Tuesday, September 10, 2019

வள்ளுவரும் பறவைகளும் - 52

மயில், கோட்டான், காக்கை,கொக்கு ஆகியவையும் குறளில் காணபப்டுகின்றன.
1)
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின் (475)

மயில் இறகாய் இருந்தாலும் கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முரிகின்ற அளவிற்கு அதற்குப் பலம் வந்து விடும்

2)அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு (1081)

எனை வாட்டும் அழகோ! வண்ண மயிலோ!இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சே!

3)
பகல் வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது (481)

பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கை வென்று விடும்.எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்

4)
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள (527)

தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும்.அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு

5)
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து (490)

காலம் கைகூடும்வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்

தவிர்த்து மீனும், பாம்பும், எலி, ஆமையும் கூட ஒவ்வொரு குறளில் வருகின்றன.

1)வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிர்பொன் விழுங்கி அற்று (931)

வெற்றியே பெறுவதாயினும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது.அந்த வெற்றி ,தூண்டிலின் இரும்பு முள்ளில் கோத்த இரையை மட்டும் விழுங்குவதாக நினைத்து மீன்கள் இரும்பு முள்ளையே கௌவிக் கொண்டது போலாகிவிடும்

2)
உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போ டுரனுறைந் தற்று(890)

உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடிவாழ்வது என்பது ஒரு சிறிய குடிலுக்குள் பாம்புடன் இருப்பது போன்று ஒவ்வொரு நொடியும் அச்சம் தருவதாகும்

3)ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும் (763)

எலிகள் கூடி கடல்போல முழங்கிப். பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா? அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழ்ந்துவிடுவார்கள்

4)
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று (1146)

காதலர் சந்தித்துக் கொண்டது ஒருநாள் என்றாலும், சந்திரனைப் பாம்பு விழ்ழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்ப்டும் "கிரகணம்" எனும் நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்திப்பு ஊர் முழுதும் அலராகப் பரவியது.

5)
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து (126)

உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்.(இக்குறளில் 1,5,7 என பகாஎண்கள்)

No comments: