Friday, October 3, 2014

திருக்குறள் - 1104,1105,1106 -காமத்துப்பால்



குறள் -1104

நெருப்பிற்கு இருக்கும் குணம்..அதை நெருங்கினால் சுடும். தூர விலகினால் சூடு தெரியாது.ஆனால்..வள்ளுவனுக்கு ஒரு நெருப்பு தெரிந்திருக்கிறது.அந்த நெருப்பு புது விதமானது.அதை விட்டு அகன்றால் சுடுமாம்.அதன் அருகே போனால் குளிருமாம்.அது என்ன அற்புத நெருப்பு..பார்ப்போமா?

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.

நீங்கினால் சுடுகின்றது, அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது, இத்தகைய புதுமையானத் தீயை இந்தப் பெண் எங்கிருந்து பெற்றாள்.

குறள் - 1105

நமக்கு விருப்பமான ஒரு பொருள்..நமக்குக் கிடத்ததும் எப்படிப்பட்ட இன்பத்தை அடைகிறோம்.அதுபோன்ற இன்பத்தை விருப்பமான பொருள் இல்லாமல் வேறொன்றும் கொடுக்குமாம்.அது என்ன...

வேட் ட பொழுதின் அவையவை
போலுமே தோட் டார் கதுப்பினாள்


நாம் விரும்பும் பொருள்கள் விரும்பியபொழுது விரும்பிய இன்பம் தருவது போல, மலரணிந்த கூந்தலை உடைய இவள் தோள்கள் இவளுடன் எப்போது இணைந்தாலும் இன்பம் தருகின்றன.

குறள் -1106

ஒரு செடி வாடிக்காணப்படுகிறது.அதற்கு சிறிது தண்ணீர் விட்டால்..அதை உறிஞ்சி மீண்டும் தளிர்த்து நிற்கிறது.ஒரு குழந்தை அழுகிறது..அதற்கு பாலைப் பருகக் கொடுத்தால் அழுகையை நிறுத்தி புத்துணர்ச்சி பெறுகிறது.ஆமா..இதெல்லாம் தெரிந்தது தானே என்கிறீர்களா..  ஆமாம்..ஆனால் வள்ளுவன் சொல்லியிருக்கும் இந்த குறள் தெரியாது..

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.

வாடிக்கிடக்கும் என் உயிர்..இம்மங்கையை அணைக்கும் போது புத்துயிர் பெறுகிறதே.இவளின் தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டதா

No comments: