Sunday, November 23, 2014

திருக்குறள்-காமத்துப்பால் 1326 முதல் 1330 வரை

திருக்குறள்-காமத்துப்பால் 1321 முதல் 1330 வரை

குறள்-1326

வயிறார ஒருவன் உணவு உண்கிறாண்.அது எளிதில் செரிக்காமல் அவதிப் படுகிறான்.வயிறு வலிக்க ஆரம்பிக்கிறது.மருத்துவரிடம் செல்லலாமா? என யோசிக்கிறான்.அதே அளவுடன் உண்ட உணவு உடனே செரித்துவிட்டால்...அடடா...அந்த இன்பம் இருக்கிறதே..அளவிடமுடியாது.ஆனால்..அதைவிட ஒரு இன்பம் உண்டாம்..அது என்ன தெரியுமா? வள்ளுவன் சொல்கிரான்..காமத்தில் கூடுவதைவிட காதலர்க்கு ஊடல் கொள்வதில் ஒரு சுகம் இருக்கிறதாம்.

உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.

உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது இன்பமானது, அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது.

குறள்-1327

காதலன் , காதலி ஊடல் கொள்கின்றனர்.அதில் யாரேனும் ஒருவர் விட்டுக் கொடுத்து ஊடலை முடிவுக்கு கொண்டுவந்தபின் கிடைக்கும் இன்பம் அதிகம்.ஆகவேவிட்டுக் கொடுப்பவர் தோற்றவராக மாட்டார்.அவர் இன்பம் அடைவதில் வெற்றி பெற்றவராகிறார்


ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.

ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.

குறள்-1328

காதலன், காதலி அன்புடன் புணரும்போது காதலனுக்கு வியர்க்கிறது.அப்போது அதுவும் சுகமாய் உள்ளதாம்.மீண்டும் இவளுடன் ஊடல் தோன்றினால்..அதே இன்பத்தையடைய மனம் எண்ணுகிறது.

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.

நெற்றியில் வியர்வை அரும்பிடக் கூடுகையில் ஏற்படும் இன்பத்தை, மீண்டும் ஒருமுறை ஊடல் தோன்றினால், அதன் வாயிலாகப் பெற முடியுமல்லவா?.

குறள்-1329

காதலன் காதலி ஊடல்.காதலன் அந்த ஊடல் அதிக நேரம் நிலைக்க, வேண்டுகிறான். இரவும் விடியாது நீள வேண்டுகிறான்.அப்போதுதான் காதலியின் அருகாமையும் நீடிக்குமாம்


ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.

காதலி அதிகம் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு நான் வேண்டி நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீடிக்கட்டும்.

குறள்-1330

காமவயப்பட..காதலர்க்கு இடயே ஊடுதல் இன்பத்தை அளிக்குமாம்.ஆனால்..அந்த ஊடல் முடிந்ததும் தழுவப்பெற்றால்..அதுவே அந்த ஊடலுக்கு இன்பம் ஆகுமாம்.

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.
காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப்பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்.

No comments: