Sunday, November 9, 2014

திருக்குறள்-காமத்துப்பால் -1236 முதல் 1240 வரை



குறள்-1236

காதலன் பிரிந்து சென்றுள்ளான்.காதலிக்கோ அதனால் தோள்கள் மெலிந்து..கை வளையல்களும் கழன்று விழும் அளவு துன்பம் ஏற்படுகிறது.ஆனால்..அதற்குக் காரணமான காதலனைக் கொடியவன் என்று சொல்வதற்காக அவள் வருந்துகிறாளாம்.


தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.

(அவன் பிரிவால்)வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.

குறள்-1237

அப்படி காதலன் பிரிவால் வாடும் அவள் நிலையை அவனிடம் நெஞ்சே நீ எடுத்துச் சொல்ல மாட்டாயா? அப்படிசொல்லி நீ பெருமை அடையக் கூடாதா என்கிறாள்


பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட்
பூசல் உரைத்து.

நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடையாயோ?.

குறள்-1238

காதலனைப் பிரிந்த காதலையைப் பற்றிதான் வள்ளுவன் சொல்லியுள்ளானா...இல்லை..என்கிறது இக்குறள்.
அவளை இறுகத் தழுவி, பின் அந்த இறுக்கம் சற்றே தளர்த்த..அந்தச் சற்று இடைவெளியும் பொறுக்காமல் அவள் நெற்றி பசலை வந்து ஒளி குறந்ததே! என காதலன் வருந்துகிறான்.
 

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.

(அவளை)தழுவிய கை‌களைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, ( அவ்வளவு சிறியதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது.


குறள்-1239

அவளைப் பிரிந்த காதலன் மேற் சொன்னபடி எண்ணுவதுடன்..அவள் நெற்றி மட்டுமல்ல..தழுவலுக்கு இடையே குறைந்த நெருக்கத்தால் காற்றும் உள் புகுந்து கண்கள் நிறம் இழ்ந்தனவே! அவை இப்போது எப்படி உள்ளதோ! என வருந்துகிறான்.

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.

(அப்படி) நான் கையை மெல்ல எடுத்ததால் எங்கள் தழுவலுக்கு இடையே குளிர்ந்த சிறுகாற்று நுழைந்தது. இந்த இடைவெளியைக்கூடப் பொறுக்காமல் அவளுடைய பெரிய குளிர்ந்த கண்கள் பசலை நிறம் அடைந்தன.. இப்போது அவை எப்படி இருக்கின்றனவோ?.


குறள்-1240

இந்தக் குறள் காதலனோ அதை வேறு கண்ணோட்டத்தில் சொல்கிறான்.எங்களிடையே தழுவுதல் சற்றே இறுக்கம் குறைந்ததால் நெற்றி பசலை அடந்தது.அதைப் பார்த்த கண்கள் துன்பம் அடைந்தது என்ங்கிறான்.


கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.

காதலியின் ஒளி பொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய கண்களும் பசலையும் துன்பம் அடைந்து விட்டது.

No comments: