குறள்-1231
காதலன் பொருளீட்ட வெளியூர் சென்றுள்ளான்.அத்துன்பத்தால்..அவள் தனிமையில் அழுகிறாள்.அப்படி அழுது, அழுது அவளது கண்கள் அழகை இழந்து, மலர்களுக்கு முன் வெட்கமுற்று இருக்கின்றனவா,
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.
பிரிவுத் துன்பத்தை அளித்துவிட்டு நெடுந்தொலைவு சென்று விட்டாரேயென்று வருந்திடும் காதலியின் கண்கள் அழகிழந்துபோய், மலர்களுக்கு முன்னால் நாணிக் கிடக்கின்றன.
குறள்-1232
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.முகம் காட்டிக் கொடுத்தாலும்..கண்கள் மேலும் பொறுப்பேற்று பேசும்.கண்கள் ஒருவர் நம்மை எந்தவகையில் விரும்புகிறார் என்பதைச் சொல்லிவிடும்.இந்த குறள் என்ன சொல்கிறது
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.
பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் பிறர்க்குச் சொல்வன போல் உள்ளன.
குறள்-1233
காதலன் காதலியை மணந்த போது..அவனைத் தழுவிய தோள்கள்..அந்த இன்பத்தால் நங்கு பருத்து ஆரோக்கியமாக இருந்தன.இன்று காதலன் பிரிந்து சென்று விட்ட படியால் பருத்திருந்த தோள்கள் மெலிந்து அவனது பிரிவால் அவள் படும் வேதனையை ஊருக்கே சொல்லிவிடுகிறதாம்
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.
காதலனுடன் கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், இப்போது மெலிந்தும் காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவை போல் உள்ளன.
குறள்- 1234
முந்தைய குறளில் காதலிக்கு தோள்கள் மெலிந்தன காதலன் பிரிவால்.ஆனால், இக்காதலிக்கோ அவளது தோள்கள் பெலிந்து, வலு விழந்து..அவள் அணிந்திருந்த வளையல்களும் கழலும் வண்ணம் ஆகிவிட்டதாம்.
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.
காதலன் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன.
பாடல்-1235
காதலன் பிரிந்து இருந்ததால் அவளது இயற்கை அழகு குறைவதுடன் அல்லாது, தோள்களும் மெலிந்து காதலன் பிரிந்த கொடுமையை ஊருக்கேச் சொல்கின்றன
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.
வளையல்களும் கழன்று பழைய அழகும் கெட்டு, வாடிய தோள்கள் (பிரிந்து சென்றவனின்) கொடியவரி்ன் கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன.
No comments:
Post a Comment