Monday, August 12, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 178

காதல் வேட்கை இரக்கமே இல்லாததாம்.ஏனெனில், அது நள்ளிரவிலும் நெஞ்சில் ஆதிக்கம் செலுத்தி அலைக்கழிக்குமாம்.

ஒரு கோடாரி, தாழ்ப்பாள் போடப்பட்ட கதவினை எப்படி உடைத்தெறிகிறதோ அதுபோல காதல் வேட்கை , மன அடக்கத்தையே வெட்டி வீழ்த்துகிறதாம்.

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு (1251)

காதல் வேட்கை, ஒரு கோடாரியாக மாறி, நாணம் எனும் தாழ்ப்பாள் போடப்பட்ட மன அடக்கம் என்னும் கதவினையே உதைத்தெறிந்து விடுகின்றது.

மேலும் சொல்கிறார்...

நமக்கு தும்மல் வருகின்றது.எவ்வளவுதான் அடக்க முயன்றாலும் அது நம்மையும் மீறி வெளிப்படுகிறதே அதுபோலவாம் காதல் உணர்ச்சி.என்னதான் மறைத்தாலும் காட்டிக் கொடுத்துவிடுமாம்

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும் (1253)

அடுத்து..
நெருப்பில் இட்ட கொழுப்பினைப் போல உருகிடும் நெஞ்சம் என்கிறார் இக்குறளில்..

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ
புணர்ந்தூடி நிற்போம் எனல் (1260)

நெருப்பிலிட்ட கொழுப்பினைப்போல உருகிடும் நெஞ்சம் உடையவர்கள், கூடிக் களித்தபின் ஊடல் கொண்டு அதில் உறுதியாக இருக்கமுடியுமா?

No comments: