Tuesday, September 30, 2014

திருக்குறள்- காமத்துப்பால்- 1099



பொது இடம்.பலர் கூடியுள்ளனர்.காதலன், காதலியும்  அந்தக் கூட்டத்தினிடையே உள்ளனர்.யாருக்கும் இவர்கள் காதலர்கள் என்று தெரியாத வகையில்..யாரோ..மூன்றாம் நபரிடம் பேசுவது போல பேசிக் கொள்ளுகிறார்கள். இப்படிப்பட்டத் திறமை காதலர்களுக்கே கைவந்த தனிக்கலை.


ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.

வெளியார் பார்வைக்கு அயலார்போல் அன்பில்லாத பொது நோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள இயல்பாகும்.

Monday, September 29, 2014

திருக்குறள் - காமத்துப்பால் 1098



காதலனைக் கண்டதும், அதை வெளிப்படுத்தாமல் , அவன் யாரோ ஒருவனைப் போல பேசியபடியே அதனால் காதலன் அடையும் வேத்னையை சற்று பரிகாசமாக எடுத்துக் கொள்ளும் அதே நேரத்தில்,அச்சமயம் அவளிடம் தோன்றும் மெல்லிய நாணம் அவளை மேலும் அழகாகக் காதலன் கண்களுக்குத் தெரியச் செய்கிறது.


அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.

யாரோ எவரோ போல அவள் பேசிய பின்பும் நான் அவளைப் பார்க்க, அவள் மனம் நெகிழ்ந்து மனத்திற்குள் மெல்ல சிரித்தாள்; அச்சிரிப்பின் போதும் அவளிடம் ஒரு தனி அழகு உள்ளது.

Sunday, September 28, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1097



அவளை நான் விரும்புகிறேன், ஆனால் அவளோ பகைவனிடம் பேசுவது போல கடுஞ்சொல்லால் என்னை சுடுகிறாள்  என்னைப் பார்க்கும் போதும்.பகைவனைப் பார்ப்பது போலவே பார்க்கிறாள்..இதற்கெல்லாம் காரணம் என்ன? என நண்பன் ஒருவன் உங்களிடம் கேட்டால் என்ன சொல்வீர்கள்..

உன்னை அவளுக்குப் பிடிக்கவில்லை..உனக்கேன் இனி வம்பு..பேசாமல் ஒதுங்கிக் கொள் ..என அறிவுரை சொல்வீர்கள்

ஆனால் வள்ளுவன் என்ன சொல்கிறான் தெரியுமா?

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.

உரை-

பகையுணர்வு இல்லாமல் கடுஞ்சொல்லும், பகைவரை நோக்குவது போன்ற பார்வையும் வெளியில் அயலார் போல நடித்துக்கொண்டு உள்ளத்தால் அன்பு கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும் குறிப்புகளாகும்.

Saturday, September 27, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1096



அவளை அவன் அறிவான்.அவளுக்கும் அவன் மீது உள்ளூர ஆசை. ஆனால் அவளிடம் பேசினால்..ஏதோ அயலாரிடம் பேசுவது போல பேசுகிறாள்.ஆனால் அவள்  மனதில் என் மீது பகை இல்லை என அறிவேன்.அப்படி அவள் இருக்கக் காரணம் என்ன?

வள்ளுவன் என்ன சொல்கிறான்..

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.

உரை-

(தன் காதலை மறைத்துக் கொண்டு)புறத்தே அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும், அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்

Friday, September 26, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1095



ஒருவரைப் பர்க்கவும் உண்டும்.அப்படிப் பார்ப்பது பார்க்கப்படுபவர்க்குத் தெரியவும் கூடாது. என்ன செய்வோம்? சாதாரணமாக கண்களை சற்றே சுருக்கிப் பார்த்து, பார்த்து, பாராதது போல பாசாங்கு செய்வோம் அல்லவா? அதையே இந்த காதலியும் செய்கிறாள்.தான் காதலனைப் பார்த்து மகிழ வேண்டும்..அது காதலனுக்கும் தெரியக்கூடாது...கண்களைச் சுருக்கி அவனைப் பார்த்து மகிழ்கிறாள்.

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்

உரை_
என்னை நேராக உற்றுப் பார்க்கவில்லையேத் தவிர, ஒரு கண்ணைச் சுருக்கியவள் போல என்னைப் பார்த்து மனதிற்குள் மகிழ்கிறாள்

திருக்குறள் - காமத்துப்பால் 1094



காதலி காதலனைப் பார்க்க விரும்புகிறாள்.ஆனால் நேருக்கு நேர் பார்க்க நாணம் தடுக்கிறது.ஆதலால் காதலன் பார்க்காத போது மெல்ல அவனை பார்த்து மகிழ்கிறாள்.அவன் பார்த்ததும் நாணம் மேலிட தலை குனிந்து நிலத்தைப் பார்க்கிறாள்.

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.

நான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், நான் நோக்காத போது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.

Thursday, September 25, 2014

திருக்குறள் - காமத்துப்பால் 1093



அவன் அவள் தன்னைக் காதலிக்கிறாளா என புரியாது குழம்பிய நிலையிலிருந்தான்.அப்போது காதலித்து மணந்த நண்பன் சொன்னான்.அவள் இருக்குமிடம் செல்.அவள் அறியாது அவளைப்பார்.அவள் நீ பார்ப்பது தெரியாமல் உன்னைப் பார்ப்பாள்.உடனே அவளைப்பார்...பெண்களுக்கே உரிய நாணத்தால் முகம் சற்றே சிவக்கும்.அவள் உன்னைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள் எனப் பொருள் என்று..அட....வள்ளுவன் அப்படித்தான் சொல்லியிருக்கிறான் என நினைத்தான் அவன்.

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்


என்னை அவள் நோக்கினாள், நான் கண்டதும் நோக்கித் தலைகுனிந்தால், அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும்.

Wednesday, September 24, 2014

திருக்குறள் - காமத்துப்பால் 1092



கண் பேசும் பார்வைகள் புரியாதா...என்பது தற்போது ஒரு கவிஞனின் வரிகள் ஆனால் 2000 ஆண்டுகள் முன்னரே வள்ளுவன் அதை சொல்லி விட்டான்.காதலியின் மனது நினைப்பதை அவளின் பார்வையே சொல்லிவிடுமாம்.பார்வை ஒன்றே போதும்..சொற்கள் எதற்கு...

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.

கள்ளத்தனமாக பார்க்கும் (இவளின்) சிறு பார்வை, காமத்தில் சரியான பாதி இல்லாமல் அதைக்காட்டிலும் பெரிய பகுதியாகும்.
(கள்ளப் பார்வையே ஆயிரம் சொல்லும்).

Tuesday, September 23, 2014

திருக்குறள் - காமத்துப்பால் 1091



வேடிக்கையாக சொல்வதுண்டு..இரு நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்..இருவருமே வாழ்க்கையே வெறுத்து விட்டது என்றனர்.மூன்றாவது நண்பர் வந்தார்..முதல் நண்பரிடம் வெறுப்பதற்கான காரணம் கேட்டார்..
என் மனைவியுடன் வாழ்ந்து அனுபவித்த துன்பங்களால் வாழ்க்கை வெறுத்துவிட்டது என்றார்.
மற்ற நண்பரிடம் கேட்டார்..
இதுநாள் திருமணமே ஆகாது..மனைவியுடன் வாழமுடியவில்லையே என்று வெறுத்துவிட்டது என்றாராம்/
வள்ளுவனும் இதை அறிந்திருப்பான் போலும்..
அவன் என்ன சொல்கிறான் பார்ப்போம்..


இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.


 இவளின் மைதீட்டிய கண்களில் இரண்டு நோக்கம் இருப்பது தெரிகிறது..ஒரு பார்வை  காதல் நோயைத் தருகிறது..மற்ற பார்வை அந்த நோய்க்கு மருந்தளிக்கும் பார்வை ஆகிறது/.

திருக்குறள் - காமத்துப்பால் 1090



போதையைக் கொடுக்கக் கூடியது கள்.ஆனால் கள்ளுண்ணுவதால் அதை உண்ணுபவர் மட்டுமே மகிழ்ச்சியடைகிறார்கள்.அம்மகிழ்ச்சி சரியா..தப்பா..என்பது வேறு விஷயம்.ஆனால்...ஆனால் அம்மகிழ்ச்சி காதல் தரும் மகிழ்வை விடக் குறைவாம்..வள்ளுவனுக்கு

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.


கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லை.

Monday, September 22, 2014

திருக்குறள் - காமத்துப்பால் 1089



பெண்ணுக்கு பொன் நகையே தேவையில்லை..புன்னகை ஒன்றே போதும் என்பார்கள்.புன்னகையைத் தவிர அவளிடம் வேறு இரு நகைகளும் உள்ளதாம்.அவை எவை என வள்ளுவன் சொல்வதைப் பாருங்கள்.

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.

பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும்,  நாணத்தையும் நகைகளாகக் கொண்டிருக்கும் இவளுக்கு வேறு வேறு வகைப்பட்ட நகைகளை அணிவித்திருப்பது எதற்காகவோ?.

Saturday, September 20, 2014

திருக்குறள் காமத்துப்பால்- குறள் எண் 1088



எப்பேர்பட்ட வீரனானாலும் கட்டழகிகளைக் கண்டால், வீரத்தை இழக்கக்கூடும்.ராமாயணம் கூட கைகேயி, சீதை,சூர்ப்பணகை என பெண்களை மையமாக்கியே அமைந்தது.மகாபாரதம், திரௌபதிக்கு இழைக்கப்பட்ட அநீதியியால் உருவானது.
ஆகவேதான் பெரியோர்கள் "ஆவதும் பெண்ணாலே..அழிவதும் பெண்ணாலே' என்றனர்.பெண் நினைத்தால் எதையும் சாதிப்பாள்.ஆமாம்..அதற்கும் குறளுக்கும் என்ன சம்மந்தம்? என்கிறீர்களா..இருக்கிறது..

இக்குறளைப் பாருங்கள்..


ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.

போர்க்களத்தில் (என் வீரத்தால்) என்னை அறியாதவரும் அறிந்தவர் சொல்லக் கேட்டு வியக்கும் என் திறம், ஒளி பொருந்திய (அவள்) நெற்றியைக் கண்ட அளவில் அழிந்துவிட்டதே! (என்கிறானாம் ஒருவீரன்)
(அதாவது..அவன் வீரத்தையே அழிக்கும் அளவு அவளது நெற்றி அழகே இருக்கிறதாம்)

திருக்குறள்- காமத்துப்பால் -குறள் எண் 1087



அவளிடம் ஒரு குறையும் சொல்ல இயலாது சகல லட்சணங்களும் அமையப் பெற்றவள்.அவளதுபெண்மை அழகு...எப்படியுள்ளது?
அவளது மார்பகத்தை எதனுடன் ஒப்பிடுகிறான் பாருங்கள் வள்ளுவன்.

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.

அந்தப் பெண்ணின் சாய்வில்லாத நிமிர்ந்த மார்பகம் மேல் இருக்கும் சேலை,  மதம் பிடித்த ஆண் யானையின் முகபடாம் போன்று இருக்கிறது.

Friday, September 19, 2014

திருக்குறள் - காமத்துப்பால் குறள் எண் 1086



பெண்களை வர்ணிக்கையில் வில் போன்ற புருவம் என்பர்.பெண்களுக்கு அழகு அது என்பது வெள்ளிடைமலை.அதற்காகவே பல பெண்கள் இன்று ழகு நிலையங்களுக்குப் போய் வில் புருவம் உண்டாக்கிவருவது நாம் அறிந்ததே,அப்படிப்பட்ட புருவம் ஆண்களை   நடுங்கச் செய்யுமாம்..

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.
                                                         1086



அதோ வளைந்து இருக்கும் புருவங்கள் வளையாமல் நேராக நின்று தடுத்தால், அவள் கண்கள், எனக்கு நடுக்கம் தரும் துன்பத்தை தராது..

Thursday, September 18, 2014

திருக்குறள் - காமத்துப் பால் குறள் 1085





அவளுக்காக உயிர்விடவும் தயார்..என்று சொல்வதால் ஒருவேளை அவள் உயிரைப் பறிக்கும் எமனா!
அவள் பார்த்தால் மேனி முழுதும் சிலிர்க்கிறதே,,அந்த விழிகள் உறவாடுவனவா?
அவள் பார்க்கும் பார்வையில் சற்று பயம் தெரிகிறதே..ஒருவேளை இவள் பெண்மானாய் இருப்பாளா?
என்றெல்லாம்..தன்னவளைப் பற்றி எண்ணுவதுதான் காதலா?
.

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.



என்னை துன்புறுத்துவது எமனா? என் மேனி எங்கும் படர்வதால் கண்ணா? ஏதோ ஒரு பயம் தெரிவதால் பெண்மானா? இப்பெண்ணின் பார்வை இம்மூன்று குணங்களையும் பெற்றிருக்கின்றனவே!.

Wednesday, September 17, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1084



அன்புள்ளம் கொண்டவர்கள் பெண்கள்..இரக்கக் குணம் உள்ளவர்கள் என்றெல்லாம் போற்றப்படுபவர்கள் பெண்கள்.ஆனால்..அவர்களது பார்வை உயிரையே பறிக்குமாம்...வள்ளுவன் சொல்கிறான்

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.

பெண்மைக் குணம் மிக்க இப்பெண்ணின் கண்களுக்கு, அவற்றைப் பார்ப்பவர் உயிரைப் பறிக்கும் தோற்றம்(கவர்ச்சி) இருப்பதால் அவள் குணத்திற்கும் அறிவிற்கும் இது மாறுபாடாய் உள்ளதே!.

திருக்குறள்- காமத்துப்பால்-1083



குறள்- 1083

எமன் எனப்படுபவன் எப்படியிருப்பான்? காலா உன்னைக் காலால் மிதிக்கிறேன் வாடா..என்றான் பாரதி,அவன் எப்படி வேணுமென்றாலும் இருந்து விட்டுப் போகட்டும்.ஆனால்..அவனிடம் உள்ள பாசக்கயிற்றை வீசினால்..என்னவாகும்...

எமனின்   தாக்குதல் எப்படியிருக்கும்?வள்ளுவன் சொல்வதைக் கேட்போம்.காதலியின் கண்கள் காதலன் மீது படு அம்பு போல இருக்குமாம்.

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.


எமன் என்று கூறப்படுவதைப் பற்றிக் கேட்டிருக்கிறேன்; ஆனால் முன்பு பார்த்தது இல்லை; இப்போது தெரிந்து கொண்டேன். பெண்ணிற்கே உரிய நல்ல குணங்களுடன் பெரிதாய்ப் போரிடும் கண்களையும் உடையது தான் எமன்.

திருக்குறள்- காமத்துப்பால்-குறள்- 1083



குறள்- 1083

எமன் எனப்படுபவன் எப்படியிருப்பான்? காலா உன்னைக் காலால் மிதிக்கிறேன் வாடா..என்றான் பாரதி,அவன் எப்படி வேணுமென்றாலும் இருந்து விட்டுப் போகட்டும்.ஆனால்..அவனிடம் உள்ள பாசக்கயிற்றை வீசினால்..என்னவாகும்...

எமனின்   தாக்குதல் எப்படியிருக்கும்?

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.


எமன் என்று கூறப்படுவதைப் பற்றிக் கேட்டிருக்கிறேன்; ஆனால் முன்பு பார்த்தது இல்லை; இப்போது தெரிந்து கொண்டேன். பெண்ணிற்கே உரிய நல்ல குணங்களுடன் பெரிதாய்ப் போரிடும் கண்களையும் உடையது தான் எமன்.

Monday, September 15, 2014

திருக்குறள்- காமத்துப்பால்



காதலி காதலுடன் பார்க்கிறாள்.காதல் பார்வை.சாதாரணமாகப் பார்த்தாலே மயங்கும் காதலன் காதல் பர்வையுடன் அவள் பார்க்கையில்..அடையும் மயக்கத்தை வார்த்தையில் வடிக்க இயலுமா?


நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.
                                                   -1082

இவன் பார்க்கிறானாம்...அவள் அழகு அவனைத் தாக்குகிறதாம். பதிலுக்கு இவனை அவள் பார்க்கையில்...அந்த தேவதை மட்டுமல்ல..ஒரு தேவதைப்படையே தாக்குவது போல இருக்கிறதாம்.

Sunday, September 14, 2014

காமத்துப் பால்



109 தகையணங்குறுத்தல்

காதலனுக்கு தன் காதலி பற்றி எண்ணிக் கொண்டிருப்பதற்கும்,அவளை அழகை வியப்பதற்கும் சொல்லியா கொடுக்க வேண்டும்.அன்றிலிருந்து இன்று வரை ஆண்கள் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள் போலிருக்கிறது.வள்ளுவனின் இக்குறளைப் பார்த்தால்....

குறள்.- 1081

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு

உரை-

கனத்த காதணியை அணிந்துள்ள இவள் தேவ மகளோ! அல்லது அரியதோர் மயிலோ! மானிடப் பெண்தானோ இவள்.என் நெஞ்சு (இவளிடம்) மயங்கித் தவிக்கிறதே!