Thursday, November 20, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1311 முதல் 1315 வரை



குறள்- 1311

பெண் விருப்பம் கொண்டவன் அவன்.தெருவில் செல்லும் பெண்களை எல்லாம் தழுவதாகக் கற்பனை செய்து..தம் கண்களாலேயே அவர்கள் மீது காமப்பார்வை வீசியவன்.அப்படிப்பட்ட அவனை அவள் இனி தழுவ மாட்டேன் என்கிறாள்


பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.

பெண்ணாக இருப்போர் எல்லோருமே, பொதுவாக நினைத்துக் கண்களால் உண்பதால் கற்பு நெறிகெட்ட உன் பரந்த மார்பைப் பாவை நான் தழுவ மாட்டேன்.

குறள்:-1312

சாதாரணமாக நம் விட்டில் பெரியவர்கள், வயதில் சிறியோர் தும்மினால், "நீடூழு வாழ்க" என ஆசிர்வதிப்பர்.அந்தப் பழக்கம் வள்ளுவன் காலத்திலேயே இருந்திருக்கிறது என்பது இக்குறளால் தெரிகிறது.காதலி , காதலனிடன் ஊடல் கொள்கிறாள்.ஊடலை மறக்க அவன் தும்மினானாம்.அப்போதாவது எப்போதும் சொல்வதுபோல"நீ வாழ்க" என்று கூறி ஊடலை முடித்துவைப்பாள் என்ற எண்ணத்தில்.



ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.

காதலரோடு ஊடல் கொண்டிருந்த போது, நான் அவரை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார்.

குறள்-1313

 அவன் ஒரு மாற்றத்திற்காக மரத்திலே மலர்ந்த பூவை மாலையாக சூடிக்கொண்டான்.உடன், காதலி, வேறு எந்த பெண்ணுக்கோ சம்மதம் கேட்கும் வகையில்தான்  அம்மாலையைச் சூடிக்கொண்டுள்ளதாகக் கோபம் கொள்கிறாள்.


கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.

கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்கிறாள்

குறள்-1314.

எல்லாக் காதலரையும் விட நான் அதிகம் காதல் உடையவன் உன் மீது என்கிறான் காதலன்.அவன்பால் உள்ள அன்பு முகுதியால், இச் சொற்களைக் கூடத் தாங்க முடியாதவள்'அவன் பலரைக் காதலிப்பதாக அர்த்தம் கொள்கிறாள்.

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.
தெளிவுரை

யாரைக் காட்டிலும் உன்னிடம் நான் காதல் மிகுதியாகக் கொண்டுள்ளேன் என்று இயல்பாகச் சொன்னதைக் கூடக் காதலி தவறாக எடுத்துக் கொண்டு யாரைக்காட்டிலும் யாரைக் காட்டிலும் எனக் கேட்டு ஊடல் புரியத் தொடங்கி விட்டாள்.

குறள்-1315

அவள் அவனை அளவிற்கு அதிகமாகக் காதலிக்கிறாள்.ஒரு நாள் காதலன் காதல் மிகுதியில் "உன்னை இப்பிறவியில் பிரியேன்' என்கிறான்.அப்படியெனில், என்னை அடுத்தப் பிறவியில் பிறிந்துவிடுவீரா? என்று கண்களில் நீர் மல்க வினவுகிறாள் இக்காதலி

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.
தெளிவுரை


இப்பிறப்பில் நான் பிரியமாட்டேன் என்று நான் சொன்னவுடன் அப்படியானால் மறு பிறப்பு என ஒன்று உண்டோ? அப்போது நம்மிடையே பிரிவு ஏற்படுமெனக் கூறுகிறாயா? எனக் கேட்டு கண்கலங்கினாள் காதலி.

No comments: