Sunday, November 16, 2014

திருக்குறள்-காமத்துப்பால்- 1281 முதல் 1285 வரை



குறள்-1281

கள் அருந்தினால்தான் மயக்கம் தரும்.ஆனால்..காதலிப்பவர்களுக்கோ..ஒருவரை ஒருவர் நினைத்தாளே கள் உண்ட மயக்கம் வந்துவிடுமாம்.ஒருவரை ஒருவர் பார்த்தாலே மயக்கும் இன்பம் வந்துவிடுமாம்

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு. #1281

நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்‌லை; காமத்திற்கு உண்டு.

குறள்-1282

காதல்..காதலனிடம் பெருகும் நேரத்தில்..அதை வீணாக்க இருவருக்குள் சிறு ஊடல் போதுமாம்.ஆகவே..காதல் பெருகைகையில் ஊடல் கூடவே கூடாதாம்

தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.

காமம் பனையளவாக நிறைய வரும்போது காதலரோடு தினையளவுக் கூட ஊடல் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

குறள்-1283

காதலி சொல் கேட்காமல்..காதலன் தன் விருப்பத்திற்கு செயல்களைச் செய்தாலும்..காதலியின் கண்கள் அவனைக் காணவேண்டும் என்றே இருக்கிறதாம்

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.

என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் இருப்பதில்லை.

குறள்-1284

காதலனைக் கண்டதும்..அவன் செய்த தவறுகளையெல்லாம் எண்ணி அவனுடன் பெரும் சண்டை போட வேண்டும் என எண்ணுகிறாளாம் தலைவி.ஆனால் அவனைப் பார்த்ததுமே எல்லாவற்றையும் மறந்து அவனுடன் கூடவே மனம் சென்றுவிடுகிறதாம்.


ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.

தோழி! நான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்; ஆனால், என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது.

குறள்-1285

காதலி கண்களுக்கு மை தீட்ட மை தீட்டும் கோலைத் தேடுகிறாள் .அதைக் காணவில்லை.அதே போன்று காதலைக் கண்டதும் அவன், அவளைப் பிரிந்து சென்ற கோபம் காணாமல் போகிறதாம்.

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.

மை தீட்டும் நேரத்தில் தீட்டு் கோலைக் காணாத கண்களைப் போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன்.

No comments: