Wednesday, October 15, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1156 முதல் 1160வரை



குறள்-1156

நான் வேலையின் காரணமாக உன்னைப் பிறிய நேரிடுகிறது என்கிறான் காதலன்.காதலிக்கோ. காதலன் தன்னைப் பிரிந்து செல்கிறானே எனக் கோபம்.ஆகவே..பிரிந்து செல்கிறேன் என்ற காதலன் தன்னிடம் அன்பில்லாதவன் என புலம்புகிறாள்.

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.

நான் வேலைக்காக பிரியப் போகிறேன் எனத் தெரிவிக்கும் அளவு கல் நெஞ்சம் உடையவரானால், அப்படிப்பட்டவர் திரும்ப வந்து அன்பு செய்வார் என என் எதிர்பார்ப்பு பயன்தராது.

குறள்-1157

காதலன் தன்னை விய்யு பிரிவானானால்..இவள் மெலிந்து விடுவாளாம்.அதை இக்காதலி எப்படி உணர்த்துகிறாள் பாருங்கள்


துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை.

தலைவன் என்னை விட்டுப் பிரிந்து சென்றுள்ளான் என்ற செய்தியை..நான் மெலிந்ததால் முன் கை மூட்டிலிருந்து கழன்றி விழும் வளையல்கள் ஊருக்குத் தெரிவித்துவிடும்.

குறள் 1158

தன்னைச் சுற்றி உறவு இல்லா ஊரில் வாழ்வது என்பது கொடுமையான ஒன்றாகும்.ஆனால் அதைவிடக் கொடுமையானது என்ன தெரியுமா? நம் மனதுக்கு இனியவரை பிரிந்து இருப்பதாகும்

இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு.



உறவானவர் இல்லாத ஊரிலே வாழ்வது கொடுமை; என் உயிர்க்கு இனியவரைப் பிரிவது அதைவிடக் கொடுமையானது

குறள்-1159.
 காதலனை விட்டு அகன்றாலும் காமம் அவளை வாட்டி வதக்கும்.ஒருவிதத்தில் தீ இதைவிடப் பராயில்லை.அதைத் தொட்டால்தான் சுடும்.ஆனால்...காம நோய்..?

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.

நெருப்பு, தன்னை தொட்டால்தான் சுடும்.ஆனால் காம நோயோ அதை விட்டு அகன்றாலும் சுடும்.


குறள் 1160

பொருளீட்ட இக்காலத்தில் பல குடும்பத் தலைவர்கள்..ஊர் விட்டு ஊர் செல்கின்றனர். கணவனையும், பிரிந்து..தனிமையில் குடும்பப் பொறுப்பையும் ஏற்று திறமையாக வாழ்வு நடத்தும் பெண்கள் நாட்டில் எவ்வளவு பேர் உள்ளனர்.இதைப் போல வள்ளுவன் காலத்திலும் இருந்தனர் போலும்!

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.

பொருளீட்ட பிரிவிற்கு ஒப்புதல் அளித்து (அப்படிப் பிரிகையில்) துன்பத்தால் கலங்காமல் பொருத்திருந்து  உயிர் வாழும் பெண்களுலகில் பலர் உள்ளனர்

No comments: