குறள்-1316
காதலி காதலனின் அன்புப் பிடியில் இருந்தாள்.ஆசை அதிகமானதால் காதலன் எப்போதும் உன்னைத்தான் நினைத்தேன் என்றான்.உடனே, காதலி, நினைத்தேன் என்றால், எப்போவாவது மறந்திருந்தால்தானே நினைக்க முடியும்? அப்படியாயின் ஏன் மறந்தீர்? என ஊடத் தொடங்கினாளாம்.
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.
உன்னை நினைத்தேன் என்று காதலியிடம் சொன்னதுதான் தாமதம்; அப்படியானால் நீர் என்னை மறந்திருந்தால்தானே நினைத்திருக்க முடியும்? எனக்கேட்டு ஏன் மறந்தீர்? என்று அவள் ஊடல் கொண்டாள்.
குறள்-1317
தும்மும் போது வாழ்த்துவது வழக்கம்.அதே நேரம் வேடிக்கையாக யாரோ நினைக்கிறார்கள்..அதுதான் தும்முகிறாய் என்பார்கள் பெரியோர்.அதுவே இங்கே வம்பாய் போய்விட்டது இந்தக் காதலனுக்கு
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.
நான் தும்மினேன்; அவள் வாழ்த்தினாள்; உடனே அதை விட்டு யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்!?.
குறள்-1318
முன் குறள் நாயகனே, அடுத்தமுறை முன்னேற்பாடாக தும்மல் வருகையில் அதை வெளிப்படுத்தாது அடக்கிக் கொண்டான்.அதைக் கண்டவள், "யாரோ உன்னை நினைக்கிறார்கள்.அது எனக்குத் தெரியக்கூடாது என மறைக்கிறீர்கள்" என ஊடல் கொள்கிறாள்.பாவம் அந்தக் காதலன்.
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.
அடுத்தமுறை தும்மல் வர அதனை வெளிப்படுத்தாமல் நான் அடக்கினேன்; அதைப் பார்த்து யாரோ உனக்கு வேண்டியவர்கள் உன்னை நினைப்பதை நான் அறிந்துவிடக்கூடாது என்று எனக்கு மறைக்கிறீரோ, என்று ஊடி அழுதாள்.
குறள்-1319
அவள் ஊடல் கொண்டாலும், அதை காதலனே நீக்கி மகிழ்வித்தாலும், அதற்கும் அவள்...மற்ற பெண்களிடமும் இப்படித்தான் நடந்து கொள்வீர்களா? என்று கோபம் கொள்கிறாள்.
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று.
நான் பணிந்து போய் அவள் ஊடலை நீக்கி மகிழ்வித்தாலும், உடனே அவள் நீர் இப்படித்தான் மற்ற பெண்களிடமும் நடந்து கொள்வீரோ? என்று சினம் கொள்வாள்..
குறள்-1320
சரி ஊடலூ வேண்டாம்..என அவளிடம் பேசாது அவளது அங்கங்களின் அழகை ரசித்துக் கொண்டிருந்தால், எந்தப் பெண்ணின் உறுப்புகள் போல உள்ளது என என் மேனியை பார்க்கறீர்களா? எனச் சினம் கொள்கிறாள்.இவன் என்னதான் செய்வான்?பாவம்
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.
அவளுடைய அழகை நினைத்து அமைதியாக இருந்து அவளை நோக்கினாலும், நீர் யாரை நினைத்து ஒப்புமையாக எல்லாம் பார்க்கின்றீர்? என்று சினம் கொள்கிறாள்.
No comments:
Post a Comment