Thursday, November 20, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1306 முதல் 1310 வரை





குறள்-1306

மிகவும் கனிந்த பழமானாலும் சரி, இளம் காயானாலும் சரி அப்பழத்தின் உண்மையான ருசியைத் தராது.அது போலவே காதலன், காதலிக்குள் பெரும் ஊடலும், சிறு ஊடலும் ஏற்பட்டு அது இன்பம் தரும் காதல் வாழ்க்கையை அமையாவிட்டால் வாழ்க்கை பயனற்று போய் விடும்.

துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.


பெரும் பிணக்கும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாக ஆகிவிடும்..


குறள்-1307

சிறு ஊடல்கள் கணவன், மனைவியரிடையே இன்பம் பயக்குமானாலும், அப்படிப்பட்ட ஊடலிலும் ஒரு துன்பம் இருக்கிறதாம்.அவ்வூடல் நீண்டு விட்டால் துன்பமே பயக்குமாம்.


ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று.

கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருப்பதிலும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கின்றது.

குறள்-1308

நம்மை எண்ணி அல்லவா? வருந்துகிறார்..நம்மை நினைத்து அல்லவா வருந்துகிறாள் என்ற உணர்வு ஒருவருக்கொருவர் இல்லாதபோது அடுத்தவர் வருந்துவதால் என்ன பயன்?

நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி.

நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன?.

குறள்-1309

நீர் வெயிலுக்குக் கீழ் இருந்தால் தான் வெயிலில் வருவோர்க்கு குளிர்ச்சி நீரைத் தரமுடியும்.அதேபோல..ஊடல் அன்புள்ள காதலன், காதலியினிடம் ஏற்பட்டால் அது இனிமையானதாகவே ஆகும்.

நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.


நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது.


குறள்-1310

ஒருவர் மீது அன்பு ஏற்பட்டுவிட்டால்..அவருடன் ஊடலும் கொண்டால்..நம் மனதைக் கவர்ந்தவரிடம் ஊடல் கொண்டோம், அவனுடன் கூடவேண்டும் என மனம் சொல்லக் காரணம் அந்த அன்பே ஆகும்.


ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.

ஊடலைப் போக்காது வாடவிட்டு வேடிக்கை பார்ப்பவருடன் கூடியிருப்போம் என்று என் நெஞ்சம் துடிப்பதற்கு அதன் அடங்காத ஆசையே காரணம்.

No comments: