Wednesday, November 19, 2014

திருக்குறள் -காமத்துப்பால்- 1291 முதல் 1295 வரை



காதலன் மனம் காதலியை எண்ணாது இருக்கும் போது தன் நேஞ்சு மட்டும் அப்படியில்லாமல் ஏன் காதலனையே நினைத்து கொண்டிருக்கிறது என தன் நெஞ்சை காதலிக் கேட்கிறாள்.

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.

நெஞ்சே! என்னை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருக்கும்போது நீ எனக்குத் துணையாக இல்லாமல் அவரை நினைத்து உருகுவது ஏன்?.

குறள்-1292

என் மீது அவருக்கு அன்பு இல்லை என உனக்கேத் தெரிந்திருந்தும் ..என் நெஞ்சே..நீ , நாம் போனால் அவர் கோபம் கொள்ளமாட்டார் என அவரையே எண்ணி அவரிடம் ஏன் போகிறாய்?

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.

என் நெஞ்சே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே!.

குறள் -1293

அவன் அவளை விட்டு பிரிந்துள்ளான்.ஆகவே அவள் கண்களுக்கு அவன் நல்லவனாய்த் தெரியவில்லை.ஆயினும், அவள் மனம் அவனையே நினைத்துக் கொண்டிருக்கிறது..ஒருவேளை அவனைக் கவனிக்க ஆளில்லை என்ற ஆதங்கத்தாலா?


கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.

நெஞ்சே! நீ உன் விருப்பத்தின்படியே அவர் பின் செல்வதற்குக் காரணம், துன்பத்தால் அழிந்தவர்‌க்கு நண்பர் இல்லை என்னும் எண்ண‌மோ?.

குறள்-1294

காதலிக்கு காதலன் மீது கோபம்.ஆனால், அவனைக் கண்டதுமே, அவளது நெஞ்சம் அவன் மீது இருந்த கோபத்தையெல்லாம் மறந்து அவனை நாடுகிறது.அதனால், தன் மனம் மீதே கோபப்பட்ட அவள் இனி அதனுடன் எந்த ஆலோசனையும் செய்ய மாட்டேன் என மனதிடம் பொய்க்கோபம் காட்டுகிறாள்.

இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

நெஞ்‌சே! நீ ஊடலைச் செய்து பின் அதன் இன்பத்தை நுகர மாட்டாய்; இனிமேல் அத்தகையவற்றைப் பற்றி உன்னோடு கலந்து எண்ணப் போவதில்லை.

குற:-1295

இக்குறளின் நாயகிக்கோ வேறு விதமான எண்ணம்.கணவன் அவளை விட்டு பிரிந்திருக்கும் காலம், அவன் உடன் இல்லையே என மனதில் அச்சம் இருக்குமாம்.அவர் வந்து சேர்ந்துவிட்டாலோ..அவர் எப்போது பிரிந்து சென்றுவிடுவாரோ! என்ற அச்சம் இருக்குமாம்.

பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.

என் கணவர் என்னைப் பிரிந்து இருந்தபோது அவர் இல்லாததற்குப் பயப்படும்; அவர் வந்துவிட்டால், பிரிவாரே என்று பயப்படும். ஆகவே என் மனம் எப்போதும்  நீங்கா துன்பத்தைப் பெற்றிருக்கிறது.

No comments: