Tuesday, November 18, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1296 முதல் 1300 வரை



பாடல்-1296

நம் மனமே நம்மை உண்ணுமா? உண்ணூம் என்கிறான் வள்ளுவன்.எப்போது..
காதலன் காதலையை விட்டுப் பிரிந்து விட்டான்.அந்தப் பிரிவைத் தனியே இருந்து அனுபவிக்கிறாள் காதலி.அந்தக் கொடுமை இருக்கிறதே..! அதுதான் அவள் நெஞ்சே அவளைத் தின்பது போல இருக்கிறதாம்

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.

காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவரை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போல் துன்பம் செய்வதாக இருக்கிரது.

குறள்-1297

காதலன் ,காதலியை மறந்து விட்டான்.ஆனால், அவளால் அவனை மறக்க முடியவில்லையாம்.ஆகவே தன் மனதைத் தானே திட்டிக் கொள்கிறாள்.அதற்குச் சற்றும் நாணம் கிடையாது என.

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.

தன்னை மறந்த காதலரைத் தான் மறக்க முடியாத,  நிலையில்லாத மடநெஞ்சோடு கூடி,  நாணத்தையும் மறந்துவிட்டேன்.

பாடல்-1298

பிரிந்து சென்ற காதலனை இகழ்வாகப் பேசினால்...அந்த இழிவு தனக்குதானே என எண்ணி இந்த காதலி அவன் வரவையும், அவனுடன் கூடுதலையும் எதிர் நோக்கி இருக்கிறாள்.

எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.


பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

குறள்-1299

காதலனைப் பிரிந்ததால் காதலிக்கு மகிழ்ச்சி இல்லை.ஆனால்..அத் துன்பத்திற்கு அவள் மனமே அவளுக்குத் துணை போகாத போது வேறு துணை என்னவாக இருக்கக்கூடும்?

துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.

ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, அவர் உரிமையாகப் பெற்றுள்ள அவரது நெஞ்சமே துணையாகா விட்டால், வேறு யார் துணையாவார்?.

குறள்-1300

அவளது நெஞ்சமே அவள் சொல் கேட்கவில்லையெனில், மற்றவர்கள் சொல்வதை அவளால் எப்படி ஏற்கமுடியும்? அவளது நினைவில் இருந்து அவன் மறையவில்லையே!

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.

ஒருவர்க்கு அவர் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது மற்றவர் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும்.

No comments: