Monday, August 5, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 164

வெள்ளம்..பெரு வெள்ளம்..அப்போது அதில் மாட்டிக் கொள்ளும் தோணிகள் அடித்துச் செல்லப்படும்.அந்த அளவு வலிமையை கொண்டது வெள்ளம்.

அதுபோல காதல் எனப்படும் பெருவெள்ளம், ஆண்மையை அடித்துச் சென்றுவிடுமாம்

காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மைஎன்னும் புணை (1134)

காதல் பெருவெள்ளமானது நாணம்,நல்ல ஆண்மை எனப்ப்டும் தோணிகளை அடித்துக்கொண்டு போய்விடும் வலிமை வாய்ந்தது

கீழே சொல்லியுள்ள குறளில் காதலை கொந்தளிக்கும் கடலுக்கு ஒப்பிடுகிறார்

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில் (1137)

கொந்தளிக்கும் கடலாகக் காதல் நோய் துன்புறுத்தினாலும் கூடப்  பொறுத்துக் கொண்டு மடலேறாமல் இருக்கும் பெண்ணின் பெருமைக்கு நிகரில்லை

(மடல் ஊர்தல் (மடலூர்தல்) என்பது சங்ககால வழக்கங்களில் ஒன்று. இதனை மடலேறுதல் என்றும் கூறுவர். தலைவன் தான் விரும்பிய தலைவியை அடைவதற்காக மடலூர்தல் வழக்கம். காதலில் தோல்வியுற்ற சங்ககாலத் தலைவன், ஊரார் தன் காதலை உணரும் பொருட்டு மேனியில் சாம்பலைப் பூசிக் கொண்டு யாரும் சூடாத எருக்கு போன்ற மலர்களைச் சூடிக் கொண்டு பனைமரத்தின் அகன்ற மடல்களால் செய்யப்பட்ட குதிரை ஒன்றில் ஊர்ந்து காண்போர் கேட்கும் வண்ணம் தலைவியின் பெயரைக் கூவிக்கொண்டு செல்தல் ஆகும். இது இழிவான ஒன்றாக கருதப்படுகிறது. எனவே தன்னைச் சந்திக்க மறுக்கும் தலைவியிடம் தோழி மூலம் நான் மடலேறி விடுவேன் என்ற காமம் மிகுந்த தலைவன் சொல்வது உண்டு. காமம் மிகுந்த ஆடவர்க்கு மட்டுமே மடலேறுதல் உண்டு. பெண்கள் மடலேறியதாய் சங்கப்பாடல்கள் இல்லை. என்ன நிலை சேர்ந்தாலும் பெண் இந்த வழக்கத்தை மேற்கொள்வது இல்லை)

No comments: