Wednesday, November 5, 2014

திருக்குறள் - காமத்துப்பால்- 1211 -1215



குறள் 1211

காதலன் பிரிந்து சென்றுள்ளான்.அவனிடம் இருந்து செய்தி ஏதும் வரவில்லை.அதே துயரத்தில் சிறிது கண் மூடி அரைதூக்கத்தில் இருக்கிறாள். அப்போது அவனிடம் செய்தி வந்தது போல இன்பக் கனவு.அவளுக்கு வந்த இக் கனவிற்கு அவளால் யாது ஈடு செய்ய முடியும்.


காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.

(நான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?.

குறள் 1212

அவனைப் பிரிந்து அவளுக்குத் தூக்கம் வரவில்லை.அப்படி எப்போதேனும் கண்கள் தூக்கத்தைத் தழுவினால்..அவனை எண்ணி அவள் வாடுவதைத் தூக்கத்தில் வரும் கனவில் வரும் அவனிடம் சொல்வாளாம்


யலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.

கண்கள் நான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு நான் தப்பிப் பிழைத்திருக்கும்‌ தன்மையைச் சொல்வேன்.

குறள் 1213

காதலன் நினைவிலேயே இருக்கிறாள்.கனவில் வருகிறான்.ஆனாலும் அவளைக் காதலிப்பதாய்த் தெரியவில்லை.ஆயினும்..அவன் கனவில் வரும் ஒன்றே அவள் உயிர் வாழ அவளுக்குப் போதுமானதாய் உள்ளதாம்.


நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.

கனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளது

குறள்-1214

காதலன் அவளை பிரிந்து சென்றுள்ளான்.அவன் நேரில் இருந்து அவளிடம் அன்பு செலுத்தவில்லை.ஆயினும்..அவளுக்கு அவனைப் பற்றி வரும் கனவு அவன் இருப்பிடம் சென்று அவனை அவளுக்கு சொல்வதால் இன்பம் உண்டாகிறதாம்.

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.


நேரில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் இன்பங்கள் உண்டாகின்றன.

குறள்1215

காதலன் நேரில் இல்லாததால் அவளுக்கு இழப்பு ஒன்றும் இல்லையாம்.அவன் கனவில் வருவதும்..அதில் அவன் அன்பு மொழி பேசுவதும்..அவளுக்கு நனவில் நடப்பது போல உள்ளதாம்.


நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.

முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்‌பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.

No comments: