Thursday, November 13, 2014

திருக்குறள்- காமத்துப்பால்- 1266 முதல் 1270 வரை



குறள்-1266

காதலனைப் பிரிந்து காதலி.அவன் வருகைக்காகக் காத்திருக்கிறாள்.அவன் வந்ததும் அவனைப் பிரிந்திருந்ததால் அவளுக்கு இருந்த துன்பம் விலகிவிடுமாம்.அத் துன்பத்தை அவள் நோய் என்றதன் மூலம் அதன் வேதனையை உணரலாம்.
 
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.

என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்ப நோய் எல்லாம் தீருமாறு நான் நன்றாக இன்பம் துய்ப்பேன்.

குறள்-1267

பிரிந்திருந்த கணவன் வந்தால், அவன் பிரிந்திருந்ததற்காக ஊடுவாளா?அல்லது..பிரிந்தவர்கூடினால் பேசவும் வேண்டுமோ? என்பத்ற்கேற்ப பேசாமல் அவனைத் தழுவுவேனா? அல்லது இரண்டையும் செய்வேனா? இக்காதலிக்கு என்னதொரு குழப்பம் பாருங்கள்


புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் விரன்.


கண்போல் சிறந்த என் துணைவர் வந்தால் அவர் நெடுநாள் பிரிந்திருந்ததற்காக ஊடுவேனா? அவர் பிரிவைத் தாங்க முடியாமல் அவரைத் தழுவுவேனா? அல்லது இரண்டு செயல்களையும் கலந்து செய்வேனா?.

குறள்-1268

இங்கே...தலைவனின் நண்பன் கூறுகிறான்.அவன் மேற்கொண்டுள்ள செயலில் வெற்றி பெற்றால் இவன் தன் மனைவியுடன் உல்லாசமாய் இருப்பானாம்.தலைவனின் நலமே தன் நலம் என எண்ணம்.


வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.

தலைவன், தான் மேற்கொண்டுள்ள செயலில் வெற்றி பெறுவானாக; அவன் வென்றால் என் மனைவியுடன் எனக்கு மாலை இன்ப விருந்துதான்.

குறள்-1269

நமக்குப் பிடித்தவர், நம்மை விட்டு பிரிந்திருந்தால்..ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாய்த் தோன்றும்.காதலன், காதலிக்கும் கூட இது பொருந்துமாம்.வெளிநாடு சென்ற காதலர் திரும்பி வரும் நாளை நினைத்திருக்கிறாள்.அவன் திரும்ப வரும் ஒவ்வொரு நாளும் ஒருநாள் ஏழுநாட்கள் போல நீண்டுத் தெரியுமாம்.


ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.

தொலைவில் உள்ள வெளிநாட்டிற்குச் சென்ற காதலர் திரும்பி வரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் ஏழுநாள் போல ( நெடிதாக) கழியும்.

பாடல்-1270

பிரிவுத் துன்பத்தைப் பொறுக்கமுடியாது மனம் பேதலித்துப் போனப்பிறகு, மீண்டும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கூடுவதினால் பயன் ஏதுமில்லை.பிரிவுத் துயர் மனநிலைக் கூட பிறழச் செய்து விடுமாம்



பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.

துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் நிலையிழந்து போய் விடுமானால், பிறகு ஒருவரையொருவர் திரும்பச் சந்திப்பதனாலோ, சந்தித்துக் கூடுவதினாலோ, என்ன பயன்?.

No comments: