Tuesday, July 30, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 145


ஒரு பலம் புழுதி, கால் பலம் ஆகும் அளவிற்கு பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளருமாம்.

உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது.களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது.அதைவிட நல்லது பயிரை பாதுகாப்பது.

ஒருவன் தன் மனைவியை நன்கு பார்த்துக் கொள்ள வேண்டும்.அவளுக்கான தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.அவளது குறைகளைக் கேட்டு சரி செய்ய வேண்டும்...

ஆமாம்...உழவிற்கும் மனைவிக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?

ஒப்பீட்டின் மன்னன் பொய்யாமொழியார் சம்பந்தம் இருக்கிறது என்கிறார்.
மனைவியைக் கவனிப்பது போல அவனது நிலத்தை விவசாயி தினமும் சென்று கவனிக்க வேண்டுமாம்.இல்லையெனில்...வெறுப்புற்று அவன் மனைவி விலகிப் போவதுப் போல நிலமும் விளைச்சலின்றிப் போகுமாம்

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்
தில்லாளின் ஊடி விடும் (1039)

உழவன், தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், அவனால் வெறுப்புற்று விலகியிருக்கும் மனைவிபோல அது விளைச்சலின்றிப் போய்விடும்.

கடைசியாக வள்ளுவன் சொல்கிறார்..

வேலை கிடைக்கவில்லை..எனக்கு வாழ வழியில்லை என்று சொல்லிக் கொண்டு சோம்பித் திரிபவர்களை..உன் கண்முன்னே நீ உழைத்து வாழ நான் இருக்கின்றேன் அது உனக்குத் தெரியவில்லையா? என பூமித்தாய் கேலி புரிவாள் என்கிறார்.

இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும் (1040)

No comments: