குறள்-1286
கணவன் அருகில் இருந்தால், அவளுக்கு அவன் மீதான குறைகள் ஏதும் கண்ணுக்குத் தெரிவதில்லை.ஆனால், அவன் இவளைப் பிரிந்து சென்றால்..அவனிடம் உள்ள குறைகளை மட்டுமே அவளது மனம் கணக்கிடுகிறதாம்
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.
கணவனை நான் காணும்போது அவரது தவறுகள் தெரியவில்லை. காணாதபோதோ, தவறுகளைத் தவிரப் பிற தெரியவில்லை.
குறள்-1287
வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.அதில் பாய்ந்தால் அதனுடன் அடித்துச் செல்வோம் என்று அறிந்தும், மடத்தனமாய் அதைல் பாய்பவர்களைப் போல, அவனிடம் கொண்ட கோபம் பலனளிக்காது என்று தெரிந்தும், தேவையின்றி அவனுடன் ஊடல் கொள்வது எந்தப் பயனை அளிக்கும்?
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.
வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் ஓட நீரில் பாய்கின்றவரைப் போல், பயன்படாது என அறிந்திருந்திருந்தும் ஊடல் கொள்வதால் பயன் என்ன?.
குறள்-1288
கள்ளுண்ணுதல் தீமை என மனம் சொன்னாலும், உண்ணுவதால் உண்டாகும் மயக்கத்தை மனம் கொடுப்பது போல, காதலன் அவளுக்கு இழிவுதரும் துன்பங்களைச் செய்தாலும் அவன் மீது கொண்டுள்ள காதல்
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.
என்னுள்ளம் கவர்ந்த கள்வனே! இழிவு தரக்கூடிய துன்பத்தை நீ எனக்கு அளித்தாலும் கூட, கள்ளை உண்டு களித்தவர்க்கு மேலும் மேலும் அந்தக் கள்ளின் மீது விருப்பம் ஏற்படுவது போலவே என்னையும் மயங்கச் செய்கிறது உன் மார்பு.
குறள்-1289
காதல் இன்பம் மிகவும் மென்மையானது.அதை அனுபவிக்க என இடம், பொருள் எல்லாம் இருக்கிறது அதை அறியாது காதல் நலன் அடைய நினைப்பவரே அதிகம் உள்ளனர்
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.
காதல் இன்பம் மலரைவிட மென்மையானது. அதை அறிந்து அனுபவிப்பதற்கு ஏற்ற இடம், காலம், தேவையானவை எல்லாம் பெற்றுக் காதல் இன்பத்தின் நலனை அனுபவிப்பவர் இவ்வுலகில் சிலரே.
குறள்-1290
காதலி, காதலனுடன் ஊடல் கொண்டுள்ளாள்,ஆனால் அவனைக் கண்டதும், அவனுக்கு முன்பாகவே அவனைத் தழுவி அவனுள் கலந்துவிடுகிறாள்.அந்த அளவிற்கு அவன் மீது உள்ள காதல் ஊடலை மறக்க வைத்து விடுகீறது
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.
கண்களால் ஊடலை வெளியிட்டவள், கூடித் தழுவுவதில் என்னைக் காட்டிலும் விரைந்து செயல்பட்டு என்னோடு கலந்து விட்டாள்.
No comments:
Post a Comment