Sunday, June 1, 2008

உங்கள் கருத்து அறிய ஆவல்

வள்ளுவன் சொன்னதை..என்னால் முடிந்த அளவுக்கு சுருக்கி
அவனின் பொன்மொழிகளாகக் கொடுத்தேன்.
இத்துடன் அறத்துப்பாலும்,பொருட்பாலும் முடிவடைந்து விட்டன.
கடைசி 25 அதிகாரங்கள் இன்பத்துப்பால்.
அறவழியில் நடந்தால் பொருள் தேடி வரும்.அறமும்,பொருளும்
இருப்பவரை இன்பம் தேடிவரும்.
ஆகவே..இன்பத்துப்பால் பற்றி பதிவு வேண்டுமா? என்று எண்ணம்.
இது பற்றி உங்கள் எண்ணம் அறிய ஆவல்.
நீங்கள் எழுதச் சொன்னால் எழுதுகிறேன்.
இந்த பதிவுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி.
அன்புடன்
TVR

108.கயமை

1.மனிதர்களிடம் மட்டும் தான் நல்லவர்கள் போல காட்டிக்கொள்ளும் கயவர்களைக் காணமுடியும்.

2.எப்போதும் நல்லதையே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களைவிட எதைப்பற்றியும் கவலையற்ற கயவர்கள்
ஒரு விதத்தில் பாக்யசாலிகள்.

3.புராணங்களில் வரும் தேவர்கள் போல..தங்கள் மனம் போன போக்கில் கயவர்களும் செல்வதால் அவர்கள்
இருவரும் சமம் எனலாம்.

4.கீழ் மக்கள்..தங்களைவிட கீழ்மக்களைக் கண்டால்..அவர்களைவிட நாம் நல்லவர்கள் என கர்வம் அடைவர்.

5.கீழ் மக்கள் தாங்கள் விரும்புவது கிடைத்தால் ஒழுக்கம் உள்ளவர் போல காட்டிக்கொள்வர்.மற்ற நேரங்களில்
பயம் காரணமாக உத்தமர் போல நடிப்பர்.

6.மறைக்கப்பட வேண்டிய ரகசியம் ஒன்றைக் கேட்டதும்..பிறரிடம் வலிய போய் சொல்வதால்..கயவர்களை
பறை என்ற கருவிக்கு ஒப்பிடலாம்.

7.முரடர்களுக்கு கொடுத்தாலும் கொடுப்பார்களே அன்றி ..ஈகை குணமற்ற கயவர்கள் ஏழை,எளியவர்க்கு
எச்சில் கையையும் உதற மாட்டார்கள்.

8.குறைகளை சொன்னதும்..சான்றோரிடம் பயன் பெற முடியும்.ஆனால் கயவர்களோ கரும்பு போல நசுக்கிப்
பிழிந்தால்தான்..பயன்படுவர்.

9.பிறர் உடுப்பதையும்..உண்பதையும் கண்டு அவர் மேல் பொறாமைக் கொண்டு..வேண்டுமென்றே அவர் மேல்
குறை சொல்வர் கயவர்.

10.துன்பம் வரும் போது..அதற்காக தம்மையும் விற்க தயாராய் இருப்பவரே கயவர்கள் ஆவார்கள்.

107.இரவச்சம்

1.உள்ளதை ஒளிக்காமல் வழங்கும் இரக்கச் சிந்தை உள்ளவரிடம்..இரவாமல்
இருப்பது கோடி மடங்கு உயர்வானது.

2.உலகைப்படைத்தவன்.. உலகில் சிலர் இரந்துதான் உயிர்வாழவேண்டும் என
ஏற்படுத்தியிருந்தால்..கெட்டொழியப்படும்.

3.வறுமையை.. பிறரிடம் இரந்து போக்கிக் கொள்ளலாம் என எண்ணும்
கொடுமையைப்போல வேறு கொடுமை இல்லை.

4.வாழ வழி இல்லாதபோதும்..பிறரிடம் கைநீட்டாத பண்புக்கு
இந்த உலகே ஈடாகாது.

5.கூழ்தான் உணவென்றாலும் ..தம் முயற்சியில் சம்பாதித்து அதைக்குடித்தால்
அதைவிட இனிமையானது எதுவும் இல்லை.

6.பசுவிற்க்கு தண்ணீர் வேண்டும் என்று இரந்து கேட்டாலும் அதைவிட
இழிவானது வேறொன்றுமில்லை.

7.இருப்பதை மறைத்து இல்லை என்பாரிடம் கையேந்த வேண்டாம் என
கையேந்தி கேட்பதில் தவறில்லை.

8..இருப்பதை மறைத்து ..இல்லை எனக் கூறுபவர்மீது..இரத்தல் என்னும்
மரக்கலம் மோதினால் அதுதான் உடையும்.

9.இரந்து வாழ்வோர் நிலை கண்டு உள்ளம் உருகும்.கொடுக்க மனமின்றி மறைத்து வாழ்பவரை
நினைத்தால் உள்ளமே ஒழிந்துவிடும்.

10.இரப்பவரிடம் இல்லை என்றால் உயிரே போய்விடுகிறதே..ஆனால் இல்லை என்று பொய்
சொல்பவரின் உயிர் மட்டும் எங்கு ஒளிந்துக் கொள்கிறது.

106.இரவு

1.கொடுக்கக்கூடிய தகுதி இருந்தும்..இரப்பவர்களுக்கு இல்லை என்று சொன்னால் பழி ஏற்படும்.

2.இரந்து அடையும் பொருள் துன்பமின்றி கிடைக்குமானால்..வழங்குபர்,வாங்குபவர் இருவர் மனத்திலும்
இன்பம் உண்டாகும்.

3.ஒளிவு மறைவு இல்லா நெஞ்சம்,கடமைஉணர்வு கொண்டவரிடம் வறுமை காரணமாக ஒருவர் இரந்து
பொருள் கேட்பதும் பெருமையுடையது ஆகும்.

4.உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையில்லாதவரிடம்..இரந்து கேட்பது பிறர்க்குக் கொடுப்பது போல
பெருமையைத் தரும்.

5.உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கும் பண்புடையோர் இருப்பதாலேயே..இல்லாதார் அவர்களிடம்
சென்று இரத்தலை மேற்கொள்கின்றனர்.

6.உள்ளதை ஒளிக்காதவரைக் கண்டால் ..இரப்போரின் வறுமைத் துன்பம் அகலும்.

7.இகழ்ந்து பேசாமல்..ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால்..இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து
மகிழ்ச்சி அடையும்.

8.இரப்பவர்கள் தம்மை அணுகக்கூடாது என நினைக்கும் மனிதருக்கும்..மரப்பதுமைகளுக்கும் வேறுபாடு இல்லை.

9.இரந்து பொருள் பெறுவோர் இல்லையெனில்..பொருள் கொடுத்து புகழ் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போகும்.

10இரப்பவன் எந்நிலையிலும் கோபம் கொள்ளக்கூடாது..தன்னைப் போல் பிறர் நிலையும் இருக்கக்கூடும் என்ற
எண்ணமும் வேண்டும்.