Friday, October 10, 2014

திருக்குறள் - காமத்துப்பால் 1136 முதல் 1140 வரை



குறள்-1136

காதலில் தோல்வி.இரவு உறக்கமில்லை.அவளை அடைய அவனுக்கோ கடைசி துருப்பு மடல் ஏறுதல் மட்டும்தான்.பாவம்..இந்தக் காதலர்களால் வேறு என்ன செய்ய இயலும்?


மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்.

காதலின் பிரிவு காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.நள்ளிரவிலும் மடலூர்தலைப் பற்றி உறுதியாக நினைக்கின்றேன்

குறள்-1137

மடலூர்தல் ஆண்கள் மட்டுமே செய்கின்றனர்.ஆனால் பெண்கள் காதல் நோயை அனுபவித்தாலும் பொறுத்திருப்பர்.இதுதான் பெண்மைக்கே இருக்கும் சிறப்பு.அவர்கள் வேதனையை மனதிற்குள்ளே வைத்துத் துன்புறுவர்.
வள்ளுவன் என்ன சொல்கிறான்... பார்க்கலாமா?

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்.

கடல் அளவிற்கான காமநோயால் வருந்தினாலும், மடலேறாமல், துன்பத்தை பொறுத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பைப் போன்ற பெருமையான பிறவி இல்லை


குறள்-1138

காதலி அடக்கமானவள்.அவள் மீது இரக்கம் ஏற்பட்டாலும்..அவளை அடைய முடியா காதலன் மடலேறுகிறான்.அவர்கள் காதல் விஷயம் ஊர் முழுதும் தெரியப் போகிறது.


நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.

இவள் மன அடக்கம் மிக்கவள்.பெரிதும் இரக்கப்பட வேண்டியவள்.என்று கருதாமல் அவர்கள் காதல் காமம் மறைத்திருத்தலை ஊருக்குத் தெரியப்போகிறதே!


குறள்-1139

அவர்கள் காதலை யாரும் அறியார். அவர்களின் மன அடக்கத்தால்தான் இது சாத்தியமாகிறது.

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.

 அமைதியாய் (எங்கள் காதல்) இருப்பதால் எல்லோரும் அறியவில்லை என எனது காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கிறது.

குறள்-1140

காதல் நோயின் துன்பத்தை காதலிக்காதவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.அதனால் காதலில் வாடுபவனைப் பார்த்து சிரிக்கின்றனர்.என்ன செய்வது..அது நம் வழக்கம் தானே...தனக்கு வந்தால் தானே தலைவலியும், திருகுவலியும் தெரியும்

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.

நான் பட்ட துன்பங்களை இவர்கள் படாததால் நான் பார்க்கும் படி அறிவற்ற மக்கள் என்னைப் பார்த்து சிரிக்கின்றனர்.

No comments: