குறள்-1256
காதலன் காதலியைப் பிரிந்து சென்றுள்ளான்.காதலிக்கு அவனுடன் போய்ச் சேர வேண்டும் என்று ஆசை.அந்த ஆசை எதனால் உண்டானது? அதற்குக் காரணம் அவனுடன் உள்ள காதலாம்.காதல் நோய்தான் அப்படி அவளைத் தூண்டுகிறதாம்.
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்.
தெளிவுரை
வெறுத்து நீங்கிய காதலரின் பின் செல்ல விரும்பிய நிலையில் இருப்பதால் என்னை அடைந்த இந்த காமநோய் மிகவும் கொடுமையானது
குறள்-1257
அவன் அவளைக் காதலிக்கிறான்.ஆகவே அவள் சொல்வதையெல்லாம் கேட்கிறான்,ஆகவே, அவன் எதையாவது விரும்பி, அவள் நாணத்துடன் சம்மதிக்கும் நிலையில் இல்லை.ஆகவே நாணத்தை அவள் மறந்தாளாம்.
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்
நாம் விரும்பிய காதலர் காமத்தால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்வாரானால். நாணம் என்று சொல்லப்படும் ஒரு பண்பையும் அறியாமல் இருப்போம்.
குறள்-1258
காதலன் அவளைப் புகழ்வதையெல்லாம் கேட்க மனம் விரும்புகிறது.அவன் சொல்வது சற்று மிகைப்படுத்தல் என அவளுக்குத் தெரியுமாம்.அந்த பணிவான சொற்கள் அவளைக் கட்டிப் போடுகிறது.
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.
அவளுடைய பெண்மையாகிய அரணை அழிக்கும் படையாக இருப்பது, பல மாயங்களில் வல்ல, கள்வனான காதலனுடைய பணிவுடைய மொழி அல்லவா?
குறள்-1259
காதலன் வந்தால் ஊடல் கொள்ள எண்ணி அவள் அவன் முன் வாராமல் இருந்தாளாம்.ஆனாலும், அவள் மனம் அதையே நினைத்தோ கொண்டிருந்ததால் அதற்கு அவசியமில்லை என எண்ணிவிட்டாளாம்.
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.
ஊடல் கொண்டு பிணங்குவோம் என நினைத்துதான் சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விடுத்து அவருடன் கூடுவதைக் கண்டு மறந்து தழுவிக் கொண்டேன்.
குறள்-1260
அவளுக்கு அவளது காதலனைக் கண்டால்..மனம் கட்டுப்படுத்த முடியாது இருக்கிறதாம்.அது கொழுப்பைத் தீடிலிட்டாம் உருகுவதுபோல மனம் கரைகிறதாம்.ஆகவே ஊடல் என்பது அவளால் முடியாதாம்.
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.
நெருப்பிலிட்ட கொழுப்பைப் போல் உருகிடும் நெஞ்சம் உடையவர்கள், கூடிக் களித்தபின் ஊடல் கொண்டு அதில் உறுதியாக இருக்க முடியுமா?.
No comments:
Post a Comment