Sunday, November 23, 2014

திருக்குறள்-காமத்துப்பால் 1326 முதல் 1330 வரை

திருக்குறள்-காமத்துப்பால் 1321 முதல் 1330 வரை

குறள்-1326

வயிறார ஒருவன் உணவு உண்கிறாண்.அது எளிதில் செரிக்காமல் அவதிப் படுகிறான்.வயிறு வலிக்க ஆரம்பிக்கிறது.மருத்துவரிடம் செல்லலாமா? என யோசிக்கிறான்.அதே அளவுடன் உண்ட உணவு உடனே செரித்துவிட்டால்...அடடா...அந்த இன்பம் இருக்கிறதே..அளவிடமுடியாது.ஆனால்..அதைவிட ஒரு இன்பம் உண்டாம்..அது என்ன தெரியுமா? வள்ளுவன் சொல்கிரான்..காமத்தில் கூடுவதைவிட காதலர்க்கு ஊடல் கொள்வதில் ஒரு சுகம் இருக்கிறதாம்.

உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.

உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது இன்பமானது, அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது.

குறள்-1327

காதலன் , காதலி ஊடல் கொள்கின்றனர்.அதில் யாரேனும் ஒருவர் விட்டுக் கொடுத்து ஊடலை முடிவுக்கு கொண்டுவந்தபின் கிடைக்கும் இன்பம் அதிகம்.ஆகவேவிட்டுக் கொடுப்பவர் தோற்றவராக மாட்டார்.அவர் இன்பம் அடைவதில் வெற்றி பெற்றவராகிறார்


ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.

ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.

குறள்-1328

காதலன், காதலி அன்புடன் புணரும்போது காதலனுக்கு வியர்க்கிறது.அப்போது அதுவும் சுகமாய் உள்ளதாம்.மீண்டும் இவளுடன் ஊடல் தோன்றினால்..அதே இன்பத்தையடைய மனம் எண்ணுகிறது.

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.

நெற்றியில் வியர்வை அரும்பிடக் கூடுகையில் ஏற்படும் இன்பத்தை, மீண்டும் ஒருமுறை ஊடல் தோன்றினால், அதன் வாயிலாகப் பெற முடியுமல்லவா?.

குறள்-1329

காதலன் காதலி ஊடல்.காதலன் அந்த ஊடல் அதிக நேரம் நிலைக்க, வேண்டுகிறான். இரவும் விடியாது நீள வேண்டுகிறான்.அப்போதுதான் காதலியின் அருகாமையும் நீடிக்குமாம்


ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.

காதலி அதிகம் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு நான் வேண்டி நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீடிக்கட்டும்.

குறள்-1330

காமவயப்பட..காதலர்க்கு இடயே ஊடுதல் இன்பத்தை அளிக்குமாம்.ஆனால்..அந்த ஊடல் முடிந்ததும் தழுவப்பெற்றால்..அதுவே அந்த ஊடலுக்கு இன்பம் ஆகுமாம்.

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.
காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப்பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்.

Saturday, November 22, 2014

திருக்குறள்-காமத்துப்பால் 1321 முதல் 1325 வரை



குறள்-1321

காதலனிடம் எந்தத் தவருமே இல்லை.ஆனாலும்..அவன் ஒவ்வொரு முறையும் காதலியிடம் ஊடல் கொள்கையில் அவன் அன்பு மேலும், மேலும் கூடுகிறதாம்.ஆகவே இந்தக் காதலி ஊடலுக்கு ஜே சொல்கிறாள்.

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அள஧க்கு மாறு.

அவரிடம் தவறு ஒன்றும் இல்லை.ஆயினும். அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது.

குறள்-1322

காதலன் காதலியில் ஊடல் கொள்கையில், காதலிக்கு சிறு துன்பம் ஏற்படுகிறது.ஊடலுக்குப் பின் கூடல் அன்பை மேலும் பெருக்குவதால்..முதலில் அவளுக்கு ஏற்படும் துன்பமும் பெருமை வாய்ந்ததாம்.

ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும். #1322

ஊடல் காரணமாக என்னிடம் தோன்றும் சிறு துன்பத்தினால் அவர் என்மீது காட்டும் பேரன்பு வாடினாலும் பெருமை பெறும்.

பாடல்-1323

தேவர்கள் உலகம் என்று ஒன்று இருக்கிறதாம்.அங்கு உள்ளவர்களுக்கு இன்பத்திற்கு பஞ்சமே இல்லையாம்.இப்படியெல்லாம் சொல்லப்படும் அவ்வுலகம்..தன் காதலனுடன் அவளுக்கு உள்ள நிலத்துடன் சேர்ந்த நீர் போல ஒற்றுமையால் ஊடலுக்குபின் கிடைக்கும் இன்பத்தைவிட அதிகமாய் இருக்காதாம்.

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.

நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலகம் இருக்கின்றதா?.

குறள்-1324
காதலனை இறுகத் தழுவிக் கொண்டு..இணைபிரியாமல் இருக்க வேண்டுமாயின் ஊடலும் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும்.அது இருவருக்கிடையே மன உறுதியையும் உடைக்கும் ஆயுதமாம்


புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.

காதலரைத் தழுவிக்கொண்டு விடாமலிருப்பதற்கு காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல ஆயுதமும் உள்ளது.

பாடல்-1325

காதலன் தவறே செய்ய வில்லை ஆயினும் தவறிழைத்தவன் போல காதலியிடம் ஊடல் கொண்டு..காதலியினால் புறக்கணிக்கப் படுகையில்..அந்த ஊடலை எண்ணினால் சற்று இன்பமாயும் உள்ளதாம்.


தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து. #1325

தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஒர் இன்பம் உள்ளது.

Friday, November 21, 2014

திருக்குறள்-காமத்துப்பால்-1316 முதல் 1320 வரை


குறள்-1316

காதலி காதலனின் அன்புப் பிடியில் இருந்தாள்.ஆசை அதிகமானதால் காதலன் எப்போதும் உன்னைத்தான் நினைத்தேன் என்றான்.உடனே, காதலி, நினைத்தேன் என்றால், எப்போவாவது மறந்திருந்தால்தானே நினைக்க முடியும்? அப்படியாயின் ஏன் மறந்தீர்? என ஊடத் தொடங்கினாளாம்.

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.

உன்னை நினைத்தேன் என்று காதலியிடம் சொன்னதுதான் தாமதம்; அப்படியானால் நீர் என்னை மறந்திருந்தால்தானே நினைத்திருக்க முடியும்? எனக்கேட்டு ஏன் மறந்தீர்? என்று அவள் ஊடல் கொண்டாள்.

குறள்-1317

தும்மும் போது வாழ்த்துவது வழக்கம்.அதே நேரம் வேடிக்கையாக யாரோ நினைக்கிறார்கள்..அதுதான் தும்முகிறாய் என்பார்கள் பெரியோர்.அதுவே இங்கே வம்பாய் போய்விட்டது இந்தக் காதலனுக்கு

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.

நான் தும்மினேன்; அவள்  வாழ்த்தினாள்; உடனே அதை விட்டு யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்!?.

குறள்-1318

முன் குறள் நாயகனே, அடுத்தமுறை முன்னேற்பாடாக தும்மல் வருகையில் அதை வெளிப்படுத்தாது அடக்கிக் கொண்டான்.அதைக் கண்டவள், "யாரோ உன்னை நினைக்கிறார்கள்.அது எனக்குத் தெரியக்கூடாது என மறைக்கிறீர்கள்" என ஊடல் கொள்கிறாள்.பாவம் அந்தக் காதலன்.

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.


அடுத்தமுறை தும்மல் வர அதனை வெளிப்படுத்தாமல் நான் அடக்கினேன்; அதைப் பார்த்து யாரோ உனக்கு வேண்டியவர்கள் உன்னை நினைப்பதை நான் அறிந்துவிடக்கூடாது என்று எனக்கு மறைக்கிறீரோ, என்று ஊடி அழுதாள்.

குறள்-1319

அவள் ஊடல் கொண்டாலும், அதை காதலனே நீக்கி மகிழ்வித்தாலும், அதற்கும் அவள்...மற்ற பெண்களிடமும் இப்படித்தான் நடந்து கொள்வீர்களா? என்று கோபம் கொள்கிறாள்.

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று.

நான் பணிந்து போய் அவள் ஊடலை நீக்கி மகிழ்வித்தாலும், உடனே அவள்  நீர் இப்படித்தான் மற்ற பெண்களிடமும் நடந்து கொள்வீரோ? என்று சினம் கொள்வாள்..

குறள்-1320

சரி ஊடலூ வேண்டாம்..என அவளிடம் பேசாது அவளது அங்கங்களின் அழகை ரசித்துக் கொண்டிருந்தால், எந்தப் பெண்ணின் உறுப்புகள் போல உள்ளது என என் மேனியை பார்க்கறீர்களா? எனச் சினம் கொள்கிறாள்.இவன் என்னதான் செய்வான்?பாவம்

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.

அவளுடைய அழகை நி‌னைத்து அமைதியாக இருந்து அவளை நோக்கினாலும், நீர் யாரை நினைத்து ஒப்புமையாக எல்லாம் பார்க்கின்றீர்? என்று சினம் கொள்கிறாள்.




Thursday, November 20, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1311 முதல் 1315 வரை



குறள்- 1311

பெண் விருப்பம் கொண்டவன் அவன்.தெருவில் செல்லும் பெண்களை எல்லாம் தழுவதாகக் கற்பனை செய்து..தம் கண்களாலேயே அவர்கள் மீது காமப்பார்வை வீசியவன்.அப்படிப்பட்ட அவனை அவள் இனி தழுவ மாட்டேன் என்கிறாள்


பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.

பெண்ணாக இருப்போர் எல்லோருமே, பொதுவாக நினைத்துக் கண்களால் உண்பதால் கற்பு நெறிகெட்ட உன் பரந்த மார்பைப் பாவை நான் தழுவ மாட்டேன்.

குறள்:-1312

சாதாரணமாக நம் விட்டில் பெரியவர்கள், வயதில் சிறியோர் தும்மினால், "நீடூழு வாழ்க" என ஆசிர்வதிப்பர்.அந்தப் பழக்கம் வள்ளுவன் காலத்திலேயே இருந்திருக்கிறது என்பது இக்குறளால் தெரிகிறது.காதலி , காதலனிடன் ஊடல் கொள்கிறாள்.ஊடலை மறக்க அவன் தும்மினானாம்.அப்போதாவது எப்போதும் சொல்வதுபோல"நீ வாழ்க" என்று கூறி ஊடலை முடித்துவைப்பாள் என்ற எண்ணத்தில்.



ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.

காதலரோடு ஊடல் கொண்டிருந்த போது, நான் அவரை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார்.

குறள்-1313

 அவன் ஒரு மாற்றத்திற்காக மரத்திலே மலர்ந்த பூவை மாலையாக சூடிக்கொண்டான்.உடன், காதலி, வேறு எந்த பெண்ணுக்கோ சம்மதம் கேட்கும் வகையில்தான்  அம்மாலையைச் சூடிக்கொண்டுள்ளதாகக் கோபம் கொள்கிறாள்.


கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.

கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்கிறாள்

குறள்-1314.

எல்லாக் காதலரையும் விட நான் அதிகம் காதல் உடையவன் உன் மீது என்கிறான் காதலன்.அவன்பால் உள்ள அன்பு முகுதியால், இச் சொற்களைக் கூடத் தாங்க முடியாதவள்'அவன் பலரைக் காதலிப்பதாக அர்த்தம் கொள்கிறாள்.

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.
தெளிவுரை

யாரைக் காட்டிலும் உன்னிடம் நான் காதல் மிகுதியாகக் கொண்டுள்ளேன் என்று இயல்பாகச் சொன்னதைக் கூடக் காதலி தவறாக எடுத்துக் கொண்டு யாரைக்காட்டிலும் யாரைக் காட்டிலும் எனக் கேட்டு ஊடல் புரியத் தொடங்கி விட்டாள்.

குறள்-1315

அவள் அவனை அளவிற்கு அதிகமாகக் காதலிக்கிறாள்.ஒரு நாள் காதலன் காதல் மிகுதியில் "உன்னை இப்பிறவியில் பிரியேன்' என்கிறான்.அப்படியெனில், என்னை அடுத்தப் பிறவியில் பிறிந்துவிடுவீரா? என்று கண்களில் நீர் மல்க வினவுகிறாள் இக்காதலி

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.
தெளிவுரை


இப்பிறப்பில் நான் பிரியமாட்டேன் என்று நான் சொன்னவுடன் அப்படியானால் மறு பிறப்பு என ஒன்று உண்டோ? அப்போது நம்மிடையே பிரிவு ஏற்படுமெனக் கூறுகிறாயா? எனக் கேட்டு கண்கலங்கினாள் காதலி.

திருக்குறள்- காமத்துப்பால் 1306 முதல் 1310 வரை





குறள்-1306

மிகவும் கனிந்த பழமானாலும் சரி, இளம் காயானாலும் சரி அப்பழத்தின் உண்மையான ருசியைத் தராது.அது போலவே காதலன், காதலிக்குள் பெரும் ஊடலும், சிறு ஊடலும் ஏற்பட்டு அது இன்பம் தரும் காதல் வாழ்க்கையை அமையாவிட்டால் வாழ்க்கை பயனற்று போய் விடும்.

துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.


பெரும் பிணக்கும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாக ஆகிவிடும்..


குறள்-1307

சிறு ஊடல்கள் கணவன், மனைவியரிடையே இன்பம் பயக்குமானாலும், அப்படிப்பட்ட ஊடலிலும் ஒரு துன்பம் இருக்கிறதாம்.அவ்வூடல் நீண்டு விட்டால் துன்பமே பயக்குமாம்.


ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று.

கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருப்பதிலும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கின்றது.

குறள்-1308

நம்மை எண்ணி அல்லவா? வருந்துகிறார்..நம்மை நினைத்து அல்லவா வருந்துகிறாள் என்ற உணர்வு ஒருவருக்கொருவர் இல்லாதபோது அடுத்தவர் வருந்துவதால் என்ன பயன்?

நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி.

நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன?.

குறள்-1309

நீர் வெயிலுக்குக் கீழ் இருந்தால் தான் வெயிலில் வருவோர்க்கு குளிர்ச்சி நீரைத் தரமுடியும்.அதேபோல..ஊடல் அன்புள்ள காதலன், காதலியினிடம் ஏற்பட்டால் அது இனிமையானதாகவே ஆகும்.

நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.


நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது.


குறள்-1310

ஒருவர் மீது அன்பு ஏற்பட்டுவிட்டால்..அவருடன் ஊடலும் கொண்டால்..நம் மனதைக் கவர்ந்தவரிடம் ஊடல் கொண்டோம், அவனுடன் கூடவேண்டும் என மனம் சொல்லக் காரணம் அந்த அன்பே ஆகும்.


ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.

ஊடலைப் போக்காது வாடவிட்டு வேடிக்கை பார்ப்பவருடன் கூடியிருப்போம் என்று என் நெஞ்சம் துடிப்பதற்கு அதன் அடங்காத ஆசையே காரணம்.

Wednesday, November 19, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1301 மு தல் 1305 வரை



குறள்- 1301

அவள் அவனுடன் ஊடல் கொள்ளும் போது அவன் அடையும் வேதனை அவளுக்கு வேடிக்கையாய் இருக்கிறதாம்.ஆகவே அவனிடம் ஊடல் செய்து..அவன் துன்பத்தைப் பார்க்க ஆசைப்படுகிறால் இந்தக் காதலி

புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது


( ஊடும்போது அவர் அடைகின்ற) காதல் துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து ஊடல் கொள்வாயாக

குறள்-1302

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்பார்கள்.உண்ணும் உணவில் கூட உப்பின் அளவு சற்று அதிகமானால்..அதை அனுபவித்து உண்ணமுடியாது.அது போல கலவி இன்பத்திற்கும் ஊடல் வேண்டுமாம்.ஆனால் அதுவும் அளவோடிருத்தல் அவசியமாம்


உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.

உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவு கடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது.

குறள்-1303

ஊடல் கொண்ட மனைவியிடம் ஊடல் நீக்கி கூட வேண்டுமாம்.அப்படியில்லாமல் கூடுவது ஊடல் துன்பத்தில் இருப்பவரை மேன்மேலும் வருத்துவது போலாம்.

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல். #1303

தம்மோடு ஊடல் கொண்டவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்ப நோய் செய்து வரவழைத்தல் போன்றது.

குறள்-1304

ஒரு கொடிக்கு நீர் ஊற்றாமல் இருந்தால் அது வாட ஆரம்பிக்கும்.அதைவிட கொடுமையானது அச் செடியை அடியோடு அறுத்துப் போடுதல்.அதற்கு ஈடாகுமாம் ஊடல் கொண்டவளிடம் கூடாமல் போவது

ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.

ஊடல் கொண்டவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது.

குறள்-1305
அழகிய மனைவியின் ஊடல்தான் நல்ல பண்புகல் அமஒந்த கணவனுக்கு சிறப்பாகுமாம்.இருவரின் அன்பு ஊடல் அளவுடன் இருந்தால் கூடும் எனலாம்.

நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து.

மலர் விழி மகளிர் நெஞ்சில் விளையும் ஊடலே நல்ல பண்புகள் அமைந்த  காதலர்க்கு அழகு சேர்க்கும்.

திருக்குறள் -காமத்துப்பால்- 1291 முதல் 1295 வரை



காதலன் மனம் காதலியை எண்ணாது இருக்கும் போது தன் நேஞ்சு மட்டும் அப்படியில்லாமல் ஏன் காதலனையே நினைத்து கொண்டிருக்கிறது என தன் நெஞ்சை காதலிக் கேட்கிறாள்.

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.

நெஞ்சே! என்னை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருக்கும்போது நீ எனக்குத் துணையாக இல்லாமல் அவரை நினைத்து உருகுவது ஏன்?.

குறள்-1292

என் மீது அவருக்கு அன்பு இல்லை என உனக்கேத் தெரிந்திருந்தும் ..என் நெஞ்சே..நீ , நாம் போனால் அவர் கோபம் கொள்ளமாட்டார் என அவரையே எண்ணி அவரிடம் ஏன் போகிறாய்?

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.

என் நெஞ்சே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே!.

குறள் -1293

அவன் அவளை விட்டு பிரிந்துள்ளான்.ஆகவே அவள் கண்களுக்கு அவன் நல்லவனாய்த் தெரியவில்லை.ஆயினும், அவள் மனம் அவனையே நினைத்துக் கொண்டிருக்கிறது..ஒருவேளை அவனைக் கவனிக்க ஆளில்லை என்ற ஆதங்கத்தாலா?


கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.

நெஞ்சே! நீ உன் விருப்பத்தின்படியே அவர் பின் செல்வதற்குக் காரணம், துன்பத்தால் அழிந்தவர்‌க்கு நண்பர் இல்லை என்னும் எண்ண‌மோ?.

குறள்-1294

காதலிக்கு காதலன் மீது கோபம்.ஆனால், அவனைக் கண்டதுமே, அவளது நெஞ்சம் அவன் மீது இருந்த கோபத்தையெல்லாம் மறந்து அவனை நாடுகிறது.அதனால், தன் மனம் மீதே கோபப்பட்ட அவள் இனி அதனுடன் எந்த ஆலோசனையும் செய்ய மாட்டேன் என மனதிடம் பொய்க்கோபம் காட்டுகிறாள்.

இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

நெஞ்‌சே! நீ ஊடலைச் செய்து பின் அதன் இன்பத்தை நுகர மாட்டாய்; இனிமேல் அத்தகையவற்றைப் பற்றி உன்னோடு கலந்து எண்ணப் போவதில்லை.

குற:-1295

இக்குறளின் நாயகிக்கோ வேறு விதமான எண்ணம்.கணவன் அவளை விட்டு பிரிந்திருக்கும் காலம், அவன் உடன் இல்லையே என மனதில் அச்சம் இருக்குமாம்.அவர் வந்து சேர்ந்துவிட்டாலோ..அவர் எப்போது பிரிந்து சென்றுவிடுவாரோ! என்ற அச்சம் இருக்குமாம்.

பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.

என் கணவர் என்னைப் பிரிந்து இருந்தபோது அவர் இல்லாததற்குப் பயப்படும்; அவர் வந்துவிட்டால், பிரிவாரே என்று பயப்படும். ஆகவே என் மனம் எப்போதும்  நீங்கா துன்பத்தைப் பெற்றிருக்கிறது.

Tuesday, November 18, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1296 முதல் 1300 வரை



பாடல்-1296

நம் மனமே நம்மை உண்ணுமா? உண்ணூம் என்கிறான் வள்ளுவன்.எப்போது..
காதலன் காதலையை விட்டுப் பிரிந்து விட்டான்.அந்தப் பிரிவைத் தனியே இருந்து அனுபவிக்கிறாள் காதலி.அந்தக் கொடுமை இருக்கிறதே..! அதுதான் அவள் நெஞ்சே அவளைத் தின்பது போல இருக்கிறதாம்

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.

காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவரை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போல் துன்பம் செய்வதாக இருக்கிரது.

குறள்-1297

காதலன் ,காதலியை மறந்து விட்டான்.ஆனால், அவளால் அவனை மறக்க முடியவில்லையாம்.ஆகவே தன் மனதைத் தானே திட்டிக் கொள்கிறாள்.அதற்குச் சற்றும் நாணம் கிடையாது என.

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.

தன்னை மறந்த காதலரைத் தான் மறக்க முடியாத,  நிலையில்லாத மடநெஞ்சோடு கூடி,  நாணத்தையும் மறந்துவிட்டேன்.

பாடல்-1298

பிரிந்து சென்ற காதலனை இகழ்வாகப் பேசினால்...அந்த இழிவு தனக்குதானே என எண்ணி இந்த காதலி அவன் வரவையும், அவனுடன் கூடுதலையும் எதிர் நோக்கி இருக்கிறாள்.

எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.


பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

குறள்-1299

காதலனைப் பிரிந்ததால் காதலிக்கு மகிழ்ச்சி இல்லை.ஆனால்..அத் துன்பத்திற்கு அவள் மனமே அவளுக்குத் துணை போகாத போது வேறு துணை என்னவாக இருக்கக்கூடும்?

துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.

ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, அவர் உரிமையாகப் பெற்றுள்ள அவரது நெஞ்சமே துணையாகா விட்டால், வேறு யார் துணையாவார்?.

குறள்-1300

அவளது நெஞ்சமே அவள் சொல் கேட்கவில்லையெனில், மற்றவர்கள் சொல்வதை அவளால் எப்படி ஏற்கமுடியும்? அவளது நினைவில் இருந்து அவன் மறையவில்லையே!

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.

ஒருவர்க்கு அவர் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது மற்றவர் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும்.

Monday, November 17, 2014

திருக்குறள்-காமத்துப்பால்- 1286 முதல் 1290 வரை



குறள்-1286

கணவன் அருகில் இருந்தால், அவளுக்கு அவன் மீதான குறைகள் ஏதும் கண்ணுக்குத் தெரிவதில்லை.ஆனால், அவன் இவளைப் பிரிந்து சென்றால்..அவனிடம் உள்ள குறைகளை மட்டுமே அவளது மனம் கணக்கிடுகிறதாம்

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.

கணவனை நான் காணும்போது அவரது தவறுகள் தெரியவில்லை. காணாதபோதோ, தவறுகளைத் தவிரப் பிற தெரியவில்லை.

குறள்-1287

வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.அதில் பாய்ந்தால் அதனுடன் அடித்துச் செல்வோம் என்று அறிந்தும், மடத்தனமாய் அதைல் பாய்பவர்களைப் போல, அவனிடம் கொண்ட கோபம் பலனளிக்காது என்று தெரிந்தும், தேவையின்றி அவனுடன் ஊடல் கொள்வது எந்தப் பயனை அளிக்கும்?


உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.

வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் ஓட நீரில் பாய்கின்றவரைப் போல், பயன்படாது என அறிந்திருந்திருந்தும் ஊடல் கொள்வதால் பயன் என்ன?.

குறள்-1288

கள்ளுண்ணுதல் தீமை என மனம் சொன்னாலும், உண்ணுவதால் உண்டாகும் மயக்கத்தை மனம் கொடுப்பது போல, காதலன் அவளுக்கு இழிவுதரும் துன்பங்களைச் செய்தாலும் அவன் மீது கொண்டுள்ள காதல்



இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.



என்னுள்ளம் கவர்ந்த கள்வனே! இழிவு தரக்கூடிய துன்பத்தை நீ எனக்கு அளித்தாலும் கூட, கள்ளை உண்டு களித்தவர்க்கு மேலும் மேலும் அந்தக் கள்ளின் மீது விருப்பம் ஏற்படுவது போலவே என்னையும் மயங்கச் செய்கிறது உன் மார்பு.

குறள்-1289

காதல் இன்பம் மிகவும் மென்மையானது.அதை அனுபவிக்க என இடம், பொருள் எல்லாம் இருக்கிறது அதை அறியாது காதல் நலன் அடைய நினைப்பவரே அதிகம் உள்ளனர்

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.

காதல் இன்பம் மலரைவிட மென்மையானது. அதை அறிந்து அனுபவிப்பதற்கு ஏற்ற இடம், காலம், தேவையானவை எல்லாம் பெற்றுக் காதல் இன்பத்தின் நலனை அனுபவிப்பவர் இவ்வுலகில் சிலரே.

குறள்-1290

காதலி, காதலனுடன் ஊடல் கொண்டுள்ளாள்,ஆனால் அவனைக் கண்டதும், அவனுக்கு முன்பாகவே அவனைத் தழுவி அவனுள் கலந்துவிடுகிறாள்.அந்த அளவிற்கு அவன் மீது உள்ள காதல் ஊடலை மறக்க வைத்து விடுகீறது

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.


கண்களால் ஊடலை வெளியிட்டவள், கூடித் தழுவுவதில் என்னைக் காட்டிலும் விரைந்து செயல்பட்டு என்னோடு கலந்து விட்டாள்.

Sunday, November 16, 2014

திருக்குறள்-காமத்துப்பால்- 1281 முதல் 1285 வரை



குறள்-1281

கள் அருந்தினால்தான் மயக்கம் தரும்.ஆனால்..காதலிப்பவர்களுக்கோ..ஒருவரை ஒருவர் நினைத்தாளே கள் உண்ட மயக்கம் வந்துவிடுமாம்.ஒருவரை ஒருவர் பார்த்தாலே மயக்கும் இன்பம் வந்துவிடுமாம்

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு. #1281

நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்‌லை; காமத்திற்கு உண்டு.

குறள்-1282

காதல்..காதலனிடம் பெருகும் நேரத்தில்..அதை வீணாக்க இருவருக்குள் சிறு ஊடல் போதுமாம்.ஆகவே..காதல் பெருகைகையில் ஊடல் கூடவே கூடாதாம்

தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.

காமம் பனையளவாக நிறைய வரும்போது காதலரோடு தினையளவுக் கூட ஊடல் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

குறள்-1283

காதலி சொல் கேட்காமல்..காதலன் தன் விருப்பத்திற்கு செயல்களைச் செய்தாலும்..காதலியின் கண்கள் அவனைக் காணவேண்டும் என்றே இருக்கிறதாம்

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.

என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் இருப்பதில்லை.

குறள்-1284

காதலனைக் கண்டதும்..அவன் செய்த தவறுகளையெல்லாம் எண்ணி அவனுடன் பெரும் சண்டை போட வேண்டும் என எண்ணுகிறாளாம் தலைவி.ஆனால் அவனைப் பார்த்ததுமே எல்லாவற்றையும் மறந்து அவனுடன் கூடவே மனம் சென்றுவிடுகிறதாம்.


ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.

தோழி! நான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்; ஆனால், என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது.

குறள்-1285

காதலி கண்களுக்கு மை தீட்ட மை தீட்டும் கோலைத் தேடுகிறாள் .அதைக் காணவில்லை.அதே போன்று காதலைக் கண்டதும் அவன், அவளைப் பிரிந்து சென்ற கோபம் காணாமல் போகிறதாம்.

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.

மை தீட்டும் நேரத்தில் தீட்டு் கோலைக் காணாத கண்களைப் போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன்.

Saturday, November 15, 2014

திருக்குறள்-காமத்துப்பால்-1276 முதல் 1280 வரை



குறள்-1276

என்றும் இல்லாதவாறு காதலியை ஆரத்தழுவுகிறான் காதலன்.அப்படி அவன் அவளிடம் காட்டும் அன்பு அவன் அவளைவிட்டு பிரியப்போகிறானோ என்னும் அச்சத்தை அவளுக்கு அளிக்கிறதாம்.

பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.

பெரிதும் அன்பு செய்து விரும்புமாறு கூடுதல், அரிதாகிய பிரிவைச் செய்து பிறகு அன்பில்லாமல்கைவிட எண்ணுகின்ற குறிப்பை உடையதாகும்.

குறள்-1277
காதலன் காதலியை சற்றும் விருப்பம் இன்றித் தழுவுகிறான்.அது அவள் உடல் அறியவில்லையாம்.ஆனால் உள்லத்திற்குத் தெரிகிறதாம்.அதனால்தான் அவளது வளையல்கள் அதை உணர்ந்து கையிலிருந்து கழலுகிறதாம்

தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.


குளிர்ந்த நீர்த் துறைக்கு உரிய காதலன் உடலால் கூடியிருக்கும் போது, உள்ளத்தால் பிரியும் நினைவு கொண்டதை அவள் வளையல்கள் அவளுக்கு முன்னரே உணர்ந்து கழன்றன போலும்!.

குறள்-1278

இணைபிரியா காதலர்கள்.காதலன் அவளை நேற்றுதான் பிரிந்து சென்றுள்ளாம்.ஆனாலும்,,அப்பிரிவையும் தாங்கமுடியாது பசலை அடைந்து ஏழுநாட்கள் பிரிந்தாற் போல உள்ளதாம்


நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.

நேற்றுத்தான் அவள் காதலர் பிரிந்து சென்றார்; எனினும், ஏழுநாட்கள் கழிந்தன என்பது போல் பசலை நிறம் அவளைப் பற்றிக் கொண்டதே.

குறள்-1279
அவன் பிரிந்து சென்றுள்ளான் என்பதை மெலிந்த தோள்களும், கழன்ற வளையல்களும் உணர்த்துவதால்..அவள் அவன் இருக்குமிடம் நோக்கிச் செல்ல தீர்மானித்துவிட்டாளாம்


தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது. #1279

பிரிவு காரணமாகக் கழலக் கூடிய வளையலையும், மெலிந்து போகக் கூடிய மென்மையான தோளையும் நோக்கியவன் காதலனைத் தொடர்ந்து செல்வதென்ற முடிவைத் தன் அடிகளை நோக்கும் குறிப்பால் உணர்த்தினான்.

குறள்-1280

சாதாரணமாகவே தனது உள்ளம் சொல்வதை கண்களாலேயே சொல்லிவிடுவார்கள் பெண்கள்.ஆம்..அவர்கள் கண்களே பேசும்.அதுபோல காதல் ஆசையையும் கண்களால் உணர்த்தி..அதைத் தீர்க்குமாறு காதலனுக்கு சொல்லிவிடுவார்களாம்.

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.


காதல் வேட்கையைக் கண்களால் உணர்த்திக் காதலனுடன் போவதற்கு இரந்து நிற்கும்போது பெண் தன்மை மேலும் பெண்மை சேர்த்தாற் போன்று இருக்கின்றது.

Friday, November 14, 2014

திருக்குறள்-காமத்துப்பால்-1271 முதல் 1275 வரை



குறள்-1271

காதலி, காதலனிடம் தனது விருப்பம் என்ன எனத் தெரிவிக்க நாணப்பட்டுக் கொண்டு தெரிவிக்கவில்லை.ஆனால்...அவளது அழகிய மை தீட்டப்பட்ட கண்கள் அவள் சொல்ல விழைவதை அவனிடம் சொல்லிவிடுகிறதாம்

கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு.

நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக் கூடிய செய்தி  இருக்கிறது.

குறள்-1272

காதலியிடம் கண் நிறைந்த அழகு, பெண்மைப் பண்பு. அழகிய மூங்கில் போன்ற தோள்கள்...காதலனுக்கு அவளை ரசித்துக் கொண்டே இருக்கலாம் போல உள்ளது.அவரவர்க்கு, அவரவர் காதலி பேரழகாய்த் தெரிவதில் வியப்பு என்ன?

கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது.

கண்நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் கொண்ட என் காதலிக்குப் பெண்மைப் பண்பு நிறைந்திருப்பதே பேரழகாகும்.

குறள்-1273

குறள்-1273

பளிங்கிற்குள் உள்ளது வெளியே தெரியும்.ஆகவேதான்..ஒளிக்க ஒன்றுமில்லா மனதை பளிங்குமனம் என சொல்வர்.ஆனால் அழகு அவளுக்கு பளிங்கு மாலைக்குள் கோர்க்கப்பட்ட நூல் தெரிவது போல தெரிகிறதாம்.

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு.


கோக்கப்பட்ட மணியினுள் விளங்கும் நூலைப் போல் என் காதலியின் அழகினுள் விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது.

குறள்-1274

அரும்பாத மலர் தனக்குள் வாசனையை அடக்கி வைத்திருக்கும்.அது மலர்ந்ததும் அதன் வாசம் நம்மை இழுக்கும்.அதேபோல ஒரு பெண்..அதுவும்..நம் காதலி ஒரு புன்னகை செய்தால் போதும்..அந்த புன்னகை எனும் அரும்புக்குள் காதலனின் நினைவு நிரம்பி இருக்குமாம்.


முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.

மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது.

குறள்-1275

கணவன், மனைவிக்குள் அவர்களுக்கு மட்டுமே புரியும் வகையில் பல சங்கேத மொழிகள் உண்டு.அது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும்.

செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.

வண்ணமிகு வளையல்கள் அணிந்த என் மனைவியின் பார்வையில், என்னைத் துளைத்தெடுக்கும் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தும் இருக்கிறது.

Thursday, November 13, 2014

திருக்குறள்- காமத்துப்பால்- 1266 முதல் 1270 வரை



குறள்-1266

காதலனைப் பிரிந்து காதலி.அவன் வருகைக்காகக் காத்திருக்கிறாள்.அவன் வந்ததும் அவனைப் பிரிந்திருந்ததால் அவளுக்கு இருந்த துன்பம் விலகிவிடுமாம்.அத் துன்பத்தை அவள் நோய் என்றதன் மூலம் அதன் வேதனையை உணரலாம்.
 
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.

என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்ப நோய் எல்லாம் தீருமாறு நான் நன்றாக இன்பம் துய்ப்பேன்.

குறள்-1267

பிரிந்திருந்த கணவன் வந்தால், அவன் பிரிந்திருந்ததற்காக ஊடுவாளா?அல்லது..பிரிந்தவர்கூடினால் பேசவும் வேண்டுமோ? என்பத்ற்கேற்ப பேசாமல் அவனைத் தழுவுவேனா? அல்லது இரண்டையும் செய்வேனா? இக்காதலிக்கு என்னதொரு குழப்பம் பாருங்கள்


புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் விரன்.


கண்போல் சிறந்த என் துணைவர் வந்தால் அவர் நெடுநாள் பிரிந்திருந்ததற்காக ஊடுவேனா? அவர் பிரிவைத் தாங்க முடியாமல் அவரைத் தழுவுவேனா? அல்லது இரண்டு செயல்களையும் கலந்து செய்வேனா?.

குறள்-1268

இங்கே...தலைவனின் நண்பன் கூறுகிறான்.அவன் மேற்கொண்டுள்ள செயலில் வெற்றி பெற்றால் இவன் தன் மனைவியுடன் உல்லாசமாய் இருப்பானாம்.தலைவனின் நலமே தன் நலம் என எண்ணம்.


வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.

தலைவன், தான் மேற்கொண்டுள்ள செயலில் வெற்றி பெறுவானாக; அவன் வென்றால் என் மனைவியுடன் எனக்கு மாலை இன்ப விருந்துதான்.

குறள்-1269

நமக்குப் பிடித்தவர், நம்மை விட்டு பிரிந்திருந்தால்..ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாய்த் தோன்றும்.காதலன், காதலிக்கும் கூட இது பொருந்துமாம்.வெளிநாடு சென்ற காதலர் திரும்பி வரும் நாளை நினைத்திருக்கிறாள்.அவன் திரும்ப வரும் ஒவ்வொரு நாளும் ஒருநாள் ஏழுநாட்கள் போல நீண்டுத் தெரியுமாம்.


ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.

தொலைவில் உள்ள வெளிநாட்டிற்குச் சென்ற காதலர் திரும்பி வரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் ஏழுநாள் போல ( நெடிதாக) கழியும்.

பாடல்-1270

பிரிவுத் துன்பத்தைப் பொறுக்கமுடியாது மனம் பேதலித்துப் போனப்பிறகு, மீண்டும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கூடுவதினால் பயன் ஏதுமில்லை.பிரிவுத் துயர் மனநிலைக் கூட பிறழச் செய்து விடுமாம்



பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.

துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் நிலையிழந்து போய் விடுமானால், பிறகு ஒருவரையொருவர் திரும்பச் சந்திப்பதனாலோ, சந்தித்துக் கூடுவதினாலோ, என்ன பயன்?.

Wednesday, November 12, 2014

திருக்குறள் - காமத்துப்பால்-1261 முதல் 1265 வரை



குறள்-1261

காதலன் காதலையைப் பிரிந்து செல்கிறான்.அவன் பிரிந்து சென்றது முதல் ஒவ்வொரு நாளும் சுவரில் ஒரு கோடு இடுகிறாள்.அதனால் அவள் விரல்கள் தேய்ந்துவிட்டனவாம்.அவன் வருகிறானா...என பார்த்துப் பார்த்து கண்களும் காணும் திறனை இழந்து வருகிறதாம்.


வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.

அவர் என்னைப் பிரிந்து போன நாள்களைச் சுவரில் குறித்துத் தொட்டு எண்ணுவதால் என் விரல்கள் தேய்ந்து விட்டன; அவர் வரும் வழியைப் பார்த்து என் கண்களும் ஒளி இழந்தன.

குறள்-1262

காதலரை அவளால் மறக்க இயலவில்லை.அவள் மறந்திருக்க முயன்றாலும் அவள் தோள்கல் அழகு இழந்து மெலிந்து, அதில் அணிந்திருந்த அணிகலங்களும் கழன்று விழும் நிலையில் உள்ளனவாம்

இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.

காதலரைப் பிரிந்திருக்கும் நான், பிரிவுத் துன்பம் வாராதிருக்க அவரை மறந்திருக்க முனைந்தால், என் தோள்கள் அழகிழந்து மெலிந்து போய் வளையல்களும் கழன்று விழுவது உறுதி

குறள்-1263

அவனுக்கு அவளதுபால் ஈடுபாடு இல்லை.ஆனால் அவளுக்கோ அவனை மறக்க இயலவில்லை.எவ்வளவு காலம் ஆனாலும் அவன் விரும்பி திரும்பும்வரை காத்திருப்பாளாம் இந்த கண்ணகி


உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.

ஊக்கத்தையே உறுதுணையாகக் கொண்டு வெற்றியை விரும்பிச் சென்றுள்ள காதலன், திரும்பி வருவான் என்பதற்காகவே நான் உயிரோடு இருக்கிறேன்.

குறள்-1264

அவளைப் பிரிந்து சென்றவன்..அதே அன்புடன் அவளைக் காண திரும்பி வருகிறான்.காதலிக்கோ மகிழ்ச்சியடைகிறாள்.மனம் உயரத்தில் கொடி கட்டிப் பறக்கிறது.

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு.

முன்பு கூடியிருந்த காதலைக் கைவிட்டுப் பிரிந்த அவருடைய வருகை‌யை நினைத்து என் நெஞ்சம் மரத்தின் கிளைகளின் மேலும் ஏறிப் பார்க்கின்றது.

குறள்-1265

கணவனைக் காணாமல் வாடுகிறாள் மனைவி.அதனால் உடலில் பசலை படர்கிறது.அவனைப் பார்த்தால் போதும் தன் நோய் நீங்கிவிடும் என்கிறாள் அவள்


காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு. #1265


என் காதலரைக் கண்ணாரக் காண்பேனாக; கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலை நிறம்
தன்னால் நிங்கி விடும்.

Tuesday, November 11, 2014

திருக்குறள்- காமத்துப்பால்- 1256 முதல் 1260 வரை





குறள்-1256

காதலன் காதலியைப் பிரிந்து சென்றுள்ளான்.காதலிக்கு அவனுடன் போய்ச் சேர வேண்டும் என்று ஆசை.அந்த ஆசை எதனால் உண்டானது? அதற்குக் காரணம் அவனுடன் உள்ள காதலாம்.காதல் நோய்தான் அப்படி அவளைத் தூண்டுகிறதாம்.


செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்.
தெளிவுரை

வெறுத்து நீங்கிய காதலரின் பின் செல்ல விரும்பிய நிலையில் இருப்பதால் என்னை அடைந்த இந்த காமநோய் மிகவும் கொடுமையானது

குறள்-1257

அவன் அவளைக் காதலிக்கிறான்.ஆகவே அவள் சொல்வதையெல்லாம் கேட்கிறான்,ஆகவே, அவன் எதையாவது விரும்பி, அவள் நாணத்துடன் சம்மதிக்கும் நிலையில் இல்லை.ஆகவே நாணத்தை அவள் மறந்தாளாம்.


நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்

நாம் விரும்பிய காதலர் காமத்தால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்வாரானால். நாணம் என்று சொல்லப்படும் ஒரு பண்பையும் அறியாமல் இருப்போம்.

குறள்-1258

காதலன் அவளைப் புகழ்வதையெல்லாம் கேட்க மனம் விரும்புகிறது.அவன் சொல்வது சற்று மிகைப்படுத்தல் என அவளுக்குத் தெரியுமாம்.அந்த பணிவான சொற்கள் அவளைக் கட்டிப் போடுகிறது.


பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.

அவளுடைய பெண்மையாகிய அரணை அழிக்கும் படையாக இருப்பது, பல மாயங்களில் வல்ல, கள்வனான காதலனுடைய பணிவுடைய மொழி அல்லவா?

குறள்-1259

காதலன் வந்தால் ஊடல் கொள்ள எண்ணி அவள் அவன் முன் வாராமல் இருந்தாளாம்.ஆனாலும், அவள் மனம் அதையே நினைத்தோ கொண்டிருந்ததால் அதற்கு அவசியமில்லை என எண்ணிவிட்டாளாம்.

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.

ஊடல் கொண்டு பிணங்குவோம் என நினைத்துதான் சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விடுத்து அவருடன் கூடுவதைக் கண்டு மறந்து தழுவிக் கொண்டேன்.

குறள்-1260

அவளுக்கு அவளது காதலனைக் கண்டால்..மனம் கட்டுப்படுத்த முடியாது இருக்கிறதாம்.அது கொழுப்பைத் தீடிலிட்டாம் உருகுவதுபோல மனம் கரைகிறதாம்.ஆகவே ஊடல் என்பது அவளால் முடியாதாம்.

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.

நெருப்பிலிட்ட கொழுப்பைப் போல் உருகிடும் நெஞ்சம் உடையவர்கள், கூடிக் களித்தபின் ஊடல் கொண்டு அதில் உறுதியாக இருக்க முடியுமா?.

திருக்குறள்- காமத்துப்பால்- 1251 முதல் 1255 வரை



குறள்-1251

காதலிக்கோ காதலனைக் கண்டால் நாணம்.தன் விருப்பத்தையும் சொல்ல நாணம் குறுக்கே உள்ளது.ஆனாலும், வேறு வழியின்றி சொல்ல வைக்கிறது காமம் என்னும் நோய்

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்று சொல்லப்படும் கதவை காமம் ஆகிய கோடாலி உடைத்து விடுகிறதே.

குறள்-1252

நடுஇரவு. ஊரே உறங்க..அவள் மட்டும் அவனை நினைத்து உறங்கவில்லை.அவளை உறங்க விடாது காதல் இரக்கமற்றதாய் இருக்கிறதாம்


காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.

எல்லாரும் வேலையின்றி உறங்கும் நடுச்சாமத்திலும் என் நெஞ்சத்தைத் தண்டித்து வேலை வாங்குவதால் காதல் என்று சொல்லப்படும் ஒன்று இரக்கமற்றதாக இருக்கிறது.

குறள்-1253

நாம் தும்மினால்...பெரியோர்கள், "யாரோ உன்னை நினைக்கின்றனர்.அதானல்தான் தும்முகிறாய்' என்பார்கள்.ஆனால் இந்தத் தலைவி காதலை மறக்க எண்ணுகிறாள்.அந்த நினைவே தும்மலாய் வருகிறதாம்.

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.

நான் காமத்தை என்னுள்‌ளே மறைக்க முயல்வேன்; ஆனால் அதுவே என் குறிப்பின்படி நிற்காமல் தும்மல் போல் தானே வெளிப்பட்டு விடுகிறது.

குறள்-1254

அவள் மிகவும் அடக்கமானவள். ஆனால், அவள் காதலிக்க ஆரம்பித்ததும், அவள் காதல் விருப்பம் ஊர் முழுதும் எப்படியோ தெரிந்துவிட்டது.காதலை நாம் மறைக்க முயன்றாலும் வெளிப்பட்டுவிடும் என்று தெரியாதவளா இவள்?


நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும். #1254

நான் இதுவரையில் அடக்கத்துடன் உள்ளதாக எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் என் காமம் என்னுள் மறைந்திருத்தலைக் கடந்து வெளியே வெளிப்படுகின்றது.

குறள்-1255

காதலன் அவளை விட்டு பிரிந்து சென்றுள்ளான்.அவளாலும் அவனை பிந்தொடர முடியாது.அந்த அடக்கக் குணத்தை தெரியாதவர்கள், தெரிந்துகொள்ள காதலிக்க வேண்டும்.அல்லையேல்..அத்துயரம் எப்படிப்பட்டது என அறிய வாய்ப்பில்லை.

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று. #1255

தம்மை வெறுத்து நீங்கியவரின் பின் செல்லாமல் மானத்தோடு நிற்கும் பெருங்குணத்தை, காமநோய் உற்றவர் அறியும் தன்மையது அன்று.

Monday, November 10, 2014

திருக்குறள்-காமத்துப்பால் -1246 முதல் 1250 வரை



குறள்-1246
காதலிக்கு, காதலனுடன் ஊடல்.அதைக் கண்ட காதலன், சமாதானப்படுத்த வருகையில், கொஞ்ச நேரம் ஊடலை மறந்தாலும்..மீண்டும் ஊடலை விட்டுக் கொடுக்கமாட்டாலாம் .இதனால்..பாவம் காதலனுக்குக் கொடியவன் என்ற பெயரை வேறு ஏற்படுத்தி விடுகிறாள்

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு. #1246

என் நெஞ்சே! ஊடியபோது கூடி ஊடல் உணர்த்த வல்ல காதலரைக் கண்டபோது நீ பிணங்கி உணர மாட்டாய்; பொய்யான சினங்கொண்டு காய்கினறாய்.


குறள்-1247

காதலிக்கு காதலன் மீதான காமத்தையும் விடமுடிஉஅவில்லை.அதைச் சொல்ல நாணமும் விடவில்லை.அதற்காக நான் என்ன செய்வேன் என தன் நெஞ்சையேக் கேட்கிறாள்

காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு.

நல்ல நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டு விடு; அல்லது நாணத்தை விட்டு விடு; இந்த இரண்டையும் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது.
குறள்-1248
காதலன், காதலியைப் பிரிகிறான்.ஆனாலும் அந்த பிரிவு துன்பத்தால் வருந்து அவர் நம் மீது அன்பு செலுத்தவில்லையே என அவனையே எண்ணிக் கொண்டிருக்கிறாளாம்.


பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு. #1248
தெளிவுரை

என் நெஞ்சே! பிரிவுத் துன்பத்தால் வருந்தி அவர் வந்து அன்பு செய்ய வில்லையே என்று ஏங்கி பிரிந்தவரின் பின் செல்கின்றாய்..

குறள்-1249

மனதிற்குள் எவ்வளவோ வருத்தம்.காதலன் பிரிந்ததற்கு ஏதேதோ காரணம், கண்கள், நெஞ்சம் என ஒவ்வொன்றின் பேரிலும் வருத்தம்.கடைசியாக தன் மனதிற்கு கீழ்கண்டபடி ஆறுதல் சொல்கிறாள்


உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.

என் நெஞ்சே! காதலர் உன் உள்ளத்தில் உள்ளவராக இருக்கும்போது நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்?.

குறள்-1250

அவளைக் கலந்து ஆலோசிக்காது அவன் பிரிந்து சென்றுள்லான்.அதை மனதில் எண்ணி எண்ணி மேலும் மேலும் மெலிகிறாள் இந்த நாயகி

துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்.

நம்மோடு பொருந்தி இருக்காமல் கைவிட்டுச சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருக்கும்போது இன்னும் மெலிந்து அழகை இழந்து வருகின்றோம்.

திருக்குறள்-காமத்துப்பால் -1241 முதல் 1245 வரை



குறள்= 1241

காதலனைப் பிரிந்து இருப்பதால் காதலிக்கு காமம் ஆட்டிப்படைக்கிறது.பசலை நோய்.அப்போது..தன் மனதிடம் அவள் கேட்கிறாளாம், "மனமே! என் நோய் தீர்க்கும் மருந்து ஒன்று சொல்" என.

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.

நெஞ்சே! ( காதலால் வளர்ந்த) என் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயோ?.

குறள்-1242

காதலன்..அவளைப் பிரிந்து செல்கிறான்.திரும்ப எப்போ வருவான் எனத் தெரியவில்லை.ஆனால், நெஞ்சம் மட்டும் அவனையே நினைத்துக் கொண்டிருக்கிறது.அதற்கு அவள் (தனக்குத் தானே!) அவள் ஆறுதல் சொல்கிறாளாம்.
எப்படி எனப்பார்ப்போம்.

காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.

மனமே! நீ வாழ வேண்டும்! (ஆதலால்)அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே!.

குரள்-1243

அவளைப் பிரிந்து சென்ற அவனுக்கு அவள் மீது இரக்கமில்லை.ஆதலால்..என் மனமே ..நீ இறக்கவும் செய்யாது, அவர் வருவதை எண்ணி எண்ணி துன்பம் என்னும் நோயால் ஏன் வருந்த வேண்டும்?

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.

நெஞ்சே! அவர் இருக்கும் இடத்திற்கும் போகாமல், இங்கே இறந்தும் போகாமல், இங்கிருந்தபடியே அவர் வருவதை எண்ணி நீ வருந்துவது ஏன்? நமக்கு இந்தத் துன்ப நோயைத் தந்தவர்க்கு நம்மீது இரக்கப்படும் தன்மை இல்லையே.

குறள்-1244

அவளது மனதிற்குத் தெரியும்.முதலில் காதலனைக் கண்டால் காணப்போவது கண்தான் என.இருந்தாலும்..தனக்குத் தானே சமாதானம் செய்து கொள்கிறாள்.எப்படி...
என் மனமே,  நீ அவரைக் காணச் சென்றால்..என் கண்களையும் எடுத்துச் செல்.இல்லையேல்..அக்கண்கள் என்னையே தின்னுவிடுவது போல என்னை வருத்தும் என்கிறாள்.


கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.

நெஞ்சே! நீ அவரிடம் செல்லும்போது என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; அவரைக் காணவேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.

குறள்-1245

அவள் அவன் மீது அன்புடன் இருக்கிறாளாம்.ஆனால்..அவளுக்கு அவன் மீது அன்பு இல்லையாம்.அதனால்..நாமும் வெறுத்து ஒதுங்க வேண்டும் என்றாள்..மனம் கேட்கவில்லையாம்..ஆம்..இதை யாருக்கு சொல்கிறாள்..தன் நெஞ்சுக்கே சொல்லிக் கொள்கிறாள்


செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.

நெஞ்சே! நான் விரும்பி நாடினாலும் என்னை நாடாத அவர் நம்மை வெறுத்து விட்டார் என்று எண்ணி அவரைக் கைவிட முடியும‌ோ?.

Sunday, November 9, 2014

திருக்குறள்-காமத்துப்பால் -1236 முதல் 1240 வரை



குறள்-1236

காதலன் பிரிந்து சென்றுள்ளான்.காதலிக்கோ அதனால் தோள்கள் மெலிந்து..கை வளையல்களும் கழன்று விழும் அளவு துன்பம் ஏற்படுகிறது.ஆனால்..அதற்குக் காரணமான காதலனைக் கொடியவன் என்று சொல்வதற்காக அவள் வருந்துகிறாளாம்.


தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.

(அவன் பிரிவால்)வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.

குறள்-1237

அப்படி காதலன் பிரிவால் வாடும் அவள் நிலையை அவனிடம் நெஞ்சே நீ எடுத்துச் சொல்ல மாட்டாயா? அப்படிசொல்லி நீ பெருமை அடையக் கூடாதா என்கிறாள்


பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட்
பூசல் உரைத்து.

நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடையாயோ?.

குறள்-1238

காதலனைப் பிரிந்த காதலையைப் பற்றிதான் வள்ளுவன் சொல்லியுள்ளானா...இல்லை..என்கிறது இக்குறள்.
அவளை இறுகத் தழுவி, பின் அந்த இறுக்கம் சற்றே தளர்த்த..அந்தச் சற்று இடைவெளியும் பொறுக்காமல் அவள் நெற்றி பசலை வந்து ஒளி குறந்ததே! என காதலன் வருந்துகிறான்.
 

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.

(அவளை)தழுவிய கை‌களைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, ( அவ்வளவு சிறியதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது.


குறள்-1239

அவளைப் பிரிந்த காதலன் மேற் சொன்னபடி எண்ணுவதுடன்..அவள் நெற்றி மட்டுமல்ல..தழுவலுக்கு இடையே குறைந்த நெருக்கத்தால் காற்றும் உள் புகுந்து கண்கள் நிறம் இழ்ந்தனவே! அவை இப்போது எப்படி உள்ளதோ! என வருந்துகிறான்.

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.

(அப்படி) நான் கையை மெல்ல எடுத்ததால் எங்கள் தழுவலுக்கு இடையே குளிர்ந்த சிறுகாற்று நுழைந்தது. இந்த இடைவெளியைக்கூடப் பொறுக்காமல் அவளுடைய பெரிய குளிர்ந்த கண்கள் பசலை நிறம் அடைந்தன.. இப்போது அவை எப்படி இருக்கின்றனவோ?.


குறள்-1240

இந்தக் குறள் காதலனோ அதை வேறு கண்ணோட்டத்தில் சொல்கிறான்.எங்களிடையே தழுவுதல் சற்றே இறுக்கம் குறைந்ததால் நெற்றி பசலை அடந்தது.அதைப் பார்த்த கண்கள் துன்பம் அடைந்தது என்ங்கிறான்.


கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.

காதலியின் ஒளி பொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய கண்களும் பசலையும் துன்பம் அடைந்து விட்டது.

Saturday, November 8, 2014

திருக்குறள்-காமத்துப்பால் -1231 முதல் 1235 வரை



குறள்-1231

காதலன் பொருளீட்ட வெளியூர் சென்றுள்ளான்.அத்துன்பத்தால்..அவள் தனிமையில் அழுகிறாள்.அப்படி அழுது, அழுது அவளது கண்கள் அழகை இழந்து, மலர்களுக்கு முன் வெட்கமுற்று இருக்கின்றனவா,

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.

பிரிவுத் துன்பத்தை அளித்துவிட்டு நெடுந்தொலைவு சென்று விட்டாரேயென்று வருந்திடும் காதலியின் கண்கள் அழகிழந்துபோய், மலர்களுக்கு முன்னால் நாணிக் கிடக்கின்றன.

குறள்-1232

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.முகம் காட்டிக் கொடுத்தாலும்..கண்கள் மேலும் பொறுப்பேற்று பேசும்.கண்கள் ஒருவர் நம்மை எந்தவகையில் விரும்புகிறார் என்பதைச் சொல்லிவிடும்.இந்த குறள் என்ன சொல்கிறது

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.


பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் பிறர்க்குச் சொல்வன போல் உள்ளன.

குறள்-1233

காதலன் காதலியை மணந்த போது..அவனைத் தழுவிய தோள்கள்..அந்த இன்பத்தால் நங்கு பருத்து ஆரோக்கியமாக இருந்தன.இன்று காதலன் பிரிந்து சென்று விட்ட படியால் பருத்திருந்த தோள்கள் மெலிந்து அவனது பிரிவால் அவள் படும் வேதனையை ஊருக்கே சொல்லிவிடுகிறதாம்

தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.

காதலனுடன் கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், இப்போது மெலிந்தும் காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவை போல் உள்ளன.

குறள்- 1234

முந்தைய குறளில் காதலிக்கு தோள்கள் மெலிந்தன காதலன் பிரிவால்.ஆனால், இக்காதலிக்கோ அவளது தோள்கள் பெலிந்து, வலு விழந்து..அவள் அணிந்திருந்த வளையல்களும் கழலும் வண்ணம் ஆகிவிட்டதாம்.

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.

காதலன் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன.

பாடல்-1235

காதலன் பிரிந்து இருந்ததால் அவளது இயற்கை அழகு குறைவதுடன் அல்லாது, தோள்களும் மெலிந்து காதலன் பிரிந்த கொடுமையை ஊருக்கேச் சொல்கின்றன

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.

வளையல்களும் கழன்று பழைய அழகும் கெட்டு, வாடிய தோள்கள் (பிரிந்து சென்றவனின்) கொடியவரி்ன் கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன.

Friday, November 7, 2014

திருக்குறள் - காமத்துப்பால் 1226 - 1230



குரள்-1226

காதலிக்கும் போது..மனம் மாலைப்பொழுது வராதா? என ஏங்குகிறது.மணந்தபின், காதலன் அவளைவிட்டு சில காலம் பிரிந்து சென்றாலும்..முன்பு இன்பம் தந்த மாலைப்பொழுது இப்போது துன்பத்தைத் தருகிறதாம்

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.

மாலைப் பொழுது இவ்வளவு துன்பம் தரக்கூடியது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் நான்ன் அறியவில்லை.

குறள்-1227

காமம் இருக்கிறதே..அது ஒரு அழகிய பூவைப் போன்றதாம்.அப்பூ காலைப் பொழுதில் அரும்புகிறதாம்.பகலில் சற்றே முதிர்கிறதாம். மாலையில் முழுதும் மலர்ந்துவிடுகிறதாம்.மாலையில் மலர்வது மகிழ்வுதானே!

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.


இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.

குறள்-1228

ஆயனின் புல்லாங்குழல் ஓசை, காதலனைப் பிரிந்துள்ள காதலிக்குத் துன்பம் தரும் மாலைப்பொழுதிற்கு வரும் தூதாகத் தெரிகிறதாம்.


அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.

காதலர் பிரிவால்  தணலாகச் சுடுகின்ற மாலைப்பொழுதை அறிவிக்கும் தூதாக வருவது போல வரும் ஆயனின் புல்லாங்குழலோசை அவளைக் கொல்லும் படைக்கருவியின் ஓசைபோல் காதில் ஒலிக்கிறது.

பாடல்-1229

மாலைப் பொழுது ..காதலிக்குத் துன்பத்தைத் டஹ்ருகிறது.காமாலைக் கண்ணனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாய்த் தெரியும் என்பார்கள்.இந்தக் காதலிக்கோ..அந்த மாலை அவளை மட்டுமன்றி அனைவரையுமே துக்கத்தில் ஆழ்த்துவது போலத் தெரிகிறதாம்


பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.


அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்து போலத் தெரிகிறது.

குறள்-1230

பொருளீட்ட காதலன் பிரிந்து சென்றுள்ளான்.ஆனால் அது அவளுக்கு வருத்தத்தைத் தரவில்லை.ஆனால்..மாலைப்பொழுது வந்ததும் அவளைத் துன்பம் வாட்டுகிறதாம் அவன் நினைப்பு.

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்

பொருள் ஈட்ட சென்றுள்ள காதலரை எண்ணி மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது.

Thursday, November 6, 2014

திருக்குறள் - காமத்துப்பால் 1221 - 1225



குறள்-1221

காதல் வயப்பட்டவர்களுக்கு மாலைப்பொழுது துன்பம் தரக்கூடிய ஒன்று.கூடுதலும், பிரிதலும் பெரும்பாலும் மாலைப் பொழுதிலேயே நடப்பதால்/திருமணத்திற்கு முன் வரும் மாலை இனிக்கும்..அதற்குப் பின்..


மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது. #1221


பொழுதே! நீ வாழி. நிமாலைக்காலம் அல்லை; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்!.

குறள்-1222

மாலைப் பொழுது மறந்து இரவு தொடங்குகிறது.அவள் காதலன் வரவில்லை.அவளுடன் சேர்ந்து மாலையு, இரவும் கூட துன்பம் அடைகிறதாம்


புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.

மயங்கிய மாலைப்‌பொழுதே! நீயும் எம்மைப்போல் துன்பப்படுகின்‌றாயே! உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம் அற்றதோ?.

குறள்-1223

மாலைப்பொழுது வந்தால் காதலிக்கு..காதலனைக் காணாவிடின் துன்பம் உண்டாகும்.இங்கு அவன் அருகில் இருக்கும்வரை பசலை எட்டிப்பார்க்காத நிலையில், அவன் பிரிந்ததும் மாலைநேரம் வரும் முன்னரே உடலில் பசலை வந்துவிடுகிறது

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்.

பக்கத்தில் என் காதலர் இருந்த போது பயந்து, பசலை நிறத்துடன் வந்த மாலைப் பொழுது, இப்போது என் உயிரை வெறுக்குமளவுக்குத் துன்பத்தை மிகுதியாகக் கொண்டு வருகிறது.

குறல்-1224

காதலனைப் பிரிந்து இருக்கையில் வரும் மாலைப்பொழுது அவளைக் கொல்ல வீசப்பட்ட வாளைப்போல துன்பத்தைக் கொடுக்கிறதாம்

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.

காதலர் பிரிந்திருக்கும் போது வருகிற மாலைப் பொழுது கொலைக் களத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது.

குறள்-1225

காலைப்பொழுது காதலிக்கு இன்பத்தைத் தருகிறது.அதே போல இல்லாது மாலைநேரம் ஏன் இல்லை.அதற்கு அவள் ஏதும் தீங்கிழைக்கவில்லை.ஆயினும் அவளுக்கு அது கெடுதியே செய்கிறதே!

காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.


நான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன?.

Wednesday, November 5, 2014

திருக்குறள் - காமத்துப்பால்- 1216 -1220



குறள்-1216

காதலனைக் தன் கண்களால் கண்டு ரசித்தவள் காதலி.இதயத்தின் வாசல் விழிகள் அல்லவா? அதன் வழி நுழைந்து அவள் இதயத்தில் இடம் பிடித்துவிட்டான் காதலன்.ஒருநாள் அவளைப் பிரிந்து செல்ல வேண்டிய சூழல்.பிரிகிறான்.இப்போது அவளது கனவில் வந்து அவளை வாட்டுகிறான்.எல்லாவற்றிற்கும் காரணம் கண்கள்தானே என கண்களைத் திட்டுகிறாள் காதலி

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன். #1216

நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருந்தால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பார்.

குறள்-1217

அவனை அவளால் மறக்க முடியவில்லை.தினமும் கனவில் வந்து அவளை வாட்டி வதைக்கிறான்.நேரில் வந்து பார்க்காதவன் கனவில் மட்டும் ஏன் வர வேண்டும்? என அன்பு இல்லா காதலனைப் பற்றி அன்பாக மனதில் திட்டுகிறாள்


நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது.

நேரில் வந்து என்னிடம் அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து என்னை வருத்துவது என்ன காரணத்தால்?.

குறள்-1218
அவனைப் பிரிந்து இருக்கிறாள் அவள்.ஆனால் அவள் கனவில் வந்து தோள் டஹ்ழுவிக் கிடக்கிறார்.ஆனால் அவள் விழித்ததும் உன் மனதில் இருக்கிறேனே என மறைகிறார்.இந்த பெண்களுக்கு காதலர்கள் கனவில் வந்தாலும் துன்பம்..வாராவிடினும் துன்பம்

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.


தூங்கும்போது கனவில் வந்து என் தோள்மேல் சாய்ந்து இன்பம் தருபவர், விழி்த்தெழும்போது விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகிறார்‌.

குறள்-1219

காதலன், காதலி அன்பு என்றால் என்ன என அறியாத இளம் பெண்கள்..மணமான தன் தோழி காதலனைப் பிரிந்து வாடும் துன்பம் கண்டு...(அவள் துன்பத்திலும் இன்பம் உண்டு என அறியாது)காதலனை அன்பற்ற்வன் என ஏசுகிறார்களாம்.


நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.

கனவில் காதலர் வரக் காணாத மகளிர், நனவில் வந்து அன்பு செய்யாத கா‌தலரை ( அவர் வராத காரணம் பற்றி ) நொந்து கொள்வர்.


குறள்-1220

காதலன் பிரிந்து சென்றதைக் கண்டு, அவன் காதலியிடம் அவன் உன்னைப் பிரிந்து செல்லலாமா? என ஏசுபவர்கள்..அவன் பிரிவை அவள் தாங்கும் படி கனவில் வருவதை அறியமாட்டார்கள்

நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.

நனவில் நம்‌மை விட்டு நீங்கினார் என்று காதலரைப் பழித்து பேசுகின்றனரே! இந்த ஊரார்.. என் கனவில் அவர் வருவதை அறியமாட்டார்கள்

திருக்குறள் - காமத்துப்பால்- 1211 -1215



குறள் 1211

காதலன் பிரிந்து சென்றுள்ளான்.அவனிடம் இருந்து செய்தி ஏதும் வரவில்லை.அதே துயரத்தில் சிறிது கண் மூடி அரைதூக்கத்தில் இருக்கிறாள். அப்போது அவனிடம் செய்தி வந்தது போல இன்பக் கனவு.அவளுக்கு வந்த இக் கனவிற்கு அவளால் யாது ஈடு செய்ய முடியும்.


காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.

(நான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?.

குறள் 1212

அவனைப் பிரிந்து அவளுக்குத் தூக்கம் வரவில்லை.அப்படி எப்போதேனும் கண்கள் தூக்கத்தைத் தழுவினால்..அவனை எண்ணி அவள் வாடுவதைத் தூக்கத்தில் வரும் கனவில் வரும் அவனிடம் சொல்வாளாம்


யலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.

கண்கள் நான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு நான் தப்பிப் பிழைத்திருக்கும்‌ தன்மையைச் சொல்வேன்.

குறள் 1213

காதலன் நினைவிலேயே இருக்கிறாள்.கனவில் வருகிறான்.ஆனாலும் அவளைக் காதலிப்பதாய்த் தெரியவில்லை.ஆயினும்..அவன் கனவில் வரும் ஒன்றே அவள் உயிர் வாழ அவளுக்குப் போதுமானதாய் உள்ளதாம்.


நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.

கனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளது

குறள்-1214

காதலன் அவளை பிரிந்து சென்றுள்ளான்.அவன் நேரில் இருந்து அவளிடம் அன்பு செலுத்தவில்லை.ஆயினும்..அவளுக்கு அவனைப் பற்றி வரும் கனவு அவன் இருப்பிடம் சென்று அவனை அவளுக்கு சொல்வதால் இன்பம் உண்டாகிறதாம்.

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.


நேரில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் இன்பங்கள் உண்டாகின்றன.

குறள்1215

காதலன் நேரில் இல்லாததால் அவளுக்கு இழப்பு ஒன்றும் இல்லையாம்.அவன் கனவில் வருவதும்..அதில் அவன் அன்பு மொழி பேசுவதும்..அவளுக்கு நனவில் நடப்பது போல உள்ளதாம்.


நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.

முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்‌பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.