Tuesday, November 11, 2014

திருக்குறள்- காமத்துப்பால்- 1251 முதல் 1255 வரை



குறள்-1251

காதலிக்கோ காதலனைக் கண்டால் நாணம்.தன் விருப்பத்தையும் சொல்ல நாணம் குறுக்கே உள்ளது.ஆனாலும், வேறு வழியின்றி சொல்ல வைக்கிறது காமம் என்னும் நோய்

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்று சொல்லப்படும் கதவை காமம் ஆகிய கோடாலி உடைத்து விடுகிறதே.

குறள்-1252

நடுஇரவு. ஊரே உறங்க..அவள் மட்டும் அவனை நினைத்து உறங்கவில்லை.அவளை உறங்க விடாது காதல் இரக்கமற்றதாய் இருக்கிறதாம்


காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.

எல்லாரும் வேலையின்றி உறங்கும் நடுச்சாமத்திலும் என் நெஞ்சத்தைத் தண்டித்து வேலை வாங்குவதால் காதல் என்று சொல்லப்படும் ஒன்று இரக்கமற்றதாக இருக்கிறது.

குறள்-1253

நாம் தும்மினால்...பெரியோர்கள், "யாரோ உன்னை நினைக்கின்றனர்.அதானல்தான் தும்முகிறாய்' என்பார்கள்.ஆனால் இந்தத் தலைவி காதலை மறக்க எண்ணுகிறாள்.அந்த நினைவே தும்மலாய் வருகிறதாம்.

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.

நான் காமத்தை என்னுள்‌ளே மறைக்க முயல்வேன்; ஆனால் அதுவே என் குறிப்பின்படி நிற்காமல் தும்மல் போல் தானே வெளிப்பட்டு விடுகிறது.

குறள்-1254

அவள் மிகவும் அடக்கமானவள். ஆனால், அவள் காதலிக்க ஆரம்பித்ததும், அவள் காதல் விருப்பம் ஊர் முழுதும் எப்படியோ தெரிந்துவிட்டது.காதலை நாம் மறைக்க முயன்றாலும் வெளிப்பட்டுவிடும் என்று தெரியாதவளா இவள்?


நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும். #1254

நான் இதுவரையில் அடக்கத்துடன் உள்ளதாக எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் என் காமம் என்னுள் மறைந்திருத்தலைக் கடந்து வெளியே வெளிப்படுகின்றது.

குறள்-1255

காதலன் அவளை விட்டு பிரிந்து சென்றுள்ளான்.அவளாலும் அவனை பிந்தொடர முடியாது.அந்த அடக்கக் குணத்தை தெரியாதவர்கள், தெரிந்துகொள்ள காதலிக்க வேண்டும்.அல்லையேல்..அத்துயரம் எப்படிப்பட்டது என அறிய வாய்ப்பில்லை.

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று. #1255

தம்மை வெறுத்து நீங்கியவரின் பின் செல்லாமல் மானத்தோடு நிற்கும் பெருங்குணத்தை, காமநோய் உற்றவர் அறியும் தன்மையது அன்று.

No comments: