காமன், ஒரு பக்கமாக மட்டும் இயங்குவதால், என்னைக் காதல் நோய் வருத்துவதையும், என் மேனியில் பசலை படர்வதையும் கண்டு கொள்ளமாட்டான் போலும்!.


குறள்- 1198

மனைவியர் வேண்டுவது என்ன? அன்பான கணவன்.தன்னிடம் இன்சொல் சொல்லும் தலைவன்.ஆனால்..பலர் இன்று அதற்கு மாறுபட்டு..மனைவியிடம் அன்பு செலுத்தாமல்..அவள் படும் வேதனைகளை உணராமல்..அவ்வளவு ஏன்..ஒரு அன்பான சொல்கூட சொல்லாது செயல் படுகின்றனர்.பாவம் அத்தகைய பெண்கள்

வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல். #1198


தான் விரும்பும் காதலரின் இனிய சொல்லைப் பெறாமல் உலகத்தில் ( பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து) வாழ்கின்றவரைப் போல் கொடுமை வேறொன்றும் இல்லை.

குறள் -1199

அன்பில்லாத கணவ்ன் அமைந்தாலும்..பெண்களுக்கே உரிய தன்மை அவன் எது பேசினாலும் மகிழ்வதே! அவனை பிறர் புகழ்ந்தால் மகிழ்ச்சி..அப்படிப்பட்ட பெண்கள் இருப்பதால் தான் இன்று இல்லறங்களே நல்லறங்களாய் உள்ளன

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.


என் அன்புக்குரியவர் என்னிடம் அன்பு காட்டாதவராகப் பிரிந்து இருப்பினும், அவரைப் பற்றிய புகழ் கேட்பது என் செவிக்கு இன்பத்தைத் தருகிறது

குறள்-1200

அன்பில்லாத கணவ்ன்.மனைவி எவ்வளவோ முயன்றும் மாற்ற இயலவில்லை.ஆனாலும்..மனம் என்ன செய்கிறது..கணவனிடம் சென்று துன்பத்தைச் சொல்கிறது.ஆனால் அவன் செவி சாய்க்கவில்லை.அவனை மாற்ற முயல்வது என்பது..கடலைத் தூர்க்கும் முயற்சி என நினைக்க ஆரம்பித்து விட்டாள் மனைவி

உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.

நெஞ்சே! நீ வாழ்க! உன்னிடம் அன்பு இல்லாதவரிடம் உனது துன்பத்தைச் சொல்லி ஆறுதல் பெறுவதைக் காட்டிலும் கடலைத் தூர்ப்பது உனக்கு எளிதான வேலையாகும்.

Monday, October 27, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1194,1195.1196



கணவனை மிகவும் விரும்புகிறாள் மனைவி.ஆனால், கணவனுக்கோ மனைவியைக் கண்டாலே பிடிக்கவில்லை.ஆனால்..அவளை உலகுக்கேப் பிடிக்கும்..இருந்தாலும் தன் கணவன் தன்னை விரும்பவில்லையே என்ற வருத்தம் பெண்ணை விட்டு அகலாது

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.

தாம் விரும்பும் காதலரால் விரும்பப்படாவிட்டால் உலகத்தாரால் விரும்பப்படும் நிலையில் உள்ளவரும் நல்வினை பொருந்தியவர் அல்லர்.

குறள்-1195

காதல்..என்பது இரு தரப்பினரும் மனது ஒருமித்தால் ஆகும்.ஆனாலும்..நம்மைக் காதலிப்பவர் நம்மைக் காதலிக்கவில்லை யெனில்...நமக்கு வேறு எவ்வகையில் மகிழ்ச்சியைத் தரும்.காதல் தோல்வி..என்பது மிகவும் வருத்தத்தைத் தரக்கூடியதுதான்.

நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை.

அவள் காதல் கொண்ட காதலர், அவர் அவ்வாறே அவளிடம் காதல் கொள்ளாதபோது, அவளுக்கு அவர் என்ன நன்மை செய்வார்?.

குறள்-1196

ஒருதலைக் காதல்...ஆம்..காஅதலி அவனை விரும்புகிறாள்.ஆனால்...காதலனுக்கு அவளிடம் நாட்டமில்லை.காதல் என்றாள் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.

காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பம் தரக்கூடியது. காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் சமமாய் இருந்தால் இன்பமானதாகும்.

Sunday, October 26, 2014

திருக்குறள் - காமத்துப்பால்- 1191,1192,1193



தான் விரும்புகின்ற காதலன் தன்னை மட்டுமே விரும்ப வேண்டும்.சதா தன்னைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்க வேண்டும்..என்றெல்லாம் பெண்கள் ஆசைப்படுவது உண்டு.அப்படிப்பட்ட காதலன் அமையப் பெற்றால் காதலிகள் விதை இல்லா பழத்தைப் பெற்றார் போன்றவர்களாம்.

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.


தன்னை விரும்பும் காதலர், தன்னை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின் பயனாகிய விதை இல்லாத பழத்தைப் பெற்றவரே ஆவார்.

குறள்-1192

விவசாயிகள் பயிரிட்டுவிட்டு பயிர் செழிக்க மழையை எதிபார்ப்பர்.அந்த மழையும், உரிய நேரத்தில் பெய்து விட்டால். அந்த விவசாயியின் மனம் மகிழ்வெய்தும்.அது போன்ற மகிழ்ச்சியைத் தரக்கூடியது வேறு ஒன்றும் உண்டாம்.அது என்ன ..


வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.

கணவனைப் பிரிந்து வாழ முடியா மனைவிக்கு, அவளின்றி வாழ முடியாமல்..கணவர் காட்டும் அன்பு,, தன்னை எதிர்ப்பார்த்து உயிர் வாழும் மக்களுக்கு வானம் உரிய நேரத்தில் மழை தந்தது போலவாம்.

குறள்- 1193

காதலிக்கு..பொன்னகைத் தேவையில்லை.எப்போது தெரியுமா? அந்தப் பெண் முழுக்க முழுக்க காதலனால் அன்பைப் பெற முடியுமானால். அப்படிப்பட்ட பெண்..தனக்கு எல்லாம் கிடைத்துவிட்டது என்ற கர்வத்தில் இருப்பாளாம்.காதலனின் அன்பின் சக்தியின்றி வேறு இதற்குக் காரணம் என்ன?!


வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு

 காதலனால் விரும்பப்படும் பெண்ணுக்கே..(பிரிந்து சென்றுள்ள வர் வருவார் என்ற பெருமிதத்தால்) மீண்டும் வந்தபின் வாழ்வோம் என்ற செருக்குத் தகும்

Saturday, October 25, 2014

திருக்குறள்- காமத்துப்பால்-1188 முதல் 1190



குறள்-1188

காதலர் இடையே..தவறு ஆண்கள் மீது இருந்தாலும், சமுதாயம் பெண்ணையே குறை கூறும்.அதேபோல காதலன் பிரிந்து சென்றபின்..அவன் நினைவால் காதலிக்கு பசலைப் படர்ந்தது.அது கண்டு காதலனைக் குறை சொல்பவர் யாரும் ஏன் இல்லை? என வள்ளுவன் காலத்திலேயே கேட்கிறாள் இப்பெண்.

பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.

இவள் உடலில் பசலைப் படர்ந்தது என சொல்கிறார்களே தவிர..(அதற்குக் காரணமான)காதலன் பிரிந்த்துதான் காரணம் என சொல்பவர் யாரும் இல்லையே!

குறள்-1189

பொருளீட்ட காதலன் ,காதலியை பிரிந்து செல்கிறான்..அதற்கு அவளும் சம்மதிக்கிறாள்.அவன் நல்லவன்..ஆகவே அவனைப் பிரிவதால் பசலை அடந்தேனாயின் அடைந்துவிட்டுப் போகட்டும்.


பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.

பிரிவுக்கு உடன்படச் செய்த காதலன் நல்லவர் எனில் எனது மேனி மேலும் பசலை அடைந்து விட்டுப் போகட்டும்.

பாடல்-1190

அவன் , அவளைப் பிரிந்து சென்றுள்ளான்.பிரிந்தவன் சொன்ன காலத்திற்குள் வரவில்லை.அதனால் காதலி பசலை ஆயினள்.அதற்காக அவனை ஏசாமல்..தன்னைக் குறை சொல்வாராயின் அதுவும் நல்லதே என்கிறாள் காதலி இங்கு.

பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.

பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் பிரிந்து வருத்துதலைப் பிறர் தூற்றாமல் இருப்பாரானால், நான் பசலை உற்றதாக பெயர் எடுத்தால் நல்லதே.

Friday, October 24, 2014

திருக்குறள்-காமத்துப்பால் 1184,1185,1186,1187



குறள்1184

காதலனைப் பிரிந்து இருக்கிறாள் காதலி.ஆனாலும் அவன் நினைவை மறக்க வில்ளை..அவனிடம் உள்ள நல் குணங்களைப் பற்றி சொல்லிக் கொண்டு இருக்கிறாள். ஆனாலும்...அவன் உடன் இல்லையே என உள்ளம் வருந்துகிறது.அதனால் அவளை பசலை வாட்டுகிறது.


உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.

நான் அவனுடைய நல் குணங்களை நினைக்கின்றேன்; நான் பேசுவதும் அவற்றைப் பற்றியே; அவ்வாறிருந்தும் பசலை வந்தது ஏன்?

குறள் 1185

திருமணம் நடந்த புதிதில் காதலன் வெளியே சென்ற சில நாட்களில் பசலை கொண்டுவிடும்.ஆனாலும்..இப்பொழுது மணம் முடிந்து ஆண்டுகள் ஓடி விட்டன.ஆனாலும்..முன்னைக் காட்டிலும்..அவர் மீது அன்பு அதிகமாகிவிட்டதா? பிரிந்ததுமே பசலை வாட்டுகிறதே!


உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.

அதோ பார்! எம்முடைய காதலர் பிரிந்து செல்கின்றார்; இதோ பார்! என்னுடைய மேனியில் பசலை நிறம் வந்து படர்கிறது.

குறள்-1186

விளக்கு எரிகின்றது.அதிலுள்ள எண்ணெய் குறையக் குறைய வெளிச்சம் மங்கி இருள் சூழத்தொடங்குகிறது.வேளிச்சம் குறைந்ததுமே இருள் பூமியைத் தழுவிக்கொள்வது போல காதலனின் தழுவலில் அவனது பிடி சற்ருத் தளர்ந்தாலும்..காதலியின் உடலில் பசலை படர்கிறதாம்
 
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்க
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

விளக்கு சுடர் மெலிவதைப் பார்த்து உடன் நெருங்கும் இருட்டைப் போல என்னவரின் தழுவல் நெகிழ்வதைப் பார்த்துக் காத்திருந்து பசலை வரும்.


குறள்-1187

அவள் அவனைத் தழுவிக் கொண்டிருந்தாள்.உடலில் ஏதும் நேரவில்லை..இன்பத்தைத் தவிர.ஆனால்..அவன் அவளை விட்டு சற்று விலகியதுமே பசலை அவளை அள்ளிக் கொண்டது.

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.

தலைவனை தழுவிக் கொண்டேன்.பின் .சிறிது அகன்றேன்..உடன் பசலை நிறம் அள்ளிக் கொள்வது போல உடலில் படரிவிட்டதே!




Thursday, October 23, 2014

திருக்குறள்- காமத்துப்பால்-1181 முதல் 1183



குறள் 1181

காதலன் வேலை சம்பந்தமாய் வெளியூர் செல்ல நேரிடுகிறது.வேறு வழியில்லாமல் காதலையை விட்டுச் செல்கின்றான்.அவளும் சம்மதிக்கிறாள்.ஆனாலும், அவன் பிரிந்து சென்றதும்..அந்தப் பிரிவினால் பசலை நோய் அவளை தவிக்க வைக்கிறதாம்.

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.

விரும்பிய காதலரை அன்று பிரிந்திருக்க சம்மதித்தேன்.ஆயின், பிரிந்த பின் பசலை உற்ற என் நிலையை யாரிடம் சொல்வேன்

குறள்-1182
காதலன் வேலை நிமித்தம் அவளைப் பிரிகிறான்.ஆனாலும், பிரிந்திருக்கும் அவனை எண்ணி காதலி உடலில் பசலை நிறம் உடலில் ஏறுகிறது.அது, அவனால்தான் என்பதால் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.

 காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது.


குறள்-1183

அவனைப் பிரிந்ததால் அவளுக்கு அழகு எதற்கு எனத் தோன்றுகிறது.அவன் இருந்தால் அழகு தேவை..அவன் இல்லாததால் அந்த அழகையும் அவன் கொண்டு சென்று விட்டான்.அத்துடன் இல்லாது, அவனைப் பிரிந்து வாடுவதால் பசலையும் ஏற்பட்டுவிட்டது..அது கண்டு வெட்கம் தோன்றவில்லை.அவன் இருந்தால்தானே அவள் வெட்கப்பட முடியும்?

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.


காம நோயையும் பசலை நிறத்தையும் எனக்குக் கைம்மாறாக ‌‌கொடுத்து விட்டு, என் சாயலையும் நாணத்தையும் அவர் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

Tuesday, October 21, 2014

திருக்குறள்- காமத்துப் பால் -1176 முதல் 1180 வரை



குறள்-1176

ஒருவர் துன்பத்தைக் கண்டு மகிழ்பவனை ஆங்கிலத்தில் "சேடிஸ்ட்." என்பார்கள்.இங்கும் காதலி அத்தகைய குணம் கொண்டவளாகத் திகழ்கிறாள்.இவளுக்குக் காதல் துன்பத்தைத் தந்தது அவள் கண்களாம்.அதனால்..அது இவளுடன் சேர்ந்து துன்பத்தைத் தாங்கமுடியாமல் அழுவது அவளுக்கு மகிழ்ச்சியாம்

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.

எனக்கு இந்தக் காமநோயைஉண்டாக்கிய கண்கள், தாமும் இத்தகைய துன்பத்தைப்பட்டு வருந்துவது மிகவும் மகிழ்ச்சியே!.

குறள்-1177

பிரிந்து சென்றுள்ள காதலனை எண்ணி..எண்ணி விடும் கண்ணீர் கண்களில் வற்றிப் போகட்டும்...என அன்று அவனைக் கண்டு மகிழ்ந்து..இன்று காணாமல் வருந்தும் கண்களுக்கு அவள் சாபம் இடுகிறாளாம்.

உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.

அன்று விரும்பி மகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள் இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போகட்டும்.

குறள்-1178

அவன் மனதில் அவள் நிறைந்திருக்கிறாள் என்றான் காதலன்.அவளும் அதை நம்பினாள்.ஆனால்..அவன் சொன்னது வாயளவிலே என அவன் பிரிந்து சென்றதால் நினைக்கிறாள் காதலி,அதுமட்டுமின்றி அவனைக் காணாததால் கண்கள் தூக்கத்தைத் தழுவவில்லையாம்.

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.

உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் அவர். அவரைக் காணாமல் கண்கள் தூங்காமல் உள்ளன.

குறள்-1179

இந்த கண்கள் இருக்கிறதே...மிகவும் பாவம்..காதலர்களிடையே மாட்டிக் கொண்டு தவியாய் தவிக்கிறது.இங்கு பாருங்கள்''அன்று அவனை எதிர்பார்த்துத் தூங்கவில்லையாம்.இன்று..அவன் பிரிந்துவிடுவானோ என எண்ணி தூங்கவில்லையாம்.


வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.

காதலன் வராவிட்டால் தூங்குவதில்லை.வந்தாலும்..எங்கே பிரிந்து விடுவானோ என அஞ்சி தூங்குவதில்லை

குறள்-1180

காதலன் பிரிந்து சென்றதால்..அழுது வெளிக் காட்டும் கண்களால், காதலிக்கும் பெண்கள் பற்றி ஊரார் எளிதில் அறிந்து கொள்கின்றனராம்

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.

அடிக்கப்படும் பறைபோல துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய காதலிப்போர் பற்றிய செய்தியை அறிதல் ஊராருக்கு எளிதாம்.

Monday, October 20, 2014

திருக்குறள்- காமத்துப் பால் -1173 ,1174,1175



குறள்-1173

அன்று ஒருநாள் காதலனை ஆசையோடு வேக வேகமாகப் பார்க்கிறாள் காதலி.இன்று, ஏதோ அலுவல் காரணமாக அவன் அவளைப் பிரிந்து சென்று உள்ளான். அந்தப் பிரிவைத் தாங்காத கண்கள் கண்ணீர் சிந்துகின்றன.இதை நினைத்தால் மனம் சிரித்துக் கொள்கிரது.ஆனாலும்..கண்ணீர் அவனைக் காணும் வரை அவளுக்கு நிற்காது போல இருக்கிறதே!

 கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.

அன்று காதலனைக் கண்கள் அவைகளாகவே விரந்து பார்த்து விட்டு, இன்று அவன் பிரிவினால் தாமே அழுகின்றன.இது சற்று நகைக்கும் தன்மை உடையது (அல்லவா)

குறள்-1174

அழுது அழுது என்ன பயன்..அவன் வரவில்லை/இந்தக் கண்கள் இருக்கிறதே அதுதான் காமநோயை எனக்குள் உண்டாக்கியது.பின்..அழமுடியாது அதன் கண்ணீர் வற்றியும் விட்டன.எனக் காதலி புலம்பிகிறாள்

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து.

என் கண்கள், தப்பிப் பிழைக்க முடியாத தீராத காமநோ்யை என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திவிட்டு, தாமும் அழமுடியாமல் கண்ணீர் இன்றி வறண்டு விட்டன.

குறள்-1175

அவளின், காமநோய்க்கு முக்கியக் காரணம் கண்கள்தான்.ஆனால்..அதேகண்கள், அவளுக்கு கடலைவிடப் பெரிய துன்பத்தையும் தந்துவிட்டு. அவளுடன் சேர்ந்து தூங்காமல் துன்பத்தையும் அனுபவிக்கிறது.


படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண். #1175

கடலளவு பெரிதான தாங்கமுடியா காமநோயை உண்டாக்கிய என் கண்கள், இன்று தூங்காமல் துன்பத்தால் வருந்துகின்றன.
.

Sunday, October 19, 2014

திருக்குறள்- காமத்துப் பால் -1171 ,1172



குறள்-1171

காதலனைப் பிரிந்ததால் வருத்தப்படுவது நெஞ்சமாய் இருந்தாலும், அவனைக் காண வேண்டும் என அழுவது கண்கள்தானே?

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.

காமநோய் கண்கள் கண்டதால் விளைந்தது.அவ்வாறிருக்க காட்டிய கண்கள் இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?


குறள்-1172

காதலிக்கும் முன் காதலன் எப்படிப்பட்டவன் என்பதை எல்லாம் உணராமல் காதல் கொண்டன கண்கள்.ஆனால் அந்த அன்பை உணராமல் இன்று துன்பத்தால் வாடுவதும் அந்த் அக்கண்கள் தான்.

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்.

ஆராய்ந்து உணராது காதல் கொண்ட கண்கள் இன்று அவனைப் பிரிந்ததால் துன்பம் அடைந்தது தன்னால்தான் என அறியாது தவிக்கிறதே! ஏன்?

Saturday, October 18, 2014

திருக்குறள்- காமத்துப்பால் -1167 முதல் 1170 வரை




குறள்-1167

கடல் போன்ற துன்பத்தைத் தரக்கூடியதாம் காதல்.அத் துன்பக்கடலை நீந்தினாலும்..கரை ஏதும் கண்களில் படவில்லை.ஆதாலால்...இரவு முழுவதும் காதலனை எண்ணியபடியே தூங்காமல் கடக்கிறாளாம் காதலி

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.

காதல் எனப்படும் வெள்ளத்தை நீந்தியும், கரை ஏதும் நான் காணவில்லை.நள்ளிரவு நேரத்திலும் தனியாகவே இருக்கின்றேன்

குறள்-1168

காதலனும் அருகில் இல்லை.ஊரே உறங்கிக் கொண்டிருக்கிறது.அவள் தனியாகவே இருக்கிறாள்.அப்போதும்..தன்னைப்போல யார் தனிமையில் இருப்பர் என எண்ணுகையில்..இரவு தான் கண்களில் படுகிறது.அதனால் அந்த இரவைப் பார்த்து பாவம் எனப் பரிதாபப்படுகிறாள்

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை.

இந்த இரவு பாவம். எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமல் இருக்கின்றது.

குறள்-1169

சாதாரணமாக நாம் ஒருவரை ஒரு குறிப்பிட்ட நேரம் வருவார் என எதிர்பார்க்கையில்..அந்த நேரம் வராமல் காலம் நீண்டுக் கொண்டே இருப்பது போலத் தோன்றும்.இங்கே காதலனை எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் காதலியின் நிலையும் அதுதான்.

கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள்
நெடிய கழியும் இரா.

(காதலனைப் பிரிந்து துன்புறும்) இரவுகள் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்றன.பிரிந்தவரின் கொடுமையைவிட இக் கொடுமையே அதிகமாய்த் தெய்கின்றது.

குறள்-1170

கணவன் ஊருக்குச் செல்கிறான்.மனைவியின் மனமோ..அவர் இந்நேரம் என்ன செய்து கொண்டிருப்பார்..என அவனைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கிறது.அது போல கண்களும் அவர் ஊரில் என்ன செய்துகொண்டிருப்பார் என எண்ணினால் என்ன..? அப்போதே அவரையும் பார்க்க முடியுமே! என வருந்துகிறாளாம்.


உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.

காதலன் உள்ள இடம் நோக்கி செல்லும் என் மனதைப்போல என் கண்களும் செல்லமுடியுமானால் அவை கண்ணீர் வெள்ளத்தில் நீந்த வேண்டாம்

Friday, October 17, 2014

திருக்குறள்- காமத்துப்பால்- 1163 -1166

குறள்-1163

காதல் சில நேரங்களில் அவளுக்கு மன வருத்ததைத் தருகிறது.காமநோயால் வருந்துவதை அவரிடம் சொல்லவும் வெட்கம் தடுக்கிறது.ஒருபக்கம் துன்பம்..ஒரு பக்கம் நாணம்.அதை அவள் எப்படி தாங்குகிறாள்?

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து. #1163

காதல் துன்பத்தையும் அவரிடம் சொல்ல முடியாமல், காதல் நோயால் ஏற்பட்ட வெட்கத்தையும் சொல்ல முடியாமல் உயிரே காவடித் தண்டாகவும்..அதன் ஒரு புறம் காமநோயும், மறு புறம் வெட்கமுமாய் இருப் பக்கங்களிலும் தொங்குகின்றன.

குறள்-1164

காதலினால் ஏற்பட்ட துன்பம்..வெட்கம் இரண்டிலும் அவளிடம் அதிகம் காணப்படுவது காதல் துன்பமே.அதைக் கடக்கும் வழிதான் தெரியவில்லையாம் அவளுக்கு

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்

காமமாகிய கடல் உள்ளது.ஆனால் அதை நீந்திக் கடந்து செல்ல காவலான தோணியோ இல்லை

குறள்-1165

அவன் இன்பத்தையும் அளிக்கிறான்..அதே நேரம் பிரிந்து விடும் துயரத்தையும் அளிக்கிறான்.அவரிடம் தேவையின்றி பகமை ஏர்படின் அவன் எப்படிப்பட்டவனாய் இருப்பான்.அந்த நினைப்பே அவளுக்கு பயமாய் உள்ளது.

துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.

இன்பம் தரும் நட்பிலேயே துயரத்தை வரச் செய்வதில் வல்லவர். துன்பம் தரும் பகையை வெல்லும் வலிமை வேண்டும்போது என்ன செய்வாரோ

குறள்-1166

காதலிப்பது..காதல்..இதெல்லாம் கடல் அளவு பெரியது.அதிலும்..ஆனால் காதல் நோயால் வருந்துவது என்பது அந்தக் கடலைவிடப் பெரியதாம்

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.


காமம் மகிழ்விக்கையில் அதன் இன்பம் கடல் போன்றது; அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது.

Thursday, October 16, 2014

திருக்குறள்- காமத்துப்பால் -1161- 1162



குறள்-1161

காதலி, அவளது காதல் துன்பத்தை யாரும் அறியக்கூடாது என மறைக்கிறாள்.ஆனாலு, ஊற்ரு நீர் எப்படி இறைக்க இறைக்க பெருகுமோ அதுபோல அவள் மறைக்க மறைக்க அவளுக்குத் துன்பமே அதிகரிக்கிறதாம்.

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.

இக் காமநோயைப் பிறர் அறியாமல் நான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு ஊற்று நீர் பெருகுவது போல பெருகுகின்ரது..

குறள்-1162

காமத்தால் ஏற்படுகின்ற துன்பத்தை காதலியால் மறைக்கமுடியவில்லையாம்.அதே நேரம் இந்நோய்க்குக் காரணமான காதலனிடம் இதைச் சொல்லவும் வெட்கமாய் இருக்கிறதாம்(பெண்கள் இவ்விஷயத்தைப் பற்றி பேச நாணுவர்)
 
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்

இக் காமநோயைப் பிறர் அறியாமல் முற்றிலும் மறைக்கவும் முடியவில்லை, நோய்க்குக் காரணமான காதலர்க்குச் சொல்லவும் நாணமாய் உள்ளது.

Wednesday, October 15, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1156 முதல் 1160வரை



குறள்-1156

நான் வேலையின் காரணமாக உன்னைப் பிறிய நேரிடுகிறது என்கிறான் காதலன்.காதலிக்கோ. காதலன் தன்னைப் பிரிந்து செல்கிறானே எனக் கோபம்.ஆகவே..பிரிந்து செல்கிறேன் என்ற காதலன் தன்னிடம் அன்பில்லாதவன் என புலம்புகிறாள்.

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.

நான் வேலைக்காக பிரியப் போகிறேன் எனத் தெரிவிக்கும் அளவு கல் நெஞ்சம் உடையவரானால், அப்படிப்பட்டவர் திரும்ப வந்து அன்பு செய்வார் என என் எதிர்பார்ப்பு பயன்தராது.

குறள்-1157

காதலன் தன்னை விய்யு பிரிவானானால்..இவள் மெலிந்து விடுவாளாம்.அதை இக்காதலி எப்படி உணர்த்துகிறாள் பாருங்கள்


துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை.

தலைவன் என்னை விட்டுப் பிரிந்து சென்றுள்ளான் என்ற செய்தியை..நான் மெலிந்ததால் முன் கை மூட்டிலிருந்து கழன்றி விழும் வளையல்கள் ஊருக்குத் தெரிவித்துவிடும்.

குறள் 1158

தன்னைச் சுற்றி உறவு இல்லா ஊரில் வாழ்வது என்பது கொடுமையான ஒன்றாகும்.ஆனால் அதைவிடக் கொடுமையானது என்ன தெரியுமா? நம் மனதுக்கு இனியவரை பிரிந்து இருப்பதாகும்

இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு.



உறவானவர் இல்லாத ஊரிலே வாழ்வது கொடுமை; என் உயிர்க்கு இனியவரைப் பிரிவது அதைவிடக் கொடுமையானது

குறள்-1159.
 காதலனை விட்டு அகன்றாலும் காமம் அவளை வாட்டி வதக்கும்.ஒருவிதத்தில் தீ இதைவிடப் பராயில்லை.அதைத் தொட்டால்தான் சுடும்.ஆனால்...காம நோய்..?

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.

நெருப்பு, தன்னை தொட்டால்தான் சுடும்.ஆனால் காம நோயோ அதை விட்டு அகன்றாலும் சுடும்.


குறள் 1160

பொருளீட்ட இக்காலத்தில் பல குடும்பத் தலைவர்கள்..ஊர் விட்டு ஊர் செல்கின்றனர். கணவனையும், பிரிந்து..தனிமையில் குடும்பப் பொறுப்பையும் ஏற்று திறமையாக வாழ்வு நடத்தும் பெண்கள் நாட்டில் எவ்வளவு பேர் உள்ளனர்.இதைப் போல வள்ளுவன் காலத்திலும் இருந்தனர் போலும்!

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.

பொருளீட்ட பிரிவிற்கு ஒப்புதல் அளித்து (அப்படிப் பிரிகையில்) துன்பத்தால் கலங்காமல் பொருத்திருந்து  உயிர் வாழும் பெண்களுலகில் பலர் உள்ளனர்

Tuesday, October 14, 2014

திருக்குறள் - காமத்துப்பால் -1151 முதல் 1155 வரை



குறள் 1151

உயிருக்கு உயிரான காதலர்கள்.ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தால் அவர்கள் உயிரே போய்விடும் நிலை. அப்படிப்பட்ட சமயத்தில் காதலன் வெளியூர் செல்ல வேண்டியுள்ளது.அவன் காதலியிடம் விடை கேட்கிறான்.அப்போது அவள் சொல்கிறாள்

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
நல்வரவு வாழ்வார்க் குரை. #1151

என்னைப் பிரியவில்லை என்றால் அதை என்னிடம் சொல்.அப்படி நீ என்னை பிரிந்து போய்தான் ஆக வேண்டுமாயின்..(உன்னைப் பிரிந்ததும் என் உயிர் போய் விடும்)நீ வரும் போது உயிருடன் இருப்பவர் எவரோ அவர்களிடம் சொல்லிச் செல்.

குறள்-1152

அவன் அவளைப் பார்க்கும்போதெல்லாம் அவள் மனம் மகிழ்கிறது.ஆனால் அவர் என்னைப் பிரிந்து வெளியே செல்லப்போகிறார் என்பதை எண்ணினாலே துன்பம் ஏற்படுகிறது.அவனைப் பிரியா வாழ்க்கை அவளுக்கு வேண்டுமாம்


இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு.

உரை-
அவர் பார்வையே எனக்கு மகிழ்ச்சி தருகிறது.ஆனால்..அவர் செயலோ அவர் என்னைப் பிரியப் போகிறார் எனும் அச்சத்தைத் தந்து கொண்டிருக்கிறதே!

குறள்-1153
"உன்னைப் பிரியேன்' எனக் காதலன் சொன்னாலும்..ஏதேனும் ஒரு காலத்தில் பிரிந்துதானே செல்ல வேண்டும்.அதனால் அவன் சொன்னதை நம்பக்கூடாது..என காதலி தன் மனதை தேற்றிக் கொள்கிறாள்

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.

அறிவுடைய காதலர்களும் ஒருகாலத்தில் நம்மைப் பிரிந்த செல்ல நேரிடுவதால்..பிரிந்திடேன் என காதலன் சொல்லும் உறுதிமொழியை நம்புவது இயலாது.

குறள்-1154

உன்னைப் பிரியமாட்டேன் என அவளை மணந்ததும் கணவன் கூறுகிறான்.அது நடைமுறையில் சாத்தியமா என பேண் நினைக்காமல்..அவன் அவளைப் பிரியும் நேரம் வந்த போது..அவன் சொன்னதை நம்பியது தவறா? என நினைக்கிறாள்>(ஆனாலும் அவன் பிரிவு தவிர்க்கமுடியாது என அவளுக்குத் தெரியும்)

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.

அருள் மிகுந்தவராய் அஞ்ச வேண்டாம் என்று முன் சொன்னவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதிமொழியை நம்பித் தெளிந்தவர்க்கு குற்றம் உண்டோ.(இல்லை)

குறள்-1155

தலைவன் தலைவியைப் பிரிய வேண்டிய வேளை.ஆனால் அவன் பிரிந்தால் திரும்ப அவருடன் நான் சேர்வது அரிதாகிவிடும் என பயப்படுகிறாள் தலைவி.தலைவன் தன் கட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என அவள் விரும்புகிறாள்.


ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.

காதலன் தன்னைப் பிரிந்து சென்றால், மீண்டும் கூடுவது அவ்வளவு எளிதல்ல..ஆகையால்..அவர் பிரிந்து செல்லாமல்முதலிலேயே காத்துக் கொள்ள வேண்டும்.

Monday, October 13, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1146 முதல் 1150 வரை



சந்திரகிரஹணம் என்ரால்..பாமரர்கள் முன்பெல்லாம்..சந்திரனை பாம்பு பிடித்தது.ஆகவேதான் சந்திரன் மறைந்து காணப்படுகிறான் என்பார்கள்.இது அவர்களிடையே பரவிவிட்ட ஒரு செய்தியாக இருந்து வந்தது.அதுபோல பரவக்கூடியது வேறொன்று உண்டாம்..அது என்ன..?

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.


காதலனைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய ஊர்ப்பேச்சோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது.

பாடல்-1147

காதல் நிறைவேற வேண்டுமானால்..அதில் ஒரு திரில் இருக்க வேண்டும்.தாய், தந்தை, ஊர் இதெல்லாம் காதலுக்குத் தடை போட்டால்தான்..காதலர்களிடையே நாம் இணயவேண்டும் என்ற எண்ணம் மிகவும் வலுக்கும்.அதைத்தான் இக்குறளில் சொல்கிறான் பொய்யாமொழியான்.

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.

இந்தக் காம நோய் ஊராரின் தூற்றலே எருவாகவும் தாய் கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.

பாடல்-1148

முன் சொன்னது போலவேதான் இது..ஊரார் இவர்கள் காதலைப் பழித்தால்..அக்காதல் அழியாது.மேன் மேலும் வளரும்.எப்படி வளருமாம்...

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்.

ஊரார் பழிப்பதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அணைப்போம் என்று எண்ணுவதைப் போன்றது

பாடல்-1149

காதலன் அவளை மணப்பேன் என்று கூறி சென்று விட்டான்.அச் சமயம் ஊரார் இவள் காதலை பழிக்கமுடியாது.அதனால் அவள் ஏன் நாண வேண்டும்

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.


அஞ்ச வேண்டா என்று அன்று உறுதிகூறியவர், இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அந்தப் பலருக்காக நாணியிருக்க முடியுமோ.

பாடல்-1150

ஊரார் இவர்கள் காதலை இவர்கள் விரும்புமாறு பேசுகின்றனர்.காதலன் இதை விரும்பினால்...அவர்களின் பேச்சை ஒப்புக் கொள்வார்.

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர்.

நாம் விரும்புகின்றவகையில் இவ்வூரார் பேசுகின்றனர்.அதனால் இனி காதலன் விரும்பினால், விரும்பியப்படி என்னை மணப்பார்

Saturday, October 11, 2014

திருக்குறள் -1141 -காமத்துப் பால் 1141,1142,1143,1144,1145




குறள்-1141

காதலிப்பது யாருக்கும் தெரியாது என்றால்....காதல் நிறைவேறாவிடின்..வருத்தமுறும் காதலன் நிலை ஏன் இப்படி ஆயிற்று என யாருக்கும் தெரியாது.ஆனால்..அதுவே ஊருக்கே தெரிந்துவிட்டால்..வேறு வழியின்றி காதல் நிறைவேறியே ஆகும்.இதைத்தான் வள்ளுவன் மறைமுகமாக இக் குறளில் உணர்த்துகிறானோ?

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.

ஊருக்குள் பலர் எங்கள் காதலைப் பற்றிப் பேசுவதால்தான் அவளை இன்னும் பெறாத என் உயிரும் நிலைத்து இருக்கிறது; பேசும் பலரும் இதை அறியமாட்டார்; இது நான் செய்த பாக்கியம்.

குறள்-1142

அவர்கள் காதலிக்கிறார்கள்.ஆனால் அடிக்கடி சந்தித்து பேச முடியவில்லை.இதை உணர்ந்து தானோ என்னவோ.ஊராய் இவன் காதலைப் பற்றி பேச ஆரம்பிக்கின்றனர்.அந்தப் பேச்சினால்...வேறு வழியில்லாமல் காதலியின் பெற்றோர் காதலனுக்கே மணமுடிக்கின்றன.இதி..ஊரார் பேச்சு நன்மையை பயக்கியது

 மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.

மலர் போன்ற கண்களை உடையவளை நான் சந்திக்க வாய்ப்பு இல்லாததைத் தெரிந்து கொள்ளாமல் இந்த ஊர் எங்கள் காதலை பழித்துரைத்தது எங்களுக்கு நன்மையகவே முடிந்துவிட்டது.

குறள் 1143

ஊரார் இவன் காதலிப்பதைப் பற்றி பேச ஆரம்பித்ததால்..அது இவன் காதலியை மணம் புரிவது இவனுக்கு எளிதாகிவிட்டதாம்.

உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

எங்களக்குள் காதல் இருப்பதை இந்த ஊர் அறிந்து பேசியதும் நல்லதே, மணம் செய்ய முடியுமா என்றிருந்த நிலை போய்ச் செய்தது போல் ஆயிற்று.

குறள் 1144

ஊர்வம்பு பேசுவது கூடாது என்பர்.ஆனால் அப்படி வம்பு பேசுவது கூட இக் காதலர்களுக்கு நன்மையாய் முடிந்து விட்டதாம்.

கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.


எம் காதல் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று, அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும்.


குறள்-1145

கள் உண்டால் மனம் மகிழ்வது போல..இவன்(ள்) காதலிக்கிறான்(ள்) என ஊர் பேசும்போது..மனம் மயங்குகிறது காதலர்களுக்கு

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.


கள் உண்பவர்களுக்குக் குடித்து மகிழும்போது எல்லாம் கள் உண்பது மகிழ்ச்சியாவது போல எங்கள் காதல் ஊருக்குள் பேசப்படும்போது எல்லாம் மனத்திற்கு இனிதாய் இருக்கின்றது.

Friday, October 10, 2014

திருக்குறள் - காமத்துப்பால் 1136 முதல் 1140 வரை



குறள்-1136

காதலில் தோல்வி.இரவு உறக்கமில்லை.அவளை அடைய அவனுக்கோ கடைசி துருப்பு மடல் ஏறுதல் மட்டும்தான்.பாவம்..இந்தக் காதலர்களால் வேறு என்ன செய்ய இயலும்?


மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்.

காதலின் பிரிவு காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.நள்ளிரவிலும் மடலூர்தலைப் பற்றி உறுதியாக நினைக்கின்றேன்

குறள்-1137

மடலூர்தல் ஆண்கள் மட்டுமே செய்கின்றனர்.ஆனால் பெண்கள் காதல் நோயை அனுபவித்தாலும் பொறுத்திருப்பர்.இதுதான் பெண்மைக்கே இருக்கும் சிறப்பு.அவர்கள் வேதனையை மனதிற்குள்ளே வைத்துத் துன்புறுவர்.
வள்ளுவன் என்ன சொல்கிறான்... பார்க்கலாமா?

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்.

கடல் அளவிற்கான காமநோயால் வருந்தினாலும், மடலேறாமல், துன்பத்தை பொறுத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பைப் போன்ற பெருமையான பிறவி இல்லை


குறள்-1138

காதலி அடக்கமானவள்.அவள் மீது இரக்கம் ஏற்பட்டாலும்..அவளை அடைய முடியா காதலன் மடலேறுகிறான்.அவர்கள் காதல் விஷயம் ஊர் முழுதும் தெரியப் போகிறது.


நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.

இவள் மன அடக்கம் மிக்கவள்.பெரிதும் இரக்கப்பட வேண்டியவள்.என்று கருதாமல் அவர்கள் காதல் காமம் மறைத்திருத்தலை ஊருக்குத் தெரியப்போகிறதே!


குறள்-1139

அவர்கள் காதலை யாரும் அறியார். அவர்களின் மன அடக்கத்தால்தான் இது சாத்தியமாகிறது.

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.

 அமைதியாய் (எங்கள் காதல்) இருப்பதால் எல்லோரும் அறியவில்லை என எனது காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கிறது.

குறள்-1140

காதல் நோயின் துன்பத்தை காதலிக்காதவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.அதனால் காதலில் வாடுபவனைப் பார்த்து சிரிக்கின்றனர்.என்ன செய்வது..அது நம் வழக்கம் தானே...தனக்கு வந்தால் தானே தலைவலியும், திருகுவலியும் தெரியும்

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.

நான் பட்ட துன்பங்களை இவர்கள் படாததால் நான் பார்க்கும் படி அறிவற்ற மக்கள் என்னைப் பார்த்து சிரிக்கின்றனர்.

Thursday, October 9, 2014

திருக்குறள்-காமத்துப்பால் 1131 முதல் 1135வரை



(மடல் ஊர்தல் (மடலூர்தல்) என்பது சங்ககால வழக்கங்களில் ஒன்று. இதனை மடலேறுதல் என்றும் கூறுவர். தலைவன் தான் விரும்பிய தலைவியை அடைவதற்காக மடலூர்தல் வழக்கம். காதலில் தோல்வியுற்ற சங்ககாலத் தலைவன், ஊரார் தன் காதலை உணரும் பொருட்டு மேனியில் சாம்பலைப் பூசிக் கொண்டு யாரும் சூடாத எருக்கு போன்ற மலர்களைச் சூடிக் கொண்டு பனைமரத்தின் அகன்ற மடல்களால் செய்யப்பட்ட குதிரை ஒன்றில் ஊர்ந்து காண்போர் கேட்கும் வண்ணம் தலைவியின் பெயரைக் கூவிக்கொண்டு செல்லுதல் ஆகும். இது இழிவான ஒன்றாக கருதப்படுகிறது. எனவே தன்னைச் சந்திக்க மறுக்கும் தலைவியிடம் தோழி மூலம் நான் மடலேறி விடுவேன் என்ற காமம் மிகுந்த தலைவன் சொல்வது உண்டு. காமம் மிகுந்த ஆடவர்க்கு மட்டுமே மடலேறுதல் உண்டு. பெண்கள் மடலேறியதாய் சங்கப்பாடல்கள் இல்லை.ஒரு முறை மடலேறிய தலைவன் காதலி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லையென்றால் மறுமுறை மடலேறுவதில்லை. தன் வாழ்வை முடித்துக் கொள்வான்.



அவனுக்கு காதலில் தோல்வி அதனால் மடல் ஏறுதலைத் தவிர அவனுக்கு வேறு துணை இல்லையாம்

குறள் 1131

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.

காதல் நிறைவேற முடியாமல் வருந்தும் காதலணுக்கு மடல் ஏறுதலைத் தவிர வேறு வலிமையானத் துணை இல்லை

பாடல்-1132

அவனுக்குக் காதலில் தோல்வி.இனி காதல் நிறைவேற வேறு வழியும் இல்லை.இந்நிலையில் அவன் மடல் ஏற நினைக்கிறான்


நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.

காதல் த்ள்வியால் என் உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிக்கிறது.வெட்கத்தைவிட்டு நடள் ஏற துணிந்து விட்டேன்

குறள்- 1133

காதல் தோல்வி ஏற்பட்டால்..காதலன் அக்கதல் நிறைவேற தன் தன்மானத்தையும் விட்டு,நாணத்தையும் விட்டு காதலியை அடைய முடியுமானால் போதும் என முயற்சிப்பான். மடல் ஏறவும் தயாராம் இக்காதலன்

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.

முன்பு நல்ல ஆண்மையும், நாண உணர்வும் பெற்றிருந்த நான் இன்று காதலுக்காக அவற்றை ,அறந்து மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன்

குறள்- 1134

காதல் வந்து விட்டால் நாணம் மறைந்து விடும்.காதல் நிறைவேறவில்லை எனின் எப்பாடுபட்டாவது அது நிறைவேற வெட்கம் ,ஆண்மை ,வலிமை எல்லாம் மறந்து ஈடுபடுவான் காதலன்


காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.

நாணம்,நல்ல ஆண்மை ஆகிய தோணிகளைக் காமம் எனும் கடும் நோய் அடித்துக் கொண்டு போய் விடுகிறது.

குறள்-1135

சிலர் காதல் தோல்வியடைந்தாலும், அது வெற்றி பெற காதலியே சில உபாயங்களைச் சொல்வதுண்டு,இக்குறள் கூட அப்படியோ எனத் தோன்றுகிறது.காதலன் மடல் ஏறுவேன் என மிரட்டுகிறானோ!

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.

மேகலையையும்,மெல்லிய வளையலையும் அணிந்த இப்பெண் மாலை மரும் நோயான காதலையும், மடலூர்தலையும் எனக்கு தந்து விட்டாள்

திருக்குறள் - காமத்துப்பால்- 1126,1127,1128,1129,1130



காதலர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தால் இமைக்கவும் மறந்து பரவசத்தில் ஈடுபடுவார்கள்.இதை இலக்கியங்களிலும் நாம் படித்ததுண்டு...நடைமுறையிலும் நடப்பது உண்டு..ஆனால்..ஒருவேளை கண் இமைத்துவிட்டால்... என்னவாகும்..ஒரு காதலி சொல்வதைக் கேட்போம்

குறள்-1126

கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா
நுண்ணியர்எம் காத லவர்.

என் காதலர் என் கண்களிலிருந்து போகமாட்டேன் என்கிறார்.கண்களை மூடி நான் இமைத்தாலும் வருந்த மாட்டார்/அவ்வளவு நுட்பமானவர்.

கண்ணுக்கு மை அழகு என்பர்.அதுவும் பெண்களை கயல்விழி என அழைக்க..கண்களின் இட்ட மையே பெரும் காரணமாய் அமைவதுண்டு.ஆனால் பெண் மை தீட்டும் நேரத்தில் காதலன் மறைந்துவிட்டால்...அதனால் வள்ளுவன் சொல்லும் காதலி எப்படிப்பட்டவள் பாருங்கள்.

குறள்- 1127

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.

என் காதலன் என் கண்ணினுள் உள்ளார்.ஆகவே நான் மை தீட்டினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் தீட்டுவதில்லை.



காதலி மனதில் காதலன் உள்ளான்.ஆதலால் சூடான உணவினை அவள் சாப்பிட்டால்..ஒருவேளை அது அவனை சுட்டுவிட்டால்...ஆகவே அவள் சூடான உணவுகளை சாப்பிட அஞ்சுகிறாளாம்.,

குறள்-1128


நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து.

என் காதலன் என் நெஞ்சத்தில் இருக்கிறார்,ஆகவே சூடான பொருளை நான் உண்டாள்..அது அவரைச் சுடுமோ என எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சுகிறேன்

கண்ணுக்குள் இருக்கும் காதலன், காதலி கண் இமைப்பதால் மறையக் கூடும் என்பதால்...இவள் கண்களை இமைப்பதில்லை.ஆனால்..இதை உறவு தவறாக எண்ணி காதலனை அன்பில்லதவன் என்கின்றனராம்

குறள்-1129

இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும்இவ் வூர்.

என் கண்கள் இமைத்தால் காதலர் மறைவார் என்பதால் கண் இமைப்பதில்லை அவ்வளவுதான்.ஆனால் இதை அறியா ஊரார் அவரை அன்பில்லாதவர் என்கின்றனர்.

குறள்-1130


என் காதலன் என் நெஞ்சத்திலேயே  உள்ளான்.ஆனால்..இதை அறியா உறவு..அவர் என்னைப் பிரிந்து வாழ்கிறார்..அவர் அதனால் அன்பற்றவர் என்றெல்லாம் சொல்கின்றனரே என காதலி வருத்தப்படுகிறாள்

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும்இவ் வூர்.


என் காதலர் எப்போதும் என் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கையில், அதை அறியாத உறவினர் நாங்கள் பிரிந்திருப்பதாகப் பழித்துரைப்பது தவறு

Wednesday, October 8, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1121,1122,1123,1124,1125



குறள்=1121

சர்க்கரைப் பந்தலில் தேன் மாரிப் பொழிந்தாற் போல, அவரது பேச்சு இருந்த்து..என ஒருவர் இனிமையுடன் பேசுவதைக் குறிக்கச் சொல்வார்கள்.ஆனால்..அதே தேனில்..பாலையும் சேர்த்தால் அது எப்படியிருக்கும்..பார்ப்போமா...

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.

மென்மையான மொழிகளைப் பேசும் இவளது  தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.

குறள்-1122
உயிருடன் ஒரு உறவு கலந்தது என்பார்கள்.அதாவது..இவரின் உயிர் போனால் வேறு ஒருவருடன் அவருக்கான ஆன உறவும் போய் விடுமாம்.அப்படிப்பட்ட உறவு என்னாவாயிருக்கும்...


உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு. #1122

இப்பெண்ணோடு எனது உறவு உடம்புக்கும்.உயிருக்கும் உள்ள தொடர்பு எத்தன்மையானதோ..அத்தன்மையானது.

குறள்-1123

கண்ணில் பாவை உள்ளது.அப்பாவையில் தெரிகிறது ஒருவன் காதலிக்கும் பாவையின் உருவம்.ஆனாலும்..அவனால் அப்பாவையை முழுதும் ரசிக்க முடியவில்லையாம்.காரணம் கண்ணிலுள்ள பாவையாம்.வள்ளுவனே..என்னே உன் ஒப்பீடு..


கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.

என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! நீ போய் விடு.நான் விரும்பும் பாவைக்கு உன்னால் என் கண்ணில் இருக்கும் இடம் போதவில்லை.

குறள்-1124
ஓருயிர் ஈருடல் என்பார்கள்.சாதாரணமாக கணவன், மனைவிக்குள் அப்படியிருந்தால்..அந்த வாழ்க்கை, வாழ்வின் ருசி இவை அலாதி.

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து.

ஆய்ந்து தேர்ந்த அணிகலன்களை அணிந்த இவளைக் கூடும் போது உயிர்க்கு வாழ்வாகிறாள்.பிரிகையில் என் உயிர் நீங்குவது போலவும் உள்ளது.

குறள்-1125.

காதலி தன் காதலனைப் பிரிந்து சில காலம் இருந்தாள்.பின்னர் ஒருநாள் அவனைப் பார்த்த போது,"இவ்வளவு நாள் என்னைப் பிருந்திருந்தாயே..எப்போதேனும் எனை நினைத்தாயா? என அவனுடன் ஊடல் கொண்டாள்.பார்த்தான் காதலன் ,இவளை மகிழ்விக்க ஒரே வழி..."நான் உன்னை மறந்தாள் அல்லவா? நினைப்பதற்கு' என்றாம்.ஊடல் போய் கூடல் ஆயிற்று.

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.

ஒளியுடனான கண்களைக் கொண்ட காதலியின் பண்புகளை நான் மறந்தால்தானே பின்னர் நினைக்க முடியும்.ஆனால் ஒரு போதும் நான் மறந்ததில்லையே!

திருக்குறள்-காமத்துப்பால் 1118,1119,1120



குறள்-1118

அவன் நிலவைக் காதலிக்கிறானாம்.ஆனால்..அது அவன் காதலிக்கு நிகராக ஒளி வீச வேண்டுமாம்.அதாவது அவனைப் பொறுத்த வரை நிலவை விட காதலியின் முகம் ஒளி வீசுகிறதாம்.

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி

நிலவே! இப் பெண்ணின் முகத்தைப் போல உன்னால் ஒளி வீச முடியுமேயாயின், நீயும் என் காதலைப் பெறுவாய்.

குறள்- 1119

தன் காதலி மலர் போன்ற கண்களை உடையவளாம்.நிலவிற்கு அவளது முகம் போல அழகுடன் ஆக வேண்டுமானால், நிலவு என்ன செய்ய வேண்டுமாம்..அவனுக்கு மட்டுமே தெரிய வேண்டுமாம்.பிறர் கண்கள் அதைப் பார்க்கக்கூடாதாம்

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.

நிலவே! மலர் போன்ற கண்களை உடைய இவள் முகம் போல நீயும் இருக்க விரும்பினால்,பலரும் காணுமாறு நீ தோன்றாதே!

குறள்-1120

அவள் காதலியின் பாதங்கள் பஞ்சினைப் போல மென்மையானவையாம்.மலர் மீது அவள் கால் வைத்தாலும் அது முள்ளாய் குத்துமாம் அவளுக்கு..


அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.

(மென்மையான) அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் காதலியின் மெல்லிய பாதங்களுக்கு நெருஞ்சி முள் போல் தைக்குமாம்.


Tuesday, October 7, 2014

திருக்குறள் - காமத்துப்பால்-1115,1116,1117



பெண்களின் இடையை கொடி இடை என கவிஞர்கள் வர்ணிப்பது உண்டு.மெல்லிய இடைதான் பெண்டிக்கு அழகு.ஒரு கவிஞர் தனது ஒரு பாடலில் கதாநாயகியிடம் கதாநாயகன் பாடும்போது, "இடையா..இது இடையா..அது இல்லாதது போல இருக்கிறது" என பாடுவது போல எழுதியிருப்பார்.கவிஞர்கள் பலருக்கு முன்னோடியான வள்லுவன் என்ன சொல்கிறான்..

குறள்-1115

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை.

அவள் தனது மென்மை தெரியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் சூடினால்..அவளது இடை ஒடிந்து வீழ்ந்தாள்.இனி நல்ல பறைகள் அவளுக்கு ஒலியாது

குறள்-1116

சாதாரணமாக மங்கையரின் முகத்தை நிலவுக்கு ஒப்பிடுவது உண்டு."அவளைப் பார்த்து பின் நிலவைப் பார்த்தால் நிலவில் ஒளி மங்கியது போல இருக்கிறதாம் காதலர்க்கு.காதலியின் முகம் அவ்வளவு ஒளி பொருந்தியதாம்.ஆனால் இங்கு என்ன நடக்கிறது பாருங்கள்...

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.

வானில் நட்சத்திரங்கள் மங்கையின் முகத்திற்கும் நிலவிற்கும் வேறுபாடு தெரியாமல் மயங்கித் தவிக்கின்றன.

குறள்-1117

நட்சத்திரங்கள் இவள் முகத்தைப் பார்த்து ஏன் கலங்க வேண்டும்.நிலவின் களங்கம் போல இவள் முகத்தில் களங்கம் உள்ளதா..இல்லையே

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.

படிப்படியாய் குறைந்து படிப்படியாய் நிறைந்து காணும் நிலவில் உள்ளது போல இந்தப் பெண்ணின் முகத்தில் களங்கம் இல்லையே

Monday, October 6, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1113.1114




குறள்-1113
பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மனம் உண்டா..அல்லது செயற்கை மணமா என்ற சந்தேகமும், அதனால் சிவனே வந்து தருமிக்குப் பாட்டெழுதிக் கொடுத்ததும்..நக்கீரன்..அப்பாடலில் பொருட்குற்றம் இருக்கிறது என்றதும்...நான் எழுதிய பாட்டில் குற்றமா? என சிவன் நேரில் வந்து கேட்டதும்.."முக்கண்ணைக் காட்டினும்...குற்றம் குற்றமே" என்று உரைத்ததும் எல்லாம் நாம் அறிவோம்.ஆனால், உண்மையிலே..பெண்களுக்கு கூந்தல் அல்ல..உடலே நறுமணமாம்..வள்ளுவன் உரைக்கின்றான்.

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

மூங்கில் போன்ற தோளை உடைய அவளின்  மேனி மாந்தளிர், பல்லோ முத்து; உடல் மணமோ நறுமணம்; மையூட்டப் பெற்ற கண்களோ வேல்!.

குறள்-1114

பெண்ணின் முகத்தைத் தாமரை மலருக்கும், கண்களை கயலுக்கும் சாதாரணமாக அனைத்து காதலர்களும் வர்ணிப்பது உண்டு.ஆனால்..வள்ளுவன் ஒரு படி மேலே போய்..பெண்ணின் கண்களிப்போல தான் இல்லையே என மலர் வெட்கப்படுமாம்.

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.

குவளைப் பூக்களுக்கு பார்க்கும் திறனிருந்தால், சிறந்த அணிகளைப் பூண்டிருக்கும் என் மனைவியின் கண்ணைப் போல தாம் இருக்கமாட்டோம் என்று எண்ணி நாணத்தால் தலைகுனிந்து நிலத்தைப் பார்க்குமாம்.

Sunday, October 5, 2014

திருக்குறள் - காமத்துப்பால் 1111,1112



மோப்பக் குழையும் அனிச்சம் என்றார் வள்ளுவர்.அனிச்ச மலர் முகர்ந்து பார்த்தாலே வாடி விடும்.அந்த அளவு மென்மையானதாம்.ஆனால் அதனை விட மென்மையானதும் ஒன்று இருக்கிறதாம்.. அது என்ன...

குறள்- 1111

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள். #1111


அனிச்ச மலரே ,. நீ நல்ல ,மென்மைத் தன்மையைப் பெற்றுள்ளாய்.ஆதலான் என் பாராட்டுகள்.ஆனால் நான் விரும்பும் காதலி உன்னைவிட மெல்லிய தன்மையைக் கொண்டவள்.

குறள்-1112

மலரைக் கண்டால் மன மகிழ்ச்சி ஏற்படுகிறது நமக்கு.அதற்கு ஏதேனும் காரணம் உண்டா? பூத்துக் குலுங்கும் அதன் அழகே அழகு என்கிறோம்..ஏன்...அதற்கும் வள்ளுவனிடம் ஓர் காரணம் இருக்கிறது.அது என்ன தெரியுமா?


மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று.

மனமே...மலரைக் கண்டு மயங்குகிறாயே (அது ஏன்) என் மனைவியின் கண்கள் பலரும் கண்டு வியக்கும் மலர்போல திகழ்வதால்தானே!

Saturday, October 4, 2014

திருக்குறள்- 1107,1108,1109,1110- காமத்துப்பால்




குறள்-1107

மனிதனின் இன்றியமையாத் தேவை உணவு, உடை, இருப்பிடம்.அதுவும், தன் சொந்த உழைப்பில் கட்டிய வீட்டில் இருந்து கொண்டு, உழைத்து, உண்டு வாழும் வாழ்வுக்கு இணை ஏதுமில்லை.இது சாதாரணமாக நாம் கூறுவது.ஆனால் வள்ளுவன் சொல்கிறான்..இதற்கு ஈடான சுகம் ஒன்று உள்ளதாம்..அது....

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.


அழகிய மா நிறப் பெண்ணாகிய என் மனைவியிடம் கூடிப் பெறும் சுகம், தன் சொந்த வீட்டில் இருந்து கொண்டு, தன் உழைப்பில் வந்தவற்றைத் தனக்குரியவர்களுடன் பகிர்ந்து உண்ண வரும் சுகம் போன்றது.
.

 திருக்குறள் : 1108

காதலர்க்கிடையே தழுவுதல் எப்படியிருக்க வேண்டுமாம்...அது சாதாரணமாக இருக்கக் கூடாதாம்..பின்னே...

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு

காற்றுகூட நடுவே நுழையாதவாறு அணைத்துக் கூடிப் பெறும் சுகம், காதலர்களுக்கிடையே இனிமை உடையதாக அமையுமாம்.


குறள்-1109

ஊடல் இல்லையேல் காதலில் நெருக்கத்தைக் காண முடியாது.அதுவும் ஊடலுக்குப் பின் கூடல் இருக்கிறதே அப்போது கிடைக்கும் இன்பத்தை எழுத்தில் வடிக்க இயலுமா?


ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.

ஊடுதல், பின் ஊடலை உணர்ந்து விடுதல், அத்ற்குப் பின் கூடுதல் ஆகியவை காதலித்து வாழும் நிறைவு பெற்றவர் பெற்ற பயன்களாகும்.

குறள்- 1110

கற்றனைத்து ஊறும் அறிவு..இது வள்ளுவன் வாக்கு.அதாவது நாம் படிக்கப் படிக்க ஊருணி போல அறிவு வளர்ச்சியடையுமாம்.நாம் படிக்கும் நூல்களுக்கான பலப்பல அர்த்தங்கள் புலனாகுமாம்.அதற்கு ஈடானது..

 அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.

நூல்களாலும், நமது அறிவாலும் அறிய அறிய முன் இருந்த அறியாமையை உணர்வது போல, சிவந்த அணிகளை அணிந்த இவளிடம்கூடக் கூட அவள் மீது உள்ள காதல் சுவையும் புதிது புதிதாய்த் தெரிகிறது.

Friday, October 3, 2014

திருக்குறள் - 1104,1105,1106 -காமத்துப்பால்



குறள் -1104

நெருப்பிற்கு இருக்கும் குணம்..அதை நெருங்கினால் சுடும். தூர விலகினால் சூடு தெரியாது.ஆனால்..வள்ளுவனுக்கு ஒரு நெருப்பு தெரிந்திருக்கிறது.அந்த நெருப்பு புது விதமானது.அதை விட்டு அகன்றால் சுடுமாம்.அதன் அருகே போனால் குளிருமாம்.அது என்ன அற்புத நெருப்பு..பார்ப்போமா?

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.

நீங்கினால் சுடுகின்றது, அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது, இத்தகைய புதுமையானத் தீயை இந்தப் பெண் எங்கிருந்து பெற்றாள்.

குறள் - 1105

நமக்கு விருப்பமான ஒரு பொருள்..நமக்குக் கிடத்ததும் எப்படிப்பட்ட இன்பத்தை அடைகிறோம்.அதுபோன்ற இன்பத்தை விருப்பமான பொருள் இல்லாமல் வேறொன்றும் கொடுக்குமாம்.அது என்ன...

வேட் ட பொழுதின் அவையவை
போலுமே தோட் டார் கதுப்பினாள்


நாம் விரும்பும் பொருள்கள் விரும்பியபொழுது விரும்பிய இன்பம் தருவது போல, மலரணிந்த கூந்தலை உடைய இவள் தோள்கள் இவளுடன் எப்போது இணைந்தாலும் இன்பம் தருகின்றன.

குறள் -1106

ஒரு செடி வாடிக்காணப்படுகிறது.அதற்கு சிறிது தண்ணீர் விட்டால்..அதை உறிஞ்சி மீண்டும் தளிர்த்து நிற்கிறது.ஒரு குழந்தை அழுகிறது..அதற்கு பாலைப் பருகக் கொடுத்தால் அழுகையை நிறுத்தி புத்துணர்ச்சி பெறுகிறது.ஆமா..இதெல்லாம் தெரிந்தது தானே என்கிறீர்களா..  ஆமாம்..ஆனால் வள்ளுவன் சொல்லியிருக்கும் இந்த குறள் தெரியாது..

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.

வாடிக்கிடக்கும் என் உயிர்..இம்மங்கையை அணைக்கும் போது புத்துயிர் பெறுகிறதே.இவளின் தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டதா

Wednesday, October 1, 2014

திருக்குறள் -1101,1102,1103- காமத்துப்பால்



குறள் 1101

 பார்க்க விழிகளும், செவி இன்பம் பெற செவிகளும், உணவின் சுவை அறிய நாக்கும், முகர வும், மூச்சு விடவும் மூக்கும், தீண்ட உடலும்..ஆக ஐம்புலன்கள் இன்பமும் உண்டு. ஆனால் இந்த ஐம்புலன்களும் இன்பத்தையும் ஒன்றே தருமாம்.வள்ளுவன் விளையாடுகின்றானா...அப்படி ஐம்புலன் இன்பம் தரும் ஒன்று எது  ..பார்க்கலாமா..

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களால் ஆகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த (பெண்ணிடத்தில்)இவளிடத்தில் உள்ளன.

குறல் - 1102

மனிதனுக்கு நோய் வருகிறது.மருத்துவரிடம் போகிறொம்.நோய் தீர அதற்கான மருந்தைத் தருகிறார் மருத்துவர்.ஆனால் அவளால் (எனக்கு) உண்டான காதல் நோய்க்கு மருந்து அவள்தான் என்கிறான் வள்ளுவன்.

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.


நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன, ஆனால் அணிகலன் அணிந்த இவளால் வந்த காதல் நோய்க்குகு இவளே மருந்தாக இருக்கின்றாள்.

குறள் -1103

தெய்வங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்ட உலகங்களில் திருமாலின் உலகமும் ஒன்று.அப்படிப்பட்ட அந்த சொர்க்கலோகம் எங்கே உள்ளது..நம்மால் அங்கு போக முடியுமா? இதற்கா..கவலைப் படுகிறீர்கள்..அந்த உலகில் உங்களுக்குக் கிடைக்கும் இன்பம்..இந்த பூ உலகிலேயே கிடைக்கிறதே..அது என்ன..நமக்குத் தெர்யாததை வள்ளுவன் சொல்கிறான் ...

குறள்-1103

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.

திருமாலின் உலகம், நாம் விரும்பும் மனைவியின் தோள்களில் சாய்ந்து துயிலும் துயில் போல இனிமையானது

திருக்குறள் - காமத்துப்பால் -1100



ஒரு பெண்ணின் இதயத்தில் நாம் இருக்கிறோமா? அதை எப்படி அறிவது? இதயத்தின் வாசல் விழி என்பர்.அவள் விழிகளைப் பாருங்கள்..அந்த வாசல் உங்களை வரவேற்றால்..அவள் உங்களை விரும்புகிறாள் எனப் பொருள்.பல்லாயிரம் சொற்கள் சொல்லியும் விளங்கவைக்க முடியாததை..பார்வை ஒன்றே அழகாக விளக்கிடும். வள்ளுவன் சொல்கிறான் ..படியுங்கள்


கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.

காதலரில் ஒருவர் கண்ணோடு மற்றொருவர் கண்ணும் பார்வையால் பேசிய பின்னால் பின் வாய்ச் சொற்களால் ஒரு பயனும் இல்லை.