குறள்-1176
ஒருவர் துன்பத்தைக் கண்டு மகிழ்பவனை ஆங்கிலத்தில் "சேடிஸ்ட்." என்பார்கள்.இங்கும் காதலி அத்தகைய குணம் கொண்டவளாகத் திகழ்கிறாள்.இவளுக்குக் காதல் துன்பத்தைத் தந்தது அவள் கண்களாம்.அதனால்..அது இவளுடன் சேர்ந்து துன்பத்தைத் தாங்கமுடியாமல் அழுவது அவளுக்கு மகிழ்ச்சியாம்
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.
எனக்கு இந்தக் காமநோயைஉண்டாக்கிய கண்கள், தாமும் இத்தகைய துன்பத்தைப்பட்டு வருந்துவது மிகவும் மகிழ்ச்சியே!.
குறள்-1177
பிரிந்து சென்றுள்ள காதலனை எண்ணி..எண்ணி விடும் கண்ணீர் கண்களில் வற்றிப் போகட்டும்...என அன்று அவனைக் கண்டு மகிழ்ந்து..இன்று காணாமல் வருந்தும் கண்களுக்கு அவள் சாபம் இடுகிறாளாம்.
உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.
அன்று விரும்பி மகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள் இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போகட்டும்.
குறள்-1178
அவன் மனதில் அவள் நிறைந்திருக்கிறாள் என்றான் காதலன்.அவளும் அதை நம்பினாள்.ஆனால்..அவன் சொன்னது வாயளவிலே என அவன் பிரிந்து சென்றதால் நினைக்கிறாள் காதலி,அதுமட்டுமின்றி அவனைக் காணாததால் கண்கள் தூக்கத்தைத் தழுவவில்லையாம்.
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.
உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் அவர். அவரைக் காணாமல் கண்கள் தூங்காமல் உள்ளன.
குறள்-1179
இந்த கண்கள் இருக்கிறதே...மிகவும் பாவம்..காதலர்களிடையே மாட்டிக் கொண்டு தவியாய் தவிக்கிறது.இங்கு பாருங்கள்''அன்று அவனை எதிர்பார்த்துத் தூங்கவில்லையாம்.இன்று..அவன் பிரிந்துவிடுவானோ என எண்ணி தூங்கவில்லையாம்.
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.
காதலன் வராவிட்டால் தூங்குவதில்லை.வந்தாலும்..எங்கே பிரிந்து விடுவானோ என அஞ்சி தூங்குவதில்லை
குறள்-1180
காதலன் பிரிந்து சென்றதால்..அழுது வெளிக் காட்டும் கண்களால், காதலிக்கும் பெண்கள் பற்றி ஊரார் எளிதில் அறிந்து கொள்கின்றனராம்
மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.
அடிக்கப்படும் பறைபோல துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய காதலிப்போர் பற்றிய செய்தியை அறிதல் ஊராருக்கு எளிதாம்.
No comments:
Post a Comment