Friday, November 14, 2014

திருக்குறள்-காமத்துப்பால்-1271 முதல் 1275 வரை



குறள்-1271

காதலி, காதலனிடம் தனது விருப்பம் என்ன எனத் தெரிவிக்க நாணப்பட்டுக் கொண்டு தெரிவிக்கவில்லை.ஆனால்...அவளது அழகிய மை தீட்டப்பட்ட கண்கள் அவள் சொல்ல விழைவதை அவனிடம் சொல்லிவிடுகிறதாம்

கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு.

நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக் கூடிய செய்தி  இருக்கிறது.

குறள்-1272

காதலியிடம் கண் நிறைந்த அழகு, பெண்மைப் பண்பு. அழகிய மூங்கில் போன்ற தோள்கள்...காதலனுக்கு அவளை ரசித்துக் கொண்டே இருக்கலாம் போல உள்ளது.அவரவர்க்கு, அவரவர் காதலி பேரழகாய்த் தெரிவதில் வியப்பு என்ன?

கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது.

கண்நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் கொண்ட என் காதலிக்குப் பெண்மைப் பண்பு நிறைந்திருப்பதே பேரழகாகும்.

குறள்-1273

குறள்-1273

பளிங்கிற்குள் உள்ளது வெளியே தெரியும்.ஆகவேதான்..ஒளிக்க ஒன்றுமில்லா மனதை பளிங்குமனம் என சொல்வர்.ஆனால் அழகு அவளுக்கு பளிங்கு மாலைக்குள் கோர்க்கப்பட்ட நூல் தெரிவது போல தெரிகிறதாம்.

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு.


கோக்கப்பட்ட மணியினுள் விளங்கும் நூலைப் போல் என் காதலியின் அழகினுள் விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது.

குறள்-1274

அரும்பாத மலர் தனக்குள் வாசனையை அடக்கி வைத்திருக்கும்.அது மலர்ந்ததும் அதன் வாசம் நம்மை இழுக்கும்.அதேபோல ஒரு பெண்..அதுவும்..நம் காதலி ஒரு புன்னகை செய்தால் போதும்..அந்த புன்னகை எனும் அரும்புக்குள் காதலனின் நினைவு நிரம்பி இருக்குமாம்.


முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.

மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது.

குறள்-1275

கணவன், மனைவிக்குள் அவர்களுக்கு மட்டுமே புரியும் வகையில் பல சங்கேத மொழிகள் உண்டு.அது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும்.

செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.

வண்ணமிகு வளையல்கள் அணிந்த என் மனைவியின் பார்வையில், என்னைத் துளைத்தெடுக்கும் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தும் இருக்கிறது.

No comments: