Tuesday, September 10, 2019

வள்ளுவரும் விலங்குகளும் - 54

யானை-

1) காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு (500)

வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை, சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூட கொன்றுவிடும்

(யானை- நரி)

2)
சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு (597)

உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பது போல, ஊக்கமுடையவர்கள் அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்

3)
பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலுதாக் குறின் (599)

உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளும் கொண்ட யானை த்ன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவதுதான்

(யானை-புலி)

4)
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று (678)

ஒரு செயலில் ஈடுபடும்போது அச்செயலின் தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும்

(5)

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தந்தொகைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை (758)

தன் கைப்பொருளைக் கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது  யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில்  சிக்கிக் கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப் போன்று இலகுவானது

6)
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது (772)

வலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறி டஹ்ப்பினாலும் கூட அது, வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது

(யானை- முயல்)

7)

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும் (774)

கையிலிருந்த வேலினை யானையின் மீது வீசி விட்டதால்களத்தில் போரினைத் தொடர வேறு வேல் தேடுகிற வீரன், தன் மார்பின் மீதே ஒரு வேல் பாய்ந்திருப்பதுக் கண்டு மகிழ்ந்து அதனைப் பறித்துப் பகையை எதிர்த்திடுகின்றான்

8)

கடாஅக் களிற்ரின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில் (1087)

மதங்கொண்ட யானையின் மத்தகத்தின் மேலிட்ட முகபடாம் கண்டேன்.அது மங்கையொருத்தியின் சாயாத கொங்கை மேல் அசைந்தாடும் ஆடைபோல இருந்தது

9)
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியிந்தோல் போர்த்துமேய்ந்  தற்று(273)

மனதை அடக்க முடியாடஹ்வர்கள் துறவுக் கோலம் பூணுவது பசு ஒன்று புலித்தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும்

(பசு-புலி)

10)
படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசரு  ளேறு(381)

ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள்,குறையாவளம்,குறையற்ற அமைச்சு,முரிபடாத நட்பு,மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளுக்கிடையே  ஆண் சிங்கம் போன்ற அரசாகும்.

11)
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து (486)

கொடுமைகளைக் கண்டும் கூட உறுதி படைத்தவர்கள் அமைதியாக இருப்பது அச்சத்தினால் அல்ல. அது, ஆட்டுக்கடா ஒன்று தனது பகையைத் தாக்குவதற்கு தன்
கால்களைப் பின்னுக்கு வாங்குவதைப் போன்றதாகும்

12)
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற (495)

தண்ணீரில் இருக்கும் வரையில்தான் முதலைக்குப் பலம்.தண்ணீரைவிட்டு வெளியே வந்து விட்டால் ஒரு சாதாரண உயிர்கூட அதனை விரட்டி விடும்

13)

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பா டிடைத்து (624)

தடங்கல் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும்பாரத்தை எருது இழுத்துக் கொண்டு போவது போல, விடா முயற்சியுடன் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு வெற்றி கிட்டும்


No comments: