Thursday, July 4, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 71

ஒரு குறுநில மன்னன்.அவனிடம் இருக்கும் படைவீரர்கள் குறைவு.ஆனால்..அப்படை அதற்குரிய இடத்தில் இல்லாது..அதாவது யானைப் படை இருக்குமிடத்தில் காலாட்படை இருந்து மோதினால்..என்ன வாகும்? அதனால்..பதாதி படையுடன் மோத வேண்டும். அப்போது ஓரளவு வெற்றியடையலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்.

சுருங்கச் சொன்னால் அதுஅது அந்த இடத்தில் இருக்க வேண்டும்.

இதையே வள்ளுவர் கீழே குறிப்பிட்டுள்ள குறளில் மறைமுகமாக விளக்குகிறார்

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து  (496)

தேர் கடலில் ஓடாது.கப்பல் நிலத்தில் போகாது என்பதே இக்குறளின் நேரடி அர்த்தம்.

மேலோட்டமாக அப்படி இருந்தாலும் "இடனறிதல்" அதிகாரத்தில் இக்குறள் இருப்பதால்..இடமறிந்து போரிட்டால் பெரிய படையையும் வென்றுவிடலாம் என்ற அர்த்தத்தை இங்கு சொல்லலாம்.

இதே அர்த்தம் கீழே சொல்லப்பட்டுள்ள குறளுக்கும் பொருந்தும்.இதுவும் அதே அதிகாரம்.

காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு (500)

வேலேந்திய வீரர்களை வீழ்த்தும் ஆற்றல் படைத்த யானை, சேற்றில் சிக்கிக் கொண்டால் ,அதை நரிகள் கூட வென்று விடும்.

இந்நிலையில் ஒப்பீடு இல்லையென்றாலும் கீழே குறிப்பிட்டுள்ள குறளையும் இங்கு சொல்ல விழைகின்றேன்

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று (236)

இக்குறளை மேலோட்டமாக பார்ப்பவர்கள்.. "அதெப்படி பிறக்கும் போது புகழுடன் பிறக்கமுடியும்.அது நம்ம கையிலா இருக்கிறது" என்பார்கள்.

ஆனால், வள்ளுவர் சொல்வது..ஒரு துறையில் நீங்கள் ஈடுபட விரும்புவீர்களானால், அத்துறையில் பெரும் புகழுடன் விளங்க வேண்டும்" என்பதே!

சுருங்கச் சொவதில் வல்லவன் அல்லவா பொய்யாமொழியார்..

அவர் சொல்வது..
எந்ததுறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்க வேண்டும்.இயலாதவர்கள் அத்துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது.  

No comments: